கிருஷ்ணரின் விசேஷ வைபவங்கள்

Must read

Sridhara Srinivasa Dasa
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்

பௌதிக உலகில் எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அப்போதெல்லாம் தாம் அவதரிப்பதாக பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகின்றார். அவதாரம் என்பது பகவான் தமது சொந்த உருவில் ஆன்மீக உலகிலிருந்து இறங்கி வருவதைக் குறிக்கின்றது. அவ்வாறு அவர் வரும்போது, மனித உருவம், விலங்கு உருவம், பாதி மனித பாதி விலங்கு உருவம் (இராம, வராஹ, நரசிம்ம) என பல்வேறு ரூபங்களில் தோன்றுகிறார், இந்த ரூபங்கள் சாதாரண பௌதிகத் தோற்றங்கள் அல்ல; மாறாக, இவர்கள் அனைவருமே பூரண ஞானத்தையும் பூரண ஆனந்தத்தையும் நித்தியமாகப் பெற்றவர்கள் (ஸச்-சித்-ஆனந்த). பகவானின் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. அவரது வைபவங்களும் கணக்கிட முடியாதவை.

அவர் கிருஷ்ணராக அவதரிக்கும்போதும் இதர அவதாரங்களைப் போன்றே அதியற்புதமான லீலைகளைப் புரிகிறார். இருப்பினும், அவர் தமது சுய ரூபமான கிருஷ்ண உருவில், வேறெந்த அவதாரமும் வெளிப்படுத்தாத விசேஷ வைபவங்கள் பலவற்றை வெளிப்படுத்துகிறார். அந்த விசேஷ வைபவங்களை சாஸ்திர பிரமாணங்களோடு வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கிருஷ்ணரின் அவதாரக் குறிப்பு

நாம் வாழும் இந்த கலி யுகம் 4,32,000 வருடங்கள் நீடிப்பதாகும். இதற்கு முந்தைய யுகங்களான துவாபர, திரேதா, ஸத்ய யுகங்கள் கலி யுகத்தைக் காட்டிலும் முறையே 2, 3, 4 மடங்குகள் அதிகமாக நீடிப்பவை. இந்த நான்கு யுகங்கள் ஒன்று கூடி 43,20,000 ஆண்டுகள் நீடிக்கின்றன. இவ்வாறு ஆயிரம் யுகங்களைக் கொண்டதே பிரம்மதேவரின் ஒரு பகல் (12 மணி நேரம்). அதே அளவைக் கொண்டது அவரது ஓர் இரவு. நமது கணக்கின்படி 86,40,000 x 1,000 ஆண்டுகள் நீடிக்கும் பிரம்மதேவரின் அந்த ஒரு நாளில் பகவான் கிருஷ்ணர் தாமே சுயமாக இந்த பௌதிக உலகில் அவதரிக்கின்றார் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பகவான் கிருஷ்ணர் முற்றிலும் சுதந்திரமானவர் என்பதால், அவர் எந்த நியதிக்கும் அப்பாற்பட்டவர், தமது சொந்த விருப்பத்திற்கேற்பவே அவதரிக்கிறார் என்பதையும் நாம் அறிவது இன்றியமையாததாகும்.

பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்கள் மிகவும் பிரபலமானவை. சிலர் பகவான் அவதாரங்கள் மொத்தம் பத்துதான் என்று தவறாக எண்ணுகின்றனர். உண்மையில் அவரது அவதாரங்கள் ஆற்றின் நீரோடை போன்று எண்ணற்றது என்றும், அந்த அவதாரங்கள் அனைவரும் பகவானின் கிருஷ்ணரின் அம்சம் அல்லது அம்சத்தின் அம்சம் என்றும், பகவான் கிருஷ்ணரே அனைத்து அவதாரங்களின் மூலமான ஸ்வயம் பகவான் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (1.3.26, 28) தெளிவுபடுத்துகிறது. பகவானின் அவதாரங்களைப் பற்றிய இதுபோன்ற தகவல்களை பெரும்பாலானோர் அறிந்திலர்.

பகவான் கிருஷ்ணரின் வைபவங்கள்

பகவானின் அவதாரங்களைப் போன்றே அவரது நாமம், ரூபம், குணம், லீலை முதலியவையும் நமது சிந்தனைக்கெட்டாத எண்ணிலடங்காத நிலையில் இருக்கின்றன. இருப்பினும், பகவானின் வைபவங்களை 64 வகைகளாக வகுத்து ஸ்ரீல ரூப கோஸ்வாமி பக்தி ரஸாம்ருத சிந்து எனும் நூலில் விளக்கியுள்ளார். பகவானின் அம்சங்கள் என்னும் முறையில் தனிப்பட்ட ஜீவன்கள் மிகக் குறுகிய அளவில் அந்த வைபவங்களில் ஐம்பது வைபவங்களை வெளிப்படுத்த முடியும். வேறு விதமாகக் கூறினால், ஜீவன்களிடம் இந்த ஐம்பது வைபவங்களும் மிகச்சிறிய அளவில் இருக்கலாம், ஆனால் இவை அனைத்தும் பரம புருஷ பகவானிடம் முழுமையாக உள்ளன.

இந்த ஐம்பது குணங்கள் மட்டுமின்றி, என்றும் மாறாத நிலை, அனைத்தையும் அறிந்த நிலை, எப்போதும் புத்துணர்வுடன் இருத்தல், ஸச்-சித்-ஆனந்த சரீரம், யோக சித்தியின் பக்குவம் ஆகிய ஐந்து குணங்களையும் கிருஷ்ணர் முழுமையாகப் பெற்றுள்ளார். பிரம்மாவிடமும் சிவபெருமானிடமும் இக்குணங்கள் ஓரளவு காணப்படுகின்றன. பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணரோ இந்த 55 குணங்களுக்கு அப்பால் ஐந்து விசேஷ குணங்களைப் பெற்றுள்ளனர்: அசிந்திய சக்தி (சிந்தனைக்கு அப்பாற்பட்ட சக்தி), தமது உடலிலிருந்து எண்ணற்ற பிரபஞ்சங்களைத் தோற்றுவிக்கும் சக்தி, அவதாரங்களின் ஆதிமூலமாக இருத்தல், தன்னால் வதம் செய்யப்படும் எதிரிகளுக்கும் முக்தியளித்தல், முக்தி பெற்ற ஆத்மாக்களையும் கவரும் சக்தி.

இந்த அறுபது குணங்கள் மட்டுமின்றி, லீலா மாதுர்யம் (இனிமையான லீலைகள்), பிரேமையில் மூழ்கிய பக்தர்களால் சூழப்பட்டிருக்கும் பிரேம மாதுர்யம், அனைவரின் உள்ளங்கவரும் வேணு கானம் (வேணு மாதுர்யம்), ஈடு இணையற்ற வடிவழகு (ரூப மாதுர்யம்) ஆகிய  நான்கு விசேஷ குணங்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார். இவை பகவானின் வேறு எந்த ரூபத்திலும் காணப்படுவதில்லை எனும் பட்சத்தில், தேவர்களையோ மனிதர்களையோ குறித்து என்ன சொல்வது?

பகவான் கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது, எண்ணற்ற கோப நண்பர்களாகவும் கன்றுகளாகவும் விரிவடைந்து, பிரம்மதேவருக்கே பிரமிப்பூட்டினார்.

கிருஷ்ணரின் நான்கு விசேஷ வைபவங்கள்

லீலா மாதுர்யம்: கிருஷ்ணரின் ரூபத்தில் பகவான் நிகழ்த்தும் லீலைகள் அவரது இதர லீலைகளைக் காட்டிலும் மிகவும் இனிமையானவை என்பதை அனைவரும் அறிவர். ஏராளமான லீலைகளுக்கு மத்தியில், கோபியர்களுடனான ராஸ நடன லீலையினை கிருஷ்ணர் மீண்டும்மீண்டும் நிகழ்த்த ஆவல் கொண்டுள்ளார் என்று ப்ருஹத்-வாமன புராணம் தெரிவிக்கின்றது. பல்வேறு அவதாரங்களில் பகவான் அரங்கேற்றிய லீலைகள் அனைத்துமே மனோரஞ்சனமானது என்றபோதிலும், கிருஷ்ண ரூபத்தில் அவர் புரிந்த லீலைகள் தெய்வீக ஆனந்தத்தைப் பெருகச் செய்கின்றன; அவற்றுள் ராஸ-க்ரீடை பரமமானதாகும்.

பகவான் கிருஷ்ணர் விரஜ பூமியில் லீலைகளை நிகழ்த்தி கோபியர்களின் மீது பொழிந்த கருணையானது, பிரம்மா, சிவன் முதலியோர் மட்டுமின்றி, அவரது பத்தினியும் மார்பிலிருந்து ஒருபோதும் விலகாதவளுமான இலக்ஷ்மி தேவிக்கு வழங்கிய கருணையைக் காட்டிலும் அதிகமானது என்று ஸ்ரீமத் பாகவதம் (10.9.20) குறிப்பிடுகிறது. மேலும், கோபியர்களின் மீதும் இதர விருந்தாவனவாசிகளின் மீதும் கிருஷ்ணர் பொழிந்த கருணையும் கரிசனமும் ஈடுஇணையற்றவை என சுகதேவ கோஸ்வாமி ஸ்ரீமத் பாகவதத்தின் வெவ்வேறு இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரே நேரத்தில் பல ரூபங்களை ஏற்கும் அதியற்புத லீலைகளை பகவான் கிருஷ்ணர் பல முறை புரிந்துள்ளார். சிறுவனாக இருந்தபோது, அவர் தமது எண்ணற்ற கோப நண்பர்களாகவும் கன்றுகளாகவும் தாமே விரிவடைந்து, படைப்பின் இறைவனாகத் திகழும் பிரம்மதேவருக்கே பிரமிப்பூட்டினார். ராஸ நடனத்தின்போது, அங்கிருந்த எண்ணிலடங்காத கோபியர்களுடன் சிருங்கார ரஸத்தை அனுபவிப்பதற்காக, அவர் அத்தனை வடிவங்களாக விரிவடைந்தார். பின்னர், ஒரே நேரத்தில் ஏழு ரூபங்களைத் தரித்து ஏழு காளைகளை அடக்கி, ஸத்யா என்னும் இளவரசியை சுயம்வரத்தில் மணந்தார். இந்த லீலையை பகவானின் பெரும் பக்தர்களான ஆழ்வார்கள் பல பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளனர்.

நரகாசுரன் என்னும் அசுரனைக் கொன்று அவன் கடத்திய 16,000 இளவரசிகளை, அவர்களது கோரிக்கையின்படி கிருஷ்ணர் திருமணம் புரிந்தபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு இடத்தில் ஒரே நேரத்தில் விரிவடைந்து மணந்ததோடு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மாளிகை அமைத்து தெய்வீக குடும்ப வாழ்வில் ஈடுபட்டார். பின்னர், தமது நெருங்கிய தோழனான அர்ஜுனனுக்கு குருக்ஷேத்திர போர்க்களத்தில் விஸ்வரூபத்தையும் நான்கு கர ரூபத்தையும் காட்டினார். ஒருமுறை அர்ஜுனனை தம்முடன் ரதத்தில் அழைத்துச் சென்று, பிரம்மஜோதியைத் தாண்டி விரஜா நதியில் அனந்த சேஷரின் மீது சயனிக்கும் மஹாவிஷ்ணுவையும் தம்மையும் ஒரே சமயத்தில் காணும் அதியற்புத தரிசனத்தை அர்ஜுனனுக்கு வழங்கி மகிழ்வித்தார்.

இவ்வனைத்து லீலைகளையும் அறிந்து மகிழ ஸ்ரீல பிரபுபாதரின், “கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” எனும் புத்தகத்தை வாசகர்கள் வாங்கிப் படித்தல் நன்று.

கிருஷ்ணரின் குழலோசை அசையா உயிரினங்களை அசையச் செய்கிறது; அசையும் உயிரினங்களை அசையாமல் ஸ்தம்பிக்கச் செய்கிறது.

பிரேம மாதுர்யம்: பகவான் கிருஷ்ணர் ஒருபோதும் தனித்துக் காணப்பட்டதில்லை, அவர் எப்போதும் பிரேமையில் (மிகவுயர்ந்த இறையன்பில்) மூழ்கிய பக்தர்களால் சூழப்பட்டிருந்தார். பகவான் கிருஷ்ணரைக் காண்பதில் பேரானந்தம் அடையும் கோபியர்கள், அந்த கண்கொள்ளாக் காட்சிக்கு தங்களது இமைகள் இடையூறாக இருப்பதாகக் கருதி, அதனை அவ்வாறு படைத்த பிரம்மதேவருக்கு தெய்வீக கண்டனம் தெரிவித்தனர். கண் இமைக்கும் வேளையில் கிருஷ்ணரைக் காணாத பிரிவுகூட கோபியர்களின் மனதில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஓர் அரசனை அவனைச் சூழ்ந்திருக்கும் பரிவாரங்களுடன் நாம் புரிந்துகொள்வதைப் போன்றே பகவான் கிருஷ்ணரை அவரை எப்போதும் சூழ்ந்திருக்கும் இடையர்குல தோழர்கள், கோபியர்கள், தாய், தந்தை, விரஜவாசிகள் முதலியோருடன் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் கிருஷ்ணரின் மீது கொண்டுள்ள தெய்வீக பேரன்பு ஈடுஇணையற்றதும் மிகவும் இனிமையானதுமாகும்.

வேணு மாதுர்யம்: கிருஷ்ணர் என்றால் எல்லார் மனதிலும் தவறாது தோன்றுவது அவரது புல்லாங்குழல். அந்தக் குழலோசை (வேணு கானம்) பிரம்மா, சிவன், இந்திரன் என மிகவுயர்ந்த தேவர்களையும் பண்டிதர்களையும் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் உடனே அடிபணிந்து அந்த தெய்வீகக் குழலோசையின் தன்மைகளை ஆராய்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் குழலோசை அசையா உயிரினங்களான மலை, ஆறு, மரம் முதலியவற்றை அசையச் செய்கிறது; அசையும் உயிரினங்களான பறவைகள், விலங்குகள், மனிதர்கள் முதலியவற்றை அசையாமல் ஸ்தம்பிக்கச் செய்கிறது. பால் பருகும் கன்றுக்குட்டியும் வாயிலுள்ள பாலைக்கூட விழுங்காமல் ஸ்தம்பித்து நிற்கின்றது.

ஸ்ரீல ரூப கோஸ்வாமி விதக்த மாதவ எனும் நூலில், கிருஷ்ணரது வேணு கானம் உடுக்கை வாசிப்பதிலிருந்து சிவபெருமானைத் தடுத்து விடுகிறது என்றும், ஸனகாதி குமாரர்களின் தியானத்தைக் கலைத்து விடுகிறது என்றும், தாமரையில் அமர்ந்து படைப்பில் ஈடுபட்டிருக்கும் பிரம்மதேவரைத் திகைக்க வைக்கிறது என்றும், அமைதியுடன் எல்லா பிரபஞ்சங்களையும் தாங்கி நிற்கும் அனந்ததேவரை இங்கும் அங்குமாக ஆடச் செய்கிறது என்றும், பிரபஞ்சத்தின் அடுக்குகளைத் துளைத்து ஆன்மீக வானை அடைகிறது என்றும்  வர்ணித்துள்ளார் வர்ணித்துள்ளார். கிருஷ்ணரால் வெளிப்படுத்தப்பட்ட இந்த விசேஷ வைபவம் வேறு எந்த அவதாரத்திலும் தென்படாத ஒன்றாகும்.

ரூப மாதுர்யம்: ஸ்ரீ கிருஷ்ணருடைய திருவுருவத்தின் அழகு எவ்வளவு வசீகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. கிருஷ்ணர் என்னும் சொல்லிற்கே வசீகரமானவர் என்றுதான் பொருள். அவரது பேரழகு கண்களைப் பறிப்பதால், அவரது திருமேனியை அலங்கரிக்க எந்த ஆபரணமும் தேவையில்லை; மாறாக, அவரது திருமேனியின் அழகு அந்த ஆபரணங்களுக்கு அழகூட்டுகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் (3.2.12) தெரிவிக்கின்றது. கிருஷ்ணரின் வடிவழகில் திடமான மனம் கொண்ட ஆண்களும் பெண்களும்கூட மயங்குகின்றனர், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? (ஸ்ரீமத் பாகவதம் 10.29.40) உண்மையில், ஒரு முறை பளபளக்கும் மணிகள் பதித்த தரையில் தமது பிம்பத்தைக் கண்ட கிருஷ்ணர் தாமே தமது ரூபத்தினால் கவரப்பட்டார். அந்த தெய்வீக நிழலைத் தழுவி தெய்வீக ஆனந்தத்தை அடைய விரும்பினார்.

இந்த 64 தெய்வீக குணங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், பகவான் கிருஷ்ணரே எல்லா இன்பத்தின் இருப்பிடம் என்றும், அவரது தெய்வீக வைபவங்கள் கடலைப் போன்றவை என்றும் ஸ்ரீல பிரபுபாதர் வர்ணித்துள்ளார். கடலைப் போன்றே வைபவங்கள் அளவிட முடியாதவை என்றபோதிலும், அந்தக் கடலின் தன்மையை அறிய அதன் ஒரு துளியைச் சோதித்தால் போதுமானதாகும். ஸ்ரீல ரூப கோஸ்வாமி அருளியுள்ள பகவான் கிருஷ்ணரின் விசேஷ வைபவங்களைப் படிப்பதன் மூலமே அவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும். ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் அடிச்சுவடுகளைப் பற்றிக் கொண்டால் மட்டுமே, பகவான் தமது முந்தைய அவதாரங்களில் ஒருபோதும் வழங்கிடாத கருணையை கிருஷ்ணர் தமது சுய உருவில் எவ்வாறு வழங்கினார் என்பதையும், விருந்தாவனவாசிகள் அனைவரையும் எவ்வாறு பேரானந்தத்தில் மூழ்கச் செய்தார் என்பதையும் நம்மால் உணர முடியும்.

குறிப்பு: இந்த நான்கு விசேஷ வைபவங்களை பக்தி ரஸாம்ருத சிந்து என்னும் நூலில் ஸ்ரீல ரூப கோஸ்வாமி மேலும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இவற்றை ஆழ்ந்த விளக்கங்களோடு அறிந்துகொள்ள அந்நூலிற்கான ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை வாசகர்கள் வாங்கிப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மணிகள் பதித்த தரையில் தமது பிம்பத்தைக் கண்ட கிருஷ்ணர் தாமே தமது ரூபத்தினால் கவரப்படுதல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives