சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல; இருப்பினும், திருமேனியின் நிறத்திலும் செயல்களிலும் இவர் சற்று வேறுபடுகின்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கறுநீல திருமேனியைக் கொண்டவர், சைதன்ய மஹாபிரபுவோ பொன்னிற மேனியைக் கொண்டவர்; இடையர் குலச் சிறுவனாக தோன்றிய கிருஷ்ணர் தலையில் மயில் இறகையும் கையில் புல்லாங்குழலையும் கொண்டிருந்தார், பிராமண குலத்தில் தோன்றிய சைதன்ய மஹாபிரபுவோ மிருதங்கம் மற்றும் கரதாளத்துடன் காணப்பட்டார்.
சைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது என்பதுமாகும். சைதன்ய மஹா பிரபுவின் போதனைகளை உலக மக்களுக்கு பாகுபாடின்றி எடுத்துரைத்தவர் தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர். தனது திருநாமம் உலகின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பரவும் என்று சைதன்ய மஹாபிரபு முன்னரே கூறியிருந்தார்; அக்கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார்.
அவ்வளவு எளிமையான, உயர்ந்த இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்கும் கலையை நாமும் பயின்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் அவசியம். பிரகலாத மஹாராஜர் இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். பகவானின் திருநாமத்தை அவர் எச்சூழ்நிலையிலும் தவறாது உரைத்ததோடு மட்டுமல்லாது தனது சக நண்பர்களுக்கும் இதனைப் பழக்கிக் கொடுத்து இன்புறச் செய்தார்.
நித்யானந்த பிரபுவிற்கும் ஹரிதாஸ தாகூருக்கும் அவரளித்த முதல் கட்டளை: “நண்பர்களே, செல்லுங்கள்! நகரத்தின் வீதிகளுக்குச் செல்லுங்கள், வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு மனிதனையும் சந்தியுங்கள், அவனை தூய வாழ்வுடன் ஹரியின் திருநாமத்தைப் பாடச் சொல்லுங்கள், பின்னர் தினசரி மாலை நேரத்தில் உங்களது பிரச்சாரப் பணியின் பலன்களை எனக்குத் தெரிவிப்பீராக.” இக்கட்டளையைப் பெற்ற இரண்டு பிரச்சாரகர்களும் அதனை தினமும் நிறைவேற்றினர். ஒருமுறை ஜகாய், மதாய் என்னும் இரண்டு வெறுக்கத்தக்க நபர்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. மஹாபிரபுவின் கட்டளையைக் கேட்ட அவர்கள் இரண்டு பிரச்சாரகர்களையும் அவமதித்தனர், இருப்பினும் பகவான் அளித்த பக்தியின் போதனைகளால் கவரப்பட்டு விரைவிலேயே மாற்றப்பட்டனர். இதனால் ஆச்சரியமுற்ற நாதியாவின் மக்கள், “நிமாய் பண்டிதர் ஒரு மிகச்சிறந்த பண்டிதர் மட்டுமல்ல, அவர் நிச்சயமாக வல்லமை பொருந்திய கடவுளால் அனுப்பப்பட்ட தூதரே,” என்று கூறினர். அத்தருணத்திலிருந்து தனது இருபத்திமூன்று வயது வரை அவர் தனது கொள்கைகளை நாதியாவில் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள இதர கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரம் செய்தார். தன்னைப் பின்பற்றுவோரின் இல்லங்களில் அவர் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார், பக்தியின் அந்தரங்க கொள்கைகளைக் கற்றுக் கொடுத்தார், மேலும், இதர பக்தர்களுடன் சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டார். நாதியா நகரத்திலிருந்த அவரது தொண்டர்கள் ஹரியின் திருநாமத்தை கடைவீதிகளிலும் இதர வீதிகளிலும் பாடத் தொடங்கினர்.