பக்திவினோத தாகூர்

Must read

பக்திவினோத தாகூர் தம் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடையறாது தொண்டு செய்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க இவர் ஆற்றிய தொண்டு, ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும்.

சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து காணப்பட்டது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ ஸம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது. அத்தருணத்தில், வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் மற்றும் பாகவதத்தில் புதைந்திருந்த ஆழமான தத்துவத்தினை பக்திவினோத தாகூர் தமது உயர்ந்த இறையன்பினால் வெளிக்கொணர்ந்தார். அவரது வாழ்விலிருந்து சில துளிகளைக் காண்போம்.

இளமைப் பருவம்

செப்டம்பர் 2, 1838 அன்று பிறந்த பக்திவினோத தாகூரின் இயற்பெயர் கேதார்நாத தத்தர். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த அவர் தமது பிள்ளைப் பருவத்தை பிர்நகரில் (உலாக்ராமில்) இருந்த தாய்வழி தாத்தாவின் வீட்டில் கழித்தார்; பதிமூன்று வயதில் தந்தையை இழந்த பின்னர், அங்கிருந்து கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தார். கல்விப் படிப்பை முடித்தவுடன் தமது தந்தை வழி தாத்தாவான ராஜவல்லப தத்தரின் மரணம் வரை அவருடன் தங்கியிருந்தார். அவரது அறிவுரைகளுக்கு ஏற்ப ஒடிசாவின் பல்வேறு முக்கிய கோயில்களையும் ஆஷ்ரமங்களையும் தரிசித்தார்.

அதன்பின், கல்வித் துறையில் பணிபுரியத் தொடங்கிய பக்திவினோத தாகூர் ஆங்கிலக் கல்வியை ஒடிசாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். ஒடிசாவின் ஆஷ்ரமங்களைப் பற்றி சிறிய புத்தகம் ஒன்றையும் அவர் எழுதினார்.

பிரம்ம ராக்ஷஸனை விரட்டுதல்

பின்னர், பக்திவினோத தாகூர் அரசாங்கப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வங்காளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். சில வருடங்கள் கழித்து, சம்பாரன் என்ற நகரத்துக்கு பக்திவினோத தாகூர் மாற்றப்பட்டார். அந்த நகரத்தின் பெரிய ஆலமரம் ஒன்றில் ஒரு பிரம்ம-ராக்ஷஸன் (ஒரு வகையான பேய்) வாழ்ந்து வந்தான், அவனை கீழ்நிலை மனிதர்கள் பலர் ஆராதித்து வந்தனர். பக்திவினோத தாகூர் பக்தர் ஒருவரை அந்தப் பேய் வாழ்ந்து வந்த மரத்தினடியில் தினமும் பாகவதம் படிக்கும்படி நியமித்தார். ஒரு மாத காலத்தில், பாகவதம் முழுமையாக படித்து முடிக்கப்பட்டவுடன், அந்த மரம் முறிந்து விழுந்தது, அதிலிருந்த பேயும் நற்கதியை அடைந்தது.

சுரபி-குஞ்சத்திலுள்ள பக்திவினோத தாகூரின் இல்லம்.

போலி அவதாரத்திற்கு தண்டனை

பக்திவினோத தாகூர் அடுத்ததாக புரிக்கு இடம் பெயர்ந்தார். அரசாங்கத்தின் சார்பாக ஜகந்நாதர் கோவிலின் நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பக்திவினோதரின் கடின உழைப்பினால் பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமின்றி, குறித்த நேரத்தில் காலம் தவறாமல் விக்ரஹங்களுக்கு நைவேத்தியம் செய்வதும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

மஹா விஷ்ணுவின் அவதாரம் என்று தன்னைக் கூறிக் கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்ட பிஷிகிஷேனன் என்பவனை அடக்கும் பொறுப்பு பக்திவினோதரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவனைப் பற்றி விசாரித்ததில், அவன் ஓர் ஏமாற்று பேர்வழி என்றும் குற்றங்கள் பல புரிந்தவன் என்றும் தெரிய வந்தது, அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மீறியதாக அவன் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கின் இறுதியில், அவனுக்கு ஒன்றரை வருட காலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது, ஆனால் சிறைக்குச் சென்ற குறுகிய காலத்திலேயே அவன் இறந்து போனான்.

பிஷிகிஷேனனின் மேலிருந்த அச்சத்தின் காரணமாக, அவனுடைய வழக்கை கையாள வேண்டாமென ஸ்ரீல பக்திவினோதரை அனைவரும் அறிவுறுத்தினர், அவனது யோக சக்தியினால் தொல்லைகள் வரலாம் என்று அவர்கள் எண்ணினர். நேர்மைமிக்க பக்திவினோதர் தமது ஆன்மீக பலத்தினால் அந்த ஏமாற்றுக்காரனின் வித்தைகளை சுலபமாக முறியடித்தார். பிஷிகிஷேனனின் அழிவுக்கு பின்னர், பலராமன் என்ற மற்றொரு ஏமாற்றுக்காரன் வேறொரு கிராமத்தில் உருவானான். தங்களை பகவானின் அவதாரங்களாக கூறிக் கொண்டு பலரும் உருவெடுத்தனர், ஆனால் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் இதே போன்று முறியடிக்கப்பட்டன.

ஸ்ரீ கிருஷ்ண ஸம்ஹிதா

பக்திவினோத தாகூர் ஜகந்நாத புரியில் தங்கியிருந்தபோது, அவர் தம்முடைய பெரும்பாலான நேரத்தை ஆன்மீக விவாதங்களிலும், வேதாந்த சூத்திரங்களுக்கு குறிப்புகள் எழுதுவதிலும் செலவிட்டார். மேலும், கல்யாண-கல்பதரு என்னும் நூலை இயற்றினார். 1877இல் அரசு பணி நிமித்தமாக புரியிலிருந்து கல்கத்தாவிற்கு அருகில் இடம்பெயர்ந்தார், 1881இல் பிரபல ஆன்மீக இதழான ஸஜ்ஜன-தோஷனீ (“தூய பக்தர்களின் திருப்தி”) என்னும் ஆன்மீக இதழை ஆரம்பித்தார். மேலும், பகவான் கிருஷ்ணரின் ஆன்மீக இருப்பை விளக்கும் தத்துவத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்திய ஸ்ரீ க்ருஷ்ண-ஸம்ஹிதா எனும் நூலையும் பிரசுரித்தார். இந்நூல் படித்தவர்களின் கண்களைத் திறந்ததோடு மட்டுமின்றி, பகவானுடனான அவர்களின் நித்திய உறவையும் கற்பிப்பதாக அமைந்தது. மேலும், ஜெர்மானிய அறிஞர்கள் பலரும் இதனைப் பாராட்டினர்.

மாயாபுரில் ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தில் பக்திவினோத தாகூரால் நிறுவப்பட்ட கோயில்

விருந்தாவன கொள்ளையர்கள்

அவர் நராயில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோது, விருந்தாவனத்தைக் காணச் சென்றார். அப்பொழுது “கஞ்ஜராஸ்” என்று அறியப்பட்ட கொள்ளைக்கார கூட்டத்தை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. பலம்பொருந்திய இந்த கொள்ளைக்காரர்கள் விருந்தாவனத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு அப்பாவி யாத்திரிகர்களைத் தாக்குவது வழக்கம். பக்திவினோத தாகூர் பல மாதங்கள் கடுமையாகப் போராடி கொள்ளைக்காரர்களை விருந்தாவனத்திலிருந்து அடியோடு ஒழித்தார்.

நூல்கள் எழுதுதல்

அவர் பராஸத்தில் தங்கியிருந்த இறுதி வருடத்தில், பிரபல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பகவத் கீதையின் பிரதியை அச்சிடுமாறு அவரை வேண்டிக் கொண்டார். அதற்கான முகவுரையை எழுதிய பங்கிம்சந்திரர் (பிரபல வங்காள எழுத்தாளர்) பக்திவினோதரின் முயற்சியினை மனமார பாராட்டினார். புத்தகம் வெளியானதும் அனைத்து பிரதிகளும் உடனே விற்றுப் போயின. அதன் பிறகு, பக்திவினோத தாகூர் பகவான் சைதன்யரின் தத்துவத்தையும் மேற்கத்திய தத்துவத்தையும் பற்றி எடுத்துரைக்கும் ஸ்ரீ சைதன்ய-ஷிக்ஷாம்ருதம் என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் மற்ற தத்துவங்களின் ஒவ்வொரு கருத்தும் முறியடிக்கப்பட்டு, சைதன்யரின் தத்துவம் தலைசிறந்ததாக நிரூபிக்கப்பட்டது. 1885இல் தூய ஹரி பக்தியைப் பரப்புவதற்காக “ஸ்ரீ விஷ்வ-வைஷ்ணவ-ராஜ-ஸபா” என்ற சங்கத்தை ஆரம்பித்தார்.

சைதன்யரின் பிறப்பிடத்தை அறிதல்

பகவான் சைதன்யரின் பிறப்பிடத்தைக் காண்பதற்கு பேராவல் கொண்ட பக்திவினோத தாகூர், அதற்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு நகரத்திற்கு பணிமாற்றம் கோரி பலமுறை விண்ணப்பித்தார். விரும்பிய பணிமாற்றம் கிடைக்காததால் பொதுப்பணியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை முன்வைத்தார், ஆனால் அஃது ஏற்கப்படவில்லை. பின்னர், நவத்வீபத்திலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள கிருஷ்ணநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார், இது பக்திவினோதரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.
நவத்வீபத்திற்கு அருகில் வந்ததும், சிறிதும் தாமதிக்காமல் நவத்வீபத்தில் பகவான் சைதன்யரின் லீலைகள் நிகழ்ந்த இடங்களை துல்லியமாகக் கணிப்பதற்கான பணியில் இறங்கினார். அப்போதைய நவத்வீப நகரம் சுமார் 100 வருடங்களாகத்தான் புழக்கத்தில் இருப்பதை விரைவில் கண்டறிந்தார், பகவான் சைதன்யரின் உண்மையான பிறப்பிடத்தைத் தேடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். ஆனால் சைதன்யரின் பிறப்பிடம் நகரத்தில்தான் உள்ளது என்று நம்பிய மக்கள் அவரையும் நம்ப வைக்க முயன்றனர். சைதன்யரின் உண்மையான பிறப்பிடம் கங்கை வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று சிலர் கூறினர். ஆயினும், அந்த விளக்கமும் அவருக்கு திருப்தி அளிக்காததால், தாமே யோக-பீடத்தை (பிறப்பிடத்தை) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, முகமதியர்களின் வசமிருந்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடத்தைக் கண்டறிந்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த வரைபடங்களிலிருந்தும் உள்ளூர் விசாரணைகளிலிருந்தும் கிடைக்கப் பெற்ற வலுவான சான்றுகள், அவ்விடம் “ஸ்ரீ மாயாபுர்” என்பதை தெளிவாக உணர்த்தி, அந்த உண்மையான பிறப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்தன. பிறப்பிடத்தின் கண்டுபிடிப்பு நவத்வீப-தாம-மஹாத்ம்ய என்னும் நூல் வெளிவர வழிவகுத்தது.

1895ஆம் ஆண்டில் ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தை பக்திவினோத தாகூர் அதிகாரபூர்வமாக நிறுவினார். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற குறுகிய காலத்திலேயே, அடக்கத்தின் உருவமாகத் திகழ்ந்த பக்திவினோத தாகூர் சைதன்யரின் பிறப்பிடத்தில் கோயில் ஒன்றை கட்டுவதற்காக வீடு வீடாக நேரில் சென்று நிதி திரட்டினார். அவர் சேகரித்த தொகை பகவான் சைதன்யர் தோன்றிய புனித ஸ்தலத்தில் கோயில் எழுப்ப உதவியது.

பல்வேறு நூல்களை எழுதுதல்

பகவான் சைதன்யரின் பிறப்பிடத்தைக் கண்டுபிடித்த குறுகிய காலத்தில் கௌரங்க-ஸ்மரண-மங்கல-ஸ்தோத்ர என்னும் நூலை எழுதினார், ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் ஆங்கில முகவுரையாகக் கொண்ட இந்நூல் உலகம் முழுவதும் இருந்த அறிஞர்களைச் சென்றடைந்தது.

பகவான் சைதன்யரின் நாமமும் பகவான் கிருஷ்ணரின் நாமமும் எந்தளவு பரவியதோ அவ்வளவு மகிழ்ச்சியை பக்திவினோத தாகூர் அடைந்தார். ஸ்ரீ ப்ரஹ்மா-ஸம்ஹிதா, ஸ்ரீ க்ருஷ்ண-கர்ணாம்ருத ஆகிய இரண்டிற்கும் விளக்கவுரை வழங்கினார். மேலும், ஸ்ரீ ஹரிநாம-சிந்தாமணீ, பஜன-ரஹஸ்ய ஆகிய இரண்டு இணையற்ற பொக்கிஷங்களையும் இவ்வுலகிற்கு அருளினார். வைஷ்ணவ தத்துவங்களுடன் தொடர்பு கொண்ட ஸ்ரீமத் பாகவதத்தின் மிக முக்கிய ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீமத்-பாகவதார்க-மரீசி-மாலா என்னும் தொகுப்பிற்கு விளக்கவுரை எழுதி திருத்தியமைத்தார். அவருடைய பேனா சிறிதும் ஓய்வின்றி நிறைய வைஷ்ணவ கிரந்தங்களை உருவாக்கியது. அவர் தமது அரசு அலுவல்கள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு, இரவில் தொடங்கி நள்ளிரவு ஒன்று அல்லது இரண்டு மணி வரை விழித்திருந்து பல்வேறு வைஷ்ணவ தத்துவ பாடல்களையும் நூல்களையும் எழுதினார். அவருடைய பெரும்பாலான உரைகள் ஸஜ்ஜன-தோஷனீ பத்திரிகையில் வெளிவந்தன. வங்காளத்தின் பல மாவட்டங்களில் ஹரி நாம பிரச்சாரம் செய்வதற்கும் எழுதுவதற்கும் சமமான நேரத்தை ஒதுக்கினார். நதீயாவிலுள்ள கோயிலைப் பராமரிப்பதற்காக, ஸ்ரீ-ஸ்வானந்த-ஸுகத-குஞ்ஜ எனும் பெயரில் ஸ்ரீ கோத்ரும தீவில் ஒரு வீட்டைக் கட்டினார்.

இறுதி வருடங்கள்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தன் வாழ்நாளை புரியில் கழிக்க எண்ணி கடற்கரையின் அருகில் ஒரு வீட்டினைக் கட்டினார். 1908ஆம் ஆண்டு ஸ்ரீல கௌரகிஷோர தாஸ பாபாஜியிடமிருந்து பாபாஜி தீக்ஷை பெற்று, துறவு வாழ்வை மேற்கொண்டார். 1910ஆம் ஆண்டு அவர் தம்மை முற்றிலும் சமாதியில் ஆழ்த்திக் கொண்டார், கிருஷ்ணரின் நித்திய லீலைகளில் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தினார். 1914ஆம் ஆண்டு, ஸ்ரீ கதாதரரின் மறைவு நாளன்று, பக்திவினோத தாகூர் பேரானந்தத்தின் இருப்பிடமான கோலோகத்திற்குச் சென்றார்.

உலகம் முழுவதும் ஹரி நாமத்தை பிரச்சாரம் செய்ய வெகுவிரைவில் ஒருவர் தோன்றுவார் என்று ஸ்ரீல பக்திவினோதர் முன்பே அறிவித்திருந்தார். அவரால் அறிவிக்கப்பட்டவர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரே என்பதை நம்மால் தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives