வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
பாராளுமன்றம் குலுங்கியது, உறுப்பினர்கள் அனைவரும் கோஷம் போட்டனர், அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்–தினமும் பத்திரிகையில் படிக்கும் நிகழ்ச்சிகள்தானே இவை. ஆனால், இதே நிகழ்ச்சிகள் டிசம்பர் பத்தொன்பதாம் நாள் பாராளுமன்றத்தில் அரங்கேறியபோது, அதன் நிலை வேறு. இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் முறையான குரு சீடப் பரம்பரையில் பெறப்பட்டு எழுதப்பட்ட பகவத் கீதையின் உரையான பகவத் கீதை உண்மையுருவில் என்னும் புத்தகத்தினைத் தடை செய்ய வேண்டும் என்று ரஷ்ய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, பாராளுமன்றத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய வருடங்களில் ரஷ்ய மக்களில் பலர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் (இஸ்கானில்) இணைந்து பக்தர்களாக மாறி வருகின்றனர். இத்தகைய மாற்றங்களுக்கு ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதை உண்மையுருவில் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனைச் சகித்துக்கொள்ள இயலாத சில அமைப்பினர், பகவத் கீதை உண்மையுருவில் புத்தகத்தினை வன்முறையைப் பரப்பும் புத்தகமாக அறிவித்து தடை செய்ய வேண்டுமென்று ரஷ்யாவின் டோம்ஸ்க் மாகாணத்தின் நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்தனர்.
பல்வேறு விசாரணை களுக்குப் பின்னர், இவ்வழக் கிற்கான தீர்ப்பு டிசம்பர் மாதம் பத்தொன்பதாம் நாள் வரவிருந்த நிலையில், அன்றைய தினத்தன்று இந்திய பாராளுமன்றம் குலுங்கியது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையோ பகவத் கீதையையோ யாரும் அவமதிக்கக் கூடாது என்றும், அத்தகைய அவமரியாதையை ஏற்க முடியாது என்றும், மத்திய அரசு ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், பல்வேறு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். கட்சி வேறுபாடுகள் பாராமல் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களும் மத்திய அரசை வலியுறுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களும் பகவத் கீதைக்கு ஆதரவு தெரிவித்து செய்திகளை வெளியிட்டன. கொல்கத்தாவைச் சார்ந்த இஸ்கான் பக்தர்கள் ரஷ்ய தூதரகத்தின் முன்பு ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தபடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில், வழக்கின் தீர்ப்பு டிசம்பர் இருபத்தெட்டாம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான திரு. எஸ்.எம். கிருஷ்ணா பாராளுமன்றத்தில் அரசின் நடவடிக்கைகளை விளக்கினார். ரஷ்யாவின் கம்யூனிச எண்ணங்களினால் இஸ்கான் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தபோது இந்திய அரசாங்கம் உதவியதை நினைவுகூர்ந்த அவர், இவ்வழக்கினை மத்திய அரசு கூர்ந்து கவனிப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டுமென்று எதிர்கட்சித் தலைவர் திருமதி. சுஷ்மா சுவராஜ் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் திரு. அலெக்சாண்டர் கடாகின் அவர்கள், பகவத் கீதை இந்தியர்களுக்கு மட்டுமின்றி உலகத்தவர் அனைவருக்கும் ஞானத்தை நல்கும் உயர்ந்த புத்தகம் என்றும், தற்போது ரஷ்யா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்றும் எடுத்துரைத்து, இவ்வழக்கு முழுவதும் முட்டாள்தனமான சில தனிப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
வழக்கைத் தொடர்ந்த திரு. விக்டோர் ஃப்யோடோவ் என்பவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கொடுப்பதை ரஷ்ய ஊடகங்கள் சுட்டிக் காட்டின. ரஷ்ய மக்களில் பெரும்பகுதியினர் வழக்கினை கண்டித்தது மட்டுமின்றி, அதனை டோம்ஸ்க் நகரத்திற்கு ஏற்பட்ட ஓர் இழிவாகக் கருதினர். ஐயாயிரம் வருடங்கள் பழமையான பகவத் கீதை திடீரென்று வன்முறையைத் தூண்டும் புத்தகமாக எவ்வாறு மாறிவிட்டது என்று கேள்வியெழுப்பிய கசேடா என்னும் பத்திரிகை, ரஷ்யர்கள் புத்தியுடன் செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தியது. ரஷ்யாவைச் சேர்ந்த பல்வேறு அறிஞர்கள், மத வல்லுநர்கள், மனித உரிமைக்குக் குரல் கொடுப்போர் என அனைவரும் ஒருமித்த குரலுடன் வழக்கினை எதிர்த்தனர். லக்னோவைச் சார்ந்த இஸ்லாமிய குழுவின் தலைவரான திரு. நோமானி அவர்களும் வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இவ்வழக்கில் இஸ்கானிற்கு பதிலாக இந்திய அரசாங்கமே களத்தில் இறங்க வேண்டுமென்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அனைவரும் டிசம்பர் இருபத்தெட்டாம் நாளை நோக்கிக் காத்திருந்தனர்.
இறுதியில், ரஷ்யாவின் ஜனநாய கத்தை உறுதிப்படுத்தும் வகையில் பகவத் கீதைக்கு எதிரான வழக்கினை முற்றிலுமாக தள்ளுபடி செய்த டோம்ஸ்க் நீதிமன்றம் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு செய்திகளைக் கிளப்பிய இவ்வழக்கு, இறுதியில் இஸ்கானிற்கு வெற்றியைக் கொடுத்தது மட்டுமின்றி, பகவத் கீதை உண்மையுருவில் புத்தகத்தினை உலகெங்கிலும் மேலும் பிரபலமடையச் செய்தது. இதனால் பக்தர்கள் இவை அனைத்தையும் கிருஷ்ணரின் ஏற்பாடாக ஏற்றுக் கொண்டனர். இஸ்கான் தனது மனமார்ந்த நன்றியினை இந்திய அரசாங்கம், ரஷ்ய அரசாங்கம், இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான திரு. எஸ்.எம். கிருஷ்ணா, ரஷ்யாவிற்கான இந்திய தூதர் திரு. அஜய் குமார் மல்ஹோத்ரா, இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் திரு. அலெக்சாண்டர் கடாகின் ஆகியோருக்கும் ஆதரவு தெரிவித்த ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்தது.
[பகவத் தரிசனத்தின் ஜனவரி இதழ் அச்சகத்திற்குச் சென்றபோது வழக்கின் தீர்ப்பு வெளிவராததால், எந்தவொரு செய்தியையும் வெளியிடுவது உசிதமல்ல என்ற காரணத்தினால், சென்ற இதழில் இத்தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.]
மேலே குறிப்பிட்ட செய்திகள் பெரும்பாலான அன்பர்கள் அறிந்ததாக இருக்கலாம். அதே சமயத்தில் வழக்கைத் தொடுத்தவர்கள் என்ன காரணத்தினால் அதைச் செய்தனர், அவர்கள் முன்வைத்த வாதங்கள் யாவை என்பதை அறிவதற்குச் சிலர் விரும்பலாம். சுருக்கமாகச் சொன்னால், பகவத் கீதையை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது என்பது கேவலமான செயல்; வழக்கின் வாதங்கள் குதர்க்கமானவை. இருப்பினும், வழக்கில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய வாதங்களையும் அதற்கான பிரதிவாதங் களையும் பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காகச் சுருக்கமாக இங்கு வழங்குகிறோம்.
வழக்கின் வாதங்கள்
வாதம்: பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனைப் போரிடச் சொல்வதால், இப்புத்தகம் வன்முறையை தூண்டக் கூடியதாக அமையும்.
பிரதிவாதம்: கீதையில் கிருஷ்ணர் அதர்மத்தை எதிர்த்து போரிடும்படியும் கடமையைச் செய்யும்படியும் அர்ஜுனனை வலியுறுத்துகிறார். இந்த அறிவுரைகள் நிச்சயம் வன்முறையை தூண்டக்கூடியவை அல்ல. அவ்வாறு வன்முறையைத் தூண்டக்கூடியவை யாக இருந்தால், கடந்த 5,000 வருடங்களில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம்–ஆனால் அதுபோன்று எந்தவொரு சம்பவமும் நிகழ்ந்ததாக சரித்திரத்தில் எந்தவொரு தகவலும் இல்லை.
வாதம்: பகவத் கீதை மற்ற மதத்தினரை குறைத்து மதிப்பிட்டு கிருஷ்ண பக்தர்களை மட்டும் உயர்ந்ததாகக் கூறுகிறது.
பிரதிவாதம்: பகவத் கீதையில் எல்லா தர்மங்களையும் துறந்து தன்னிடம் மட்டுமே சரணடைய வேண்டுமென்று பகவான் கிருஷ்ணர் சொல்வது உண்மையே. கீதை வாழ்வின் தத்துவங்களை எடுத்துரைக்கும் ஓர் உன்னதமான புத்தகம், இஃது எந்தவொரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் உரியதல்ல. மனிதர்கள் அனைவருக்கும் உரித்தான கீதையில் தத்துவக் கருத்துக்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் விளக்கப்பட்டுள்ளன. வழிபாட்டின் பல்வேறு முறைகளையும் நிலைகளையும் விளக்குவது மட்டுமின்றி, அவற்றில் மிகவுயர்ந்த வழிபாட்டையும் கீதை தெளிவுபடுத்துகிறது.
வாதம்: கிருஷ்ணரை ஏற்காதவர்கள் முட்டாள்கள் என்று கண்டிக்கப்படுகின்றனர்.
பிரதிவாதம்: ஆம். கிருஷ்ணர் அதனை தானே கீதையில் எடுத்துரைக்கிறார். வாழ்வின் உண்மையான குறிக்கோளை மறந்து புலனின்பமே பிரதானம் என்று வாழ்பவர்கள் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் நிச்சயம் முட்டாள்களே. இதனை கீதையைப் படிப்பவர்கள் அனைவரும் எளிதில் உணர முடியும். உண்மை கசக்கும் என்பதால் உண்மையை மறுப்பது மரபு அல்ல. கீதையில் இருக்கும் கடினமான சொற்களை ஏற்க மறுப்பவர்கள் எந்த மதநூல்களைப் படித்தாலும், கடவுளை ஏற்காதவர்கள் முட்டாள்கள் என்று கூறப்படுவதைக் காண முடியும். முட்டாள்கள் என்று சிலர் கூறப்படுவதால், கீதையைத் தடை செய்ய வேண்டும் என்றால், பைபிள், குரான் உட்பட அனைத்து மத நூல்களையும் தடை செய்ய வேண்டுமே.
வாதம்: தடை கோருவது பகவத் கீதைக்கு அல்ல, பிரபுபாதரின் உரைக்கு மட்டுமே.
பிரதிவாதம்: ஸ்ரீல பிரபுபாதரின் விளக்கவுரையானது முறையான குரு சீடப் பரம்பரையிலிருந்து வருவதாகும். அவர் சுயமாக எந்த கருத்தையும் சேர்க்கவுமில்லை, கீதையிலிருந்து எந்த கருத்தையும் விலக்கவுமில்லை. கிருஷ்ணர் முட்டாள் என்று சொல்லும்போது ஸ்ரீல பிரபுபாதரும் முட்டாள் என்று கூறுகிறார். கிருஷ்ணர் தன்னிடம் சரணடையும்படி கூறும்போது ஸ்ரீல பிரபுபாதரும் கிருஷ்ணரிடம் சரணடையும்படி கூறுகிறார். கீதைக்கு உரை எழுதும் பலர் கீதையிலுள்ள பல்வேறு கருத்துகளை ஒதுக்கிவிடுகின்றனர் என்பதால், மற்ற கீதையைப் படித்துவிட்டு ஸ்ரீல பிரபுபாதரின் உரையைப் படிப்போர் நிச்சயம் வேறுபாடுகளைக் காண்பர். ஆழமாகப் படிப்பவர்கள் கிருஷ்ணர் கூறுவதை ஸ்ரீல பிரபுபாதர் சற்றும் மாற்றாமல் உள்ளது உள்ளபடி வழங்குவதைக் காண முடியும். ஸ்ரீல பிரபுபாதரின் உரையில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் கீதையில் கிருஷ்ணரால் சொல்லப்பட்டு மற்ற உரையாசிரியர்களால் மறைக்கப்பட்டவையே. எனவே, தடை கோருவது கீதைக்கு அல்ல, பிரபுபாதரின் உரைக்கு மட்டுமே என்பது முற்றிலும் பொருந்தாத வாதம். இஸ்கானின் வளர்ச்சியை பொறுக்க இயலாதவர்களின் சில்லரைத்தனத்தை இது குறிக்கின்றது.