ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்

Must read

அருளியவர்: ஸ்ரீல பக்திவினோத தாகூர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கலி யுக தர்மத்தைப் பரப்ப “ஸ்ரீ சைதன்யராக அவதரித்தார். அவரது சரிதத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்” (Sri Caitanya Mahaprabhu: His Life and Precepts) என்ற தலைப்பில் ஸ்ரீல பக்திவினோத தாகூர், ஆங்கிலத்தில், ஆகஸ்ட் 20, 1896ல் சிறிய கட்டுரையாக வெளியிட்டார். அக்கட்டுரை ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட Teachings of Lord Caitanya (விரைவில் தமிழில் வெளிவரவிருக்கும் “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள்”) என்னும் புத்தகத்தில் அறிமுகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள்…

 

சைதன்யரின் தோற்றம்

ஸகாப்த வருடம் 1407, பல்குன மாதத்தின் 23ம் நாளின் (கி.பி. 1486, பிப்ரவரி 18) மாலை வேளையில் சூரியன் மறைந்த சற்று நேரத்தில், சைதன்ய மஹாபிரபு நாதியா மாவட்டத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். சந்திர கிரஹணத்தின் போது அவர் பிறந்தார், இதுபோன்ற சூழ்நிலைகளில் வழக்கமாக நடைபெறுவதுபோல, அவர் பிறந்தபோதும் நாதியாவின் மக்கள் பாகீரதியில் நீராடியபடி ஹரிபோல் என்று உற்சாகமாக முழங்கிக் கொண்டிருந்தனர். அவரது தந்தை, வேத கலாசாரத்தைச் சார்ந்த ஏழை பிராமணரான ஜகந்நாத மிஸ்ரர்; அவரது தாய் சசீ தேவியோ எடுத்துக்காட்டாய் விளங்கும் நல்ல மங்கை; இவர்கள் இருவருமே சில்லட் நகரில் வசித்து வந்த பிராமண குடும்பத்தின் வழிவந்தவர்கள். அழகிய குழந்தையான மஹாபிரபுவைக் காண நகரத்தின் பெண்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்தனர். இவரது தாத்தாவும் (தாயின் தந்தையான) பிரபல ஜோதிடருமான பண்டிதர் நீலாம்பர சக்ரவர்த்தி அவர்கள், இக்குழந்தை வருங்காலத்தில் ஒரு மஹாபுருஷராக வருவார் என்பதை முன்னுரைத்தார்; மேலும், அதன் காரணத்தினால் குழந்தைக்கு விஷ்வம்பரர் என்று பெயர் சூட்டினார். அவரது பொன்னிற மேனியைக் கண்ட அக்கம்பக்கத்துப் பெண்கள் அவரை கௌரஹரி என்று அழைக்க, அவரது தாயோ வேப்ப மரத்தின் (நிம்ப மரத்தின்) அடியில் பிறந்ததால் அவரை நிமாய் என்றும் அழைத்தார்…

 

குழந்தைப் பருவ லீலைகள்

அவர் தனது தாயின் கரங்களில் சிறு குழந்தையாக இருந்தபோது இடைவிடாது அழுவார் என்றும், அப்போது அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் ஹரிபோல் என்று சப்தமிட அவர் தனது அழுகையை நிறுத்திவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வீட்டில் ஹரிபோல் என்னும் முழக்கம் எப்போதும் இருந்து வந்தது, இந்த காவிய நாயகனின் வருங்கால பணியை அது முன்னறிவித்தது… தனது தீர்த்தயாத்திரையின் போது அவரது வீட்டிற்கு விருந்தினராக வந்த ஒரு பிராமணர், உணவைச் சமைத்து, தியானித்தபடி கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்தார். அச்சமயத்தில் அங்கு வந்த குழந்தை நிமாய் அந்த சாதத்தை சாப்பிட்டார். குழந்தையின் செயலால் திகைப்புற்ற பிராமணர், ஜகந்நாத மிஸ்ரரின் வேண்டுகோளின்படி மீண்டும் சமைத்தார். பிராமணர் அந்த சாதத்தை கிருஷ்ணரை தியானித்தபடி நைவேத்யம் செய்ய, மீண்டும் அதனை நிமாய் சாப்பிட்டார். மூன்றாவது முறையாகச் சமைக்கும்படி பிராமணர் வேண்டுகோள் விடுக்கப்பட்டார். இம்முறை வீட்டிலுள்ளோர் அனைவரும் உறங்கிவிட, தானே கிருஷ்ணர் என்பதை அந்த யாத்திரி கருக்குக் காண்பித்து, நிமாய் அவரை ஆசிர்வதித்தார். தான் வழிபடும் தெய்வமே தன்முன் தோன்றியதைக் கண்ட பிராமணர் பரவசத்தில் மூழ்கினார்…

 

கேசவ காஷ்மீரி, நிமாயுடன் வாதம் செய்த காட்சி

கல்வி

எட்டு வயதில், மாயாப்பூருக்கு அருகிலிருந்த கங்காநகரத்தில் கங்காதாஸ பண்டிதர் நடத்திவந்த பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். இரண்டு வருடத்தில் அவர் சமஸ்கிருத இலக்கணத்திலும் அலங்காரத்திலும் வல்லுநரானார். அதன் பின்னர் அவரது கல்வி பெரும்பாலும் சுயக்கல்வியாக அவரது வீட்டிலேயே அமைந்தது, பண்டிதராகத் திகழ்ந்த தனது தந்தைக்குச் சொந்தமான பலப் புத்தகங்களை அவரால் அங்கு படிக்க முடிந்தது. புகழ்பெற்ற பண்டிதரான ரகுநாத சிரோமணியிடம் பாடம்பயின்ற தனது நண்பர்களுடன் போட்டியிட்டபடி, அவர் ஸ்மிருதியையும் நியாயத்தையும் தானாகவே பயின்றார் என்று தெரிகின்றது.

பத்து வயதிற்குப் பின், சைதன்யர் இலக்கணம், அலங்காரம், ஸ்மிருதி, நியாயம் ஆகியவற்றில் மதிக்கத்தக்க பண்டிதரானார். இதன் பின்னர், அவரது மூத்த சகோதரரான விஷ்வரூபர் வீட்டை விட்டு வெளியேறி துறவறம் பூண்டார். சைதன்யர் இளவயதுச் சிறுவனாக இருந்தபோதிலும், “இறைவனைத் திருப்திப்படுத்தும் எண்ணத்துடன் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி தனது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் பின்னர், குறுகிய காலத்திலேயே அவரது தந்தையும் இவ்வுலகினை விட்டுச் சென்றுவிட்டார். தாய் மிகவும் துயரத்திற்குள்ளாக, தனக்கே உரிய திருப்தியுற்ற தோரணையுடன் தனது விதவைத் தாய்க்கு ஆறுதல் கூறினார்.

திருமணம்

பதினான்கு அல்லது பதினைந்து வயதின்போது, அதே நாதியாவைச் சார்ந்த வல்லபாசாரியரின் மகளான லக்ஷ்மிதேவியை மஹாபிரபு திருமணம் செய்தார். நியாயக் கொள்கைகளுக்கும் சமஸ்கிருதக் கல்விக்கும் புகழ்பெற்ற ஸ்தலமான நாதியாவில், மிகச்சிறந்த பண்டிதர்களில் ஒருவராக அவர் அச்சமயத்தில் அறியப்பட்டார்… கிழக்கு வங்காளத்தில் அவர் வசித்த காலத்தில், அவரது மனைவி லக்ஷ்மிபிரியா பாம்பு கடித்ததால் இவ்வுலகினை விட்டுச் சென்றாள். வீடு திரும்பிய அவர், தனது தாய் வருத்தம் தோய்ந்த மனதுடன் இருப்பதைக் கண்டார். மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைப் பற்றிய நீண்ட உரையின் மூலம் தனது தாய்க்கு ஆறுதல் கூறினார். தாயின் வேண்டுகோளுக்கிணங்கி, ராஜ பண்டிதர் ஸநாதன மிஸ்ரரின் மகளான விஷ்ணுபிரியாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.

மாபெரும் பண்டிதர்

கிழக்கு வங்காளத்தில் குறுகிய காலத்தை கழித்துவிட்டு திரும்பிய அவருடன் அவரது நண்பர்கள் இணைந்து கொண்டனர். இச்சமயத்தில் இவர் நாதியாவிலேயே மிகச்சிறந்த பண்டிதராக அறியப்பட்டார். மாபெரும் திக்விஜயராகத் தன்னைத் தானே கூறிக்கொண்ட காஷ்மீரைச் சார்ந்த கேசவ காஷ்மீரி என்பவர் நாதியாவிலுள்ள பண்டிதர்களுடன் விவாதிக்கும் பொருட்டு அங்கு வந்தார். பெயரளவு வெற்றியுடன் விளங்கும் பண்டிதரைக் கண்ட பயத்தில், நாதியாவில் பாடசாலை வைத்திருக்கும் பண்டிதர்கள் அனைவரும் தங்களுக்கு வேறு இடத்திலிருந்து அழைப்பு வந்துள்ளதாக சாக்குச் சொல்லி ஊரை விட்டுச் சென்று விட்டனர். மாயாப்பூரிலுள்ள பரோகோன-காட் என்னுமிடத்தில் கேசவர் மஹாபிரபுவை சந்தித்தார், குறுகிய வாதத்திற்குப் பின், அவர் இந்த இளைஞனிடம் தோற்றுப் போனார். அவ மானத்தினால் ஊரை விட்டு ஓடிப் போனார். தற்போது நிமாய் பண்டிதர் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிதராக உருப்பெற்றார்.

ஆன்மீக தீட்சை

16 அல்லது 17 வயதின்போது அவர் தனது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார், புகழ்பெற்ற மாதவேந்திர பூரியின் சீடரும் வைஷ்ணவ சந்நியாசியுமான ஈஷ்வர பூரியிடமிருந்து ஆன்மீக தீட்சையை அங்கு ஏற்றுக் கொண்டார். நாதியாவிற்குத் திரும்பிய நிமாய் பண்டிதர், ஒரு மத போதகராக உருவெடுத்தார். சைதன்யர் பிறப்பதற்கு முன்பே வைஷ்ணவ கொள்கைகளை ஏற்றிருந்த அத்வைத பிரபுவும் ஸ்ரீ வாஸரும் இந்த இளைஞனின் மாற்றத்தைக் கண்டு ஆச்சரியமடையும் அளவிற்கு அவரது மாற்றம் பலமாக இருந்தது. அதன் பின்னர், அவர் ஒரு வாதமிடும் பண்டிதராகவோ, சண்டையிடும் ஸ்மார்தராகவோ, குற்றங்களைச் சுட்டிக் காட்டும் அலங்கார வித்வானாகவோ இருக்கவில்லை. கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரித்து பரவசத்தில் மூழ்கியவராகத் திகழ்ந்தார், பக்திப் பரவசத்தின் தாக்கத்தினால் உற்சாகமடைந்த நபராக விளங்கினார். ஸ்ரீவாஸ பண்டிதரின் வீட்டில் தனது நூற்றுக்கணக்கான சகாக்களின் மத்தியில் (அவர்களில் பெரும்பாலானோர் நன்கு கல்விகற்ற பண்டிதர்கள்), அவர் தனது அதிஅற்புத சக்திகளை வெளிப்படுத்தியதை நேரில் கண்ட முராரி குப்தர் அந்நிகழ்ச்சியை விவரித்துள்ளார். அச்சமயத்தில்தான் அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் ஸ்ரீவாஸ பண்டிதரின் வீட்டினுள் இரவு நேர கீர்த்தன பள்ளியைத் தொடக்கினார். அங்கு அவர் பிரச்சாரம் செய்தார், பாடினார், ஆடினார், தனது எல்லாவித தெய்வீக உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினார்…

பிரச்சாரம்

நித்யானந்த பிரபுவிற்கும் ஹரிதாஸ தாகூருக்கும் அவரளித்த முதல் கட்டளை: “நண்பர்களே, செல்லுங்கள்! நகரத்தின் வீதிகளுக்குச் செல்லுங்கள், வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு மனிதனையும் சந்தியுங்கள், அவனை தூய வாழ்வுடன் ஹரியின் திருநாமத்தைப் பாடச் சொல்லுங்கள், பின்னர் தினசரி மாலை நேரத்தில் உங்களது பிரச்சாரப் பணியின் பலன்களை எனக்குத் தெரிவிப்பீராக.” இக்கட்டளையைப் பெற்ற இரண்டு பிரச்சாரகர்களும் அதனை தினமும் நிறைவேற்றினர். ஒருமுறை ஜகாய், மதாய் என்னும் இரண்டு வெறுக்கத்தக்க நபர்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. மஹாபிரபுவின் கட்டளையைக் கேட்ட அவர்கள் இரண்டு பிரச்சாரகர்களையும் அவமதித்தனர், இருப்பினும் பகவான் அளித்த பக்தியின் போதனைகளால் கவரப்பட்டு விரைவிலேயே மாற்றப்பட்டனர். இதனால் ஆச்சரியமுற்ற நாதியாவின் மக்கள், “நிமாய் பண்டிதர் ஒரு மிகச்சிறந்த பண்டிதர் மட்டுமல்ல, அவர் நிச்சயமாக வல்லமை பொருந்திய கடவுளால் அனுப்பப்பட்ட தூதரே,” என்று கூறினர். அத்தருணத்திலிருந்து தனது இருபத்திமூன்று வயது வரை அவர் தனது கொள்கைகளை நாதியாவில் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள இதர கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரம் செய்தார். தன்னைப் பின்பற்றுவோரின் இல்லங்களில் அவர் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார், பக்தியின் அந்தரங்க கொள்கைகளைக் கற்றுக் கொடுத்தார், மேலும், இதர பக்தர்களுடன் சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டார். நாதியா நகரத்திலிருந்த அவரது தொண்டர்கள் ஹரியின் திருநாமத்தை கடைவீதிகளிலும் இதர வீதிகளிலும் பாடத் தொடங்கினர். பரபரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான எண்ணங்களை எழுப்பியது. பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், ஸ்மார்த பிராமணர்களோ நிமாய் பண்டிதரின் வெற்றியினால் பொறாமை கொண்டு, சைதன்யரின் குணம் இந்துக்களைப் போன்று அல்ல என்று சந்த் காஜியிடம் குற்றம் சாட்டினர். ஸ்ரீவாஸ பண்டிதரின் வீட்டிற்கு வந்த காஜி அங்கிருந்த மிருதங்கத்தை உடைத்து அறிவித்தார்: “நிமாய் பண்டிதர் தனது விசித்திரமான மதத்தை பிரச்சாரம் செய்வதை கைவிடவில்லையெனில், அவரின் மீதும் அவரைப் பின்பற்றுபவர்களின் மீதும் இஸ்லாமிய மதத்தை திணிக்க வேண்டியிருக்கும்.” இச்செய்தி மஹாபிரபுவிடம் தெரிவிக்கப்பட, நகர மக்கள் ஒவ்வொருவரும் கையில் தீப்பந்தத்துடன் மாலை வேளையில் கூடுமாறு அவர் கட்டளையிட்டார். அவர்கள் அவ்வாறு கூடியபோது 14 குழுக்களாகப் பிரிந்து ஸங்கீர்த்தனம் செய்தபடி பேரணி ஒன்றை அமைத்தார். காஜியின் வீட்டை அவர் அடைந்தபோது, காஜியுடன் நீண்ட விவாதம் நிகழ்த்தினார், இறுதியில் காஜியின் உடலைத் தொட்டு தனது வைஷ்ணவ கருத்தை அவரது இதயத்தினுள் தெரிவித்தார். கண்ணீர் வடித்த காஜி, பலமான ஆன்மீகத் தாக்கத்தை தான் உணர்ந்ததாகவும், அதன் காரணத்தினால் தனது சந்தேகங்கள் அனைத்தும் தெளிவுபெற்று தன்னுள் ஒரு மத எழுச்சியும் மிகவுயர்ந்த பரவசமும் ஏற்பட்டன என்று ஒப்புக் கொண்டார். பின்னர் காஜியும் சங்கீர்த்தன குழுவில் இணைந்து கொண்டார். பெருமானின் ஆன்மீக சக்தியைக் கண்டு உலகமே வியந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், முரண்பட்ட கருத்துடைய நூற்றுக்கணக்கானோர் மாற்றப்பட்டு விஷ்வம்பரரின் கொடியின் கீழ் இணைந்தனர்.

சந்நியாசம்

ஒரு குறிப்பிட்ட குடும்பம், ஜாதி, இனம் ஆகியவற்றுடன் தனக்குள்ள தொடர்பை துண்டித்துவிட்டு, உலகத்தின் குடிமகனாக ஆவதற்கு உறுதி பூண்டார்; இந்த தீர்மானத்துடன் தனது 24வது வயதில், கட்வாவிலிருந்த கேசவ பாரதியின் வழிகாட்டுதலின்படி அவர் சந்நியாச ஆஸ்ரமத்தை ஏற்றுக் கொண்டார். அவரது தாயும் மனைவியும் அவரது பிரிவிற்காக கதறி அழுதனர், ஆனால் நமது நாயகனோ, மென்மையான இதயம் கொண்டவர் என்றபோதிலும் தனது கொள்கையில் பலமாக இருப்பவர் ஆயிற்றே. அவர் குடும்பம் என்னும் சிறிய உலகினைத் துறந்து, கிருஷ்ணரின் எல்லையற்ற ஆன்மீக உலகத்திற்காக பொதுமக்களுடன் சேர்ந்தார்.

சந்நியாசம் ஏற்ற பின்னர், சாந்திபூரில் உள்ள அத்வைத பிரபுவின் இல்லத்திற்குச் செல்லும்படி அவர் தூண்டப்பட்டார். தனது நண்பர்களையும் மரியாதைக்குரியவர்களையும் அழைத்த அத்வைதர், சசீதேவியையும் அழைத்து அவளது மகனைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கினார். தனது மகனை சந்நியாசியின் தோற்றத்தில் கண்டபோது, அவளது இதயத்தில் இன்பமும் துன்பமும் கலந்தோடின. சந்நியாசி என்பதால், கிருஷ்ண சைதன்யர் ஒரு கோவணமும் வெளியாடையும் (பஹிர்வாஸ்) மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது தலையில் முடி இல்லை, கைகள் சந்நியாச தண்டத்தையும் (குச்சியையும்) கமண்டலத்தையும் தாங்கியிருந்தன. அத்திருமகன் தனது தாயின் பாதங்களில் விழுந்து, “தாயே! இந்த உடல் தங்களுடையது, நான் தங்களின் கட்டளைகளுக்கு பணிய வேண்டும். எனது ஆன்மீக இலக்கை அடைவதற்காக நான் விருந்தாவனம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார். அத்வைதருடனும் மற்றவர்களுடனும் ஆலோசித்த தாய், தனது மகனை ஜகன்னாதரின் இருப்பிடமான பூரியில் தங்கும்படி வேண்டினாள், அதன் மூலம் அவரைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது அவள் பெற முடியும். அப்பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மஹாபிரபு சில தினங்களில் சாந்திபூரிலிருந்து ஒரிஸா நோக்கிப் புறப்பட்டார்…

காஜியுடன் நிமாய் நடத்திய உரையாடலின் காட்சி

ஸார்வபௌமருடன் வாதம்

பூரியை அடைந்து ஜகந்நாதரைக் கோவிலில் கண்ட அவர், அதன் பின்னர் ஸார்வபௌமரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவருடன் தங்கினார். ஸார்வபௌமர் அக்காலத்தின் மாபெரும் பண்டிதர், அவரது கல்விக்கு எல்லையே இல்லை. அச்சமயத்தில் அவரே மிகச்சிறந்த நையாயிகர் (நியாய சாஸ்திர வல்லுநர்), மேலும், சங்கராசாரியர் கற்பித்த வேதாந்த கொள்கையில் மிகவும் தேர்ந்த பண்டிதராக அறியப்பட்டார்… சந்நியாசியின் அழகைக் கண்டு ஆச்சரியமுற்ற ஸார்வபௌமர் இந்த இளைஞரால் தனது வாழ்நாள் முழுவதும் சந்நியாச ஆஸ்ரமத்தை தக்க வைத்துக் கொள்வது கடினம் என்று அஞ்சினார். மஹாபிரபுவை நாதியாவில் இருக்கும்போதே அறிந்திருந்த கோபிநாதர், அவர் மீது கொண்ட மிகுந்த மரியாதையினால் இந்த சந்நியாசி சாதாரண மனிதனல்ல என்று அறிவித்தார். இக்கருத்தில் கோபிநாதருக்கும் ஸார்வபௌமருக்கு மிடையில் சூடான விவாதம் எழுந்தது. பின்னர், தன்னிடமிருந்து வேதாந்த சூத்திரங்களைக் கேட்கும்படி ஸார்வபௌமர் மஹாபிரபுவிடம் வேண்டு கோள் விடுக்க, அவர் மௌனமாக சம்மதித்தார். மிகச்சிறந்த ஸார்வபௌமர் ஏழு நாள்கள் கம்பீரத்துடன் உரைத்த விஷயங்களை சைதன்யர் மௌனமாகக் கேட்டார். அதன் இறுதியில், ஸார்வபௌமர், “கிருஷ்ண சைதன்யரே! என்னுடைய பாராயணத்தையும் விளக்கவுரையையும் கேட்ட தாங்கள் ஏதும் கூறாது இருப்பதால், தங்களுக்கு வேதாந்தம் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். தான் சூத்திரங்களை மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டதாகவும், ஆனால் சங்கராசாரியர் அளித்த விளக்கவுரையை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சைதன்யர் பதிலளித்தார். இதனால் ஆச்சரியமுற்ற ஸார்வபௌமர், “அஃது எப்படி? சூத்திரங்களின் அர்த்தங் களைப் புரிந்துகொண்ட தாங்கள் அந்த சூத்திரங்களை விளக்கும் வியாக்கியானத்தைப் புரிந்துகொள்ளவில்லையா? நன்று! சூத்திரங்களைத் தாங்கள் புரிந்துகொண்டீர்கள் எனில், தங்களது வியாக்கியானத்தை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று கூறினார். அதன் பின்னர், மஹாபிரபு எல்லா சூத்திரங்களையும் தனது சொந்த வழியில் சங்கரரின் அத்வைத உரையைத் தொடாமல் விளக்கினார். சைதன்யர் வழங்கிய விளக்கங்களில், மெய்பொருள், அழகு, வாதங்களுக்கு இடையே இருந்த பொருத்தம் ஆகியவற்றை ஸார்வபௌமர் நன்கு புரிந்து கொண்டார், அவ்விளக்கங்கள், பிரம்ம சூத்திரங்களை இவ்வளவு எளிமையாக விளக்கக்கூடிய நபரை தற்போதுதான் முதன்முதலில் காண்பதாக அவரை ஒப்புக்கொள்ள வைத்தன. மேலும், வேதாந்த சூத்திரத்திற்கு மஹாபிரபுவிடமிருந்து பெற்ற விளக்கங்களை போன்ற இயற்கையான விளக்கங்களை சங்கரரின் வியாக்கியானம் ஒருபோதும் வழங்கிய தில்லை என்றும் ஏற்றுக் கொண்டார். பின்னர், மஹா பிரபுவின் தொண்டராகவும் அவரது கருத்துக்களை முன்னுரைப்ப வராகவும் ஸார்வபௌமர் மாறினார். குறுகிய நாள்களில் அவர் அக்காலத்தின் மிகச்சிறந்த வைஷ்ணவர்களில் ஒருவரானார். இச்செய்தி வெளியில் வர, ஒரிஸா முழுவதும் கிருஷ்ண சைதன்யரின் புகழ் பாடப்பட்டது, நூற்றுக்கணக்கானோர் அவரிடம் வந்து அவரைப் பின்பற்றுபவர்களாக மாறினர். அச்சமயத்தில் தென்னிந்தியா செல்ல விரும்பிய மஹாபிரபு, கிருஷ்ண தாஸ் என்ற பிராமணருடன் புறப்பட்டார்.

ஸ்ரீ சைதன்யருக்கு ஸார்வபௌமர் வேதாந்தம் கற்றுக் கொடுத்த காட்சி

தென்னிந்திய பயணம்

…முதலில் கூர்மக்ஷேத்திரத்திற்குச் சென்று, அங்கு வாஸுதேவர் என்ற குஷ்டரோகியை குணப்படுத்தி மஹாபிரபு அதிசயம் நிகழ்த்தினார். வித்யாநகரத்தின் ஆளுநரான இராமானந்த ராயரை கோதாவரிக் கரையில் சந்தித்து, அவருடன் பிரேம பக்தியைப் பற்றிய தத்துவ உரையாடலை அவர் மேற்கொண்டார். தசரதரின் மகனான இராமச்சந்திரர் மாவீரன் வாலியைக் கொல்வதற்காக அம்பெய்திய ஏழு பனை மரங்களைத் தொட்டு அவற்றை உடனடியாக அங்கிருந்து மறையச் செய்து மற்றுமொரு அதிசயத்தை நிகழ்த்தினார். அவர் தனது பயணம் முழுவதும் வைஷ்ணவ தர்மத்தையும் நாம சங்கீர்த்தனத்தையும் பிரச்சாரம் செய்தார். மழைக்காலத்தைக் கழிப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் வேங்கடபட்டர் என்பவரின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கினார். அக்குடும்பம் முழுவதையும், வேங்கடரின் பத்து வயது மகனான கோபாலன் உட்பட அனைவரையும் அவர் இராமானுஜ வைஷ்ணவத்திலிருந்து கிருஷ்ண பக்திக்கு மாற்றினார். பின்னர் விருந்தாவனத்திற்கு வந்த கோபாலன், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் கீழ் தொண்டாற்றிய ஆறு கோஸ்வாமிகளில் ஒருவரானார்… கன்னியாகுமரி வரை தென்னிந்தியாவில் பயணம் செய்த சைதன்யர் பீம நதிக்கரையிலுள்ள பண்டரிபூரின் வழியாக இரண்டு வருடத்தில் பூரிக்குத் திரும்பினார்… தனது பயணத்தின் போது, அவர் புத்தமதவாதிகள், ஜைனர்கள், மற்றும் மாயாவாதிகளை பல்வேறு இடங்களில் சந்தித்து, தன்னை எதிர்த்தவர்களை வைஷ்ணவ தர்மத்திற்கு மாற்றினார்…

லீலைகளின் முடிவு

முப்பத்தி ஒன்றாம் வயதிலிருந்து, நாற்பத்தி எட்டு வயதில் டோடா கோபிநாத் கோவிலில் நடைபெற்ற சங்கீர்த்தனத்தின் உச்சத்தில் மறையும் வரை, மஹாபிரபு தொடர்ந்து காசி மிஸ்ராவின் வீட்டில் பூரியிலேயே வசித்தார். இந்த பதினெட்டு வருடங்களில் அவரது வாழ்க்கையில் அன்பும் பக்தியும் நிலை நாட்டப்பட்டிருந்தது. அவரைப் பின்பற்றிய எண்ணிலடங்காதோர் அவரைச் சுற்றி இருந்தனர். அவர்கள் அனைவரும் மிகவும் உயர்ந்த வைஷ்ணவர்கள்; தங்களது தூய்மையான நடத்தை, கல்வி, திடமான மதக் கொள்கைகள், மற்றும் ராதா-கிருஷ்ணரின் மீதான ஆன்மீக அன்பின் மூலம் அவர்கள் பொதுமக்களிடமிருந்து தனித்து விளங்கினர்.

குஷ்டரோகத்தினால் துன்பப்பட்ட வாசுதேவரை குணப்படுத்திய காட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives