பிருது மஹாராஜர் குமாரர்களைச் சந்தித்தல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 22

குமாரர்களை வரவேற்றல்

குடிமக்கள் பிருது மஹாராஜருக்கு பிரார்த்தனைகளை அர்ப்பணித்துக் கொண்டிருந்த போது, ஸனகரின் தலைமையிலான நான்கு குமாரர்கள் அங்கு வருகை புரிந்தனர். யோக சித்திகளின் தலைவர்களும் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவர்களுமான அம்முனிவர்களைக் கண்டவுடன் மன்னரும் மக்களும் எழுந்து நின்று அவர்களை வரவேற்றனர். மன்னர் அவர்கள் அமருவதற்கு ஆசனமளித்தார், அவர்களது பாதங்களைக் கழுவி அத்தீர்த்தத்தினை தம் தலையில் மகிழ்வுடன் தெளித்துக் கொண்டார், பக்தியும் மரியாதையும் மேலிட அவர்களிடம் உரையாடத் தொடங்கினார்.

பிருது மன்னரின் வினாக்கள்

மாமன்னர் பிருது ஸனகரின் தலைமையிலான முனிவர்களிடம் கூறினார், மாமுனிவர்களே, நீங்கள் மிகவும் அரிதாகக் காணப்படுபவர்கள். எவ்வித முயற்சியுமின்றி எனக்கு காட்சி தந்தமைக்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ? பிராமணர்களும் வைஷ்ணவர்களும் எவரைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனரோ, அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் கிடைக்காதது எதுவுமில்லை.

உங்களைப் போன்ற தன்னையுணர்ந்த ஆத்மாக்களின் வடிவில், மக்களின் நன்மைக்காக பகவான் உலகம் முழுவதும் வலம் வருகிறார். நல்லதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், மங்கலம், அமங்கலம் முதலிய இருமைகளால் ஏற்படும் மனக் குழப்பங்கள் உங்களிடம் தோன்றுவதில்லை. உங்களைப் போன்றோருக்கு சேவை செய்தால், அவ்வாறு செய்பவரின் இல்லம் எப்போதும் பெருமையுடையதாக ஆகின்றது, அவ்வாறு செய்யாதவரின் இல்லமோ விஷப் பாம்புகள் வாழும் மரத்தைப் போன்றதாகும்.”

முனிவர்களை இவ்வாறு போற்றிய பின்னர், மன்னர் பிருது அவர்களிடம் வினவினார், ஆபத்தான பௌதிக வாழ்வில் சிக்கிக் கொண்டுள்ள மனிதர்களின் நோக்கம் புலனுகர்ச்சியிலேயே உள்ளது. அவர்களுக்கு ஏதேனும் நன்மைகள் அருளப்படுமோ? இப்பௌதிக உலகில் எவ்வாறு நாங்கள் வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை விரைவில் அடைவது?”

பிருது மன்னர் வாழ்வின் குறிக்கோளைப் பற்றிய விஷயங்களை நான்கு குமாரர்களிடம் வினவுதல்

பகவானிடம் பற்று அதிகரித்தல்

பிருது மன்னரின் வினாக்களுக்கு ஸனத்-குமாரர் விடையளித்தார், பக்தர்கள் கூடியிருக்கும் அவையில் நடைபெறும் வினா விடைகள் எல்லாருக்கும் உண்மையான இன்பத்தை வழங்குபவை. பிறர் நலனை உண்மையாக விரும்பும் உம்மால் இச்சிறந்த வினாக்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. முழுமுதற் கடவுளின் தாமரை பாதங்களைப் போற்றிப் புகழ்வதால் மனதிலுள்ள பேராசைகள் நீங்கி தெளிவு தானே பிறக்கின்றது. பரம புருஷ பகவானின் மீது நீங்காத பற்று கொண்டிருத்தலே மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் உயர்ந்த இலட்சியமாகும்.

ஒருவன் புலனின்பம் என்னும் மயக்கத்திலிருந்து வெறுப்படைந்து விடுபடும்போது மட்டுமே அவனால் வாழ்வில் உயர்வடைய முடியும். பகவானிடம் நெருங்கிச் செல்ல விரும்புபவன் அஹிம்சாவாதியாக, பகவானின் லீலைகளை எப்போதும் நினைத்திருப்பவனாக, ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிப்பவனாக, இருமைகளால் பாதிக்கப்படாதவனாக இருக்க வேண்டும். மேலும், முழுமுதற் கடவுளைப் பற்றி முறையாகக் கேட்டல், அவரது பெருமைகளைப் பாடுதல், அவரை எப்போதும் வழிபடுதல், பக்தி யோக நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் முதலியவை பகவானிடம் கொண்டுள்ள பற்றினை அதிகரிப்பதற்கான வழிகளாக பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆன்மீக குருவின் கருணையாலேயே ஒருவர் பௌதிகப் பற்றுதல்களைத் துறந்து தெளிவு பெற்று, முழுமுதற் கடவுளிடம் தனது பற்றுதலை நிலைநிறுத்த முடிகிறது.”

முக்தி

ஸனத்குமாரர் தொடர்ந்தார், புலனுகர்ச்சியானது ஆத்மாவிற்கு பல்வேறு ஆசைகளைத் தூண்டி விடுகிறது. அதே சமயம் பௌதிக ஆசைகளிலிருந்து விடுதலை பெறும்போது முழுமுதற் கடவுளின் திருப்தி ஒன்றைத் தவிர வேறு எதனிடமும் ஆத்மா ஆர்வம் காட்டுவதில்லை. அவன் பக்தி யோகப் பயிற்சியின் மூலம் நிறைவான நிலையை அடையும்பொழுது, எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் கிருஷ்ணரையே காண்கிறான்.”

 

அறியாமை

 

ஸனத்குமாரர் தொடர்ந்து அறிவுறுத்தினார்: ஒருவனது மனமும் புத்தியும் புலன்களுக்கு இன்பமளிக்கும் பொருட்களினால் கவரப்படும்பொழுது, அவனது மனம் கிளர்ச்சியடைகின்றது. இவ்வாறு புலனின்பப் பொருட்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால், நீர் நிறைந்த ஏரியின் கரையில் நிற்கும் நாணல் காடு, நீர் முழுவதையும் படிப்படியாக உறிஞ்சி காலி செய்துவிடுவதைப் போல, அவனும் தன்னுடைய உண்மையான உணர்வினை இழந்து விடுகின்றான்.

இதனால், தான் உடல் என்னும் எண்ணம் மேலோங்குகிறது. இது பொய்மைக்கு அஸ்திவாரம் அமைக்கிறது. இந்த நிலையை அறிஞர்கள் ’ஆத்மாவை இழந்தவன் என்று அழைக்கின்றனர். இந்திரிய சுகங்களில் திளைத்திருப்பது தன்னை உணர்தலுக்கு பெருந்தடையாக இருக்கிறது. பணம் சம்பாதித்தல், அதைக் கொண்டு புலன்களை திருப்தி செய்தல் முதலிய செயல்களிலேயே ஒருவன் எப்போதும் ஈடுபட்டிருக்கும்போது, அவன் பக்தியுணர்வு இல்லாதவனாகி மரம், கல் என்ற அசையா உயிரினங்களில் பிறக்கிறான்.

அறியாமையிலிருந்து விடுபட விரும்புவோர் அத்தகைய குணங்களோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைத் தவிர்த்து வீடுபேறு (முக்தி) ஒன்றையே மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஜடவுலகம் நிரந்தரமானதல்ல. இதிலுள்ள உயர்ந்த தாழ்ந்த நிலைகள், பரம புருஷ பகவானின் கால சக்தியால் அழிக்கப்பட்டுவிடும். ஆதலால் இவற்றை முக்கியமாகக் கருதாமல். உயர்ந்த குறிக்கோளை அடைவதில் ஆசை கொள்ள வேண்டும், அதன்படி வாழ முழுமையாக முயற்சிக்க வேண்டும்.”

சரணாகதி

ஸனத்குமாரர் மேலும் மொழிந்தார்: அசையும் அசையா அனைத்து உயிர்வாழிகளின் இதயத்திலும் ஆத்மாவுடன் சேர்ந்து பரமாத்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் பரம புருஷ பகவானை அறிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். பகவான் பௌதிகக் களங்கங்கள் அனைத்திற்கும் மேலாகவே இருக்கிறார். அவரையே சரணடைய வேண்டும். பகவானின் தாமரை பாதங்களுக்கு எப்போதும் பக்தித் தொண்டு செய்யும் பக்தர்களால் பலன் தரும் செயல்களின் மீதான வலுவான ஆசைகளை வெல்ல முடியும். எனவே, வசுதேவரின் மைந்தரான பகவான் கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.

அறியாமைக் கடல் மிகவும் ஆபத்தானது. அதைக் கடப்பது மிகமிக கடினமே. ஆயினும், பகவானின் தாமரைத் திருவடிகளை உறுதியுடன் சரணடைந்தால், எல்லா ஆபத்துகளையும் கடந்து கரையேற்ற அவை படகுகளாக உதவும்.”

பிருது மன்னரின் அர்ப்பணிப்பு

ஸனத்குமாரரின் அமிர்தம்போன்ற அறிவுரைகளைக் கேட்டு பிருது மன்னர் மிக்க உவகையடைந்தார்; ஆனந்தமும், மரியாதையும் மேலிட கூறினார்: –பகவானைப் போன்ற கருணைமிக்கவர்களே! என் அன்பிற்குரிய அந்தணர்களே! எனது உயிர், மக்கள், வீடு, அலங்கார அணிகலன்கள், கருவூலம் என என்னைச் சார்ந்தவை எல்லாவற்றையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். மனித சமுதாயம் அறிவொளி பெற வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்து அளப்பரிய சேவை செய்யும் மகான்களுக்கு கைமாறாக அவர்களைத் தொழுது வணங்குவதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்?”

வேதங்களில் கூறப்பட்டுள்ள அறநெறிகளை முற்றிலும் கற்றுணர்ந்த ஒருவரே படைத் தளபதியாக, நாட்டை ஆள்பவராக, தண்டனை அளிப்பவராக, உலகத்திற்கே அதிபதியாக வரக்கூடும். அப்படிப்பட்ட பிருது மன்னர் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் குமாரர்களுக்கு அர்ப்பணித்தார். உயர்ந்த மனிதர்களுக்கு நடுவே பிருது நடுநாயகமாக விளங்கினார். ஆன்மீக உணர்வில் முழு வெற்றி எய்தப் பெற்றமையால், அவர் பூரண திருப்தியுடன் இருந்தார். முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவது ஒன்றே அவரது குறிக்கோளாகவும் செயல்பாடாகவும் இருந்தது.

அவர் எப்போதும் தன்னை பகவானின் தொண்டனாகவே நினைத்தார். சூரியன் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதுபோல் அவர் எப்போதும் பற்றற்றவராக இருந்தார். மன்னரால் வணங்கப்பட்ட குமாரர்கள் மிகவும் மகிழ்ந்து அவரை வாழ்த்திப் பாராட்டினர்.

பக்தித் தொண்டின் விடுதலைபெற்ற நிலையில் வாழ்ந்த பிருது மஹாராஜர் பலன்தரும் செயல்கள் அனைத்தையும் செய்ததோடு தம் மனைவி அர்சியின் மூலம் ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தார். பிருது எல்லா தேவர்களின் நற்குணங்களையும் பெற்றிருந் தார்; மேலும், அவர் தமது மனம், வாக்கு, மற்றும் செயலின் மூலம் குடிமக்களை மகிழச் செய்தார்.

சூரியதேவன் வெம்மையையும் ஒளியையும் தந்து பூமியிலிருந்து தண்ணீரை எடுத்துக்கொள்வதுபோல், பிருது மன்னர் மக்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வரி வசூலித்தார். அதே சமயத்தில் சந்திரனைப் போல குடிமக்களுக்கு குளிர்ச்சியான பாதுகாப்பான வாழ்வையும் கொடுத்தார். அக்னியைப் போல யாராலும் வெற்றிகொள்ள முடியாதவராக இருந்தார், பொறுமையில் பூமியைப் போன்றும், வலிமையில் தேவேந்திரனைப் போன்றும் விளங்கினார். மக்களது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றினார்.

மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவதற்கு அவர்கள் வேண்டும் பொருளை அந்தந்த சமயங்களில் மேகம் வழங்குவதுபோல், மன்னரும் வழங்கினார்; கடலைப் போன்ற ஆழங்காண முடியாத மனம், மேரு மலையைப் போன்ற அசைக்க இயலாத தைரியம், தர்மராஜனைப் போன்ற கல்வி, இமயமலையின் அதிபதியான இமவான் போன்ற வளம், குபேரனைப் போன்ற செல்வம், சிவபெருமானைப் போன்ற புலன் கட்டுப்பாடு, ஆற்றல் என பிருது பெருமையுடன் வாழ்ந்தார்.

பகவான் இராமசந்திரரின் புகழைக் கேட்டு அனைத்து உலகமும் எவ்வாறு இன்புற்றதோ, அவ்வாறே பிருது மஹாராஜரின் புகழைக் கேட்டும் எல்லா உலகங்களும் இன்புற்றன. அவர் ஆன்மீக அறிவில் பிருஹஸ்பதியைப் போன்றவர், சுயக் கட்டுப்பாட்டில் முழுமுதற் கடவுளைப் போன்றவர், அழகில் மன்மதனைப் போன்றவர், நினைவாற்றலில் சிங்கம் போன்றவர், பாசத்தில் ஸ்வாயம்புவ மனுவைப் போன்றவர், அடக்கியாளும் திறமையில் பிரம்மதேவருக்கு ஒப்பானவர்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives