கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்; கிருஷ்ணரை அறிந்தவர் மேலும் அறிவதற்கு ஒன்றும் இல்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய எட்டு பௌதிகப் படைப்புகளும் கிருஷ்ணரின் சக்திகளே, இவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஜீவனும் அவரது சக்தியே. கிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் மூலம், அவரைவிட உயர்ந்த உண்மை வேறெதுவும் இல்லை. அனைத்திலும் அவரே முக்கிய அம்சமாக உள்ளார். அவரது தெய்வீக சக்தியான மாயையை வெல்வது மிகவும் அரிது, ஆனால் அவரிடம் சரணடைவோர் அதனை எளிதில் கடக்கலாம். இருப்பினும், நான்கு வித மக்கள் அவரிடம் சரணடைவதில்லை. அவரிடம் சரணடையும் நான்கு வித நல்லோரில் ஞானியே மிகச் சிறந்தவன். ஆனால் போதிய அறிவற்ற மக்களோ, பௌதிக ஆசைகளில் மயங்கி தேவர்களிடம் சரணடைகின்றனர். அவர்களுக்கான பலன்களை கிருஷ்ணரே வழங்குகிறார் என்றபோதிலும், அவை தற்காலிகமானவை. கிருஷ்ணரின் உருவத்தை மறுத்து, பரம்பொருள் அருவமானது என்று கருதுவோர், தேவர்களை வழிபடுபவர்களைக் காட்டிலும் முட்டாள்கள். அனைத்தையும் அறிந்த கிருஷ்ணரை யாராலும் முழுமையாக அறிய முடியாது. கிருஷ்ணரை முறையாக அறிந்து, அவருக்கு பக்தி செய்பவர்கள், தங்களது வாழ்வின் இறுதியில் அவரிடமே செல்வர்.
கிருஷ்ணரிடம் சரணடைந்தால் மாயையை எளிதில் கடக்க முடியும்; இருப்பினும், பலர் கிருஷ்ணரிடம் சரணடைவது இல்லை, ஏன்? ஏனெனில், அவர்கள் சற்றும் அறிவற்ற மூடர்களாகவும், மனிதரில் கடைநிலை யோராகவும், மாயையிடம் அறிவை இழந்தவர்களாகவும், அசுரர்களின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களாகவும் உள்ளனர். இந்த நான்கு துஷ்டர்களும் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை.
மூடர்கள்: இவர்கள் இரவு பகலாக கழுதையைப் போன்று புலனின்பத் திற்காக உழைக்கின்றனர். ஆன்மீக விஷயங்களுக்கு ‘நேரமில்லை’ என்று கூறிவிட்டு, பணப் பைத்தியம் பிடித்து அலையும் முதலாளிகளுக்குத் தொண்டு செய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் உன்னத முதலாளியான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மனிதக் கழிவுகளை தின்று வாழும் பன்றி, நெய்யாலும் சர்க்கரையாலும் செய்யப் பட்ட இனிப்புகளை மதிப்பதில்லை; அதுபோல, புலனின்பத்தில் சலிப்பின்றி மூழ்கியிருக்கும் இத்தகு முட்டாள்கள் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதற்கு, நேரம் குறைவாக உள்ளது என்பர்.
பகவத் கீதையின் அழிவற்ற விஞ்ஞானம் பன்னெடுங் காலத்திற்கு முன்பாகவே சூரிய தேவனுக்கு உரைக்கப்பட்டு குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்தது என்றும், தன்னுடைய நண்பனாகவும் பக்தனாகவும் இருப்பதால் அதே ஞானத்தினை தற்போது அர்ஜுனனுக்கு வழங்குவதாகவும் கிருஷ்ணர் கூறினார். தன்னுடைய வயதை ஒத்தவரான கிருஷ்ணர் எவ்வாறு சூரிய தேவனுக்கு உபதேசித்திருக்க முடியும் என்ற அர்ஜுனனின் கேள்விக்கு, தனது சொந்த விருப்பத்தின்படி தான் பல்வேறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக அவர் பதிலளித்தார். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக தான் தோன்றுவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு அவர் தோன்றும்போது, அவருடைய பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை என்பதைப் புரிந்துகொள்பவன் முக்தியடைகிறான்.
இராமாயணம்—பாரத தேசத்தின் பொற்காவியம். பன்னெடுங்காலத்திற்கு முன்பு முழுமுதற் கடவுளான ஸ்ரீ இராமர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்தபோது, அவரது செயல்களை, மக்கள் எக்காலத்திற்கும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக மாமுனிவர் வால்மீகி, இராமாயணம் என்னும் இதிகாசத்தின் வடிவில் தொகுத்தார். இராம லீலைகள் இப்பூமியில் நடைபெற்று இலட்சக்கணக்கான வருடங்களாகியும், இன்று வரை இராமாயணம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரத தேசத்தின் பண்பாட்டில் இராமாயணத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரதத்தின் பல்வேறு மொழிகளில் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அல்லது வால்மீகி எழுதியதை அடிப்படையாகக் கொண்டும் மற்ற சாஸ் திரங்களை அடிப்படையாகக் கொண்டும் முழுமையாகவே இதர மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் கம்பர் இயற்றிய இராமாயணம் அனைவரும் அறிந்ததே.