—ராஜேந்திர நந்தனரிடமிருந்து
ஹைதராபாத்தில் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது தென்னிந்திய பிராமணர்கள் சிலர் வந்திருந்தனர். உண்மையான பிராமணர்களான இவர்களை நல்லவிதமாக உபசரிக்குமாறும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குமாறும், யஷோதநந்தன ஸ்வாமி, அச்சுதானந்த ஸ்வாமிகளிடம் ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். பொதுவாக ஆன்மீக குரு இந்த உலகில் இருக்கும்வரை அவரது திருமூர்த்தியை (விக்ரஹத்தை) கோயிலில் பிரதிஷ்டை செய்வதில்லை. தென்னிந்திய பிராமணரான சம்பத் குமார் அவர்கள், பம்பாய், விருந்தாவனம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற கோயில்களிலும் ஸ்ரீல பிரபுபாதரின் மூர்த்தியை பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள் என்பதைச் செவியுற்றவுடன், இந்தச் செயல் ஊக்குவிக்கப்படுவதில்லை என்பதற்கான சாஸ்திர பிரமாணங்களை ஸ்ரீல பிரபுபாதரிடம் வழங்குவதற்காக, தனது சொந்தச் செலவில் ஹைதராபாத்திலிருந்து பம்பாய்க்கு பயணம் மேற்கொண்டார்; ஏனெனில், மக்கள் இவரின் மூர்த்தியைப் பார்க்கும்போது, ஸ்ரீல பிரபுபாதரையே சந்திப்பதாக உணருவார்கள். அவர் வியாஸாசனத்தில் அமர்ந்துள்ளார் என்று (அஃது உண்மைதான்), அவரின் மூர்த்தியுடன் பேசுவர், பிரார்த்தனைகளைக் கூறுவர், நமஸ்கரிப்பர், மூர்த்தியை வழிபடுவர், மேலும் மூர்த்தியின் தாமரை பாதங்களை தொடுவர். இதன் விளைவாக, அவர்களின் கர்மவினைகளை ஏற்பதன் மூலம் ஸ்ரீல பிரபுபாதர் துன்புற நேரிடலாம். ஸ்ரீல பிரபுபாதரின் மீதான அன்பினால், இந்தக் கற்றறிந்த பட்டாச்சாரியர் பல சாஸ்திர மேற்கோள்களைக் காண்பித்தார். இவ்விதமாக சேவை செய்ய விரும்பிய பட்டாச்சாரியர் தமது கருத்தினை மிகவும் சிறப்பாக விளக்கினார். அவற்றைப் பொறுமையாகச் செவியுற்ற ஸ்ரீல பிரபுபாதர், பின்னர் இறுதியாக, “இதற்காகவே நான் வந்துள்ளேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா?” என்று வினவினார். அதனைக் கேட்ட மாத்திரத்திலேயே பட்டாச்சாரியர் பேசுவதை நிறுத்தினார், கரங்களைக் கூப்பி, ஸ்ரீல பிரபுபாதரை மூன்று முறை வலம் வந்து புறப்பட்டார். ஸ்ரீல பிரபுபாதர் யார் என்பதை அவர் இறுதியாகப் புரிந்து கொண்டார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!