டெங்கு காய்ச்சலும் பௌதிக காய்ச்சலும்

Must read

ஒரு மருத்துவரின் ஆன்மீக ஆய்வு

வழங்கியவர்: வைகுண்டானந்த தாஸ்

மருத்துவம்,  கல்வி, இராணுவம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளின் வளர்ச்சியினை நவீன நாகரிகம் பெருமையுடன் காணும் சூழலில், ஒரு சாதாரண காய்ச்சல் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது என்பதைப் பார்க்கும்பொழுது, ஒரு மருத்துவரான எனக்கு தர்ம சங்கடமாகவும் சற்று வேடிக்கையாகவும் இருக்கிறது. சற்றுப் பொறுங்கள், நீங்கள் இதை எவ்வாறு சாதாரண காய்ச்சல் என்று கூறலாம்? இது கொசுவினால் உருவாகி உயிரையே பறிக்கும் டெங்கு காய்ச்சல் அல்லவா!” என்று பலர் கூறலாம்.

வேத சாஸ்திர கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது இந்த டெங்கு காய்ச்சல் மேலும் வேடிக்கையாகவே இருக்கிறது. ஒரு சிறிய கொசு ஒரு பெரிய மனித உடலின் உயிரையே பறிக்கும் வேடிக்கையை இந்தக் கட்டுரையில் மருத்துவ ரீதியில் அணுகாமல் ஆன்மீக ரீதியில் சற்று அலசிப் பார்ப்போம்.

 

கொசுவின் வலிமை

இன்றைய உலகத்தில் அதிநவீன துப்பாக்கி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், சீர்குலைக்கும் வெடிகுண்டுகள் என மனிதனைக் கொல்லக்கூடிய கருவிகள் ஏராளமாக உள்ளன. மனிதர்கள் இவற்றை தங்களது பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் ஒரு சாதாரண கொசுவிற்கு மனிதனின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு சக்தி உள்ளது என்பதை சிந்தித்துப் பார்த்தால், ஒரு சிறிய கொசுவின் வலிமை மனிதனின் கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் உயர்ந்தது என்பதை உணர முடியும். மாபெரும் பலசாலியைக்கூட மண்ணில் படுக்க வைக்கும் வலிமை கொசுவிற்கு உள்ளது. இதனை இயற்கை” என்று பலர் கூறலாம். ஆம், இயற்கையே. மூவித குணங்களால்

(ஸத்வம், ரஜஸ், தமஸ்) செயல்படும் இந்த இயற்கையை பரம புருஷ பகவானான தாமே கட்டுப்படுத்துவதாக பகவத் கீதையில் கிருஷ்ணர் உபதேசிக்கிறார்.

 

பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற வாழ்வு

தைவீ ஹ்யேஷா குண-மயீ மம மாயா துரத்யயா, அதாவது, முக்குணங்களாலான ஜட இயற்கையின் தமது தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது என்கிறார் கிருஷ்ணர் (பகவத் கீதை 7.14). மேலும், இந்த இயற்கை கிருஷ்ணருடைய பூரண கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்று கீதையில் (9.10) கூறப்பட்டுள்ளது. பகவானால் வகுக்கப்பட்டுள்ள இயற்கையின் சட்டம் மிகவும் நுணுக்கமானது. இந்த பிரபஞ்சத்தில் தோன்றும் அனைத்து உயிர்வாழிகளும் பகவானுடைய சட்டத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே உயிர்வாழிகளுக்கு பௌதிக ரீதியான உயர்வு, தாழ்வு, இன்பம், துன்பம், நோய், ஆரோக்கியம், அழகு, கோரம், அறிவு, மடமை, அச்சம், தன்னம்பிக்கை என பல வேறுபாடுகள் அமையப் பெறுகின்றன. இந்த வேறுபாடுகள் அவரவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இயற்கையினால் வழங்கப்படுகின்றன.

மூவகை துன்பங்கள்

இன்னும் நுணுக்கமாக கவனித்தால், மேற்கூறிய வேறுபாடுகள் மட்டுமின்றி, இயற்கையானது எல்லா உயிர்வாழிகளுக்கும் மூன்று விதமான துன்பங்களையும் வழங்குகின்றது. அவை என்ன? அதிஆத்மிக துன்பங்கள், அதிபௌதிக துன்பங்கள், அதிதெய்விக துன்பங்கள்.

அதிஆத்மிக துன்பங்கள் என்றால் உடலாலும் மனதாலும் ஏற்படக்கூடிய துன்பங்கள். மனஅழுத்தம், மன சோர்வு, ஆதங்கம், தற்கொலை எண்ணங்கள், காழ்ப்புணர்ச்சி, தனிமை, அச்சம், கட்டுக்கடங்காத புலன்கள், உடலில் ஏற்படும் நோய்கள் முதலிய துன்பங்கள் இப்பிரிவில் அடங்குகின்றன.

அதிபௌதிக துன்பங்கள் என்றால் மற்ற உயிர்வாழிகளின் மூலமாக ஏற்படக்கூடிய துன்பங்கள். உறவினர்கள், நண்பர்கள், பூச்சி, கொசு, பாக்டீரியா, வைரஸ் முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள் இப்பிரிவில் அடங்குகின்றன.

அதிதெய்விக துன்பங்கள் என்றால், இயற்கையின் சீற்றங்களால் ஏற்படக்கூடிய துன்பங்கள். வெள்ளம், வறட்சி, சுனாமி, கடுமையான வெப்பம், குளிர் முதலியவை இப்பிரிவில் அடங்குகின்றன.

இந்த மூன்று விதமான துன்பங்களும் மனிதன் எப்போது இயற்கையைக் கட்டுப்படுத்தி ஆள முயற்சி செய்கிறானோ, அப்போது அவனுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களும் இயற்கையைக் கட்டுப்படுத்தி ஆள விரும்புபவர்களே என்பதால், இத்துன்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன. வேத சாஸ்திரத்திலிருந்து பெறப்படும் இத்தகவலைக் கொண்டு நாம் உணர வேண்டியது என்னவெனில், நாம் மிகவும் அச்சப்பட வேண்டிய காய்ச்சல் டெங்கு காய்ச்சல் அல்ல. மாறாக, பௌதிக காய்ச்சல்.

பகவானின் சட்டதிட்டங்களுக்கேற்ப ஜட இயற்கையானது (துர்கா) உயிர்வாழிகளுக்கு
மாறுபட்ட நிலைகளை வழங்குகிறது.

பௌதிக காய்ச்சல்

பகவானின் தூய பக்தர்களைத் தவிர மற்றெல்லா உயிர்களும் இந்த பௌதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடிய பௌதிக காய்ச்சல் மனித சமுதாயத்தை சிவப்பு கம்பளம் விரித்து, நரகத்தின் நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்கிறது. அதாவது, கீழ்நிலை வாழ்வு அல்லது விலங்கின சமுதாயத்தில் பிறப்பதற்கு வழிவகுக்கின்றது. ஜீவன்கள் புலனின்பத்தில் அதிக நாட்டமுடன் செயல்படும்போது, இந்த பௌதிக காய்ச்சலின் வெப்பம் அதிகரிக்கிறது. மேலும், ஒரு தொற்று நோயைப் போல மனித சமுதாயத்தில் பரவி அனைவரின் காய்ச்சலையும் அதிகரிக்கின்றது.

மனிதன் புலனின்பத்திற்காக இயற்கையை துஷ்பிரயோகம் செய்கிறான். தனக்கு காய்ச்சல் உள்ளபோதிலும், அதனை உணராமல் அஹங்காரத்துடன் இயற்கையை வசப்படுத்தும் போலியான கிளர்ச்சியில் இன்பம் காண்கிறான். ஆனால் கிருஷ்ணரின் சக்திகளில் ஒன்றான இயற்கை சக்தி, அவனுக்குப் பாடம் புகட்டும் வண்ணம், டெங்கு, வெள்ளம், சுனாமி, குளிர், போர் என பல வழிகளில்த›ண்டனை வழங்குகின்றது. இந்த பௌதிக காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், மனித வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை உணர வேண்டும். அஃது என்ன?

கடவுள் யார்? நாம் யார்? கடவுளுக்கும் நமக்கும் என்ன உறவு? அந்த உறவில் எவ்வாறு வாழ்வது? முதலிய வினாக்களின் அடிப்படையில் வாழ்வின் தளத்தை அமைக்க வேண்டும். முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட வேத இலக்கிய நூல்கள் நமது ஆன்மீக வாழ்விற்கு செவ்வனே வழிகாட்டுகின்றன. மேலும், இந்த இலக்கியங்களை நாம் தூய பக்தர்களின் மூலமாக அணுக வேண்டும்.

இதனை விடுத்து, இயற்கையைக் கட்டுப்படுத்த விரும்பும் நவீன கால மனிதன், வரம்பிற்கு உட்பட்ட புலனின்பத்தில் மயங்குகிறான். அந்த இன்பத்தினால் பௌதிக காய்ச்சலின் வெப்பத்தை அதிகப்படுத்துகிறான். இதை உணர்ந்து, இயற்கையை ஆள வேண்டும், மற்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்ற பௌதிக காய்ச்சலின் வெப்பத்தைக் குறைத்து, நமக்கு வழங்கப்பட்ட மனித உடலை ஆன்மீக முன்னேற்றத்திற்கு மட்டும் உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழி என்ன? தற்போதைய கலி யுகத்தில் அதற்கான மிகச்சிறந்த வழி, பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதாகும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் ஸங்கீர்த்தன யாகத்தில் பங்கு கொண்டால், நமது பௌதிக காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் நாம் குணமாகி விடுவோம். இயற்கையின் முக்குணங்களுடைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாட்டினை அடைவோம்.

 

இயற்கையை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இயற்கை சீற்றங்களாலேயே தண்டிக்கப்படுவர்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives