கிருஷ்ணர் துவாரகைக்கு புறப்படுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: பத்தாம் அத்தியாயம்

சென்ற இதழில், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு நல் உபதேசங்கள் வழங்கியதையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பூரண ஸ்மரணையுடன் தனது உடலை நீத்ததையும் கண்டோம். இந்த இதழில் யுதிஷ்டிரரின் ஆட்சி யையும் கிருஷ்ணர் துவாரகை செல்வதையும் காண்போம்.

யுதிஷ்டிரரின் ஆட்சி

பீஷ்மதேவரின் வார்த்தைகளால் தெளிவுபெற்ற யுதிஷ்டிர மஹாராஜர் தனது துக்கத்தைக் கைவிட்டு, தம்பியரோடு பூமியை ஆட்சி செய்யத் துவங்கினார். அவரது ஆட்சியில் முறைப்படி மழை பெய்தது, மனிதனுக்குத் தேவையானவற்றை பூமியும் அபரிமிதமாக விளைவித்தது. அத்துடன் ஆறுகள், பெருங்கடல்கள், மலைகள், குன்றுகள், காடுகள், கொடிகள், மூலிகைகள் என அனைத்தும் அரசருக்குரிய தத்தம் வரிகளை ஒவ்வொரு பருவகாலத்திலும் அளவுக்கு மிஞ்சி அளித்தன. அவர் தர்மக் கொள்கைகளின்படி நீதி வழுவாமல் ஆட்சி செய்ததால், மக்கள் மன ரீதியான பிரச்சனைகள், வியாதிகள், மிதமிஞ்சிய வெப்பம், குளிர் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் நிறைவுடன் வாழ்ந்தனர்.

கிருஷ்ணருக்கு பிரியாவிடை

ஹஸ்தினாபுரத்தில் சில மாதங்கள் தங்கிய பின்னர், யுதிஷ்டிர மஹாராஜரை அணுகிய பகவான் கிருஷ்ணர் புறப்படுவதற்கு அனுமதி கோரினார். அனைவரின் வணக்கத்தையும் மரியாதையையும் அன்பையும் ஏற்று, கிருஷ்ணர் தம் ரதத்தில் ஏறினார். அச்சமயத்தில் சுபத்ரை, திரௌபதி, குந்திதேவி, உத்தரை, காந்தாரி, திருதராஷ்டிரர், யுயத்ஸு, கிருபர், தௌம்யர், பாண்டவர்கள் என அனைவரும் கிட்டத்தட்ட மயக்கமடையும் நிலைக்கு உள்ளாயினர்.

 

தீய உறவை ஒழித்து தூய பக்தர்களின் சகவாசத்தினால் பரம புருஷரை அறிந்துகொண்ட புத்திசாலிகள் பகவானின் பெருமைகளை ஒரே ஒரு முறை மட்டுமே கேட்டிருந்தாலும், அவற்றை திரும்பத் திரும்ப கேட்பதிலிருந்து அவர்களால் ஒருபோதும் விலகி நிற்க முடியாது. அவ்வாறு இருக்க, பகவானுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த  பாண்டவர்களால் அவரது பிரிவை எப்படி சகித்துக் கொள்ள இயலும்? அன்பில் கரையும் இதயங்களுடன் இமைஅசையாமல் கிருஷ்ணரைப் பார்த்தபடியும், பதட்டத்தில் இங்குமங்கும் திரிவதுமாகவும் காணப்பட்டனர்.

 

அரண்மனையின் இதர பெண்கள் கிருஷ்ணரைக் காண வந்தபோது, பொங்கிவரும் அழுகையை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டனர். புறப்படும் சமயத்தில் கண்ணீர்விடுவது அமங்களத்தை உண்டாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர். குரு வம்சத்துப் பெண்கள் வெட்கத்துடனும் அன்புடனும் புன்னகை செய்து அரண்மனையின் மேல்மாடியிலிருந்து மலர்மாரி பொழிய, பகவானை மதித்துப் போற்றும் வகையில் பலவகை மேளங்களும் இதர இசைக் கருவிகளும் இசைக்கப்பட்டன.

 

அர்ஜுனன் இரத்தினங்கள் பதிந்த பிடியைக் கொண்ட மிக அழகிய குடையை பகவானுக்குப் பிடிக்க, உத்தவரும் சாத்யகியும் அவருக்கு சாமரம் வீசினர். பிராமணர்கள் தங்கள் வாழ்த்துக்களை உச்சரித்தனர். ஹஸ்தினாபுரத்திலுள்ள எல்லா வீடுகளின் மேல்மாடங்களிலும் நின்றிருந்த பெண்கள் பகவானின் திவ்ய குணங்களின் சிந்தனையில் ஆழ்ந்து அன்புமிகுதியால் பேசிய பேச்சுக்கள் வேத மந்திரங்களைவிட கவர்ச்சிமிக்கவையாகவும் இனிமையாகவும் இருந்தன.

ஹஸ்தினாபுர பெண்களின் பிரார்த்தனை

ஹஸ்தினாபுர பெண்கள் பின்வருமாறு பேசிக் கொண்டனர்: “நம் முன் இருக்கும் மூல முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஜட படைப்பு மற்றும் ஜட குணங்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்தார். மேலும் இப்படைப்பின் முடிவிலும் அவர் மட்டுமே இருப்பார். எல்லா ஜீவராசிகளும் அவருக்குள் ஓய்வெடுக்கின்றன. மீண்டும் எல்லா ஜீவராசிகளும் பகவானுடன் தமக்குள்ள நித்ய உறவைப் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு பெறும் வகையில் பகவான் புறசக்தியின் மூலமாக அவர் களைப் படைக்கிறார். இவ்வாறு ஜடவுலகைப் படைத்து காத்து அழித்தாலும், அவர் அதனால் பாதிப்படையாமலும் இருக்கிறார்.

 

“பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக் காட்டும் பகவான் அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும் யுகங்களுக்கும் தேவையான அநேக திவ்ய ரூபங்களிலும் அவதரிக்கிறார். அவரது தூய பக்தர்கள் மட்டுமே அவற்றை உணர முடியும்.

 

பகவான் கிருஷ்ணர் அவதரித்து பிள்ளைப்பிராயத்தில் லீலை செய்த புனிதத்தலமான மதுரா மாகாணம் எவ்வளவு புண்ணியம் வாய்ந்தது! அங்கு வசிக்கும் யதுமஹாராஜனின் வம்சம் எவ்வளவு உயர்வாகப் புகழப்படுகிறது!

 

துவாரகை சுவர்க்கலோகங்களின் பெருமைகளையும் வென்று பூமியின் புகழை உயர்த்தியிருப்பது அற்புதம்தான். துவாரகாவாசிகள், அனைத்து ஜீவராசிகளின் ஆத்மாவான பகவான் கிருஷ்ணரை எப்போதும் கண்ணாரக் கண்டுகொண்டே இருக்கின்றனர். அவரும் அவர்களைப் பார்த்து புன்னகை செய்தவண்ணம் இருக்கின்றார்.

 

“ருக்மிணி, ஸத்யபாமா, ஜாம்பவதி உட்பட துவாரகையின் 16,108 இராணிகள், பகவானை கைபிடிக்க என்ன தவம் செய்தனரோ! கோபியரும் எதிர்பார்க்கும் பகவானுடனான அன்யோன்யமான உறவை இவர்கள் இப்போது அனுபவிக் கின்றனர், பகவானும் இவர்களுக்கு பலவித வெகுமதிகளை தந்து மகிழ்விக்கின்றார்.”

 

தலைநகரான ஹஸ்தினாபுர பெண்களின் இத்தகைய இனிய புகழுரைகளை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு, தம் கருணையை பார்வையாலேயே அவர்கள் மீது செலுத்திய பகவான் கிருஷ்ணர் பயணத்தைத் தொடங்கினார்.

 

கிருஷ்ணரின் பயணம்

கிருஷ்ணரின் பாதுகாப்பிற்காக ஒரு சிறுபடையை உடன் அனுப்பிய யுதிஷ்டிர மஹாராஜரும் அவரது தம்பிகளும் பகவான் மீதான பேரன்பினால் அவருடன் சிறிது தூரம் சென்றனர். இறுதியாக கிருஷ்ணர் பாண்டவர்களை அரண்மனைக்குச் செல்லுமாறு பணித்தபின், துவாரகைக்கான சாலையில் மிக வேகமாக பயணத்தைத் தொடர்ந்தார்.

 

பகவான் கிருஷ்ணர், குரு ஜாங்களம் (டில்லி மாகாணம்), பாஞ்சாலம் (பஞ்சாப்), சூரஸேனம், பிரம்மாவர்த்தம் (உத்திர பிரதேசம்), குருக்ஷேத்திரம், மத்ஸ்யம், ஸாரஸ்வதம், மற்றும் பாலைவன மாகாணத்தைக் (ராஜஸ்தான்) கடந்து சென்றார். ஒவ்வொரு மாலையிலும் சந்தியாவந்தனம் செய்வதற்காக பயணத்தை நிறுத்தினார். பகவான் சென்ற இடமெல்லாம் அங்கிருந்த மக்கள் அவரை வரவேற்று வழிபட்டு மிக்க மரியாதையுடன் மதிப்புமிக்க அன்பளிப்புகளை அளித்தனர்.

 

இறுதியாக, சௌவீரம் (சௌராஷ்டிரா) மற்றும் ஆபீர (குஜராத்) மாகாணங்களைக் கடந்து ஆனர்த நாடு எனப்படும் தமது துவாரகையை அடைந்தார்.

 

திரு. வனமாலி கோபால் தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives