ஸ்ரீ பகவான் உவாச
இதம் ஷரீரம் கெளந்தேய க்ஷேத்ரம் இத்யபிதீயதே
ஏதத் யோவேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்-வித:
“புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: குந்தியின் மகனே! இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரஜ்ஞ) என்று அழைக்கப்படுகின்றான்.” (பகவத் கீதை 13.2)
எங்கெல்லாம் தர்மத்திற்குத் தொல்லைகள் ஏற்பட்டு (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத) அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ (அப்யுத்தானம் அதர்மஸ்ய), அப்போதெல்லாம் நான் (கிருஷ்ணர்) தோன்றுகிறேன் (ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்) (பகவத் கீதை 4.7). பௌதிக உலகிலும் இதே கோட்பாடு செயல்படுவதைக் காணலாம். அரசாங்கத்தின் சட்டங்கள் மீறப்படும்போது நிலைமையைச் சரி செய்ய எந்தவொரு குறிப்பிட்ட அரசு அதிகாரியோ போலீஸாரோ அந்த இடத்திற்கு வருகிறார்.
பரீக்ஷித் மஹாராஜர் நரக லோகங்களைப் பற்றிய விவரங்களை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து கேட்டறிந்தவுடன், மக்களை அதிலிருந்து எவ்வாறு விடுவிப்பது என்று வினவினார். அவர் ஒரு வைஷ்ணவர் (பக்தர்). வைஷ்ணவன் எப்போதும் பிறரின் துன்பத்திற்காக வருந்துபவன், பிறரின் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும். எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாயினும், எல்லா வைஷ்ணவர்களும் அதாவது பக்தர்கள் அனைவரும் கடவுள் உணர்வுள்ளவர்கள், கருணையுள்ளம் படைத்தவர்கள் ஆவர்.
மனிதப் பிறவி பற்பல கோடிக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சிக்குப்பின் பெறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தின்படி 84,00,000 உயிரின வகைகள் உள்ளன என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். ஆத்மா மனிதப் பிறவிகளில் மட்டுமே உள்ளது என்பதல்ல. நாம் எல்லாரும்—மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மரங்கள், செடிகள், நீர்வாழ் இனங்கள் என அனைவருமே ஆத்மாக்களே. ஆத்மா பல வகையான உடைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இஃது உங்களில் சிலர் சிவப்பு நிறத்திலும் சிலர் பச்சை, வெள்ளை நிறங்களிலும் வகைவகையாக உடை அணிந்திருப்பதைப் போன்றது. ஆனால் நாங்கள் உடைகளுக்கு (உடலுக்கு) முக்கியத்துவம் கொடுப்பதில்லை; ஆத்மாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.