குழந்தை கிருஷ்ணரை யசோதை கயிற்றினால் உரலில் கட்டிப்போட்டாள். உலகையே கட்டிப்போட்டிருக்கும் அந்த கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட சம்பவம் பக்தர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாகும். தீபாவளி தினத்தன்று நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, யசோதையைப் போன்ற களங்கமற்ற பக்தியை விரும்பும் பக்தர்கள் அந்த பகவான் தாமோதரருக்கு (கயிற்றினால் உரலில் கட்டப்பட்டவருக்கு) நெய் தீபம் ஏற்றி ஒரு மாதம் முழுவதும் வணங்குகின்றனர்.
தாமோதர மாதம் எனப்படும் இந்தத் திருவிழா இவ்வருடம் அக்டோபர் 13 ஆம் நாளிலிருந்து நவம்பர் 11 வரை உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. பகவத் தரிசன வாசகர்கள் தங்களுக்கு அருகிலுள்ள இஸ்கான் கோயிலை அணுகி, தாங்களும் இதில் பங்குகொள்ள வேண்டுமென வேண்டுகிறோம்.
கிருஷ்ணர் வெண்ணெய்ப் பானையை உடைத்து இதர குற்றங்களைச் செய்தபோது, ஒருநாள் யசோதை கிருஷ்ணரை தண்டிக்கும் நோக்கத்துடன் அவரைக் கட்டிப்போடுவதற்காக கயிற்றை எடுத்தாள். அச்சமயத்தில் கிருஷ்ணரின் கலங்கிய கண்களில் கண்ணீர் நிறைந்து ஓடியது, அஃது அவரது கண் மையை அழித்துச் சென்றது. பயத்தின் ஸ்வரூபமே கிருஷ்ணரைக் கண்டு பயப்படும் பட்சத்தில், கிருஷ்ணர் பயப்படுபவராகத் தோன்றினார். அந்தக் காட்சி தன்னைக் குழப்புவதாக ஸ்ரீமத் பாகவதத்தில் (1.8.31) குந்திதேவி கூறுகிறாள்.
ஸ்ரீல பிரபுபாதர் அதற்கு வழங்கிய பொருளுரை தூய்மையான கிருஷ்ண பக்தியின் உயர்நிலையினை மிகவும் அற்புதமாக எடுத்துரைக்கின்றது. பக்தர்கள் தாமோதர மாதத்தினைக் கொண்டாடும் தருணத்தில் அதை நாம் நினைவுகூர்வதற்காக அதனை இங்கு வழங்கியுள்ளோம்.
“முழுமுதற் கடவுளின் லீலைகளால் ஏற்படுத்தப்படும் குழப்பங்களுக்கு தாமோதர லீலை மற்றுமோர் உதாரணமாகும். முழுமுதற் கடவுள் எல்லாச் சூழ்நிலைகளிலும் பரமனாகவே உள்ளார். பரமனாக உள்ள அந்த பகவான் அதே சமயத்தில் தமது தூய பக்தனின் முன்பாக ஒரு விளையாட்டுப் பொருளாக காட்சியளிப்பது விசேஷ உதாரணமாகும். பகவானின் தூய பக்தன் களங்கமற்ற அன்பினால் மட்டுமே பகவானுக்குத் தொண்டாற்றுகிறான், அத்தகு பக்தித் தொண்டை நிறைவேற்றுகையில் முழுமுதற் கடவுளின் ஸ்தானத்தை தூய பக்தன் மறந்து விடுகிறான்.
“சேவையானது மதிப்பு மரியாதையுடன் வழங்கப்படுவதற்கு பதிலாக தூய்மையான பாசத்துடன் இயல்பான முறையில் ஆற்றப்படும்போது, முழுமுதற் கடவுளும் அத்தகு அன்புத் தொண்டினை தமது பக்தர்களிடமிருந்து அதிக இன்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார். பொதுவாக பக்தர்கள் பகவானை மதிப்பு மரியாதையுடன் வழிபடுகின்றனர்; ஆயினும், ஒரு பக்தன் தூய பற்றுதலினாலும் அன்பினாலும் பகவானை தன்னைக் காட்டிலும் குறைந்தவராகக் கருதும்போது, அந்த மனப்பான்மையில் பகவான் அதிக திருப்தி அடைகிறார். பகவானுடைய உண்மையான இருப்பிடமான கோலோக விருந்தாவனத்தில் நிகழும் லீலைகளனைத்தும் இந்த உணர்வுடனே பரிமாறப்படுகின்றன. கிருஷ்ணரின் நண்பர்கள் அவரை தங்களில் ஒருவராகவே கருதுகின்றனர். அவர்கள் அவரை மதிப்பு மரியாதைக்குரியவராகக் கருதுவதில்லை. தூய பக்தர்களான பகவானின் பெற்றோர்களும் அவரை ஒரு குழந்தையாகவே கருதுகின்றனர். பெற்றோர்கள் தனக்கு வழங்கும் தண்டனைகளை வேத மந்திரங்களின் பிரார்த்தனைகளைக் காட்டிலும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்கிறார். அதுபோலவே, அவர் தம்முடைய தோழிகளின் பழிச்சொற்களை வேத மந்திரங்களைக் காட்டிலும் இனிமையானதாக ஏற்கிறார்.
“பகவான் கிருஷ்ணர் சாதாரண மக்களைக் கவரும் பொருட்டு, கோலோக விருந்தாவனத்தின் நித்தியமான தெய்வீக லீலைகளை இந்த பௌதிக உலகில் வெளிப்படுத்துவதற்காக அவதரித்தார். அச்சமயத்தில் அவர் தமது வளர்ப்பு தாயான யசோதையின் முன்பாக பூரண பணிவை தன்னிகரற்ற முறையில் வெளிப்படுத்தினார். பகவான் இயற்கையாகவே குழந்தைத்தனமான விளையாட்டுச் செயல்களில் ஈடுபட்டிருந்ததால், அவர் வெண்ணெய் பானைகளை உடைத்து, அதில் இருந்தவற்றை அவரது தாராள மனதை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட விருந்தாவனத்தின் புகழ்பெற்ற குரங்குகள் உட்பட தமது விளையாட்டு தோழர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்து, அன்னை யசோதை சேர்த்து வைத்திருந்த வெண்ணெயைக் கெடுத்து விடுவது வழக்கம்.
“ஒருமுறை யசோதை ஒரு கயிற்றை எடுத்து சாதாரண இல்லங்களில் செய்யப்படுவதைப் போல, கிருஷ்ணரைக் கட்டிப்போட்டு விடப் போவதாக அவரை மிரட்டினாள். அன்னை யசோதையின் கைகளில் கயிற்றைக் கண்டவுடன், பகவான் தலையை கீழே தொங்கவிட்டு ஒரு சாதாரண குழந்தையைப் போல அழத் தொடங்கினார். கண்ணீர் அவரது அழகிய கண்களில் இடப்பட்டிருந்த கண் மையைக் கழுவியபடி வழிந்தோடியது. பகவானின் இந்த காட்சியினை குந்தி தேவி புகழ்கிறாள்; ஏனெனில், அவள் பகவானின் உன்னத நிலையை உணர்ந்திருந்தாள். பயத்தின் ஸ்வரூபமே பகவானைக் கண்டு பயப்படுகிறது; இருப்பினும், அவர் சாதாரண விஷயத்திற்காக தம்மை தண்டிக்க விரும்பிய அன்னையைக் கண்டு பயப்படுகிறார்.
“கிருஷ்ணரின் உயர்நிலை குறித்து குந்தி எப்போதும் உணர்வுடையவளாக இருந்தாள், யசோதையோ அப்படி இருக்கவில்லை. எனவே, யசோதையின் நிலை குந்தியின் நிலையைக் காட்டிலும் உயர்ந்ததாகும். அன்னை யசோதை பகவானை தனது குழந்தையாகப் பெற்றாள், அக்குழந்தை சாக்ஷாத் பகவான் என்பதை அந்த பகவானே அவளிடமிருந்து முழுமையாக மறக்கடித்தார். அன்னை யசோதைக்கு பகவானுடைய உயர்நிலை குறித்த உணர்வு இருந்திருந்தால், அவள் பகவானை தண்டிப்பதற்கு நிச்சயம் தயங்கியிருப்பாள். ஆயினும், பாசத்துடன் திகழ்ந்த யசோதையின் முன்பாக குழந்தைத்தனமான எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த விரும்பிய பகவான், தமது நிலையை யசோதை மறக்கும்படி செய்தார். தாய்க்கும் மகனுக்கும் இடையிலான இந்த அன்புப் பரிமாற்றம் இயல்பான முறையில் செயல்படுத்தப்பட்டது.
“அக்காட்சியை நினைவுகூர்ந்த குந்தி குழம்பியவளானாள். தெய்வீகமான களங்கமற்ற அந்த தாய் பாசத்தினைப் புகழ்வதைத் தவிர அவளால் ஏதும் செய்ய இயலவில்லை. ஸர்வ சக்தி கொண்ட பகவானை தனது அன்பிற்குரிய குழந்தையாக வைத்து அவரையும் கட்டுப்படுத்தக்கூடியவளாக இருந்த அன்னை யசோதையின் தன்னிகரற்ற அன்பு நிலையினை குந்தி மறைமுகமாகப் புகழ்கிறாள்.”