கர்போதகஷாயி விஷ்ணுவிடமிருந்து பிரம்மா தோன்றுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், எட்டாம் அத்தியாயம்

சென்ற இதழில் விதுரர், மைத்ரேயரிடம் பற்பல துறைகள் தொடர்பான பல்வேறு கேள்விகளைக் கேட்டதைக் கண்டோம். அவற்றிற்கான பதில்களை இந்த இதழிலிருந்து காணலாம்.

குமார சம்பிரதாயம்

மைத்ரேயர் கூறினார்: “பூரு வம்சத்தைச் சேர்ந்த நீங்கள் உங்கள் முன்னோர்களைப் போலவே பரம புருஷ பகவானிடம் நேரடியாக பற்று கொண்டிருப்பதால் பகவானுக்கும் தூய பக்தர்களுக்கும் சேவை செய்யும் தகுதியுடையவராக இருக்கிறீர்கள். உங்கள் கேள்விகளால் எனக்கு பகவானின் நினைவு அதிகரிக்கிறது.

“அல்லல்படும் மனித சமூகத்திற்கு அருமருந்தான ஸ்ரீமத் பாகவதத்தை நான் இப்போது உங்களுக்குக் கூறப் போகிறேன். இது சனகாதி குமாரர்களுக்கு பகவான் ஸங்கர்ஷணரால் நேரடியாகப் பேசப்பட்டதாகும். இதில் பகவான் வாஸுதேவரைப் பற்றிய அற்புதமான உண்மைகள் அடங்கியுள்ளன.

“நீண்ட காலத்திற்கு முன்பு, சனத் குமாரரை தலைமையாகக் கொண்ட ரிஷிகள், கங்கை நதி வழியாக, உயர்ந்த கிரகங்களிலிருந்து பிரபஞ்சத்தின் அடித்தளத்திற்குப் பிரயாணித்தனர். அங்கு பகவான் வாஸுதேவரின் விரிவங்கமான பகவான் ஸங்கர்ஷணரின் பாத கமலங்களில்தம் நனைந்த ஜடாமுடி பட விழுந்து வணங்கினர். அவர் அச்சமயம், பகவான் வாஸுதேவரின் மீதான ஆழ்ந்த தியானத்தில் இருந்தார், நாக கன்னியர் நல்ல கணவரை அடைய விரும்பி அவரை சிறந்த முறையில் வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.

“பகவானின் உன்னத லீலைகளை அறிந்திருந்த சனகாதி முனிவர்கள், முழு அன்புடனும் பாசத்துடனும், இனிமையான ராகத்தில் அவரது புகழ் பாடினர். அப்பொழுது  பகவான் ஸங்கர்ஷணர் தமது ஆயிரக்கணக்கான உயர்த்திய தலைகளின் மேல் உள்ள பிரகாசிக்கும் கற்களிலிருந்து ஒளியைப் பரப்பத் துவங்கினார், மேலும் இதயத்தின் அறியாமை இருளை அகற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை சனத் குமாரருக்கு கருணையுடன் உபதேசம் செய்தார்.

“பின்பு சனத்குமாரர் தம்மிடம் கேள்விகள் கேட்ட ஸாங்க்யாயன முனிவருக்கு அதை விளக்கினார், ஸாங்க்யாயன மாமுனிவர், எனது ஆன்மீக குருவான பராசர முனிவருக்கும் பிருஹஸ்பதிக்கும் அந்த முதன்மை புராணத்தை உள்ளவாறே விளக்கியருளினார். பராசர முனிவர், புலஸ்திய முனிவரின் அறிவுரைப்படி அதை எனக்கு அன்புடன் உபதேசித்தார். நீங்கள் எனது அறிவுரைகளை விசுவாசத்துடன் பின்பற்றுபவராக இருப்பதால் நான் கேட்டதை உங்களுக்கு விவரிக்கிறேன்.”

பிரம்மாவின் பிறப்பு

அதைத் தொடர்ந்து பிரம்மதேவர் எவ்வாறு பிறவியெடுத்தார் என்பதை மைத்ரேயர் விளக்கத் தொடங்கினார்.

இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதி பிரளய நீரில் மூழ்கியிருந்த சமயத்தில் கர்போதகஷாயி விஷ்ணு மட்டும் தனியாக, தமது பாம்புப் படுக்கையான அனந்தரின் மேல் சயனித்திருந்தார். அவருடைய உடலில் எல்லா ஜீவராசிகளும் தங்களது சூட்சும உடல்களுடன் ஓய்வெடுத்தன. கால சக்தியால் இயக்கப்படும் ஜீவராசிகள் அவர்களது பலன்நோக்குக் கருமங்களைத் தொடர்ந்து விருத்தி செய்து கொள்வதற்காக வெளியில் வந்தபொழுது, பகவான் தமது உன்னத உடல் நீலநிறமாக இருப்பதைக் கண்டார்.

பகவானின் கவனம் பதிக்கப்பட்டு, பௌதிக ரஜோ குணத்தினால் கிளர்ச்சியூட்டப்பட்ட படைப்பு பகவானின் நாபிக் கமலத்திலிருந்து வெளிவந்தது. எல்லா ஜீவராசிகளின் கர்மங்களை உள்ளடக்கிய அப்படைப்பு தாமரை மொட்டின் வடிவத்தை ஏற்றது. பகவானின் பரம விருப்பத்தால், அது சூரியனைப்போல் அனைத்தையும் ஒளிமயமாக்கியதுடன், பரந்த பிரளய நீரையும் வற்றச் செய்தது.

அப்பிரபஞ்ச தாமரைக்குள் பகவான் விஷ்ணு தாமாகவே பரமாத்மாவாக புகுந்தார். இவ்வாறு ஜட இயற்கை குணங்களால் அது கருவுறச் செய்யப்பட்டபோது, ஸ்வயம்பு என அழைக்கப்படும் பிரம்மா பிறந்தார்.

பிரம்மாவின் தியானம்

தாமரையிலிருந்து பிறந்த பிரம்மா, அத்தாமரையில் இருந்தபோதிலும் அவரால் உலகைக் காண இயலவில்லை. எனவே, அவர் விண்வெளி முழுவதையும் சுற்றி வலம் வந்தார். இவ்வாறு தமது கண்களை நாற்புறமும் திருப்பும்பொழுது, நான்கு தலைகளை அவர் பெற்றார். அவரால் தாமரையையோ படைப்பையோ தன்னையோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அறியாமையிலிருந்த பிரம்மதேவர், தான் யார், எங்கிருந்து அந்த தாமரை முளைத்தது, அதன் மூலமானது நீருக்குள் இருக்கலாமோ என்று சிந்தித்தவாறு தாமரைத் தண்டின் வழியாக கீழிறங்கி விஷ்ணுவின் நாபிக்கு அருகில் சென்றார். எனினும், அவரால் தாமரைத் தண்டின் வேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு தேடியபோது விஷ்ணுவின் கரத்திலுள்ள நித்திய சக்கரமும் மரணத்திற்கு ஒப்பான பயத்தை ஜீவராசிகளின் மனதில் உற்பத்தி செய்வதுமான முடிவான காலத்தை அடைந்தார்.

அதன்பிறகு, விரும்பிய நோக்கத்தை அடைய முடியாததால் தம் ஆராய்ச்சியை நிறுத்திக் கொண்ட அவர் தாமரையின் உச்சிக்கு திரும்பி வந்தார். எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திய அவர் தம் மனதை பரம புருஷர் மீது பதியச் செய்தார். அவரின் நூறு ஆண்டுகளின் முடிவில் தியானம் பூர்த்தியானபோது தேவையான அறிவை விருத்தி செய்து கொண்டார். அதன் பயனாக, பெருமுயற்சி செய்தும் முன்னர் இதற்கு முன் யாரை காண இயலவில்லையோ, அந்த பரம புருஷ பகவானை தம் இதயத்தில் அவரால் காண முடிந்தது.

விஷ்ணு தரிசனம்

அக்காட்சியில் நீரின் மேல் ஒரு பிரம்மாண்டமான தாமரை போன்ற வெண் மெத்தை சேஷ நாகத்தின் உடல் இருப்பதையும் அதில் பரம புருஷர் தனியாக சயனித்திருப்பதையும் பிரம்மதேவர் கண்டார். அச்சூழ்நிலை முழுவதும் சேஷ நாகத்தின் படத்தை அலங்கரிக்கும் இரத்தினங்களின் ஒளிக்கதிர்களால் பிரகாசப்படுத்தப்பட்டிருந்தது. அப்பிரகாசம் அப்பிரதேசங்களின் இருளை முழுமையாக அகற்றியது.

பகவானின் உன்னத உடலின் காந்தி, பவள மலையின் அழகை ஒத்திருந்தது. அவரது மஞ்சள்நிற ஆடை, சாயங்கால வானத்தின் பிரகாசமான நிறத்தைப் போலிருந்தது. இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது கிரீடம், மலை உச்சியில் உள்ள தங்கம் போலிருந்தது.

முத்துக்களாலும் இரத்தினங் களாலும் துளசி இலைகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக் கப்பட்டிருந்த பகவானின் பிரம்மாண்டமான உடலும் கரங்களும் கால்களும், நீர்வீழ்ச்சிகளும் மலர்களும் நிரம்பிய மலையின் தோற்றத்தை ஒத்திருந்தது. பகவானின் அழகு இயற்கை எழிலை மிஞ்சிய அதி அற்புதமாக இருந்தது.

நீளத்திலும் அகலத்திலும் அளவற்றதாக இருந்த அவரது உன்னத உடல் மேல், மத்திய, கீழ் ஆகிய மூன்று கிரக அமைப்புக்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

பின்னர், பகவான் தனது மிக அழகிய பாத கமலங்களைக் காட்டியருளினார். அவை, பௌதிக களங்கமற்ற பக்தித் தொண்டினால் அடையப்படும் சன்மானங்களுக்கெல்லாம் மூல பிறப்பிடமாகும். குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது திருமுகமானது அவரது மூக்கு மற்றும் புருவங்களின் அழகாலும் அவரது உதடுகளிலிருந்து வெளிப்படும் பிரகாசத்தாலும் அழகிய புன்னகையாலும் மிக்க இன்பமூட்டுவதாக அமைந்திருந்தது.

அவரது மார்பு ஸ்ரீவத்ஸம் என்னும் குறியாலும் அளவற்ற மதிப்புடைய ஓர் ஆரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சந்தன மரமானது பல பாம்புகளால் மூடப்பட்டிருப்பதுபோல் நறுமணமிக்க அவரது உன்னத உடல் அனந்த தேவரின் பல படங்களால் மூடப்பட்டிருந்தது. ஒருமலை சில சமயங்களில் சமுத்திர நீரில் மூழ்கிக்கிடப்பதைப் போலவே பகவானும் சில சமயங்களில் பிரளய நீரில் மூழ்கிக் கிடக்கிறார்.

இவ்வாறாக பகவானைப் பார்த்த பிரம்ம தேவர் அந்த பரம புருஷ பகவானை ஹரி என புரிந்து கொண்டார். அவரது மார்பின் மேலிருந்த மலர்மாலை இனிய வேத கானங்களால் அவரது பெருமைகளைப் பாடி மிக அழகுடன் திகழ்ந்ததையும் அவர் கண்டார். பகவான் ஹரி ஸுதர்சன சக்கரத்தால் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தார். சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு முதலியவைகளால்கூட அவரை அணுக முடியவில்லை. பகவான் விஷ்ணுவின் நாபியிலுள்ள ஏரியையும், தாமரையையும் மட்டுமின்றி பிரளய நீரையும் உலர்த்தும் காற்றையும் ஆகாயத்தையும்கூட அவர் கண்டார். பின்னர் ரஜோ குணத்தினால் தூண்டிவிடப்பட்ட பிரம்மதேவர் படைப்பைச் செய்ய ஆவல் கொண்டார். சிருஷ்டிக்கும் மனோபாவத்திற்கு ஏற்றவழியில் தமது பணிவான பிரார்த்தனைகளை அவர் செய்யத் துவங்கினார்.

அப்பிரார்த்தனைகளை அடுத்த இதழில் காணலாம்.

குறிப்பு: ஒருவர் ரஜோ குணத்தில் இருந்தாலும் எந்த முயற்சியையும் வெற்றிகரமாக முடிப்பதற்குரிய ஒரே வழி, பகவானிடம் தஞ்சமடைந்து அவரைப் பிரார்த்திப்பதே ஆகும்.

 

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives