வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 7
சென்ற இதழில் நாரதரை தக்ஷன் சபித்த சம்பவத்தையும், தக்ஷனுடைய வம்சத்தைப் பற்றியும் கண்டோம். இந்த இதழில் இந்திரன் பிருஹஸ்பதியை அவமதித்த சம்பவத்தைக் காணலாம்.
பிருஹஸ்பதியை அவமதித்தல்
சுகதேவ கோஸ்வாமி தக்ஷனுடைய வாரிசுகளைப் பற்றி கூறுகையில் (முந்தைய அத்தியாயத்தில்), தேவர்கள் தங்களது குருவான பிருஹஸ்பதியை அவமதித்த காரணத்தினால், விஸ்வரூபன் என்பவரை பிரம்மாவினுடைய ஆலோசனையின்படி தங்களது குருவாக ஏற்றதாகக் குறிப்பிட்டார். பரீக்ஷித் மன்னர் அச்சம்பவத்தை விளக்கும்படி வினவ, சுகதேவர் தொடர்ந்தார்.
ஒரு சமயம், முழு நிலவைப் போன்ற பிரகாசமான வெண்குடை, வெண் சாமரம் மற்றும் சிறந்த அரசருக்குரிய அனைத்து உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் ஸ்வர்கராஜன் இந்திரன் தன் மனைவி ஸச்சிதேவியுடன் அமர்ந்திருந்தார். தேவர்கள் புடைசூழ, அப்ஸரஸ்கள் நடனமாட, கந்தர்வர்கள் இனிமையாகப் பாட, மூவுலகச் செல்வங்களின் அதிபதி என்ற கர்வத்தால் இந்திரன் பீடிக்கப்பட்டிருந்த ஒரு தருணத்தில், அவரது ஆன்மீக குருவான பிருஹஸ்பதி அவையினுள் நுழைந்தார். இந்திரனோ அவர் வருவதைப் பார்த்தும்கூட, எழுந்து நிற்கவோ, அவருக்கு தக்க ஆசனமளிக்கவோ இல்லை.
இவ்வாறாக, இந்திரன் பிருஹஸ்பதிக்கு உரிய மரியாதையைச் செலுத்த தவறினார். எதிர்காலத்தில் நிகழவிருந்த அனைத்தையும் அறிந்திருந்த தேவகுரு பிருஹஸ்பதியோ இந்திரனை சபிக்க வல்லவர் என்றபோதிலும், மௌனமாக அங்கிருந்து வெளியேறினார்.
இந்திரனின் வருத்தம்
இந்திரன் தன் தவறை உணர்ந்து அனைவரின் முன்னிலையிலும் கூறினார்: “என் அறிவுப் பற்றாக்குறையாலும் செல்வச் செருக்காலும் மதியிழந்து, சபைக்குள் எழுந்தருளிய ஆன்மீக குருவிற்கு தகுந்த மரியாதை செய்யாமல் அவமதித்து விட்டேன்! இந்தச் செல்வமும் ஐஸ்வர்யமுமே என் அஹங்காரத்திற்கான காரணங்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் பிராமணர்களுக்கும் வைஷ்ணவர்
களுக்கும் தகுந்த மரியாதை செலுத்த வேண்டும். அதை அறியாதோர் தம்மைப் பின்பற்றுபவர்களுடன் இணைந்து நரகத்தில் வீழ்ச்சியுற வேண்டியிருக்கும். ஆகவே, வெளிப்படையாகவும் போலித்தனமின்றியும் எனது குருவின் தாமரை பாதங்களைத் தொட்டு வணங்கி அவரை திருப்திப்படுத்த முயல்கிறேன்.”
இவ்வாறு வருந்திய இந்திரன் அனைத்து தேவர்களின் உதவியுடன் பிருஹஸ்பதியைத் தேடினார். ஆயினும், பிருஹஸ்பதியோ யாரும் காணாதவாறு தம்மை மறைத்துக் கொண்டார். அவரைக் காண முடியாமல், இந்திரன் நிம்மதியின்றி தவித்தார்.
தேவர்களின் தோல்வி
தேவர்களின் இந்த நிலையைப் பற்றிக் கேள்விப்பட்ட அசுரர்கள், தங்களின் குருவான சுக்ராசாரியருடைய அறிவுரையின்படி ஆயுதங்களைத் திரட்டிக் கொண்டு தேவர்களை எதிர்த்துப் போர் தொடுத்தனர். தேவர்களின் சரியான வழிகாட்டுதலுக்கு குருவின் துணை இல்லாததால், அவர்கள் படுகாயமடைந்து தோல்வியடைந்தனர். உடனே வேறு வழியின்றி, அவர்கள் குனிந்த தலையுடன் பிரம்மதேவரை அணுகினர். அவர்களின் நிலைமையைப் புரிந்து கொண்டு, பிரம்மதேவர் கருணையுடன் பின்வருமாறு கூறினார்.
பிரம்மாவின் அறிவுரை
“பிரம்மத்தை உணர்ந்தவரும், புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும், சிறந்த பிராமணருமான தேவகுரு பிருஹஸ்பதியை முறையாக வழிபடாத காரணத்தால் நீங்கள் அசுரர்களிடம் தோல்வியுற்றீர்கள். இதற்கு முன்பு அசுரர்களும் தங்களது குருவான சுக்ராசாரியரை முறையாக வழிபடத் தவறியதால், உங்களிடம் தோல்வியடைந்திருந்தனர். ஆயினும், அதன்பின் அவரை முறைப்படி வழிபட்டு திருப்திப்படுத்தியதால், இப்போது அவர்களின் ஆற்றல் மூவுலகையும் வெல்லும் அளவிற்கு அதிகரித்துள்ளது. அவர்கள் நினைத்தால் இந்த பிரம்ம லோகத்தையும் வெல்ல முடியும்.
“இதற்கு தங்களது பிராமண குருவின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம். முழுமுதற் கடவுள் கிருஷ்ணர், பிராமணர், பசுக்கள் ஆகியோரின் மீது திடமான நம்பிக்கை கொண்டவர்களின் வலிமை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே போகும்.
“துவஷ்டாவின் மகனான விஸ்வரூபர் தவங்களையும் விரதங்களையும் மேற்கொண்டுள்ள சக்தி வாய்ந்த பிராமணராகத் திகழ்கிறார். எனவே, நீங்கள் அவரை உங்களது குருவாக ஏற்று வழிபட்டு திருப்திப்படுத்துங்கள். அவர் அசுரர்களின் நலனில் நாட்டம் கொண்டுள்ளபோதிலும், அவரது குணத்தைப் பொறுத்துக் கொண்டு செயல்பட்டால், உங்களின் விருப்பம் நிறைவேறும்.”
விஸ்வரூபரை அணுகுதல்
இவ்வாறு பிரம்மதேவர் அறிவுறுத்திய பின்னர், இந்திரனை தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும் விஸ்வரூபரை அணுகினர்.
“அன்பான விஸ்வரூபரே, உங்களுக்கு எல்லா மங்கலமும் உண்டாகட்டும். நாங்கள் உங்களது ஆஷ்ரமத்திற்கு விருந்தினராக வந்துள்ளோம். பெற்றோருக்கு சமமான எங்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி உம்மிடம் கேட்கிறோம். ஒரு பிராமணருக்குக் குழந்தைகள் இருந்தாலும், அவர் தம் பெற்றோருக்கு சேவை செய்வதே தலையாய கடமையாகும். அப்படியிருக்க, பிரம்மச்சாரி பிராமணருக்கு, அது (பெற்றோர்களுக்கான சேவை) மேலும் முக்கிய கடமையாகிறது.
“ஆன்மீக குரு வேதமே உருவானவர். அதுபோலவே, ஒரு தந்தை பிரம்மதேவரின் உருவாகவும், சகோதரன் இந்திரனின் உருவாகவும், தாய் பூதேவியின் உருவாகவும், சகோதரி கருணையின் உருவாகவும் உள்ளனர். மேலும், விருந்தினர் தர்மத்தின் உருவாகவும், அழைக்கப்பட்ட விருந்தாளி அக்னியின் உருவாகவும், உயிர்வாழிகள் அனைவரும் பகவான் விஷ்ணுவின் உருவாகவும் திகழ்கின்றனர். அன்பு மகனே! நாங்கள் தற்போது பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம், உங்களின் தவ வலிமையால் எங்களது துன்பங்களைப் போக்கியருள வேண்டும்.”
இவ்வாறாக, தேவர்களைவிட விஸ்வரூபர் இளையவர் என்றபோதிலும், அசுரர்களை வெல்வதற்காக அவர்கள் விஸ்வரூபரை குருவாக ஏற்றுக் கொண்டனர். பொதுவாக வயதில் பெரியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆயினும், கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தில் முன்னேறிய ஒருவர் ஆன்மீக குருவாக செயல்படுவதற்கு, வயதோ சமூக அந்தஸ்தோ மற்றவையோ தடையாக இருப்பதில்லை.
இந்திரனுக்கு தீக்ஷை
தேவர்களிடம் திருப்தியடைந்த விஸ்வரூபர் பின்வருமாறு கூறினார்: “புரோகிதத் தொழிலை ஏற்பதால் என்னிடமுள்ள பிராமண தேஜஸை நான் இழக்க நேரிடும். ஆயினும், பிரபஞ்ச ஆளுநர்களான நீங்களே வந்து கேட்பதால், என்னால் அதனை மறுக்க முடியாது, தங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன்.
“என் உயிரை அர்ப்பணித்தாவது, உங்களது வேண்டுகோளை நிறைவேற்ற நான் சித்தமாயிருக்கிறேன்.”
இவ்வாறு கூறிய விஸ்வரூபர், தேவேந்திரனுக்கு “நாராயண கவசம்” என்ற பாதுகாப்பு பிரார்த்தனையை உபதேசித்து மந்திர தீக்ஷையளித்தார். இந்த நாராயண கவசத்தை அடுத்த அத்தியாயத்தில் (இதழில்) காணலாம்.