வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 14 (இரண்டாம் பகுதி)–15
சென்ற இதழில், இந்திரனின் பிராயசித்தத்தையும் விருத்ராசுரன் தனது முற்பிறவியில் சித்ரகேதுவாக இருந்து அங்கிர முனிவரின் வரத்தினால் பிள்ளைப்பேறு அடைந்ததையும் கண்டோம். இந்த இதழில், அம்மகனின் மரணத்தினால் சித்திரகேது அனுபவித்த துன்பத்தையும் முனிவர்களின் கருணையினால் அவர் அறிவொளி பெற்றதையும் காணலாம்.
புத்திரனின் மரணம்
சித்திரகேது தமது மகனிடம் அதிக பாசம் கொண்டிருந்ததால், பிள்ளைப்பேறு கிடைக்காத இதர மனைவியர் அனைவரும் இணைந்து அம்மகனை விஷம் கொடுத்து கொன்றனர்.
குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டதை அறியாத இராணி க்ருதத்யுதி, அவன் நீண்ட நேரம் உறங்குவதாக எண்ணி, அவனை எழுப்புவதற்காக தனது தாதியை அனுப்பினாள். அந்த தாதி, தூங்கியிருந்த குழந்தையை அணுகியபோது, அக்குழந்தை இறந்துவிட்டதைப் புரிந்து கொண்டு துக்கமும் கலக்கமும் மேலிட பெருங்குரலில் அழத் தொடங்கினாள். கதறலைக் கேட்டு ஓடி வந்த இராணி க்ருதத்யுதி, மகனின் திடீர் மரணத்தைக் கண்டு அதிர்ச்சியால் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள். செய்தியறிந்த அரண்மனைவாசிகள் செய்வதறியாது அழுதனர். விஷம் தந்த இராணிகளும் பாசாங்குடன் அழுதனர். விஷயத்தைக் கேள்விப்பட்ட அரசர் சித்ரகேதுவின் துக்கம் கொழுந்து விட்டெரியும் தீபோல பெருகிக் கொண்டே போனது. கண்களில் கண்ணீர் பெருக, தொண்டை அடைத்துக் கொண்டதால் அவரால் பேச முடியவில்லை.
இந்த நிலையைக் கண்ட மந்திரிகள், பிராமணர்கள், மற்றும் அனைத்து அரண்மனைவாசிகளின் இதயத்திலும் வலி அதிகரித்தது.
பெற்றோரின் சோகப் புலம்பல்
கிடைத்தற்கரிய செல்வத்தைப் பெற்று மீண்டும் இழந்த வறியவன்போல இராணி பரிதவித்துப் போனாள், சோகம் மேலிட பலவாறாக அழுது புலம்பினாள்: “அருமை மகனே, நான் ஆதரவற்றவளாகவும் மிகவும் துக்கமுள்ளவளாகவும் இருக்கிறேன். என் துணையை நீ விட்டுவிடக் கூடாது. அழுது புலம்பும் உன் தந்தையைப் பார். எங்களுக்கு வேறு ஆதரவில்லை. மகனில்லாத நாங்கள் நரகத்தின் இருண்ட பிரதேசங்களில் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். இதிலிருந்து வெளியேற எங்களுக்கு நீதான் உதவ முடியும்.
இரக்கமற்ற எமராஜனுடன் தொடர்ந்து செல்ல வேண்டாம். அன்பு மகனே, நீ நீண்டநேரம் உறங்கிவிட்டாய். இப்பொழுது விழித்தெழு. உன் தோழர்கள் உன்னை விளையாட அழைப்பதைப் பார்; பசியோடு நீண்டநேரம் இருக்காமல் உடனே பால் அருந்த வா.
மகனே, உனது அழகிய புன்னகையை நான் மீண்டும் காண மாட்டேனா! உனது இனிய குரலைக் கேட்க மாட்டேனா! திரும்பி வர முடியாத உலகத்திற்குச் சென்றுவிட்டாயா! இனி என்ன செய்வேன்?”
இவ்வாறு அழுது புலம்பிய மனைவியுடன் சேர்ந்து மாமன்னர் சித்ரகேதுவும் பெரும் துக்கத்தால் வாய்விட்டு உரக்க அழத் தொடங்கினார். நிலைமையைப் புரிந்து கொண்ட மாமுனிவர் அங்கிரர் நாரதருடன் அங்குத் தோன்றினார்.
அத்தியாயம் 15 – முனிவர்களின் அறிவுரை
பெரும் துக்கத்தினால் மூழ்கி, இறந்துவிட்ட மகனின் உடலுக்கு அருகில் சிலைபோல் அமர்ந்திருந்த சித்ரகேது மஹாராஜரைக் கண்ட முனிவர்கள் கருணையுடன் பின்வருமாறு உபதேசித்தனர்:
“அரசே! இந்த உடல் தற்காலிகமானது. இந்த உடலுடன் தொடர்புள்ள உறவுகளும் தற்காலிகமானவை. காலத்தின் வேகத்தால் உயிர்வாழிகள் சில சமயம் இணைகின்றனர். சில சமயம் பிரிகின்றனர். தற்காலிகமான இந்த உறவிற்காக நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்.
“பூமியில் விதைக்கப்படும் அனைத்து விதைகளும் முளைப்பதில்லை. அதுபோலவே, பரம புருஷரின் தூண்டுதலால் மட்டுமே ஒருவர் தந்தையாக முடிகிறது. அரசே! நீங்கள், உமது மனைவிகள், மந்திரிகள், ஆலோசகர்கள் என அனைவருமே இங்கே தற்காலிகமான சூழ்நிலைகளில்தான் வைக்கப்
பட்டுள்ளீர். இச்சூழ்நிலைகள் பொய்யானவை அல்ல என்றாலும், அவை நிரந்தரமானவையும் அல்ல.
“பரம புருஷ பகவான் தமது பிரதிநிதிகளின் மூலமாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்கிறார். ஆனால் மாயையின் வசியத்தால் ஒருவன் தன்னையே படைப்பவனாகவும் காப்பவனாகவும் அழிப்பவனாகவும் எண்ணிக்கொள்கின்றான்.
“ஒரு விதையிலிருந்து புதியதொரு மரமும் பல்வேறு புதிய விதைகளும் தோன்றுவதைப் போலவே, தாய் தந்தையிடமிருந்து மகன் தோன்றுகிறான். பஞ்சபூதங்களால் உருவான இந்த உடல் தற்காலிகமானது என்றாலும், இதனுள் வசிக்கும் உயிர் அல்லது ஆத்மா நித்தியமானது. உடல் சம்பந்தமான நாட்டுப் பற்று, சமூகப் பற்று முதலியவை அனைத்தும் அறிவில் முதிர்ச்சியடையாதவர்களின் கற்பனையே.”
இவ்வாறாக, இரண்டு முனிவர்களும் உண்மையான கருணையுடன் உபதேசிக்க, மாமன்னர் சித்ரகேது அறிவொளி பெற்றவரானார்.
சித்ரகேதுவின் விண்ணப்பம்
அதன்பின் சித்ரகேது முனிவர்களிடம் பின்வருமாறு விண்ணப்பித்தார்: “சிறந்த ஆத்மாக்களே! அறியாமையால் மூடப்பட்ட மக்களுக்கு உண்மையான ஞானத்தை போதிப்பதற்காகவே நீங்கள் எல்லா உலகங்களிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அறியாமையில் ஆழ்ந்திருப்பதால் நாய் அல்லது பன்றிக்கு ஒப்பானவன், அறிவற்ற பாமரனாவேன்; தயைகூர்ந்து என் இதயத்தில் ஞான தீபத்தை ஏற்றி எங்களைக் காத்தருளுங்கள்.”
அறிவொளியூட்டுதல்
இவ்வாறு வேண்டிய அரசர் சித்ரகேதுவிடம் அங்கிர முனிவர் கூறினார்: “அரசே! நீர் ஒரு மகனைப் பெற விரும்பியபோது உம்மிடம் வந்து இந்த மகனை வரமாக அளித்த அதே அங்கிர ரிஷிதான் நான். என்னுடன் வந்துள்ள இவர், பிரம்ம தேவரின் தலைசிறந்த நேரடிப் புதல்வரான நாரத முனிவராவார். பொய்யான இந்த துக்கத்திலிருந்து உம்மை விடுவிப்பதற்காகவே, நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.
“நீர் பரமபுருஷ பகவானின் சிறந்த பக்தர். ஆத்ம ஞானத்தில் முன்னேறியவர்கள் பௌதிக இலாப நஷ்டங்களால் பாதிப்படைவது சிறிதும் விரும்பத்தக்கதல்ல. முதன்முதலாக உமது வீட்டிற்கு வந்தபோதே இந்த உன்னத ஞானத்தை உமக்கு நான் தந்திருக்க முடியும். ஆனால், உமது மனம் பௌதிக விஷயங்களில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமான மகனை மட்டுமே உமக்கு கொடுத்தேன்.
“சூரசேன தேசத்து அதிபதியே, மனைவி, வீடு, ராஜ்ஜியம், இதர ஐஸ்வர்யங்கள், புலனுகர்ச்சிப் பொருட்கள் ஆகியவை அனைத்தும் ஒன்றே; ஏனெனில், இவை அனைத்துமே தற்காலிகமானவை. மாயத் தோற்றங்களையும் கனவுகளையும் மனக் கற்பனைகளையும் விட இவை எவ்விதத்திலும் சிறந்தவை அல்ல; மேலும், இவையே பயம், மதிமயக்கம், புலம்பல், துக்கம் ஆகியவற்றிற்கும் காரணமானவை.
“நம்முடைய கடந்த செயல்களின் காரணத்தாலேயே இத்தகைய கற்பனைகளை நாம் ஏற்படுத்திக்கொள்கிறோம். தேகாபிமானத்திலுள்ள ஜீவராசி, பௌதிக மூலப் பொருட்கள், ஐந்து அறிவுப் புலன்கள், ஐந்து செயல் புலன்கள், மனம் ஆகியவற்றின் சேர்க்கையாலான உடலில் ஆழ்ந்திருக்கிறான். மனதின் மூலமாக ஜீவராசி அத்யாத்மிக, அதிபௌதிக, அதிதைவிக துன்பங்களை அனுபவிக்கிறான். எனவே, இந்த உடலே எல்லா வகையான துன்பங்களின் பிறப்பிடமாகும். ஆகவே, மன்னரே, கவனமாக ஆத்மாவின் நிலையை யோசித்துப் பாரும். நீங்கள் யார் (உடல், மனம் அல்லது ஆத்மாவா) என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர், உடலை விட்டதும் எங்குச் செல்வீர், ஏன் பௌதிக துக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றீர் என்பதையெல்லாம் யோசித்துப் பாரும்.
“இவ்விதமாக உமது உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள முயன்றால், தேவையற்ற பற்றுதலை உம்மால் கைவிட முடியும். இந்த ஜடவுலகமும் கிருஷ்ணரின் தொண்டில் நேரடி தொடர்பற்ற எதுவும் நித்தியமானதல்ல என்பதைப் புரிந்து கொண்டு உம்மால் அமைதியை அடைய முடியும்.”
அங்கிரரின் உபதேசங்களால் சிறிதுசிறிதாக தெளிவுபெற்றுக் கொண்டிருந்த மாமன்னர் சித்ரகேதுவிடம் மாமுனிவரான நாரதர் பின்வருமாறு கூறினார்: “அரசே, மிகவும் மங்கலகரமான ஒரு மந்திரத்தை கவனத்துடன் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்; இதை ஏற்றுக் கொண்ட பின், ஏழு இரவுகளில் உம்மால் பகவானை நேருக்கு நேராக தரிசிக்க முடியும்.
“முன்னொரு காலத்தில், சிவபெருமானும் மற்ற தேவர்களும் சங்கர்ஷணரின் பாத கமலங்களில் சரணடைந்து, இருமை எனும் மாயையிலிருந்து உடனே விடுபட்டு, ஆன்மீக வாழ்வில் ஒப்பற்ற மிகச்சிறந்த மகிமைகளை அடைந்தனர். அதே நிலையை நீங்களும் விரைவில் அடைவீர்!”
சித்ரகேது தனது மகனிடம் எவ்வாறு உரையாடினார் என்பதையும் சங்கர்ஷணரின் திருவடிகளில் எவ்வாறு சரணடைந்தார் என்பதையும் அடுத்த இதழில் காண்போம்.