விஞ்ஞானிகளால் மரணத்தைத் தடுக்க இயலுமா?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

விஞ்ஞானிகளால் மரணத்தைத் தடுக்க இயலுமா?

நடைபயிற்சியின்போது நிகழ்ந்த உரையாடல்

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, சூதாடுதல், தகாத பாலுறவு கொள்ளுதல், மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் முதலிய பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களை அசுரர்கள் என்று வேதங்கள் வரையறுக்கின்றன. நாம் இவ்வாறு எடுத்துரைப்பதைக் கேட்கும் மக்கள் தங்களை அசுரர்களாக அறிகின்றனர். இதனால் அவர்களது மனம் புண்படுகின்றது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மக்கள் அசுரர்களாக மாறிவிட்டதால், “அசுரர்கள் யார்” என்பதை அவர்களால் இனம் காண இயலவில்லை. உதாரணமாக, கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் சுரங்கத் தொழிலாளர்களிடம், “இயேசு கிறிஸ்துவை வழிபடாவிடில் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்,” என்று பிரச்சாரம் செய்தார்.

“நரகம் எப்படி இருக்கும்?” என்று சுரங்கத் தொழிலாளர்கள் வினவினர்.

“நரகம் என்பது போதுமான காற்று வசதி இன்றியும், ஈரமாகவும், இருள்சூழ்ந்தும் காணப்படும்,” என்று பாதிரியார் விளக்கினார். ஆயினும், நரகம் எவ்வளவு பயங்கரமானது என்பதை அந்த சுரங்கத் தொழிலாளர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஏன்? ஏனென்றால், சுரங்கத்தில் வேலை செய்வதன் மூலம் அவர்கள் ஏற்கனவே நரக சூழ்நிலையில்தான் வாழ்ந்து வந்தனர். எனவே, ஈரம், இருட்டு, போதுமான காற்று இல்லாத சூழல் மிகவும் பயங்கரமானது என்பதை உணர்வதற்கான பகுத்தறிவு அவர்களிடம் இல்லை.

இக்கதையில் வருவதைப் போல, இன்றைய உலகில் வாழும் அசுரர்களிடம்—அசுரர்களாக மாறிய மக்களிடம்—அசுரத்தனத்தை உணர்வதற்கான பகுத்தறிவு இல்லை. ஆஸூரம் பாவம் ஆஷ்ரிதா:, அவர்கள் அசுர மனோபாவத்துடன்கூடிய வாழ்வை ஏற்றுள்ளனர். கடவுளின் இருப்பை ஏற்காமலிருத்தலே அசுர மனோபாவமாகும். ஆத்மா, கடவுள், கடவுளின் சட்டங்கள் என எதையும் ஏற்காமை, சூதாடுதல், மது அருந்துதல், தகாத பாலுறவுகொள்ளுதல், கடவுளால் படைக்கப்பட்ட பிற உயிரினங்களைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்ணுதல்—இவை அனைத்தும் அசுரத்தனத்திற்கான அடிப்படைக் கொள்கைகள். இவ்விதமாக கிட்டத்தட்ட மக்கள் அனைவருமே கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளாமல் அசுரர்களாகி விட்டனர்.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, இன்றைய காலகட்டத்தில் மக்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக அதிகாரியிடமிருந்து எதையும் செவியுற விரும்புவதில்லை. தங்களால் வழங்கப்படும் ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் பற்றிய விஞ்ஞானத்தை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெரும்பாலானோர் உலகாயதமான, பெயரளவிலான விஞ்ஞானிகளைத் தங்களது அதிகாரிகளாக ஏற்று, அவர்கள் கூறுவதைக் கேட்பதற்கே ஆர்வம் காட்டுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உடலை விட்டுப் பிரிந்து சென்று மரணத்திற்கு காரணமாக அமையும் அசாதாரணமான வஸ்து என்ன என்பதை இந்த பெயரளவிலான விஞ்ஞானி அறிவதில்லை. இருந்தும்கூட, அவர் தன்னை பெரிய அதிகாரியாகக் காட்டிக்கொள்கிறார். முட்டாள் மனிதர்களும் அவரை அதிகாரியாக ஏற்கின்றனர். இதுவே அசுரத்தனம்.

ஒருவன் மரணமடைவதற்கான காரணம் என்ன என்பதை அந்த விஞ்ஞானியினால் விளக்க முடியாது. பிராண வாயு செலுத்துதல், இதயத்தைப் பிடித்து விடுதல், ஊசி போடுதல், இஃது அல்லது அஃது என அறிவியல் ரீதியினாலான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அவர் சிபாரிசு செய்யலாம். ஆனால், இத்தனை மருத்துவ வசதிகள் இருக்கும் பட்சத்திலும் மக்கள் திடீரென மரணமடைவதை அவர் காண்கிறார்.

உங்களது விஞ்ஞானரீதியிலான எல்லா சிகிச்சைகளையும் மீறி மக்கள் மரணமடைவது ஏன்? விஞ்ஞானி ஒருவர் இந்த வினாவிற்கு விடையளிக்க இயலாத மாபெரும் முட்டாளாக உள்ளபோதிலும், அவர் தம்மை பெரிய அதிகாரியாகக் கருதுகிறார். இந்த வினாவிற்கு அவரால் விளக்கமளிக்க இயலுமா?

சீடர்: “மரணத்தைத் தடுத்தல் மருத்துவ சிகிச்சைக்கு அப்பாற்பட்டது,” என்று அவர் கூறுவார்.

ஸ்ரீல பிரபுபாதர்: (விஞ்ஞானியிடம் கூறுவதுபோல) அப்படியெனில், நீங்கள் ஒரு முட்டாள். உங்களை அதிகாரி என்று கருதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?

சீடர்: (விஞ்ஞானியின் சார்பாக) என்னால் முடிந்த அளவிற்கு மரணத்தைத் தடுக்க முயற்சித்தேன், இருப்பினும் என்னால் இயலவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: மரணத்தைத் தடுப்பதற்கான வழிமுறை உங்களுக்குத் தெரியாது என்பதே இதன் பொருள். ஒரு செயலை செய்வதற்கு குழந்தைகூட தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்ளும், ஆனால் அக்குழந்தையால் அச்செயலைச் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அவன் பெரிய அதிகாரியாக மாறுகிறான் என்று பொருளல்ல.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, உயிரைத் தக்கவைப்பதற்கு சில காரணிகள் இன்றியமையாதவை.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களது பதில் தெளிவாக இல்லை. உயிரைத் தக்கவைப்பதற்கான அந்த காரணிகள் யாவை என்பதை நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும், அப்பொழுதுதான் உங்களை அதிகாரியாக ஏற்றுக்கொள்ள முடியும்.

சீடர்: (விஞ்ஞானியின் சார்பாக) இதயத்தில் எலெக்ட்ரிகல் சார்ஜ் (electrical charge) இருக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று,
ஸ்ரீல பிரபுபாதர்: மின்சாரம் இருக்கிறது, எலெக்ட்ரிகல் சார்ஜை வழங்குங்கள்!

சீடர்: மருத்துவ நிபுணர்கள் இதயத்தின் இயக்கம் நின்றுவிட்ட நபர்கள் சிலரின் உயிரை, மின்சக்தியைக் கொண்டு காப்பதைக் காண்கிறோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: எவ்வளவு காலத்திற்கு உயிரைக் காக்க முடியும்?

சீடர்: அவரால் தொடர்ந்து உயிர் வாழ முடியும்.

ஸ்ரீல பிரபுபாதர்: நிரந்தரமாக உயிர் வாழ முடியுமா?

சீடர்: இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: சொற்ப காலத்திற்கு வாழ்வினை நீட்டிக்கின்றீர். ஆனால், அந்த நபர் ஒருநாள் மரணமடையத்தானே வேண்டும். அவர் ஏன் மரணமடைகிறார்? மரணத்தை ஏற்படுத்தும் காரணி எது? இரசாயன மாற்றத்தினால் மரணம் நிகழ்கிறது என்று வேதியியல் வல்லுநரான நீங்கள் கூறலாம். ஆனால், அடிப்படையில் மரணத்திற்குப் பின்னும் உடலின் வேதியியல் தன்மைகள் மாற்றம் அடையாமல்தானே உள்ளன.

மரணமடைந்த உடனே உயிர் உடலை விட்டு வெளியேறி விடும். ஏராளமான கிருமிகளும் புழுக்களும்கூட வெளியேறி விடுகின்றன. உயிரைத் தோற்றுவிக்கக்கூடிய வேதியியல் தன்மைகள் மாற்றமடைந்து விட்டன என்று உங்களால் எவ்வாறு கூற இயலும்? விஷயம் என்னவென்றால், நாம் திரு.ஜான் என்று அழைத்த உயிர் உடலை விட்டுச் சென்று விட்டது. அது திரும்பி வரப் போவதில்லை. ஆகவே, குறிப்பிட்ட உயிர்வாழி ஜடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவன், அவன் முற்றிலும் வேறானவன், முற்றிலும் ஆன்மீக வஸ்து—ஆத்மா.

சீடர்: எனவே, ஸ்ரீல பிரபுபாதரே, ஜடவுடலிலிருந்து வெளியேறும் அந்த ஆத்மாவிற்கும், மரணத்திற்குப் பிறகு அந்த உடலில் வாழும் கிருமிகளுக்கும் புழுக்களுக்கும் தொடர்பில்லை என்று நாம் வேறுபடுத்திக் காண முடியும். ஆனால் உடலில் வாழும் பிரதான ஆத்மாவிற்கும் அதே உடலினுள் வாழும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கும் அந்த உடலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஒவ்வொரு செல்லும் வேறுபட்டது என்றும் தனித்துவமான ஆத்மாவைக் கொண்டுள்ளது என்றும் நீங்கள் ஒருமுறை கூறியதாக எனக்கு நினைவு இருக்கிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கூறியுள்ளேன்.

சீடர்: அந்த பிரதானமான ஆத்மா உடலிலிருந்து வெளியேறும் நேரத்தில் உடலின் செல் அமைப்பில் வாழும் மற்ற ஆத்மாக்கள் அந்த குறிப்பிட்ட ஆத்மாவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று கூற முடியுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: அவ்வாறு கூற முடியாது. அந்த குறிப்பிட்ட ஆத்மாவைச் சாராமல் அவை தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளன. உதாரணமாக, திரு. ஜானின் மலத்தில் பல கிருமிகள் உள்ளன. அந்த கிருமிகள் ஏன் அங்கு வாழ்கின்றன? ஏனென்றால், மலமானது அவை வாழ்வதற்கு ஏற்ற இடம், அவ்வளவே. ஆனால் இந்த கிருமிகளுக்கு திரு.ஜான் என்ற அந்த குறிப்பிட்ட ஆத்மாவுடன் எவ்விதத் தொடர்புமில்லை.

சீடர்: ஆனால், எனது உடலிலுள்ள செல்களில் வாழும் மற்ற ஆத்மாக்களுக்கு நானே உரிமையாளர் என்பது போலத் தெரிகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, இல்லை. நீங்கள் உரிமையாளர் இல்லை. இங்கு யாரும் உரிமையாளர் இல்லை. உங்களது தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் உரிமையாளரைப் போலத் தெரிந்தாலும், நீங்கள் பகவானால் இத்தகைய சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, உண்மையான உரிமையாளர் பகவானே. இதுபோன்ற அனுகூலமான சூழ்நிலையில் நீங்கள் வைக்கப்பட்டுள்ளீர்கள். அவ்வளவே. நீங்கள் உரிமையாளர் அல்ல, நீங்கள் பகவானால் வழங்கப்பட்ட சூழ்நிலையைச் சார்ந்துள்ளீர்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives