மஹாபாரதப் போரில் கிருஷ்ணரின் தந்திரங்கள் நியாயமா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
பீஷ்மரை அகற்ற சிகண்டியைக் கொண்டு வந்தார், சூரியனை மறைத்து ஜயத்ரதனை வதைக்கச் செய்தார், துரோணரைக் கொல்ல யுதிஷ்டிரரை பொய் கூறச் செய்தார், தேர் சக்கரத்தைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் கர்ணனைக் கொல்லச் செய்தார், துரியோதனனை தொடையில் அடிக்கச் செய்தார் என கிருஷ்ணரின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறுவோர் பலர்.
மஹாபாரதப் போரில் கிருஷ்ணர் பல்வேறு தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கையாண்டுதான் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்தார் என்றும், கடவுளே தந்திரமாகச் செயல்படுவது நியாயமா என்றும், ஏன் நேர்மையாகச் செயல்பட்டிருக்கக் கூடாது என்றும் கேள்விக்கணைகள் அவ்வப்போது எழும்புகின்றன. அவற்றை அலசுவோம்.
வரலாற்றுப் பார்வை
“கிருஷ்ணர் செய்தது சரியா, தவறா?” என்பதை விவாதிப்பதற்கு முன்பாக, கிருஷ்ணர் என்ன செய்தார் என்பதை முறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான மக்கள் மஹாபாரதம் படிப்பதில்லை. நாடகங்களின் மூலமாகவோ சுருக்க உரைகளின் மூலமாகவோ மஹாபாரதத்தை ஓரளவு அறிந்து கொண்டுள்ளனர். சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என்பதற்காக நாடகங்களில் ஆங்காங்கே சில மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன; நூல் சிறியதாக இருக்க வேண்டும் என்பதற்காக சுருக்க உரை எழுதுவோர் பல தகவல்களை விட்டு விடுகின்றனர்—இவையே பிரச்சனை.
சிகண்டியைப் பார்த்தவுடன் பீஷ்மர் ஆயுதங்களை ஓரமாக வைத்து விட்டார் என்றும் அத்தருணத்தில் அர்ஜுனன் பீஷ்மரைத் தாக்கி விட்டான் என்றும் பலர் நினைக்கின்றனர். இஃது உண்மையல்ல. பீஷ்மர் சிகண்டியுடன் போர் புரிய மறுத்து, அவனது அம்புகளுக்கு மட்டும் எதிர் அம்புகளை ஏவ மறுத்தார்—அவ்வளவுதான். அவர் அர்ஜுனனுக்கு எதிராக தமது முழு சக்தியையும் பயன்படுத்தினார், சிகண்டியைக் கண்டுகொள்ளவில்லை. சிகண்டியின் அம்புகள் பீஷ்மரை ஒருபுறம் குத்தியபோதிலும், அந்த அம்புகளுக்கு பீஷ்மரின் உடலைப் பதம் பார்க்கும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை. அர்ஜுனனின் அம்புகளுக்கு மட்டுமே பீஷ்மரின் உடலைத் துளைக்கும் அளவிற்கு சக்தி இருந்தது. (மஹாபாரதம், பீஷ்ம பர்வம், 120) அர்ஜுனனும் பீஷ்மரும் கடுமையான முறையில் போரிட, அதன் இறுதியில் பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். எனவே, பீஷ்மரின் வீழ்ச்சியில் சிகண்டிக்கு இருக்கும் பங்கு, நிறைய மக்கள் நினைப்பதைப் போன்று மிகப்பெரிய பங்கு அல்ல, குறைவான பங்குதான்.
அதே போன்று, அஸ்வத்தாமன் கொல்லப்பட்டு விட்டதாக யுதிஷ்டிரர் கூறியவுடன், துரோணர் தமது அம்புகளை ஓரமாக வைத்துவிடவில்லை. மாறாக, அவர் சிறிது நேர துக்கத்திற்குப் பின்னர், திருஷ்டத்யும்னனுடன் அதிக கோபத்துடன் போரிட்டார். ஆயுதங்கள் தீர்ந்துபோய், துக்கம் மேலோங்கியபோது மரணத்தை விரும்பியே அவர் அமர்ந்தார். கர்ணனும் உரிய எச்சரிக்கைக்குப் பிறகே கொல்லப்பட்டான்.
மேலே குறிப்பிட்ட காட்சிகள் உட்பட, பல காட்சிகளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தந்திரமான செயல்பாடுகள் இருந்தன என்பதை மறுக்கவில்லை. அதே சமயத்தில், நிகழ்ந்தவற்றை முறையாக அறியாமல், அரைகுறை அறிவோடு யாரும் செயல்படக் கூடாது என்பதே கருத்து.
தர்மத்தின் பார்வை
கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தர்மத்தின் பாதையில் நோக்கினால்கூட, கிருஷ்ணரின் செயல்கள் நிச்சயம் நியாயமானவையே. தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்த நயவஞ்சக நபர்களை ஒழிக்க வேண்டுமெனில், சில நேரங்களில் தந்திரமும் சூழ்ச்சியும் நல்லோர்களுக்கும் தேவைப்படுகின்றன. இந்த பாடத்தைத்தான் கிருஷ்ணர் நமக்கு கற்பிக்கின்றார்.
அன்றைய சூழ்நிலையில், உலகம் முழுவதும் ஹஸ்தினாபுரத்தைத் தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வந்ததால், ஹஸ்தினாபுரத்தின் மன்னனாகச் செயல்பட ஒரு தகுதி வாய்ந்த நபர் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பினார். ஒரு நாட்டின் தலைவன் அயோக்கியனாக இருந்தால், அந்த நாடும் நாட்டு மக்களும் நிச்சயம் சீரழிவர். எனவே, அதர்மத்தின் ஸ்வரூபமாகத் திகழ்ந்த துரியோதனனுக்கு பதிலாக, தர்மத்தின் ஸ்வரூபமாகத் திகழ்ந்த பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமர்த்த வேண்டும் என கிருஷ்ணர் முடிவு செய்தார்.
பாண்டவர்கள் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக, துரியோதனன் எண்ணிலடங்காத சூழ்ச்சிகளைக் கையாண்டான். குருக்ஷேத்திரப் போருக்கு முன்பாக தனது தந்திரமான செயல்களின் மூலமாக, உலகின் பல்வேறு மன்னர்களை தனது தரப்பில் சேர்த்துக் கொண்டான். போர் தொடங்கும்போது கௌரவர்களின் தரப்பில் 11 அக்ஷௌஹினி படை இருந்தது என்பதும், பாண்டவர்களின் தரப்பில் 7 அக்ஷௌஹினி மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்
தக்கதாகும். துரியோதனன் தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் கிருஷ்ணரின் படையைக் கூட தனக்கு சாதகமாகப் போரிடச் செய்தான், பாண்டவர்களின் சார்பாக போரிட வந்த அவர்களின் தாய் மாமன் சல்லியனை ஏமாற்றி தன் தரப்பில் சேர்த்துக் கொண்டான்.
உண்மையைச் சொன்னால், போருக்கு முன்பாக மட்டுமின்றி, போரின் சமயத்திலும் துரியோதனனின் தரப்பில் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் ஏராளம், தாராளம். போர்க்களத்தில் தர்மத்தின் நெறிகளை மீறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் துரியோதனனும் அவனது ஆட்களும் அதற்கு தயாராக இருந்தனர். தந்திரமான முறையில் யுதிஷ்டிரரைக் கைப்பற்ற திட்டம் தீட்டியது, அபிமன்யுவைக் கொன்றது, ஜயத்ரதனை வைத்து செய்த சூழ்ச்சிகள் என பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவர்களைத் தோற்கடிக்க சில நேரங்களில் தந்திரமான செயல்கள் அவசியமாகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், அவை சூழ்ச்சிகளாக, தந்திரங்களாக, அதர்மமாகத் தோன்றலாம்; ஆனால் ஆழ்ந்து பார்த்தால், அவை முற்றிலும் தர்மம் என்பதை உணர முடியும்.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மத்தை ஆதரித்தார் என்றோ அதர்மம் செய்தார் என்றோ எவ்வாறு கூற முடியும்? நமது கண்ணோட்டத்தில் இருக்கும் அதர்மத்தைத்தான் நாம் சரி செய்ய வேண்டும்.
துரியோதனன் தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் கிருஷ்ணரின் படையை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளுதல்
 பக்திப் பார்வை
கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பதை அறிந்தவர்கள், அவரது செயல்கள் அனைத்தும் தர்மமே என்பதை உண்மையாக அறிவர். தர்மம் என்றால் என்ன என்பதை நிபுணர்களால்கூட அறிய இயலாது என்பதால், பகவான் செய்யும் செயல்கள் அனைத்தையும் மகான்கள் தர்மமாக ஏற்கின்றனர்.
தர்கோ ’ப்ரதிஷ்ட: ஷ்ருதயோ விபின்னா
 நாஸாவ் ருஷிர் யஸ்ய மதம் ந பின்னர்
தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயம்
மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:
“தர்மம் என்றால் என்ன என்பதை வாதங்களின் மூலமாக முடிவு செய்ய இயலாது, பல்வேறு சாஸ்திரங்களைப் படித்த ரிஷிகளும்கூட தங்களது அபிப்பிராயங்களில் வேறுபடுவர். ஏனெனில், தர்மத்தின் தத்துவம் மிகவும் இரகசியமானது, இதனை மஹாஜனங்கள் எனப்படும் மிகச்சிறந்த பக்தர்களின் பாதையைப் பின்பற்றுவதால் மட்டுமே அறிய முடியும்.” (மஹாபாரதம், வன பர்வம், 313.117)
கிருஷ்ணர் எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் அதர்மம் இருக்க முடியாது. அவர் இந்த உலக வாழ்வின் செயல்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவர் என்பதால், அவரது தெய்வீகச் செயல்களில் அதர்மத்தை மையமாகக் கொண்ட எந்தவொரு சூழ்ச்சியும் தந்திரமும் கிடையாது. மேலோட்டமான பார்வைக்கு தந்திரமாகத் தோன்றுபவை உண்மையில் அவரது தெய்வீகத் திருவிளையாடல்களே. அச்செயல்கள் பக்தர்களுக்கு என்றென்றும் இன்பமளிக்கின்றன.
கிருஷ்ணருக்கு சூழ்ச்சி தேவையில்லை
கிருஷ்ணரை பகவானாக உணர்ந்தவர்கள் அவரது சக்தியை முழுமையாக அறிவர். அவரது அம்சமான மஹாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் வெளியேறி உட்புகுகின்றன. அவரது விருப்பம் மட்டும் இருந்தால் போதும், மொத்த உலகமும் ஒரே கணத்தில் அழிந்து விடும், தேவ லோகத்தில் இருப்பவர்கள்கூட அழிந்து விடுவர். அவ்வாறு இருக்கையில், மஹாபாரதத்தின் மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?
கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தத்திற்கு முன்பாகவே எதிர்தரப்பிலிருந்த எல்லா வீரர்களையும் கொன்று விட்டார். கிருஷ்ணர் தமது விஸ்வரூபத்தைக் காட்டியபோது, பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் முதலியோர் கிருஷ்ணரின் வாயிலுள்ள நெருப்பினுள் நுழைவதை அர்ஜுனன் கண்டான் (பகவத் கீதை 11.26). அதாவது, அவர்கள் அனைவரும் போருக்கு முன்பாகவே கிருஷ்ணரால் கொல்லப்பட்டு விட்டனர். போர் என்பது வெறும் காட்சி மட்டுமே. அதில் அர்ஜுனன் ஒரு சிறு கருவி மட்டுமே.
இவ்வாறு இருக்கையில், இவர்களைக் கொல்வதற்கு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கிருஷ்ணர் பிரயோகிக்க வேண்டுமா? நிச்சயம் தேவையில்லை. அவரது கண்ணசைவு போதும், அனைவரும் மடிந்து விடுவர். கண்ணசைவுகூட தேவையில்லை, அவர் நினைத்தாலே போதும், அனைத்தும் நிகழ்ந்தேறி விடும். எனவே, கிருஷ்ணர் செய்த மேலோட்டமான தந்திரங்கள் யாவும் அவரது தெய்வீக லீலைகளே தவிர வேறொன்றும் இல்லை.
கிருஷ்ணர் தமது விஸ்வரூபத்தைக் காட்டியபோது, பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் முதலியோர் கிருஷ்ணரின் வாயிலுள்ள நெருப்பினுள் நுழைவதை அர்ஜுனன் கண்டான்.
நாத்திகனை மயக்கும் கிருஷ்ணர்
கிருஷ்ண லீலைகளை பக்தர்கள் ரசிக்கின்றனர், போற்றுகின்றனர், பாடுகின்றனர்; ஆயினும், அதே விளையாட்டுகளை நாத்திகர்கள் வெறுக்கின்றனர், தூற்றுகின்றனர், இகழ்கின்றனர். ஏன் இந்த வேற்றுமை?
கிருஷ்ணர் சூரியனைப் போன்றவர். அவர் தம்மை எப்போது வெளிப்படுத்த விரும்புகிறாரோ அப்போதுதான் நம்மால் அவரைக் காண முடியும். நாம் இரவு நேரத்தில் தலைகீழாக நின்றாலும், சூரியனைக் காண இயலாது. அதுபோல, கிருஷ்ணரைத் தமது சொந்த முயற்சியினால் அறிய முயல்வோர் நிச்சயம் தோல்வியடைவர். கிருஷ்ணரிடம் தஞ்சமடைந்து பக்தர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அவர் தம்மை வெளிப்படுத்த விரும்புகிறார், மற்றவர்களின் பார்வையிலிருந்து அவரை அவரது தெய்வீக மாயா சக்தி மறைத்து விடுகிறது. (பகவத் கீதை 7.25) எனவே, பக்தர்கள் மட்டுமே கிருஷ்ண லீலைகளைச் சுவைக்கின்றனர்.
அதே சமயத்தில், கடவுளின் இருப்பையும் கடவுளின் செயல்களையும் கண்மூடித்தனமாக எதிர்க்க விரும்பும் நாத்திகர்கள் கிருஷ்ணரின் எல்லாச் செயல்களையும் அதர்மம் என்றே கூறுவர். துரியோதனனைப் போன்று வாழ்வதால், அவர்களுக்கு துரியோதனனின் செயல்கள் நல்லவையாகத் தோன்றலாம். கிருஷ்ணரைத் தூற்ற விரும்பும் நாத்திகனுக்கும் அதற்குரிய அறிவை கிருஷ்ணரே வழங்குகிறார் என்பதால், வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ணரை விட்டு விலகி வாழ விரும்பும் ஜீவன் அந்த கிருஷ்ணராலேயே மயக்கப்பட்டு, “கிருஷ்ணரின் செயல்கள் அதர்மம்” என்று கூறிக் கொண்டே நரகத்தை நோக்கி விரைகிறான். சாஸ்திரங்களை தான்தோன்றித்தனமாக அணுகும் நாத்திகர்களை தாம் நரகத்தில் தள்ளுவதாக கிருஷ்ணர் பகவத் கீதையில் (16.20) கூறுகிறார்.
மஹாபாரதத்தை அணுகுதல்
எனவே, மஹாபாரதம், அதனுள் இருக்கும் பகவத் கீதை உட்பட எல்லா சாஸ்திரங்களையும் முறையான குரு சீடப் பரம்பரையின் மூலமாகவே அணுக வேண்டும். மஹாபாரதத்தின் ஒவ்வொரு ஸ்லோகமும் மூன்று நிலையிலான அர்த்தங்களைக் கொண்டது என்று ஸ்ரீபாத மத்வாசாரியர் கூறியுள்ளார். அந்த அர்த்தங்களை நாமாக அறிந்துகொள்ள இயலாது.
பகவானின் தெய்வீக லீலைகளை உள்ளடக்கிய மஹாபாரதம் என்னும் நூல் பாரத நாட்டின் வரலாற்றை எடுத்துரைக்கும் புனித நூலாகும். துரதிர்ஷ்டவசமாக, நிகழ்ந்த சம்பவத்தை அப்படியே உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் மஹாபாரதத்தினை இன்றைய மக்கள் தங்களது மனம் போன போக்கில் அணுகி தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதனை ஒரு கட்டுக் கதையாக நினைக்கும் அயோக்கியர்கள் தான்தோன்றித்தனமான முறையில் எந்தவோர் அங்கீகாரமும் இன்றி அதனைத் திரித்துக் கூறுகின்றனர். மஹாபாரதத்தை உண்மையாக அறிய விரும்புவோர் அத்தகு நபர்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
கிருஷ்ணர் செய்தது நியாயமா என்ற கேள்விக்கே இடமில்லை என்பதை வாசகர்கள் இப்போது உணர்ந்திருப்பர். கிருஷ்ணர் தெய்வீகமானவர், அவரது எல்லாச் செயல்களும் தெய்வீகமானவை. இவற்றை நியாயம், அநியாயம் என்று நம்முடைய அறிவைப் பயன்படுத்தி பாகுபடுத்தாமல், கிருஷ்ண பக்தர்களாக வாழ்ந்து, கிருஷ்ண லீலைகளைச் சுவைப்போமாக.
குறிப்பு: கிருஷ்ணரின் மஹாபாரத லீலைகளை முறையாகப் புரிந்துகொள்வதற்காக நமது இதழில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வஞ்சகன் கண்ணனா, கர்ணனா?, யுதிஷ்டிரர் கூறிய பொய், துரியோதனனின் தொடையைப் பிளந்த பீமனின் செயல் சரியா? ஆகிய கட்டுரைகளையும் இங்குள்ள QR Code மூலமாகப் படித்தல் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives