வழங்கியர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: முதல் காண்டத்தின் நான்காம் அத்தியாயமும் ஐந்தாம் அத்தியாயத்தின் ஒரு பகுதியும்
மூன்றாம் அத்தியாயத்திற்கும் நான்காம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
மூன்றாம் அத்தியாயத்தின் இறுதியில், தர்மம் கலி யுகத்தில் ஸ்ரீமத் பாகவதத்திடம் தஞ்சம் புகுந்துள்ளது என்பதைக் கேட்ட சௌனக முனிவர் பாகவதத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் நான்காம் அத்தியாயத்தில் மூன்று கேள்விகளைக் கேட்கிறார்.
சௌனகரின் கேள்விகள்
நைமிஷாரண்யத்தில் கூடிய முனிவர்கள் (முதல் அத்தியாயத்தில்) எழுப்பிய கேள்விகளுக்கு சூத கோஸ்வாமி அளித்த பதில்களைக் கேட்ட சபைத் தலைவரான சௌனக ரிஷி, சூத கோஸ்வாமியினை பேரதிர்ஷ்டம் வாய்ந்தவர் என்றும் மரியாதைக்குரியவர் என்றும் புகழ்ந்த பின்னர் அவரிடம் மேலும் வினவினார்.
சூத கோஸ்வாமியே, ஸ்ரீமத் பாகவதத்தின் வரலாற்றைக் கேட்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம். இந்த மாபெரும் பணிக்கான ஊக்கத்தை ஸ்ரீல வியாஸதேவர் எவ்வாறு பெற்றார்? இது தொகுக்கப்பட்டதன் காரணம் என்ன?
உடல் சார்ந்த வாழ்விலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவரான சுகதேவ கோஸ்வாமி இப்பெருங் காவியத்தைப் பயில்வதில் விருப்பம் கொண்டது ஏன்? பால் கறக்கும் நேரத்திற்கு (சுமார் அரைமணி நேரத்திற்கு) மேல் எந்தவொரு இல்லறத்தவரின் வீட்டிலும் தங்காத அவர், இல்லறத்தவர் மட்டுமல்லாது பேரரசராகவும் இருந்த பரீக்ஷித் மஹாராஜரிடம் தொடர்ந்து ஏழு நாள்கள் பேசியது எப்படி? ஏதுமறியாதவர் போல சுற்றித் திரிந்த சுகதேவ கோஸ்வாமியின் ஆன்மீக உயர்வை பரீக்ஷித் மஹாராஜரும் பிறரும் எவ்வாறு அறிந்து கொண்டனர்?
சுகதேவரை பரீக்ஷித் மஹாராஜர் சந்திக்க நேர்ந்ததும் வேதங்களின் சாரமான ஸ்ரீமத் பாகவதத்தை அவரிடமிருந்து பெற முடிந்ததும் எப்படி? பரீக்ஷித் மஹாராஜர் பகவானின் முதல்தர பக்தர், முழு உலகத்திற்கும் சக்கரவர்த்தியாக இருந்தவர்; அவர் ஏன் அனைத்தையும் கைவிட்டு கங்கைக் கரையில் அமர்ந்து சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்? அவர் இளமையும் வலிமையும் மிக்கவர், எதிரிகளும்கூட அவரது பாதங்களில் விழுந்து வணங்கி தம் செல்வங்களை எல்லாம் அவரிடம் சமர்ப்பித்தனர். அத்தகைய மஹாராஜர் ஏன் தமது வாழ்வு உட்பட அனைத்தையுமே துறக்க விரும்பினார்? மஹாத் மாக்கள் எவ்வித சுயநலனிற்காகவும் வாழ்வதில்லை. பரீக்ஷித் மஹாராஜர் அத்தகு மஹாத்மாவாக உலக ஆசைகளின்றி இருந்தார் என்றால்கூட, பிறருக்கு அடைக்கலமாக விளங்கிய தம் உடலை அவரால் எவ்வாறு கைவிட முடிந்தது?”
வியாஸதேவர் வேத, புராணங்களைத் தொகுத்தல்
சௌனக ரிஷியின் கேள்விகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக சூத கோஸ்வாமி பதிலளிக்கத் தொடங்கினார். முதலில் வியாஸ தேவர் ஸ்ரீமத் பாகவதத்தை எவ்வாறு தொகுத்தார் என்பதை விளக்கினார்.
தற்போதைய யுக சுழற்சியானது வைவஸ்வத மனுவின் ஆட்சியில் நிகழும் இருபத்தி எட்டாவது சுழற்சியாகும். இந்த குறிப்பிட்ட சுழற்சியின்போது, இரண்டாவது யுகமான துவாபர யுகமும் மூன்றாவது யுகமான திரேதா யுகமும் மாறி வருவது வழக்கம். அதாவது, துவாபர யுகம் மூன்றாவதாகவும் திரேதா யுகம் இரண்டாவதாகவும் வருகின்றன, இம்மாற்றம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றத்தால் நிகழ்கிறது. இவ்வாறு மாறிவரும் துவாபர யுகத்தின் மூன்றாவது சந்தியில் ஸ்ரீல வியாஸதேவர், பெரும் முனிவரான பராசரருக்கும் ஸத்யவதிக்கும் மகனாகப் பிறந்தார்.
வியாஸதேவரின் ஆஷ்ரமம் இமயமலையில் பத்ரிகாஷ்ரமத்திற்கு அருகில் ஸம்யாப்ராஸம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. ஒருநாள் சூரியோதயத்தின்போது சரஸ்வதி நதியில் குளித்துவிட்டு அதன் கரையில் அவர் தியானத்தில் அமர்ந்தார். முக்தி பெற்ற ஆத்மா என்பதால், வரவிருந்த கலி யுகத்தின் சீர்கேடுகளை அவரால் முன்னறிய முடிந்தது. நம்பிக்கையற்ற நபர்கள், ஸத்வ குணமின்றி மந்த புத்தியுடனும் அமைதியற்றும் ஆகி விடுவார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. இத்தகைய மக்களின் நன்மைக்காக என்ன செய்வது என்று ஆழ்ந்து சிந்திக்க முற்பட்டார்.
மனிதர்களின் தொழில்களைத் தூய்மைப்படுத்துவதற்கான சிறந்த வழி, வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யாக முறைகளே என்று எண்ணிய ஸ்ரீல வியாஸதேவர், வேதத்தின் முழு விஷயத்தையும் எளிமைப்படுத்துவதற்காக அதனை நான்காகப் பிரித்தார். அதனுடன் ஐந்தாம் வேதம் என்று அழைக்கப்படுவதும் வரலாற்றினை விளக்குவதுமான புராணங்களையும் தொகுத்தார்.
வியாஸதேவர் ரிக் வேதத்தை பைல ரிஷியிடமும், ஸாம வேதத்தை ஜைமினியிடமும், யஜுர் வேதத்தை வைஸம்பாயனரிடமும், அதர்வ வேதத்தை அங்கிரா முனிவரிடமும், புராணங்களை சூத கோஸ்வாமியின் தந்தையான ரோமஹர்ஷணரிடமும் ஒப்படைத்தார். வியாஸ தேவரின் இந்த சீடர்கள் இதனை தங்களது மாணவர்களுக்கு வழங்க, வேத ஞானத்தின் பல்வேறு கிளைகளும் சீடப் பரம்பரைகளும் உரு வாயின. அதன் பின்னர், பெண்கள், தொழிலாளர்கள், உயர் வகுப்பிலிருந்து விலகியோர் போன்ற அறிவிற் குறைந்தோருக்காக, மஹாபாரதம் என்னும் பெரும் வரலாற்று காவியத்தினையும் தொகுத்தார்.
வியாஸரின் மனக் கவலை
எல்லா தரப்பு மக்களின் நன்மைக்காகவும் அயராது உழைத்து இவ்வளவு செய்திருந்தும், தமது உள்ளத்தில் திருப்தியின்மையை உணர்ந்த காரணத்தினால், ஸ்ரீல வியாஸதேவர் ஆழ்ந்து சிந்திக்கலானார்: அனைத்து வித ஒழுக்கநெறிகளையும் உறுதிமொழிகளையும் கண்டிப்புடன் கடைப்பிடித்தேன். எவ்வித போலித்தனமும் இன்றி வேதங்களையும் ஆன்மீக குருவையும் யாகத்தீயையும் வழிபட்டேன். ஒழுங்குமுறைக் கட்டளைகள் அனைத்தையும் மிகச் சரியாக பின்பற்றினேன். அறக் கொள்கைகளை முழுவதுமாக வியாக்கியானம் செய்து மஹாபாரதத்தை அளித்தேன்.
ஆயினும், இவை அனைத்தையும் பூர்த்தி செய்துகூட முழுமையின்மையை உணர்கிறேன். இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? ஒருவேளை முழுமுதற் கடவுளின் மீதான கலப்படமற்ற தூய பக்தித் தொண்டின் மகிமைகளை எங்குமே பிரத்யேகமாக நான் எடுத்துரைக்கவில்லை என்பதாக இருக்கலாம். ஏனெனில், அந்த பக்தித் தொண்டு மட்டுமே ஆத்மாவையும் பகவானையும் திருப்தி செய்வதற்கான ஒரே வழியாகும்.”
இவ்வாறு வியாஸதேவர் தனது குறைபாடுகளை எண்ணி வருந்திக் கொண்டிருந்தபோது அவரது ஆன்மீக குருவான நாரதமுனிவர் அங்கே வந்தார். உடனடியாக எழுந்து நின்ற வியாஸதேவர் நாரதரை மரியாதையுடன் வழிபட்டு வசதியாக அமரச் செய்தார். நாரத முனிவருக்கு தன் சீடனின் மனக்குறை தெரிந்திருந்ததால் லேசான புன்னகையுடன் வியாஸரிடம் பேசலானார். (இத்துடன் முதல் காண்டத்தின் நான்காம் அத்தியாயம் முடிவு பெறுகிறது)
நாரதர் வியாஸரைக் கண்டித்தல்
எனதன்பு பராசரரின் புதல்வரே, உடல் அல்லது மனதினை ஆத்மாவாக அடையாளம் கொண்டு நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா? சந்தேகமின்றி நீங்கள் பூரண தன்னுணர்வு பெற்றவர். உங்களின் மாபெரும் பணியான மஹாபாரதம் எல்லாவித வேதக் கொள்கைகளின் அற்புதமான விளக்கமாகும். மேலும், நீங்கள் தொகுத்துள்ள வேதாந்த சூத்திரம் அருவ பிரம்மனை முழுவதுமாக விளக்குகின்றது. இத்தனை இருந்தும் நீங்கள் அதிருப்தியுடன் இருப்பது ஏன்?” இவ்வாறாக, வியாஸரின் அதிருப்திக்கான காரணத்தினை உணர்ந்திருந்தபோதிலும், அதனை வியாஸரிடமே நாரதர் வினவினார்.
நாரதரிடம் வியாஸதேவர் பின்வருமாறு பதிலளித்தார்: நாரதரே, தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை, பெரும் சாதனைகள் செய்திருந்தும் அவை எனக்கு திருப்தி தரவில்லை. தாங்கள் வரம்பற்ற ஞானம் வாய்ந்தவர் என்பதால், எனது மகிழ்ச்சியின்மைக்கான காரணத்தைக் கூறும்படி வேண்டுகிறேன். தங்களால் சூரியனைப் போல் மூவுலகிலும் பயணிக்க முடியும், காற்றைப் போல் எல்லா உயிர்வாழிகளின் மனதிற்குள்ளும் புகுந்து சஞ்சரிக்கவும் முடியும். நடைமுறையில் பார்த்தால், முழுமுதற் கடவுளுக்கு சமமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். தயவுசெய்து எனது நன்மைக்காக எனது குறையை உணர்த்திடுமாறு வேண்டுகிறேன்.”
வியாஸரின் வேண்டுகோளை ஏற்ற நாரதர், முழுமுதற் கடவுளைப் பற்றி நேரடியாக எடுத்துரைக்காததே அவரது திருப்தியின்மைக்கு காரணம் என்று வெளிப்படையாக விளக்கினார். நீங்கள் முழுமுதற் கடவுளின் உன்னத புகழை சரிவர விளக்கவில்லை. எல்லாம் வல்ல பகவானை திருப்தி செய்யாத எந்த தத்துவமும் தகுதியற்றதாகவே கருதப்பட வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடுபேறு போன்ற விஷயங்களை மிகவும் விரிவாக விளக்கியுள்ளீர். ஆனால் முழுமுதற் கடவுளின் புகழையும் தூய பக்தித் தொண்டையும் முறையாக விளக்கவில்லை. பகவானைப் புகழ்ந்து பேசாத வார்த்தைகள் காக்கைகளின் புனித ஸ்தலங்களுக்கு ஒப்பாகும். ஆனால் பகவானின் நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளை விவரிக்கும் இலக்கியங்கள் பிழைகளுடன் இருந்தாலும்கூட தூய மஹாத்மாக்களால் விரும்பிச் சுவைக்கப்படுகின்றன.
கடவுள் ஒரு நபர் என்பதை தெளிவாக எடுத்துரைக்க மறுக்கும் ஆன்மீக ஞானம்கூட ஆத்மாவை திருப்தி செய்ய இயலாது. அப்படி இருக்கும்போது, இயல்பாகவே துன்பகரமானதும் தற்காலிகமானதுமான பலன்நோக்குச் செயல்களைப் பற்றி என்ன சொல்வது? முழுமுதற் கடவுளுடனான உறவினை நீங்கள் உங்களது விளக்கங்களில் தெளிவுபடுத்தவில்லை, இதனால் மதத்தின் பெயரிலேயே மக்களின் ஜட வியாதி அதிகரிப்பதற்கு வகை செய்துவிட்டீர்கள். இஃது ஆன்மீக வாழ்வின் பாதையில் பெரும் தடைக்கல்லை உருவாக்கிவிட்டது. இதனால் தங்களின் பணி கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.”
எவ்வளவோ வேத இலக்கியங்களைத் தொகுத்திருந்த போதிலும், முழுமுதற் கடவுளைப் பற்றி வியாஸதேவர் நேரடியாக விளக்கவில்லை என்பதால், அவரது ஆன்மீக குருவான நாரதர் அவரைக் கண்டித்தார்.
கிருஷ்ண பக்தியின் உயர்வு
அதைத் தொடர்ந்து, வியாஸதேவர் மக்களை தூய பக்தித் தொண்டின் பாதையில் வழிநடத்தியிருக்க வேண்டும் என்றும், அந்த உன்னத செயல்பாட்டில் (பக்தியில்) ஈடுபடுபவருக்கு ஒருபோதும் இழப்பில்லை என்றும் நாரதர் எடுத்துரைத்தார். பக்தனல்லாத ஒருவன் தனது விதிக்கப்பட்ட கடமைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், அதனால் எந்தவொரு இலாபமும் இல்லை. மாறாக, ஓர் ஆரம்பநிலை பக்தர் சிலசமயம் வீழ்ச்சியடைய நேரிட்டாலும், அதில் எந்தவொரு நஷ்டமும் இல்லை. அவர் பெற்றிருந்த உன்னத சுவையினால் அவரால் தனது ஆன்மீகப் பாதையினை மீண்டும் தொடர முடியும்.
எல்லாம் கிருஷ்ணருக்காக இருக்க வேண்டும்
நாம் துன்பங்களை விரும்பாதபோதிலும் காலப்போக்கில் அவற்றை அடைவதைப் போலவே, இன்பங்களையும் காலப்போக்கில் தானாக அடைவோம். எனவே, புத்திசாலி மனிதன் பெறற்கரிய விஷயமான கிருஷ்ண பக்திக்காக தனது வாழ்வைச் செலவிட வேண்டும்.
இப்பிரபஞ்சம் முழுவதும் பரம புருஷரான முழுமுதற் கடவுளின் விரிவே; இருப்பினும், அவர் இதிலிருந்து தனித்து விளங்குகிறார். அவரிடமிருந்து தோன்றிய இப்பிரபஞ்சம் அவரையே சார்ந்துள்ளது, அழிவிற்குப்பின் அவருக்குள்ளேயே புகுந்துவிடுகிறது.
நாரதர் தொடர்ந்தார்: எனதன்பு வியாஸரே, இவை எல்லாவற்றையும் நீங்கள் அறிவீர்கள் என்பதால், பகவானின் உன்னத லீலைகளை விரிவாக விளக்கி, ஒரு சிறந்த இலக்கியத்தை தொகுக்க வேண்டும். அதைக் கேட்ட மாத்திரத்தில் பொதுமக்கள் பௌதிக பந்தத்திலிருந்து விடுபட முடியும்.” நாரதரால் அவ்வாறு அறிவுறுத்தப்பட்டு வியாஸதேவரால் தொகுக்கப்பட்ட தன்னிகரற்ற அந்த சாஸ்திரமே ஸ்ரீமத் பாகவதம்.
ஞானத்தின் முன்னேற்றம், வேதக் கல்வி, யாகங்கள் புரிதல், தானங்கள் செய்தல் போன்றவற்றின் இறுதி முடிவு முழுமுதற் கடவுளைப் பற்றிய உன்னத விஷயங்களைக் கேட்பதும் பாடுவதுமே என்று பெரும் அதிகாரிகள் மிகச்சரியாக முடிவு செய்துள்ளனர். தூய பக்தித் தொண்டினால் நிரம்பிய அத்தகு ஆன்மீக சூழ்நிலையில் இருப்பவர்கள் அற்புதமான விளைவுகளை உணர முடியும்.
பக்த சங்கத்தினால் அடையப்படும் விளைவுகளை விளக்குவதற்காக, நாரதர் தன்னுடைய சொந்த வாழ்க்கையை உதாரணமாக எடுத்துரைக்கத் தொடங்கினார்.
நாரதரின் அந்த வாழ்க்கையையும் (ஐந்தாம் அத்தியாயத்தின் மீதி பகுதியையும்), நாரதருக்கும் வியாஸருக்கும் இடையிலான மற்ற உரையாடல்களையும் (ஆறாம் அத்தியாயத்தையும்) அடுத்த இதழில் காணலாம்.