தமிழகத்தில் தேர்தல் களம் கோடையின் வெப்பத்தைக் காட்டிலும் சூடாக உள்ளது. பகவத் தரிசனத்தில் இத்தலைப்பைக் காணும் வாசகர்கள், யாரையேனும் பரிந்துரைக்கப் போகிறோமா என்று நினைக்கலாம். ஆம். மாமன்னர் யுதிஷ்டிரர், அம்பரீஷர் முதலியோரைப் போன்று அறக்கொள்கைகளை பக்தியுடன் பின்பற்றும் தலைவர்களுக்கு நாம் வாக்களிக்க வேண்டும், இதுவே நமது பரிந்துரை.
ஆனால், அதுபோன்ற தலைவர்கள் இப்போது இல்லையே என்னும் உங்களுடைய மனக் குரல் கேட்கிறது. பக்தர்களை மன்னர்களாக பெறமுடியாத தற்போதைய தருணத்தில், என்ன செய்வது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். சில விஷயங்களை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்.
(1) தேர்தல் வரும், போகும். யார் வேண்டுமானாலும் ஆட்சியாளர்களாக வரலாம், மாறலாம். இதற்கிடையில், பக்தர்கள் தங்களுக்குள் அல்லது தங்களது உறவினர்களிடையே தேவையின்றி (ஏதேனும் ஒரு கட்சியை ஆதரிப்பதன் விளைவாக) பகைமையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. அரசியல்வாதிகள் பணம் சம்பாதித்து வசதியாக வாழ்ந்துவிடுவர்; நாம் ஏன் அவர்களுக்காக சண்டையிட வேண்டும்? அரசியல் சார்பு நமக்கு தேவையற்றது.
(2) இந்த உலகில் யார் எத்தகைய ஆட்சியைக் கொடுத்தாலும், அது தற்காலிகமானதே. நமக்குப் பிடித்தவர் ஆள்வதால் மகிழ்தல், பிடிக்காதவர் ஆள்வதால் புலம்புதல் என்று வாழாமல், விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
(3) தலைவர்கள் குறைந்தபட்சம் அடிப்படை அறநெறிகளைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக, அவர்கள் மக்களை ஏமாற்றாமல், வஞ்சிக்காமல், கொள்ளையடிக்காமல் வாழ வேண்டும்; கசாப்புக்கூடங்களை (அதிலும் குறிப்பாக, பசு வதை நிகழும் கசாப்புக் கூடங்களை) மூட வேண்டும்; குடிப்பழக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்; எல்லா வகையான விபச்சாரத்தையும் தடை செய்ய வேண்டும்; பச்சிளம் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் கருக்கலைப்பை கொலை குற்றமாக்க வேண்டும்; கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், பகவத் கீதை பிரச்சாரம், திருவிழாக்கள் முதலிய திருப்பணிகளுக்கு ஆதரவளித்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
(4) இவை எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியாதெனில், குறைந்ததிலும் குறைந்தபட்சமாக, மேற்கூறியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கக் கூடாது.
(5) வாழ்க்கையின் நோக்கம், முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் சரணடைந்து, அவரது திருத்தலத்தை அடைவதாகும். அது மட்டுமே எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வாக அமையும். நம்முடைய செயல்கள் அதை நோக்கியதாக இருக்க வேண்டும்; மற்றவற்றில் பொன்னான நேரத்தைச் செலவிட்டால், அது வெறும் கால விரயமே. இகவுலக தலைவர்கள் வழங்கும் சின்னஞ்சிறு வசதிகளால் மயங்கிவிடக் கூடாது.
EEE
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)