இராமானுஜரால் விசேஷ முக்கியத்துவம் பெற்ற உன்னத திருத்தலம்
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
ஸ்ரீபாத இராமானுஜர் தாம் பெற்ற மந்திரத்தை உலக மக்களுக்கு தாராளமாக உபதேசித்து அருளிய திருகோஷ்டியூர் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அடியேனின் நீண்ட நாள் ஆசை, அவரது அருளால் ஒருநாள் நிறைவேறியது.
எங்களின் பயணம்
எந்தவொரு திருத்தலத்தையும் தரிசிக்க வேண்டுமெனில், வைஷ்ணவர்களின் கருணை அவசியம். நமக்கு பாக்கியம் இல்லாவிடினும், பாக்கியமுடைய வைஷ்ணவர்களுடன் நாம் இணைந்து கொண்டால், நாமும் பேரருள் பெறலாம். அதன்படி, அந்த நன்னாளில் அடியேனும் இதர நான்கு பக்தர்களும் இணைந்து கொண்டு, மிகுந்த ஆவலுடன் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்குப் பயணித்தோம்.
பெரியாழ்வார் தமது திருமொழியில் திருகோஷ்டியூரை கிருஷ்ணரின் பிறப்பிடம், நந்த மஹாராஜரின் இருப்பிடம் என்று குறிப்பிட்டு, அவரது அற்புத பால்ய லீலைகளை பக்தி ரஸம் சொட்டச்சொட்ட வர்ணித்துள்ளார். பெரியாழ்வார் கிருஷ்ண பிரேமை (கிருஷ்ணரின் மீதான உயரிய அன்பு) என்னும் மையினைக் கண்களில் தடவியிருந்ததால், கிருஷ்ண லீலைகள் அனைத்தும் அவருக்கு பிரத்யக்ஷமாக காட்சியளித்தன. அவரும் அதனை நமக்காக திருமொழியில் பதிவிட்டுள்ளார்.
அவர் இந்த ஊரை, வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் (வண்ண மாடங்கள் சூழ்ந்த ஊர்) என்றும், செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர் (செந்நெல் ஆர்க்கும் வயல் சூழ்ந்த ஊர்) என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றும் இவ்வூர் அதுபோலவே காணப்படுவது அதிசயமே. ஊரினுள் நுழைவதற்கு முன்பாக வயல்கள் எல்லாப் பக்கமும் சூழ்ந்திருப்பதைக் காண முடிந்தது, ஊரினுள் நுழைந்தவுடன் வண்ண மாடங்கள் சூழ்ந்து ஊரை அலங்கரிப்பதையும் காண முடிந்தது.
மக்கள் அதிகமாகப் பயணிக்கும் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகியிருப்பதால், ஊரின் பாரம்பரியம் பல வழிகளில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று கூறலாம். அதே சமயத்தில், முக்கியமான இவ்விடத்திற்கு பக்தர்களின் வருகை சற்று குறைவாக இருப்பதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம். ஆயினும், கிருஷ்ணரின் பால்ய லீலை, பெரியாழ்வார், இராமானுஜர் என பல தொடர்புகளைத் தேடி, இன்றும் உண்மையான பக்தர்கள் திருகோஷ்டியூருக்கு வந்துகொண்டுதான் உள்ளனர்.
இராமானுஜருக்கு உபதேசம்
கோயிலை அணுகியவுடன் எங்களது கண்கள் முதன்முதலில் இராமானுஜரால் சிறப்பு பெற்ற கோபுரத்தை தரிசித்தன. இராமானுஜரின் தெய்வீக லீலை மனதில் ஓடியது.
திருகோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை இங்கு வந்தார். ஒவ்வொரு முறையும், நம்பிகள் அவரை யார் என்று விசாரிக்க, “நான் இராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்று அவர் கூற, நம்பிகள், “நான் செத்து வா!” என்று பதிலளித்து அனுப்பினார். புரியாத இராமானுஜர் மீண்டும்மீண்டும் வர, நம்பிகள் அதே பதிலைச் சொன்னார். சீடனின் தகுதிகளில் குருவிற்கு பூரண நம்பிக்கை வந்த பின்னரே மந்திர உபதேசம் செய்ய வேண்டும் என்னும் மரபினை நம்பிகள் இங்கே பின்பற்றினார். பதினெட்டாம் முறையாக இங்கு வந்த இராமானுஜர் “அடியேன் இராமானுஜன் வந்திருக்கிறேன்” என்றார். அவரை அழைத்த நம்பிகள், ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் அவருக்கு உபதேசம் செய்தார்.
இராமானுஜரின் கருணை
இந்த மந்திரத்தைக் கேட்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெறுவர் என்றும், ஆனால் தகுதியற்ற நபர்களுக்கு மந்திரத்தை உபதேசிக்கக் கூடாது என்றும் இராமானுஜரிடம் தெரிவிக்கப்பட்டது. இராமானுஜரோ தமக்குக் கிடைத்த பொக்கிஷத்தை அனைவருக்கும் வழங்க விரும்பினார். எனவே, அவர் இக்கோயிலின் கோபுரத்திற்கு அருகில் சென்று (சிலரது அபிப்பிராயத்தின்படி கோபுரத்தின் உச்சிக்குச் சென்று) மந்திரத்தை எல்லாருக்கும் எடுத்துரைத்து கருணை வழங்கினார். தமது குருவினால் கண்டிக்கப்பட்டபோது, “நான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் அனைவரும் வைகுண்டம் செல்லட்டும்,” என்று இராமானுஜர் பதிலளிக்க, அவரது கருணை உள்ளத்தைக் கண்டு நம்பிகள் நெகிழ்ந்தார்.
அவரது தெய்வீக கருணையை வேண்டிய வண்ணம் நாங்களும் கோயிலை அணுகினோம்.
கோயிலின் அமைப்பு
நல்ல கோடையிலும் நன்னீர் தரும் திருக்குளம் கோயிலுக்கு முன்பாக ரம்மியமாகத் தெரிந்தது. கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன என்பதை பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடிந்தது. மூன்று தளங்களை (அடுக்குகளை) உடைய இக்கோயிலில் பெருமாள் நான்கு ரூபங்களில் காட்சி தருகிறார்.
கீழ் தளம் பூலோகத்தைச் சுட்டிக் காட்டுவதால், பூலோகத்தில் லீலை புரிந்த நர்த்தன கிருஷ்ணர் இங்கு காட்சி தருகிறார்; முதல் தளம் பாற்கடலைச் சுட்டிக் காட்டுவதால், ஆதிசேஷனின் மீது சயன கோலத்தில் சௌமிய நாராயணர் காட்சி தருகிறார்; இரண்டாவது தளம் தேவலோகத்தைச் சுட்டிக் காட்டுவதால், தேவர்களிடையே லீலை புரியும் உபேந்திரர் இங்கே உபேந்திர நாராயணராக காட்சி தருகிறார்; மேலும், மூன்றாவது தளம் ஆன்மீக லோகமான வைகுண்டத்தைச் சுட்டிக் காட்டுவதால், அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் காட்சி தருகிறார்.
இருப்பினும், சௌமிய நாராயணரின் பெயரிலேயே இக்கோயில் பெரும்பாலும் அறியப்படுகிறது. நாங்கள் சென்ற சமயத்தில், புனரமைப்பு பணிகள் நடைபெற்றதால், சௌமிய நாராயணரின் சந்நிதியைத் தவிர மற்ற சந்நிதிகள் மூடப்பட்டிருந்தன. விசாரித்தபோது, புனரமைப்பு பணிகள் நீண்ட காலமாக நடைபெறுவதாகவும், அதனால் மூன்று பெருமாள்களுக்கும் செய்ய வேண்டிய பல்வேறு கைங்கரியங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
பகவானுடைய தரிசனம், கீர்த்தனம்
வருமானம் குறைவாக உள்ள கோயில் என்பதற்காக, புனரமைப்பு பணிகளில் இவ்வளவு அலட்சியமும் கால தாமதமும் இருக்கக் கூடாது என்று எண்ணியபடி, நாங்கள் சௌமிய நாராயணரை தரிசிக்க, அவரது அழகு எங்களின் மனதைக் கொள்ளை கொண்டது. கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமிய நாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புரூரவ சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார்.
காண கண் கோடி வேண்டும் என்று தோன்றிய சமயத்தில், பெருமாளுக்கு சேவை செய்யும் பட்டரான ரமேஷ் மாதவன் என்ற உயர்ந்த பக்தர் எங்களை அணுகி, “கொஞ்சம் நேரம் கீர்த்தனம் செய்யுங்கள்,” என்று கூறியபோது, நாங்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தோம்.
உடனடியாக, கரதாளத்தையும் மிருதங்கத்தையும் எடுத்துக் கொண்டு பகவானின் முன்பாக அமர்ந்து கீர்த்தனம் செய்யத் தொடங்கினோம். பட்டரும் எங்களுடன் கீர்த்தனத்தில் இணைந்தார். சிறிது நேரம் கழித்து அவர் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே சென்று விட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கீர்த்தனம் செய்து விட்டு நாங்கள் புறப்பட நினைத்தபோது, பட்டர் எங்களுக்கு நன்றி தெரிவித்து கூறினார்: “எங்களுடைய பெருமாளுக்கு கீர்த்தனம் என்றால் மிகவும் பிடிக்கும். கீர்த்தனத்தில் அவர் பரவசமடைகிறார். அந்த பரவசத்தைக் காண்பதற்
காகவே நான் அவருக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டேன், பாதியில் எழுந்து வந்து விட்டதாக எண்ண வேண்டாம்.”
அவருடைய பணிவான சொற்களும் சொற்களில் பொதிந்திருந்த பொருளும் எங்களை வியக்கச் செய்தது. இஸ்கான் பக்தர்கள் அடிக்கடி திருகோஷ்டியூர் வந்து கீர்த்தனம் புரிய வேண்டும் என்று அவர் மீண்டும்மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
திருகோஷ்டியூர் மகத்துவம்
அதனைத் தொடர்ந்து, அங்கிருக்கும் பெருமாளைப் பற்றி எடுத்துரைக்கும்படி நாங்கள் அவரிடம் வேண்டினோம்; மடை திறந்த வெள்ளம்போல, அன்புடனும் பக்தியுடனும் திருகோஷ்டியூரைப் பற்றி அவர் பேசத் தொடங்கினார்.
“மதுரையிலிருந்து திருகோஷ்டியூர் வரையுள்ள பகுதி, ஆதீர கதம்பவன க்ஷேத்திரம் என்று அறியப்பட்டது. இந்த இடத்தில் பகவானை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடன் கதம்ப மகரிஷி தவம் புரிந்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் தேவர்கள் அனைவருக்கும் ஹிரண்யகசிபு கடும் தொந்தரவு கொடுத்து வந்தான். அவனை எவ்வாறு அகற்றுவது என்பதுகுறித்து விவாதிப்பதற்காக, தேவர்கள் கதம்பவன க்ஷேத்திரத்தில் கோஷ்டியாகக் கூடினர். அதனால், இந்த ஊர் வடமொழியில் கோஷ்டி க்ஷேத்திரம் என்றும், தமிழில் திருகோஷ்டியூர் என்றும் பெயர் பெற்றது.
“கதம்ப மகரிஷிக்கு காட்சிதர வேண்டும் என்பதற்காகவே பகவான் இந்த இடத்தினைத் தேர்வு செய்திருந்தார். கூட்டம் முடிந்தவுடன் கதம்ப மகரிஷி, ‘ஈரேழு லோகத்திலும் தாங்கள் புரியும் லீலைகளை எனக்கு பிரத்யக்ஷமாகக் காண்பிக்க வேண்டும்,’ என்று பகவானிடம் வேண்டினார். அதன்படி, கிருஷ்ணர், இராமர், நரசிம்மர் ஆகிய மூன்று ரூபங்களும் (அவதாரம் ஏற்பதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, பூலோகத்தை பிரதிபலிக்கும்) இக்கோயிலின் கீழ்த்தளத்தில் எழுந்தருளினர். நாம் நிற்கும் இத்தளம் பாற்கடல் (சௌமிய நாராயணர் சந்நிதி), இதற்கு மேலே தேவ லோகம் (உபேந்திரர் சந்நிதி), அதற்கும் மேலே பரமபதம் (வைகுண்டம்) (பரமபதநாதர் சந்நிதி) அமைந்துள்ளது.
“பூலோகத்திற்குக் கீழே பாதாள லோகத்தில் மூன்று சந்நிதிகள் இருப்பதாக தாத்பரியம், நம்மால் பூலோகத்திற்கு கீழே சேவிக்க முடியாது. இதுகுறித்து யாரும் ஆய்வு செய்வதில்லை. ஓர் இஸ்லாமிய நண்பர் முயன்றார், ஆனால் முடியவில்லை.
“பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நரசிம்மர் இங்கே பெரியாழ்வாருக்கு காட்சி கொடுத்தார். யோக நரசிம்மர், லக்ஷ்மி நரசிம்மர், யுக்த நரசிம்மர், ஸம்ஹார நரசிம்மர், மூல நரசிம்மர் என நரசிம்ம சந்நிதிகள் மட்டும் ஐந்து உள்ளன. இதனால் இவ்விடம் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது.
“இந்த இடம் பிரார்த்தனை க்ஷேத்திரமும் ஆகும். நாம் எந்த காரியத்திற்காகவும் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, அகல் விளக்கு வாங்கிச் சென்று வீட்டில் வைத்து பெருமாளை சேவித்த மாத்திரத்தில், நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது மிகவும் விசேஷமானது.
“நைமிஷாரண்யத்தில் தவம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, கங்கையில் நீராடினால் என்ன பலன் கிடைக்குமோ, குருக்ஷேத்திரத்தில் தங்கத்தை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்களை இந்த பெருமாளை சேவித்த மாத்திரத்தில் கிடைக்கப் பெறலாம் என்று பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.”
மனமின்றி விடை பெற்றோம்
ரமேஷ் மாதவரிடம் விடைபெற்றபோது, அவர் நம்மை மாசி மாத உற்சவத்திற்கு வந்து, பெருமாளை மகிழ்விக்க ஹரி நாம ஸங்கீர்த்தனம் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். எத்தனையோ க்ஷேத்திரத்திற்குச் சென்றுள்ளோம், ஆனால் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திருகோஷ்டியூர் வழங்கிய அனுபவம் மறக்கவியலாத ஒன்று.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் மங்கலாசாசனம் செய்யப்பட்ட திருத்தலத்தில் அவர்களின் கருணையை மீண்டும்மீண்டும் யாசித்தோம்.
இறுதியில், அற்புதமான இராமானுஜர், அற்புதமான திருக்கோயில், அற்புதமான ஸ்தல வரலாறு, அற்புதமான பக்தர்கள்—வியப்புடன் விருப்பமின்றி விடைபெற்றோம்.