வழங்கியவர்: பிரியதர்ஷினி ராதா தேவி தாஸி
ஜன்மாத்யஸ்ய யத:, அனைத்தும் பகவானிலிருந்தே தோன்றுகிறது.” (வேதாந்த சூத்திரம் 1.1.2) எனவே, பேராசையும் அவரிடமிருந்தே பிறந்திருக்க வேண்டும். ஆயினும், பௌதிக உலகில் காணப்படும் பேராசை நமது மூன்று எதிரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பகவத் கீதையில் (16.21) பகவான் கிருஷ்ணர் நரகத்தின் மூன்று வாயில்களான காமம், கோபம், பேராசை ஆகியவற்றை புத்திசாலி மனிதன் கைவிட வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.
பொதுமக்களின் பேராசை
பௌதிகவாதிகள் லௌகீக சுகங்களை அனுபவிப்பதற்கும் உடைமைகளைச் சேகரிப்பதற்கும் பேராசைப்படுகின்றனர். சிலர் ஸ்வர்கம் சென்று சோம பானம் அருந்துவதற்காக பேராசைப்படுகின்றனர். சிலரோ பகவானுடன் ஐக்கியமாவதற்கு பேராசைகொள்கின்றனர். சிலர் யோக சித்திகளைப் பெற பேராசைகொள்கின்றனர். இத்தகு பேராசைகள் அனைத்தும் கிருஷ்ணரிடம் தொடர்பில்லாத காரணத்தினால்– அதில் மேலோட்டமான பிழைகள் தெரியாவிடினும்– இழிவானவை, இறுதியில் துன்பத்தை விளைவிப்பவை. ஒருவனது மனம் இத்தகு பேராசையினால் நிரம்பியுள்ளபோது, அவனிடம் மனநிறைவோ அமைதியோ இருக்காது. கிருஷ்ணரை தன்னலமின்றி வழிபடவும் முடியாது.
பக்தர்களின் பேராசை
ஆயினும், பேராசை என்னும் தன்மையினை நாம் பகவானின் சேவையிலும் ஈடுபடுத்த முடியும். ஸ்ரீல நரோத்தம தாஸ தாகூர் எனும் கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர் தமது பிரேம பக்தி சந்திரிகா என்னும் நூலில் (2.10), லோப ஸாது ஸங்கே ஹரி கதா என்று கூறுகிறார். அதாவது, தூய பக்தர்களின் சங்கத்திற்காகவும் கிருஷ்ணரைப் பற்றி கேட்பதற்காகவும் நாம் பேராசைகொள்ள வேண்டுமென்று கூறுகிறார். இந்த பேராசையை அதிகமாக வளர்த்துக்கொள்ளும்போது ஆன்மீக முன்னேற்றமும் ஆன்மீக ஆனந்தமும் அடையலாம். ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதரும் பத்யாவலி (14) என்னும் தமது நூலில், கோடான கோடி பிறவிகள் புண்ணியச் செயல்கள் செய்தாலும் பெற முடியாத கிருஷ்ண பக்தியை பேராசை (லௌல்யம்) என்னும் விலையைக் கொண்டே வாங்க முடியும் என்று குறிப்பிடுகிறார்.
க்ருஷ்ண பக்தி-ரஸ-பாவிதா மதி:
க்ரீயதாம் யதி குதோ லப்யதே
தத்ர லௌல்யம் அபி மூல்யம் ஏகலம்
ஜன்ம-கோடி-ஸுக்ருதைர் ந லப்யதே
இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில், ஆன்மீக பேராசை இருந்தால் மட்டுமே கிருஷ்ண பக்தியின் ரஸத்தை (சுவையை) அனுபவிக்க முடியும், இல்லையேல் முடியாது. எனவே, பக்தர்கள் பகவான் கிருஷ்ணரின் சேவைக்காகவும், வைஷ்ணவர்களின் சேவைக்காகவும், ஹரி நாம ஸங்கீர்த்தனம் புரிவதற்காகவும், ஹரி கதா கேட்பதற்காகவும் பேராசைப்படுகின்றனர். இதன் மூலம் நம்மிடம் இருக்கும் பேராசை ஆன்மீகமானதாக மாறுகிறது. இத்தகு பேராசை விரும்பத்தக்கது, வேண்டத்தக்கது. பகவானிடமும் பக்தனிடமும் உள்ள பேராசை முக்குணங்களுக்கு அப்பாற்பட்டது, தெய்வீகமானது.
பேராசையால் தோன்றிய மஹாபிரபு
பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காகவும் அதன் மூலம் கிருஷ்ண பிரேமையை தாராளமாக வழங்குவதற்காகவும், இக்கலி யுகத்தில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றினார். இதுவே அவர் தோன்றியதற்கான காரணம் என்று வெளிப்படையாக அறியப்படுகிறது; ஆயினும், கிருஷ்ண லீலையில் தம்மால் நிறைவேற்றிக்கொள்ள இயலாத மூன்று பேராசைகளே அவர் மஹாபிரபுவாக தோன்றியதற்கான அந்தரங்க காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, பகவான் இவ்வுலகில் தோன்றுவதற்கும் பேராசையே முக்கிய காரணமாக அமைகிறது. பூரண புருஷோத்தமராகிய பகவான் தன்னில் திருப்தியுற்றவர், அவருக்கென்று எந்த தேவையும் இருப்பதில்லை. அவர் ஆறு ஐஸ்வர்யங்களை (வளங்களை) பூரணமாகக் கொண்டவர். அவரிடம் ஏன் பேராசை? எதற்காக பேராசை? பேராசையின் அந்த விதை பகவானில் படிப்படியாக வளர்ந்து கௌராங்க மஹாபிரபுவின் ஸ்வரூபத்தில் எவ்வாறு பூர்த்தியடைகிறது என்பதன் ஆழ்ந்த இரகசியங்களை ஆச்சாரியர்கள் தத்துவ விளக்கங்களுடன் படிப்படியாக அழகுற வர்ணிக்கின்றனர்.
பகவான் விஷ்ணுவின் பேராசை
யாருடனாவது சண்டையிட வேண்டுமென்ற பேராசை வைகுண்ட நாதரான விஷ்ணுவிடம் எழுந்தது. அவர் பகவான் என்பதால், அவரிடம் ஆறு ஐஸ்வர்யங்களும் பூரணமாக இருந்தன. வீரம் என்பது அவற்றில் ஒன்று. ஈடு இணையற்ற பலம் இருந்தமையால், சண்டை புரிவதற்கான பேராசை அவரில் எழுந்தது இயற்கையே. அந்த ஆசை அவரில் தோன்றியதும் அவரது அந்தரங்க சக்தியான யோக மாயை அதனை பூர்த்தி செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கினாள். பகவானுடன் சண்டையிடும் அளவிற்கு இணையான பலம் பெற்றவர் வேண்டுமே! இல்லாவிடில், சண்டையில் சுவாரஸ்யம் இருக்காதே! அவரது அந்தரங்க சக்தியான யோக மாயையின் ஏற்பாட்டினால், வைகுண்ட வாசலில் இருந்த வாயில் காப்பாளர்களான ஜெயன், விஜயன் இருவரும் மூன்று பிறவிகளுக்கு அசுரர்களாகப் பிறவியெடுக்கும்படி நான்கு குமாரர்களால் சபிக்கப்பட்டனர். முதலில் அவர்கள் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்றும், இரண்டாவதாக இராவணன், கும்பகர்ணன் என்றும், இறுதியாக சிசுபாலன், தண்டவக்ரன் என்றும் பிறந்தனர். அவர்களுடன் பகவான் விஷ்ணு மூன்று அவதாரங்களில் சண்டையிட்டு ஆனந்தமடைந்தார். இதனை பகவான் விஷ்ணுவின் பேராசையாக ஸ்ரீமத் பாகவதம் விளக்குகின்றது.
பகவான் நரசிம்மதேவரின் பேராசை
பகவான் நரசிம்மருக்கு இரு ரூபங்கள் உள்ளது: உக்கிரமான (பயங்கரமான) ரூபம், அனுக்ரமான (சாந்தமான) ரூபம். ஹிரண்யகசிபுவைக் கொன்றவுடன் பகவான் நரசிம்மதேவர் மிகமிக பயங்கரமான தனது ரூபத்தில் காட்சியளித்தார், அவரது கோபமான ரூபத்தினால் மொத்த உலகமும் அச்சத்தில் நடுங்கியது. அனைத்து தேவர்களும் பிரார்த்திக்கத் தொடங்கினர், ஆனால் அவரை சாந்தபடுத்த முடியவில்லை. அப்போது அவர்கள் பகவானின் கோபத்தைத் தணிக்குமாறு பிரகலாதரிடம் வேண்டினர். பிரகலாதரின் மீதான பிரியத்தினால், அவரது பிரார்த்தனையில் பகவான் நரசிம்மர் சாந்தமடைந்தார். அந்த சாந்தமான ரூபத்தில் தனது பிரிய பக்தனான பிரகலாதரை ஒரு மகனைப் போல மடியில் அமர்த்தினார். அச்சமயத்தில் பகவானிடம் பிள்ளைப் பாசம் பெருகியது, தந்தையும் மகனும் இனிய ரஸங்களைப் பரிமாறிக் கொண்டனர். ஆயினும், அச்சமயத்தில் மகன் தந்தையைக் காட்டிலும் மிகுந்த ஆனந்தத்தை அனுபவிப்பதுபோலத் தெரிந்தது. மகனாக இருந்து அனுபவிப்பதற்கான பேராசை நரசிம்மதேவருக்கு வளர்ந்தது, நான் எவ்வாறு ஒரு தந்தையின் மடியில் அமர்ந்து இந்த ரஸத்தை அனுபவிக்க இயலும்? இந்த அவதாரத்தில் எனது தந்தை ஒரு தூண், என்னால் அதனுடன் அனுபவிக்க முடியாது.” இவ்வாறு எழுந்த பேராசையால், நரசிம்மதேவருக்குப் பின்னர் தோன்றிய அனைத்து அவதாரங்களும் தாய்தந்தையரை ஏற்று தோன்றினர்.
பகவான் இராமரின் பேராசை
இராமரிடமும் பேராசை வளர்ந்தது. விபீஷணரும் சுக்ரீவனும் இராமரின் நண்பர்கள். அதாவது, அவர்கள் இராமருடன் ஸக்ய ரஸத்தில் (நட்புச்சுவையில்) இருந்தனர். ஸக்ய ரஸத்தில் இரு வகையுண்டு: ஸம்ப்ரம, விஸ்ரம்ப. ஸம்ப்ரம ஸக்யம் என்றால் பகவானுடன் மதிப்பு மரியாதையுடன் கூடிய நட்புறவு. விஸ்ரம்ப ஸக்யம் என்றால் மதிப்பு மரியாதைகளின்றி சமதளத்தில் நிகழும் நட்புறவு. இராம அவதாரத்தில் இருந்த ஸக்ய ரஸம், ஸம்ப்ரம ஸக்யமாகவே (மதிப்பு மரியாதைகளுடன் கூடிய நட்புறவாகவே) இருந்தது.
அதாவது, சுக்ரீவனும் விபீஷணரும் ஒருபோதும் இராமரின் தோளில் ஏறவோ அவரிடமிருந்து உணவைப் பறித்து உண்ணவோ முடியாது. அவர்கள் தங்களது கால் பகவானின் திருமேனியில் பட நேர்ந்தால் அது குற்றமாகிவிடுமோ என்று அஞ்சுகின்றனர். எனவே, அவர்களது நட்புறவு மதிப்பு மரியாதையுடன்கூடிய ஸம்ப்ரம ஸக்ய ரஸத்தில் உள்ளது. விஸ்ரம்ப ஸக்ய ரஸம் இதிலிருந்து வேறுபட்டது. பகவான் கிருஷ்ணரின் லீலையில் இந்த விஸ்ரம்ப ஸக்ய ரஸத்தைக் காணலாம். இடையர் குலச் சிறுவர்கள் கிருஷ்ணரது தோளில் ஏறுவர். அவர் உண்ணும் உணவைப் பறித்து உண்பர். அவர்களது கால்கள் கிருஷ்ணரது திருமேனியினைத் தொட்டாலும், அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் கிருஷ்ணருக்கு மிக பிரியமானவர்களாக, சமமான நிலையில் இருப்பவர்களாக அவரிடம் அன்பு செலுத்தினர். இதுவே விஸ்ரம்ப ஸக்ய ரஸம். ஆயினும், இராம லீலைகளில் இவ்விதமான நட்புறவு அனுபவிக்கப்படவில்லை. எனவே, பகவான் இராமர் அதற்கான பேராசையை வளர்த்துக் கொண்டார். அந்த ஆசை கிருஷ்ண அவதாரத்தில் பூர்த்தியடைந்தது.
பகவான் இராமர் அனுபவிக்காத ரஸம்
பகவானுடன் தெய்வீகக் காதலில் அன்பு செலுத்தும் உறவுமுறை சிருங்கார ரஸம் அல்லது மாதுர்ய ரஸம் எனப்படுகிறது. இராம அவதாரத்தில் பகவான் இராமர் ஏக பத்னி தர, ஒரு மனைவியை மட்டுமே ஏற்றுக் கொண்டார். அதுவும் மிகுந்த மதிப்பு மரியாதையுடனே திகழ்ந்தது. இவ்வாறாக, அவருடைய லீலையில் மாதுர்ய ரஸம் முழுமையாக அனுபவிக்கப்படவில்லை. மாதுர்ய ரஸம் (தெய்வீகக் காதல்) காதலன், காதலி சேர்ந்து பிரியும்போது உயர்ந்த அளவில் அனுபவிக்கப்படுகிறது. இராம லீலையிலும் இராம-சீதையின் பிரிவைக் காணலாம்ஶீஇராவணன் சீதையைக் கடத்திச் சென்றபோதும், இராமர் குடிமக்களின் மகிழ்ச்சிக்காக சீதையை நாட்டை விட்டு வெளியேற்றியபோதும் அப்பிரிவுகள் நிகழ்ந்தன. ஆயினும், இப்பிரிவுகளில் வகை ஏதுமில்லை, இவை இயற்கையாக எழுந்த பிரிவுகளும் அல்ல. எனவே, அதில் தெய்வீகக் காதலின் (மாதுர்ய ரஸம்) சாரத்தினை அனுபவிப்பதற்கு இடமில்லை.
ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது உஜ்ஜ்வல நீலமணி என்னும் நூலில் பல்வேறு வகையான பிரிவுகளை விளக்கியுள்ளார். அதுபோன்ற வெவ்வேறு விதமான பிரிவுகளை எவ்வாறு சுவைப்பது என்று இராமர் பேராசை கொண்டிருந்தார். பிற்காலத்தில் அவர் கிருஷ்ணராக அவதரித்தபோது அந்த பேராசை நிறைவேறியது. எல்லா வகை பிரிவுகளும் கிருஷ்ண லீலைகளில் ஏராளமாக வெளிப்படுத்தப்பட்டன.
மாதுர்ய ரஸத்தில் இரு வகையுண்டு: (1) ஸ்வகீய (கணவன்-மனைவி), (2) பரகீய (காதலன்-காதலி). கிருஷ்ண லீலையில் அவர் ராதா காந்தர்” (ராதையின் காதலர்), கோபிகா காந்தர்” (கோபியர்களின் காதலர்) என்று அறியப்படுகிறார். ராதையும் கோபியர்களும் உண்மையில் அவரது பத்தினிகளேயாயினும், கிருஷ்ண லீலையில் அவர் அவர்களை தமது காதலியராக வைத்து பரகீய ரஸத்தை அனுபவித்தார். இராம லீலையில் ஸ்வகீய ரஸம் மட்டுமே இருந்தது. இராம லீலையில் நிறைவேறாத அந்த பரகீய ரஸம், கிருஷ்ண லீலையில் நிறைவேறியது.
இது மட்டுமின்றி, கிருஷ்ண லீலையிலும் கிருஷ்ணரிடம் மூன்று வகையான பேராசைகள் நிறைவேறாமல் இருந்தன.
கிருஷ்ணரின் பேராசையும் மஹாபிரபுவின் தோற்றமும்
கிருஷ்ணரிடம் நிறைவேறாமல் இருந்த மூன்று பேராசைகளை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆதி லீலையில் (1.6) கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ-ராதாயா: ப்ரணய-மஹிமா கீத்ருஷோ வானயைவா-
ஸ்வாத்யோ யேனாத்புத-மதுரிமா கீத்ருஷோ வா மதீய:
ஸௌக்யம் சாஸ்ய மத்-அனுபவத: கீத்ருஷம் வேதி லோபாத்
தத்-பாவட்ய: ஸமஜனி ஷசீ-கர்ப-ஸிந்தௌ ஹரிந்து:
ராதாராணியின் அன்பின் மகிமையை அறிந்து கொள்ளவும், அவளது அன்பினால் அவள் மட்டுமே அனுபவிக்கக்கூடிய தன்னுடைய அற்புதமான குணங்களைப் புரிந்துகொள்ளவும், தனது அன்பின் இனிமையை உணர்வதால் அவள் அடையக் கூடிய ஆனந்தத்தைப் புரிந்துகொள்ளவும் விரும்பிய முழுமுதற் கடவுளான ஹரி, அவளது மனோ பாவங்களை முழுமையாகத் தாங்கி, கடலிலிருந்து நிலவு தோன்றுவதுபோல, ஸ்ரீமதி ஸச்சி தேவியின் கருவிலிருந்து தோன்றினார்.”
ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு சாக்ஷாத் கிருஷ்ணரே என்றபோதிலும், அவரது மனோபாவம் வேறாக உள்ளது. அவர் பக்தனின் மனோபாவத்தில் (குறிப்பாக, ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தில்) தோன்றினார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற லீலைகளை அரங்கேற்றியபோதிலும், அவரிடம் மூன்று பேராசைகள் நிறைவேறாமல் இருந்தன (லோபாத்).
அவரது முதல் பேராசை: ராதாயா ப்ரணய-மஹிமா–ராதைக்கும் கிருஷ்ணருக்குமான உறவில் ஸ்ரீமதி ராதாராணியின் ஸ்தானம் கிருஷ்ணரின் ஸ்தானத்தைக் காட்டிலும் தலைசிறந்ததாக இருந்தது. தன்னுடைய நிலையிலிருந்து அவளுடைய நிலையை உணர முடியாது என்பதால், அந்த ராதையின் ஸ்தானத்தை கிருஷ்ணர் விரும்பினார்.
இரண்டாவது பேராசை: ஸ்வாத்யோ யேனாத்புத மதுரிமா — தன்னைப் பற்றிய தெய்வீக ரஸத்தினை தானே உணர விரும்பினார். கிருஷ்ணர் இனிமையே நிறைந்தவர், கிருஷ்ணரின் மீதான ராதையின் கவர்ச்சி தன்னிகரற்றது. அந்த கவர்ச்சியையும் தனது தெய்வீக இனிமையையும் கிருஷ்ணர் புரிந்துகொள்ள விரும்பினார்.
மூன்றாவது பேராசை: ஸௌக்யம் சாஸ்ய மத்-அனுபவத:–கிருஷ்ணரின் சங்கத்தில் ராதை அடையும் இன்பமானது, ராதையின் சங்கத்தில் கிருஷ்ணர் அடையும் இன்பத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அந்த அதிகமான இன்பத்தை அனுபவிக்க கிருஷ்ணர் விரும்பினார்.
இந்த மூன்று பேராசைகள் கிருஷ்ணரில் எழுந்தமையால், இவற்றை நிறைவேற்ற பகவான் கிருஷ்ணர் அன்னை ஸச்சியின் கருவில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றினார். இதுவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றியதற்கான அந்தரங்க காரணம்.
குறிப்பு: இக்கட்டுரை தவத்திரு கௌர கோவிந்த ஸ்வாமி அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.