நவத்வீபத்தில் ஸ்ரீ சைதன்யர்

Must read

இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக சூழ்நிலைக்கு மத்தியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மக்களிடையே பக்தி உணர்வை போதிப்பதற்காக அவதரித்தார்.

ஸ்ரீ சைதன்யரின் பிறப்பு

வங்காளத்தின் கங்கைக் கரையில் அமைந்திருந்த நவத்வீபம் என்ற ஊரில், வைஷ்ணவ சமூகத்திற்குத் தலைவராகத் திகழ்ந்த ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் மீண்டும் தோன்றி கலி யுக மக்களை விடுவிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் துளசியையும் கங்கை நீரையும் கொண்டு பகவான் கிருஷ்ணரை வழிபட்டார். அச்சமயத்தில் நவத்வீபத்தின் மாயாபுரில் ஜகந்நாத மிஸ்ரர், ஸச்சி தேவி என்ற பிராமண தம்பதியர் பக்தியுடன் வாழ்ந்து வந்தனர். அத்வைத ஆச்சாரியரின் பிரார்த்தனையின் பலனாக பகவான் கிருஷ்ணர் ஸச்சி தேவியின் கருப்பையில் பிரவேசித்தார். அவளது கருவுற்ற தன்மை பதிமூன்று மாதங்கள் நீடித்தது.

அதன்படி, புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், 1407 ஷகாப்த வருடம் (கி.பி. 1486, பிப்ரவரி 18) பால்குன மாதத்தின் பௌர்ணமி நாளன்று மாயாபுரில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றினார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரண சந்திர கிரகணத்தின்போது தோன்றினார். நவத்வீப இந்துக்கள் கிரகணத்தின்போது கங்கை நதியில் நின்று ஹரி நாமத்தை உச்சரிப்பது வழக்கம், அன்றைய தினத்திலும் அவர்கள் ஹரி நாமத்தை பலமாக உரைத்தனர். அவர்கள் அவ்வாறு ஹரி! ஹரி!” என்று உச்சரிப்பதைக் கேட்ட முஸ்லீம்கள் பலரும், விளையாட்டாக அவர்களைப் போல் பரிகாசம் செய்தனர். நவத்வீபம் முழுவதும் ஸ்ரீ ஹரியின் நாமம் ஒலித்துக் கொண்டிருந்த சமயத்தில், கௌரஹரி எனப்படும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றினார்.

கிருஷ்ண பிரேமையினை தாமும் அனுபவித்து மற்றவர்களுக்கும் வழங்குவதற்காக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றினார்.

பெயர் சூட்டுதல்

புதிதாகப் பிறந்த குழந்தையைக் காண வந்த அத்வைத ஆச்சாரியரின் மனைவி ஸ்ரீமதி சீதாதேவி, இந்த அழகிய பொன்னிறக் குழந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உரிய அங்க இலட்சணங்களைக் கொண்டுள்ளார் என்றும், உண்மையில் கிருஷ்ணர்தான் வேறு மேனி நிறத்துடன் உள்ளார் என்றும் உறுதியாகக் கண்டு கொண்டாள். குழந்தை வேப்ப மரத்தடியில் பிறந்த காரணத்தாலும், ஸச்சிமாதாவின் பிற குழந்தைகள் பெரும்பாலும் அகால மரணமடைந்த காரணத்தாலும், வேப்ப மரம் தீய ஆவிகளின் தாக்கத்தை (வெளிப்புற ரீதியில்) எதிர்ப்பதில் திறனுடையது என்று அறியப்பட்டிருந்ததாலும், சீதாதேவி, குழந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு, நிமாய்” என்று பெயரிட்டாள்.

பகவான் சைதன்யரின் தாய்வழித் தாத்தாவான நீலாம்பர சக்ரவர்த்தி கற்றறிந்த ஜோதிடராவார். தமது பேரனின் ஜாதகக் குறிப்புகளை அமைக்கும்பொழுது, இக்குழந்தை சாக்ஷாத் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்பதை அவர் கண்டறிந்தார்; இருப்பினும், அந்த இரகசியமான உண்மையினை மறைமுகமாக வைத்தார். குழந்தைக்கு அவர் விஸ்வம்பரர் (உலகங்களை இரட்சிப்பவர்) என்று பெயரிட்டார், நிமாய் என்பது இரண்டாவது பெயராகத் தொடர்ந்தது.

 

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது பெற்றோருடன் உறவாடுதல்.

குழந்தையாகப் புரிந்த லீலைகளில் சில

குழந்தை நிமாயை அளவின்றி நேசித்த அண்டை வீட்டுப் பெண்கள் அவரைக் காண அடிக்கடி வருவர். அவர்களிடம் நிமாய் விளையாடும் விளையாட்டு என்னவெனில், அழுகை: அவர் அழத் தொடங்குவார், பெண்கள் ஹரி! ஹரி!” என்று பாடினால் மட்டுமே தமது அழுகையை நிறுத்துவார். இவ்வாறாக இவர் தமது அண்டைவீட்டினர் அனைவரையும் நாள் முழுவதும் பாடச் சொல்லித் தூண்டியதால், கிருஷ்ணரின் திருநாமம் ஜகந்நாத மிஸ்ரரின் வீட்டில் இடையறாது எதிரொலித்துக் கொண்டிருந்தது.

ஒருநாள், நிமாய் ஒரு பெரிய பாம்புடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஸச்சிமாதாவும் ஜகந்நாத மிஸ்ரரும் திகைப்புற்றனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஆனால் சற்று நேரத்தில், அப்பாம்பு பகவானின் சரீரத்தைச் சுற்றி ஊர்ந்து, தீங்கின்றி நழுவிச் சென்றது. உண்மையில் பகவான் விஷ்ணுவின் படுக்கையான அனந்த தேவரே அப்பாம்பின் வடிவில் வந்திருந்தார்.

ஒரு முறை நிமாய் இருந்த பகுதியில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர். குழந்தைகளைக் கடத்தி அவர்களிடமிருந்து நகைகளைத் திருடுவது இவர்களின் தொழில். நிமாயைக் கண்ட இத்திருடர்கள், அவரைத் தூக்கிக் கொண்டு ஓடினர். தமது அன்பிற்குரிய நிமாயைக் காண இயலாததால் மிகுந்த கலக்கமுற்ற ஸச்சிதேவி, குழந்தையைத் தேடு வதற்காக அண்டை வீட்டிலுள்ளோரை அழைத்தாள். இதற்கிடையில் இறைவனின் மாயைச் சக்தியின் தாக்கத்தினால் குழப்பமுற்ற வஞ்சகர்கள், ஒரு முழு வட்டமடித்து மீண்டும் ஜகந்நாத மிஸ்ரரின் வீட்டிற்கே வந்து சேர்ந்தனர். மக்கள் பலர் குழந்தையைத் தேடுவதைக் கண்டு, உடனே நிமாயை வேகமாக கீழே இறக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.

ஒருமுறை நிமாய் மண் சாப்பிடுவதைக் கண்ட அவரது தாய், நான் இப்போதுதானே உனக்கு அருமையான இனிப்புகளைக் கொடுத்தேன், ஏன் மண் சாப்பிடுகிறாய்?” என்று வினவினாள். என்ன வித்தியாசம்? இவையனைத்தும் ஒன்றே. இனிப்புகள் பூமியிலிருந்தே உருவாக்கப்படுவதால், நான் இனிப்பைச் சாப்பிட்டாலும் மண்ணைச் சாப்பிட்டாலும் இரண்டும் ஒன்றே,” என்று நிமாய் பதிலளித்தார். ஸச்சிமாதா ஒரு கற்றறிந்த வைஷ்ணவ பிராமணரின் மனைவி என்ற காரணத்தினால், நிமாய் தவறான கொள்கையான பூரண அருவவாதத்தை (அத்வைத வாதத்தை) விவரிக்கின்றார் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஸச்சிமாதா உதாரணம் கொடுத்தாள்: மண் பானையானது நிலத்தின் ஒருவகை மாற்றமே என்றாலும், வெறும் களிமண் கட்டியை பானையைப் போன்று உபயோகிக்க இயலாது. நிலம் பானையாக மாற்றமடைந்த பின்னரே அதில் நீரைத் தேக்கி வைக்க இயலும். அதுபோலவே இனிப்புகள் பூமியிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் பண்படாத மண்ணானது இனிப்புகளைப் போல உடலுக்கு சக்தியளிக்க இயலாது.” நடைமுறைக்கு ஒவ்வாத அருவவாதத்தின் தன்மையை ஒப்புக்கொண்ட விஸ்வம்பரர், இனிமேல் எனக்கு இனிப்புகளைக் கொடுக்கவும், ஒருபோதும் மண் சாப்பிட மாட்டேன்,” என்று முன்மொழிந்தார்.

தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த பிராமணர் ஒருவர் நவத்வீபத்திற்கு வந்தபொழுது, ஜகந்நாத மிஸ்ரர் அவரை வரவேற்று, அவரது சாலக்ராம சிலாவிற்கு சமைப்பதற்காக, அரிசி மற்றும் இதரப் பொருட்களை அளித்தார். அப்பிராமணரும் உணவு தயாரித்து நைவேத்தியம் செய்தார். உடனே அங்கு வந்த நிமாய் சிறிது சாதத்தை உட்கொண்டார். அவர் மீண்டும் சமைக்க, நிமாய் மீண்டும் உண்ண என மூன்று முறை அவரது நைவேத்தியம் தடைபட்டது. அதனால், பிராமணர் கண்ணீரில் மூழ்கினார். அப்போது நிமாய் அவரிடம் உரைத்தார், யாருக்காக நீ தினமும் நைவேத்தியங்களைத் தயாரிக்கின்றாயோ, அந்த பகவான் விஷ்ணு நானே என்பது உனக்குத் தெரியவில்லையா?” அதனைத் தொடர்ந்து, நிமாய் நான்கு கரங்களுடைய தமது விஷ்ணு ரூபத்தை அப்பிராமணருக்குக் காண்பித்தார். தன்னைத் தொந்தரவு செய்த குழந்தை தனது அன்பிற்குரிய  இறைவனே என்பதை உணர்ந்து கொண்ட அப்பிராமணர் தெய்வீகப் பேரானந்தத்தினால் மூர்ச்சையடைந்தார்.

சாதாரண பாம்பின் வடிவில் வந்த அனந்தருடன் நிமாய் விளையாடுதல்.

சிறுவனாகப் புரிந்த லீலைகளில் சில

காலப்போக்கில் நிமாய்க்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்திய ஜகந்நாத மிஸ்ரர், அவரை கங்காதாஸ பண்டிதரின் பள்ளிக்கு அனுப்பினார். நியாயம், இலக்கணம் மற்றும் தத்துவத்தில் விரைவாகப் புலமை பெற்று, சிறந்த பண்டிதர் என்று நிமாய் விரைவில் புகழ் பெற்றார். எனினும், அச்சமயத்தில் நிகழ்ந்த தமது தந்தையின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துக்கத்தை அனுபவித்தார். அதன் பிறகு, அவரது குறும்புத்தனமான நடத்தைகள் தணிந்தன. சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு பள்ளியைத் திறந்தார்; அப்பள்ளி மாணவர்கள் உயர் நியமங்களுடன் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்.

ஒருமுறை நிமாய் ஒரு ஜோதிடரைக் காண நேர்ந்தபோது, தமது முற்பிறவி வாழ்வைப் பற்றிய விவரங்களைக் கூறுமாறு வினவினார். ஜாதகத்தைக் கணக்கிட்ட ஜோதிடர், தமது தியானத்தின் மூலம், இந்த அழகிய இளம் பிராமணர் அனைத்து பிரபஞ்சங்களுக்கும் மூலமான பூரண சத்தியம் என்பதைக் கண்டார். திகைப்புற்ற அவர், நீர் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள், அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய எஜமானர்,” என்று பயபக்தியுடன் மொழிந்தார். நிமாயோ, நீங்கள் நல்ல ஜோதிடர் அல்ல. எனக்குத் தெரியவந்தது யாதெனில் எனது முந்தைய வாழ்வில் நான் ஓர் இடையர் குலச் சிறுவனாக இருந்தேன்,” என்று பதிலளித்தார்.

நிமாயின் நகைகளைத் திருடுவதற்காக திருடர்கள் அவரைக் கடத்திச் செல்லுதல்.

கிழக்கு வங்காளப் பயணம்

லக்ஷ்மிபிரியா என்னும் பெண்ணை நிமாய் திருமணம் செய்து கொண்டார். சீரிய மனைவியாகத் திகழ்ந்த லக்ஷ்மிபிரியா குடும்பப் பொறுப்புக்களை விசுவாசத்துடன் செயலாற்றினாள். தாய் ஸச்சியிடம் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொண்டாள். தன்னைக் கணவனுக்கு அர்ப்பணித்த லக்ஷ்மிபிரியா, தமது எஜமானருக்காகத் தளிகை செய்து அவரது விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியுடன் பரிமாறுவாள்.

ஆசிரியர் தொழிலின் மூலம் தமது குடும்பத்திற்குச் சிறிது வருமானம் ஈட்டுவதென்னும் வெளிக்காரணத்துடன் நிமாய் கிழக்கு வங்காளத்திற்குச் செல்ல முடிவு செய்தார். அங்கு திருநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதே அவருடைய உண்மையான குறிக்கோளாகும். கிழக்கு வங்காளத்தில் அவர் வசித்த குறுகிய காலகட்டத்தில், அங்கே அவரைக் காண பலரும் வருவர். ஜொலிக்கின்ற அவரது பொன்னிற மேனியைக் கண்டும் அவரது அருமையான சாஸ்திர வியாக்கியானங்களைக் கேட்டும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தபன மிஸ்ரர் என்ற ஒரு பிராமணர் கிழக்கு வங்காளத்தில் வசித்து வந்தார். வாழ்வின் பொருளையும் அதை எவ்வாறு அடைவது என்பதையும் அறியும் ஆவலுடன் தபன மிஸ்ரர் பல புத்தகங்களைப் படிப்பது வழக்கம். ஆனால் அவர் அதிகம் படிக்கப் படிக்க அதிக குழப்பமுடையவரானார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய தெய்வீக நபர், மிஸ்ரரே, நீங்கள் ஏன் பல்வேறு புத்தகங்களைப் படித்துக் கொண்டுள்ளீர்? நிமாய் பண்டிதர் அருகில் உள்ளார். அவரை அணுகுங்கள்,” என்று வழிகாட்டினார். மறுநாள் காலை நிமாயை அணுகிய தபன மிஸ்ரர் தமது நிலையை எடுத்துரைத்தார்.

புத்தகப் புழுவாக மாறுவதால் வாழ்வின் பொருளைக் கண்டறிய இயலாது என்றும், இக்கலி யுகத்தில் பகவானின் திருநாமத்தை உச்சாடனம் செய்வதே போதுமானது என்றும் நிமாய் விளக்கினார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே, என்னும் மஹா மந்திரத்தை உச்சரிக்கும்படி தபன மிஸ்ரரை நிமாய் அறிவுறுத்தினார்.

நிமாய் கிழக்கு வங்காளத்தில் இருந்தபோது, அவரது பிரிவினால் லக்ஷ்மிபிரியாவிற்கு ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வுகள், ஒரு பாம்பின் ரூபத்தை எடுத்து அவளைக் கடித்து, அவளது வாழ்வை எடுத்துக் கொண்டது. குவித்து வைத்த பெரும் செல்வத்துடன் நவத்வீபத்திற்கு நிமாய் திரும்பினார்; தாயை சமாதானப்படுத்தி, அவளின் வேண்டுகோளுக்கிணங்கி விஷ்ணுபிரியா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

முந்தைய பிறவியில் தான் ஓர் இடையன் என்று நிமாய் ஜோதிடரிடம் உரைத்தல்.

கேசவ காஷ்மீரியைத் தோற்கடித்தல்

நவத்வீபத்தின் பண்டிதர்கள் பலருடன் வாதம் செய்வதில் நிமாய் ஆனந்தம் காண்பார். இதனால் இவரைச் சந்திப்பதற்குக்கூட மற்றவர்கள் அச்சப்படும் நிலை இருந்தது. நிமாய் பண்டிதர்” என்று விரைவில் புகழ் பெற்றார்.

சில காலம் கழித்து, காஷ்மீரைச் சேர்ந்த கேசவ காஷ்மீரி என்ற அசாதாரணமான பண்டிதர் நவத்வீபத்தைக் காண வந்தார். அவர் ஒரு திக்விஜயி பண்டிதர்; அதாவது மற்றவர்கள் அனைவரையும் வாதத்தில் வெற்றி கண்டவர். அவரது வருகையைக் கேள்விப்பட்ட நவத்வீபத்தின் பண்டிதர்கள் அனைவரும் இளம் நிமாயை மட்டும் அவ்வூரில் விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

மாலைப் பொழுதொன்றில் தமது மாணவர்களுடன் கங்கைக் கரையில் உலாவிக் கொண்டிருந்தபோது, கேசவ காஷ்மீரியை நிமாய் சந்தித்தார். மரியாதை செலுத்திய நிமாய், தாய் கங்கையைப் புகழ்ந்து சில பாடல்களை இயற்றி, பாண்டித்துவத்தை மெய்ப்பிக்கும்படி வினவினார். அரை மணி நேரத்திற்குள் கேசவ காஷ்மீரி நூறு பாடல்களை உரைத்தார். ஏதேனும் ஒரு பாடலின் நிறைகுறைகளை ஆராயும்படி கேசவ காஷ்மீரியிடம் நிமாய் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அனைத்து பாடல்களும் குற்றமற்றவை” என்று கேசவ காஷ்மீரி வலியுறுத்தினார்.

அப்பாடல்களிலிருந்து ஒரு பாடலை நிமாய் மேற்கோள் காட்டி, தங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில், நானும் இப்பாடலைப் பற்றி சற்று கூற விரும்புகிறேன்,” என்று உரைத்தார். திக்விஜயி பண்டிதரோ, தமது பாடலில் கருத்துக் கூற இந்த இளைஞனுக்கு உரிமையில்லை என்று எண்ணி தயங்கினார். எனினும், கேசவ காஷ்மீரியினால் கண்டுபிடிக்கப்படாத சில சிறப்பம்சங்களை முதலில் சுட்டிக்காட்டிய நிமாய், பின்னர் அவரது பாடலில் இருந்த சில முக்கிய தவறுகளை எடுத்துக் கூறினார். பதில் பேச இயலாத பண்டிதர் தமது இருப்பிடத்திற்குத் திரும்பி சரஸ்வதியை வழிபட்டு பிரார்த்தித்தார்: இது நாள் வரை மற்றெல்லா புத்திமான்களையும் வெல்வதற்குத் தாங்கள் என்னை ஆசிர்வதித்திருந்தீர்கள். ஆனால் இன்று ஓர் இளம் சிறுவனின் வாயினால் என்னை அவமதித்துவிட்டீர்கள். தங்களுக்கு எதிராக நான் என்ன குற்றம் இழைத்தேன்?”

அன்றிரவு கேசவ காஷ்மீரியின் கனவில் தோன்றிய சரஸ்வதி, கேசவரே! உங்களைத் தோற்கடித்த அந்நபர், எனது வழிபாட்டிற்குரிய பரம புருஷ பகவானாவார். அவரிடம் சரணடையுங்கள்,” என்று அறிவுறுத்தினாள். மறுநாள் காலை கேசவ காஷ்மீரி தாழ்மையுடன் நிமாயை அணுகினார். உலகையே வெல்லக்கூடிய பண்டிதரின் தாழ்மையை நற்பாங்குடன் நிமாய் ஏற்றுக் கொண்டார். நிமாயின் நற்பெயர் தற்போது நவத்வீபத்தில் எதிர்க்க முடியாததாயிற்று.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது.)

அடுத்த இதழில்: நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

காஷ்மீரியும் நிமாய் பண்டிதரும் வாதம் புரிதல்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives