கிரக நட்சத்திர மண்டலங்களின் வர்ணனை

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 21–23

சென்ற இதழில் பிரபஞ்சத்தின் கட்டமைப்பைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில் சூரிய சந்திரனின் இயக்கத்தைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் காணலாம்.

கால அளவு

அனைத்து கிரகங்களின் அரசனாக சூரியன் விளங்குகிறார். அவர் முழுமுதற் கடவுளின் கட்டளைக்கேற்ப மெதுவாகவோ வேகமாகவோ மிதமாகவோ பயணிக்கிறார். தம் கதிர்களின் செல்வாக்கினால் இப்பிரபஞ்சத்தைக் காப்பதோடு அதை முறையாகவும் வைத்திருக்கிறார். அவர் தம் ஒளியால் அனைத்து உயிர்வாழிகளும் காண்பதற்கு உதவுகிறார்.

சூரிய பகவான் மேஷ ராசி மற்றும் துலா ராசியில் (சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்) சஞ்சரிக்கும்போது, பகலும் இரவும் சமமாக இருக்கிறது. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ஐந்து ராசிகளில் (வைகாசி முதல் புரட்டாசி வரை) சஞ்சரிக்கும்போது, ஒவ்வொரு மாதமும் இரவு நேரம் ஒவ்வொரு நாழிகை (24 நிமிடங்கள்) வீதம் குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறாக பகல் நேரம் அதிகரிக்கிறது.

விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் (கார்த்திகை முதல் ஐந்து மாதங்கள்) ஆகிய ஐந்து ராசிகளில் சஞ்சரிக்கும்போது, பகல் இரவு நேரங்கள் இதற்கு நேர்மாறாக அமைகின்றன. அதாவது பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாகிறது.

தக்ஷிணாயன (ஆடி மாதம் முதல் மார்கழி வரை) காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும் உத்தராயண (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) காலத்தில் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கிறது.

சூரியனின் பயணம்

சூரியன் மானஸோத்தர மலையை வட்டமாகச் சுற்றி வருகிறார். அம்மலையின் கிழக்கே இந்திரனின் இருப்பிடமான தேவதானீ நகரமும், தெற்கே எமராஜனின் ஸம்யமனீ நகரமும், மேற்கே வருண தேவரின் நிம்லோசனீ நகரமும் வடக்கே சந்திரனது விபாவரீ நகரமும் அமைந்துள்ளன. சூரியன் ஒருமுறை இந்நகரங்களைச் சுற்றி வர 24 மணி நேரம் ஆகிறது. சூரியனின் இயக்கத்தாலேயே உயிர்வாழிகள் பகலில் சுறுசுறுப்பாக தத்தமது கடமைகளை ஆற்றுகின்றனர், இரவில் ஓய்வெடுக்கின்றனர்.

ஏழு குதிரைகளால் இழுத்துச் செல்லக்கூடிய சூரியனின் ரதம்

சூரியனின் ரதம்

சூரிய தேவனின் ரதமான சம்வத்ஸரம் ஒரேயொரு சக்கரத்தைக் கொண்டுள்ளது. 12 மாதங்களும் அந்த சக்கரத்தின் 12 ஆரங்களாகும். ஆறு பருவ காலங்களும் வளையத்தின் ஆறு கூறுகளாகும். மூன்று சாதுர்மாஸ்ய காலங்களும் சக்கரத்திலுள்ள குடத்தின் மூன்று பகுதிகளாகும்.

சக்கரத்தின் அச்சின் ஒரு பக்கம் சுமேரு மலையில் பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் மானஸோத்தர மலையின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, அச்சக்கரம் எண்ணெய் எடுக்கும் செக்கு இயந்திரத்தின் சக்கரம்போல தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கிறது.

முதல் அச்சு, இரண்டாம் அச்சுடன் இணைக்கப்பட்டு இரண்டாம் அச்சின் மேல்பகுதி காற்றுக் கயிற்றால் துருவ லோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ரதமானது காயத்ரி, பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பங்க்தி எனும் பெயருடைய ஏழு குதிரைகளால் இழுத்துச் செல்லப்படுகிறது. சூரியனின் ரதத்திற்கு அருணதேவன் சாரதியாக உள்ளார்.

சூரியனின் சகாக்கள்

வாலிகில்யர்கள் என்னும் அறுபதாயிரம் ரிஷிகள் சூரியதேவனை துதித்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களைத் தவிர ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், நாகர்கள், யக்ஷர்கள், ராட்சஸர்கள், தேவர்கள் ஆகியோரும் சூரியதேவரை துதிக்கின்றனர்.

கிரகங்களின்  சுழற்சி முழுவதும் ‘சிசுமாரம்’ எனும் சுறா மீனின் வடிவத்தில் காணப்படுகிறது

காலக் குறியீடு

சூரியன் பிரபஞ்சத்தின் மேல், கீழ் பாகங்களுக்கு இடையில் விண்வெளியில் இருக்கின்றார். சூரியன் காலச்சக்கரத்தில் பன்னிரண்டு மாதங்களைக் கடந்து இராசி மண்டலத்திலுள்ள பன்னிரண்டு இராசிகளுடன் தொடர்புகொள்கிறார். இப்பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்து ஒரு சம்வத்ஸரம் அல்லது ஒரு வருடம் எனப்படுகிறது. சூரிய பகவான் உலக நன்மைக்காகவும், அவரவர்கள் செய்யும் கர்மங்களின் தூய்மைக்காகவும் காலத்தை இவ்வாறு பன்னிரண்டு மாதங்களாகப் பிரித்து, வசந்தம் முதலிய ஆறு பருவங்களாக வகுக்கிறார். அந்தந்த பருவங்களுக்கு ஏற்ற நன்மைகளை அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு அளிக்கிறார்.

நிலவும் நட்சத்திரங்களும்

சந்திர கிரகமானது சூரியக் கதிர்களுக்கு மேல் ஒரு இலட்சம் யோஜனை தூரத்தில் அமைந்துள்ளது. சந்திரன் சூரியனைவிட அதிவேகத்தில் பயணம் செய்கிறது. அதன் காரணமாக, சூரியன் ஒரு வருடத்தில் கடக்கும் மார்க்கத்தை ஒரு மாதத்திலும், ஒரு மாதத்தில் கடக்கும் மார்க்கத்தை இரண்டே கால் நாள்களிலும், ஒரு பட்சத்தில் கடக்கும் பாதையை ஒரே நாளிலும் சந்திரன் கடக்கிறது.

வளர்பிறை தேவர்களுக்கு பகலாகவும், பித்ருக்களுக்கு இரவாகவும் உள்ளது. தேய்பிறை தேவர்களுக்கு இரவாகவும் பித்ருக்களுக்கு பகலாகவும் உள்ளது.

அமிர்தம் போன்ற குளிர்ந்த ஒளிக்கு சந்திரனே ஆதாரமாகும். அதுவே தானியங்களின் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சந்திரன் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்.

மனோமயன்மனதிற்கு அதிபதி

அன்னமயன்தாவரங்களுக்கு சக்தி அளிப்பவர்

அமிர்தமயன்உயிர்வாழிகளின் ஆதாரம்

ஸர்வமயன்அனைவரையும் திருப்தி செய்பவர்

சந்திரனுக்கு மேல் 2 இலட்சம் யோஜனை தொலைவில், ‘அபிஜித்’ என்னும் நட்சத்திரம் உட்பட இருபத்தியெட்டு நட்சத்திரங்களின் மண்டலம் உள்ளது.

கிரகங்களின் சுழற்சி

நட்சத்திரக் கூட்டங்களுக்கு மேலே 2 இலட்சம் யோஜனை தூரத்தில் சுக்கிரனின் கிரகம் அமைந்துள்ளது. அது மழைக்குக் காரணமாகிறது. சுக்கிரனுக்கு மேலே 2 இலட்சம் யோஜனை தூரத்தில் புதன் கிரகம் இருக்கிறது. இஃது எப்போதும் மங்கலம் நிறைந்தது; எனினும், சூரியனுடன் நகராதபோது இஃது அச்சம் தரக்கூடிய புயல், புழுதிக்காற்று, ஒழுங்கற்ற மழை போன்ற தீய நிமித்தங்களைக் காட்டுகிறது.

புதனுக்கு மேல் 2 இலட்சம் யோஜனை தூரத்தில் செவ்வாய் கிரகம் உள்ளது. இது மழை மற்றும் பிற பாதிப்புகளால் எப்போதும் பாதகமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. செவ்வாய்க்கு மேல் 2 இலட்சம் யோஜனை தூரத்தில் வியாழன் கிரகம் உள்ளது. இஃது அந்தணர்களுக்கு மிகுந்த நன்மை செய்கிறது.

வியாழனுக்கு மேல் 2 இலட்சம் யோஜனை தூரத்தில் சனி கிரகம் உள்ளது. இது பிரபஞ்ச நிலைக்கு எப்போதும் அமங்கலமானதாகும். சனி கிரகத்திற்கு மேல் 11 இலட்சம் யோஜனை தூரத்தில் சப்தரிஷி மண்டலம் உள்ளது. சப்தரிஷிகள் எனும் ஏழு ரிஷிகள் எப்போதும் பிரபஞ்சத்திலுள்ளவர்களின் நன்மையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டுள்ளனர்.

துருவ நட்சத்திரம்

பகவான் விஷ்ணுவின் உறைவிடமான துருவ லோகம் சப்தரிஷி மண்டலத்திற்கு மேல் பதிமூன்று இலட்சம் யோஜனை தூரத்தில் இருக்கின்றது. இங்கு மன்னர் உத்தானபாதரின் புதல்வரும் பகவானின் மிகச்சிறந்த பக்தருமான துருவ மஹாராஜர் வசிக்கிறார். (துருவ மஹாராஜரின் புகழ்மிக்க செயல்களை ஸ்ரீமத் பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தில் கண்டோம்.)

துருவ லோகமானது எல்லா கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் நடு அச்சாகத் திகழ்ந்து, தொடர்ந்து ஒளி வீசிக் கொண்டுள்ளது. அதைச் சுற்றி எல்லா ஒளிக் கோள்களும் எந்த விதத் தடையுமின்றி தத்தமது கோளப் பாதையில் மாறாது பயணம் செய்கின்றன.

நமது உடல் ஓர் இயந்திரம். அதுபோலவே கிரகங்களும் இயந்திரங்களே. இவ்வாறாக உடலோ கிரகங்களோ (கோள்களோ) காலச்சக்கரமோ எதுவாக இருப்பினும் முழுமுதற் கடவுளின் கட்டளைக்கு இணங்கியே செயல்படுகிறது. முழுமுதற் கடவுளும் அவரது சக்தியான ஜட இயற்கையும் இப்பிரபஞ்சம் மட்டுமின்றி, கோடிக்கணக்கான பிரபஞ்சங்களைக் காத்து, இயக்குவதற்காக இணைந்து செயலாற்றுகின்றனர்.

சிசுமார சக்கரம்

பகவானை விராட புருஷராக பிரபஞ்ச வடிவில் வழிபடுவோர், கிரகங்களின்  சுழற்சி முழுவதையும் ‘சிசுமாரம்’ எனும் சுறா மீன் வடிவத்தில் காண்கின்றனர். இக்கற்பனையான சிசுமாரம், பகவானின் மற்றொரு வடிவமாகும்.

இந்த சிசுமாரம் சுருண்ட வண்ணம் தலைகீழாக உள்ளது. அதன் வாலின் நுனியில் துருவ லோகம் உள்ளது. வாலின் மத்தியில் பிரஜாபதி, அக்னி, இந்திரன், தர்மர் ஆகியோரின் கிரகங்கள் உள்ளன. வாலின் அடியில் தாதா மற்றும் விதாதா போன்ற தேவர்களின் கிரகங்கள் உள்ளன. இடுப்பு பகுதியில் சப்தரிஷிகள் உள்ளனர்.

வலது புறமாகச் சுருண்டுள்ள இந்த சிசுமாரத்தின் வலதுபுறம் அபிஜித் நட்சத்திரம் முதல் புனர்வஸு நட்சத்திரம் வரையிலான பதினான்கு நட்சத்திரங்கள் உள்ளன. அதன் இடதுபுறம் பூசம் முதல் உத்திராடம் வரையிலான பதினான்கு நட்சத்திரங்கள் உள்ளன. சிசுமாரத்தின் இருபுறங்களிலும் உள்ள உறுப்புகள் ஒரே மாதிரியான எண்ணிக்கை உடையவையே. அதுபோலவே இருபுறங்களிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சமமே. இதன் பின்புறம் மூலம், பூராடம், உத்திராடம் எனும் மூன்று நட்சத்திரங்கள் உள்ளன.

இவ்வாறு விவரிக்கப்பட்ட சிசுமாரத்தின் உடலானது, முழுமுதற் கடவுள் பகவான் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டுள்ள அவரது புற வடிவமாகும். அனைத்து தேவர்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்திற்கும் உறைவிடமாகத் திகழும் இந்த சிசுமார சக்கரத்தை யோகிகள் குண்டலினி சக்கரமாக வழிபட்டு தமது மனதை ஒருமுகப்படுத்துவர்.

ஜட உலகத்தை இவ்வாறு முறையான வேத அறிவுடன் பகவானின் சம்பந்தப் பொருளாக தினமும் மும்முறை பக்குவமாக தியானிக்கும் ஒருவர் அனைத்து பாவங்களிலிருந்தும் நிச்சயம் விடுதலை பெறுவார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives