தேவ-அசுரர்களின் இடைக்கால சமாதானம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்துப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: எட்டாம் ஸ்கந்தம், அத்தியாயம் 6

சென்ற இதழில், பிரம்மா முதலிய தேவர்கள் தங்களது பாதுகாப்பை வேண்டி பாற்கடலில் துயிலும் பரந்தாமனிடம் பிரார்த்தனை செய்ததை அறிந்தோம். பகவானின் உத்தரவுப்படி தேவர்களும் அசுரர்களும் உடன்படிக்கை செய்துகொள்வதை இந்த இதழில் அறியலாம்.

பகவான் ஹரியின் தரிசனம்

தேவர்களாலும் பிரம்மதேவராலும் பிரார்த்திக்கப்
பட்ட முழுமுதற் கடவுளாகிய ஹரி, அவர்களின் முன்பு தோன்றினார். பகவானது தேகத்தின் பிரகாசம் ஒரே சமயத்தில் உதிக்கும் ஆயிரக்கணக்கான சூரியன்களை ஒத்திருந்தது. இதனால் தேவர்களின் கண்கள் கூசின, அவர்கள் பார்க்கும் சக்தியை இழந்தனர்.
மரகத மணியைப் போன்ற கருமை நிற மேனி, தாமரை மலரின் உட்புறத்தைப் போன்ற சிவந்த கண்கள், உருக்கிய பொன்னைப் போன்ற மஞ்சள் நிற ஆடை, உயர்ந்த இரத்தின கிரீடம், குண்டலங்கள் உரசும் கன்னங்கள், சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்திய தெய்வீகத் திருக்கரங்கள் என விசேஷ எழிலுடன் காட்சியளித்த பகவானை தரிசித்ததும் பிரம்மதேவர், சிவபெருமான் மற்றும் எல்லா தேவர்
களும் உடனடியாக தரையில் விழுந்து வணங்கினர்.

பிரம்மாவின் பிரார்த்தனை

அப்போது, பிரம்மதேவர் பின்வருமாறு பிரார்த்தித்தார்: “பகவானே, நீர் பிறப்பற்றவர். பௌதிக குணங்களிலிருந்து விடுபட்டவர். தெய்வீகமான நித்தியமான உருவமுடைய பரமனாகிய உமக்கு எங்கள் பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம். பரம இயக்குநரே, மிகவுயர்ந்த நல்லதிர்ஷ்டத்தை விரும்புவோர் உம்மை பக்தியுடன் முறையாக வழிபடுவர். பூரண சுதந்திரமுடைய பகவானே, உம்மிடமிருந்தே இப்பிரபஞ்சம் தோன்றுகிறது. நீர் எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவும் ஆதாரமுமாக இருக்கிறீர்.
“நீர் பிறருடைய உதவியை ஏற்காதவரும், சுய சுதந்திரம் உடையவரும் ஆவீர். கிருஷ்ண உணர்வில் முன்னேறியவர்களும், அதிகாரபூர்வமான சாஸ்திர அறிவை முழுமையாகப் பெற்றவர்களும், பக்தி யோகப் பயிற்சியின் மூலமாக எல்லா ஜடக் களங்கங்களிலிருந்து தூய்மையடைந்தவர்களும், தெளிந்த மனதுடன் உங்களைக் காண்கின்றனர். பக்தி யோகப் பயிற்சியால் இந்த ஜடவுலகில்கூட ஒருவரால் உமது அனுக்கிரகத்தைப் பெற முடியும். பெருமானாகிய உம்மைக் காண்பதன் மூலமாக வாழ்வின் முடிவான நோக்கத்தை நாங்கள் அடைந்துவிட்டோம்.

“நீரே அனைத்திற்கும் உள்ளும்புறமும் இருக்கக்கூடிய சாட்சியாவீர். உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. எங்களது வருகையின் நோக்கத்தை நாங்கள் கூற வேண்டிய அவசியமே இல்லை. அனைத்தையும் அறிபவரே, அருள்கூர்ந்து எங்கள்மீது கருணை காட்டுங்கள்.
“பிரம்மாவாகிய நான், சிவபெருமான், தக்ஷனைப் போன்ற பிரஜாபதிகள், தேவர்கள் என அனைவரும் உங்களது பின்னப்பகுதிகளே; மூல நெருப்பாகிய உம்மால் ஒளியூட்டப்பட்ட பொறிகளே. பரம புருஷரே, அருள்கூர்ந்து பிராமணர்கள் மற்றும் தேவர்களின் முக்திக்குப் பொருத்தமான உபாயத்தை எங்களுக்கு வழங்குவீராக.”

தேவர்களாலும் பிரம்மதேவராலும் பிரார்த்திக்கப்பட்ட பகவான் ஹரி, அவர்களின் முன்பு தோன்றுதல்.

பகவானின் அறிவுரை

பிரம்மதேவரால் தலைமை தாங்கப்பட்டு, கூப்பிய கரங்களுடன் கவனமாக நின்றிருந்த தேவர்கள் பகவானிற்கு பிரார்த்தனைகளை அர்ப்பணித்த பின்னர், பகவான் மேகங்களின் ஓசையை ஒத்த ஆழமான குரலில் பதிலளித்தார், “நான் கூறப்போவது உங்கள் அனைவருக்கும் நல்லதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்பதால், மிகவும் கவனத்துடன் கேளுங்கள்.

“காலத்தின் அனுகூலத்தைப் பெற்றுள்ள அசுரர்களுடன் நீங்கள் ஓர் இடைக்கால சமாதானத்தை செய்துகொள்ள வேண்டும். ஒருவன் தன் சொந்த நலன்களுக்காக எதிரியுடன்கூட தற்காலிகமாக சமாதானத்தைச் செய்துகொள்ளலாம்.
“மரணத் தறுவாயில் உள்ளவரைக்கூட சிரஞ்சீவி ஆக்கக்கூடிய அமிர்தத்தை உருவாக்குவதில் உடனடியாக இறங்குங்கள். எல்லா வகையான காய்கறி, மூலிகை, புல் போன்றவற்றை பாற்கடலில் போடுங்கள். பின் எனது உதவியுடன் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை (பாம்பை) கயிறாகவும் கொண்டு பிறழாத கவனத்துடன் பாற்கடலைக் கடையுங்கள். அசுரர்களையும் அந்த உழைப்பில் ஈடுபடுத்துங்கள், ஆனால் அமிர்தத்தின் உண்மையான பலன் உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

“பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்தால், அனைத்தையும் செய்துவிட முடியும். ஆனால், கோபத்தால் சஞ்சலமடைந்தால், நோக்கம் நிறைவேறாது. பாற்கடலைக் கடையும்போது காலகூட விஷம் உற்பத்தியாகும். நீங்கள் அதனால் அஞ்சக் கூடாது. மேலும், கடையும்போது வெளிப்படும் பல்வேறு பொருட்களைக் கண்டு அவற்றை அடைவதற்குப் பேராசைப்படக் கூடாது, கோபப்படவும் கூடாது. அமிர்தம் பெறுவதை மட்டுமே உங்களது நோக்கமாகக்கொள்ளுங்கள்.”

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

தேவ-அசுர உடன்பாடு

இவ்வாறு தேவர்களிடம் பேசிய பரம புருஷ பகவான், அவர்களின் பார்வையிலிருந்து மறைந்
தருளினார். உண்மையில், தேவர்களால் நிறைவேற்றப்படும் எல்லா காரியங்களையும் செய்யக்கூடிய முழுமையான வல்லமை பகவானிடம் உள்ளது. ஆயினும், பாற்கடலைக் கடைவதில் அனைவரையும் ஈடுபடுத்தி லீலைகளை அனுபவிக்க விரும்பியதால், அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

பிரம்மதேவரும் சிவபெருமானும் தத்தமது இருப்பிடங்களுக்குத் திரும்பினர். பகவானின் அற்புதமான திட்டங்களைப் புரிந்து கொண்ட தேவர்கள், அவரை வணங்கியபின் பலி மஹாராஜரை அணுகினர். தேவர்கள் போர்புரியும் மனோபாவத்தில் வரவில்லை என்பதை அறிந்த பலி மஹாராஜர், அவர்களைக் கொல்ல முனைந்த தமது சேனாதிபதிகளைத் தடுத்தார்.

மூவுலகையும் கைப்பற்றி மிகவும் செல்வாக்குடன் விளங்கிய பலி மஹாராஜரிடம், பகவானுடைய திட்டத்தின்படி, இந்திரன் மிகவும் பணிவான முறையில் பாற்கடலைக் கடைவதைப் பற்றி எடுத்துரைத்தார். அதனை பலி மகாராஜர், அரிஷ்டனேமி, சம்பரன் மற்றும் எல்லா திரிபுரவாசிகளும் உடனடியாக ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறாக, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஓர் இடைக்கால சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அமிர்தத்தைப் பெறும் பொருட்டு, பாற்கடலைக் கடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பகவான் நரிசிம்மர் தம் திருக்கரத்தை பிரகலாதரின் தலைமீது வைத்து ஆசி வழங்குதல்.

பகவானும் மந்தார மலையும்

பெரும் சக்தி படைத்தவர்களான தேவர்களும் அசுரர்களும் மாபெரும் பலத்துடன் மந்தார மலையைப் பிடுங்கியெடுத்து, பெரும் கோஷத்துடன் பாற்கடலுக்கு எடுத்துச் சென்றனர். இருப்பினும், மிகப்பெரிய அந்த மலையை நீண்ட நேரம் தூக்கியதால் மிகுந்த களைப்புற்றனர். எனவே அவர்கள் சுமந்து வந்த மலை கை நழுவி கீழே விழுந்தது.
தங்கத்தாலான அந்த மந்தார மலை மிகவும் பாரமாக இருந்ததால், தேவர்களையும் அசுரர்களையும் அது பலமாக நசுக்கியது. அவர்களது கை, கால், தொடை, தோள் முறிந்தன. தைரியத்தை இழந்த அவர்களின் நிலையை உணர்ந்து கொண்ட பகவான் விஷ்ணு, தமது கருட வாகனத்தில் அங்கு தோன்றினார். அவர் தமது கருணை வாய்ந்த பார்வையை அவர்களின் மீது செலுத்தியதும், அவர்கள் புத்துயிர் பெற்றனர்; அவர்களின் உடல் காயமோ வலியோ இன்றி புதுப்பொலிவுடன் காணப்பட்டது.

பகவான் ஒரு கையால் மந்தார மலையை எளிதாகத் தூக்கி, அதனை கருடனின் மீது வைத்து, தாமும் கருடன் மீதேறினார். அவர்கள் அனைவரும் பாற்கடலுக்குச் சென்றனர். பறவைகளின் அரசரான கருடன் மந்தார மலையை தம் தோளிலிருந்து இறக்கி நீருக்கருகில் வைத்துவிட்டு, (வாசுகி அங்கே வர வேண்டும் என்பதால்) பகவானுடைய ஆணையின்படி அங்கிருந்து கிளம்பினார்.

பாற்கடலைக் கடைவதில் ஏற்பட்ட சிரமங்கள், அதை பகவான் கையாண்ட விதம், ஆலகால விஷம் உருவான விதம், அதை உட்கொண்டு அனைவரையும் காப்பாற்றிய சிவபெருமான் போன்ற விவரங்களை அடுத்த இதழில் காணலாம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives