வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 25
சென்ற இதழில், சிவபெருமான் பிரசேதர்களுக்கு உபதேசம் செய்ததை அறிந்தோம். அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த சமயத்தில் அவர்களது தந்தை பிராசீனபர்ஹிஷத்திடம் சென்ற நாரதர் அவருக்கு வழங்கிய உபதேசத்தை இனிவரும் இதழ்களில் காண்போம்.
மன்னரின் கேள்விகள்
அரச குமாரர்களால் துதிக்கப்பட்ட சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். சிவபெருமானால் உபதேசிக்கப்பட்ட ஸ்தோத்திரத்தை பிரசேதர்கள் நீருக்குள் நின்றபடி பத்தாயிரம் வருடங்கள் ஜபித்து தவம் இயற்றினர். அவர்களின் தந்தையான மன்னர் பிராசீனபர்ஹிஷத் பற்பல யாகங்களைச் செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் நாரத முனிவர் மன்னருக்கு தூய பக்தியை உபதேசிக்கும் பொருட்டு கருணையோடு அங்கு எழுந்தருளினார்.
யாகங்கள் செய்து கொண்டிருந்த மன்னரைச் சந்தித்த நாரதர் கூறினார், “மன்னரே யாகங்களால் நீங்கள் அடைய விரும்புவது என்ன? துன்பங்களைத் தொலைத்து இன்பம் பெறுதல் எனும் வாழ்வின் முக்கியக் குறிக்கோளை இந்த யாகங்களால் அடைவது சாத்தியமில்லை.” தமக்கு தூய ஞானத்தை விளக்கியருளும்படி மன்னர் பிராசீனபர்ஹிஷத் வேண்டுகோள் விடுக்க, அதனை ஏற்ற நாரதர் மன்னருடைய நிலையினை அவருக்கு சாதுர்யமான முறையில் விளக்கும் பொருட்டு, புரஞ்ஜனன் என்ற மன்னனின் கதையை எடுத்துரைக்கத் தொடங்கினார்.
புரஞ்ஜனனுடைய நகரம்
முன்னொரு காலத்தில் புரஞ்ஜனன் என்ற புகழ் வாய்ந்த மன்னன் தன் இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள தகுந்த வசிப்பிடத்தைத் தேடி உலகம் முழுவதும் அலைந்தான். இறுதியாக, இமயமலையின் தென்பகுதியில் பாரத வர்ஷம் என்ற ஒன்பது வாயில்கள் கொண்ட நகரத்தைக் கண்டான். அது பிரகாரங்கள், தோட்டங்கள், கோபுரங்கள் ஆகியவற்றாலும், தங்கம், வெள்ளி. இரும்பினால் செய்யப்பட்ட வீடுகளாலும் பிரகாசித்தது. அந்த வீடுகளின் மாடங்கள் நீலக்கல், ஸ்படிகம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம் முதலியவற்றால் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், அந்நகரம் காண்பதற்கு நாகர்களின் தலைநகரான போகவதியைப் போன்றிருந்தது. மேலும், நாற்சந்திகள், சபா மண்டபங்கள், ராஜ வீதிகள், விளையாட்டு மைதானங்கள், ஓய்வு விடுதிகள், சந்தைகள், கொடிக்கம்பங்கள் என நகரம் பல்வேறு வசதிகளுடன் இருந்தது.
அந்நகரத்திற்கு வெளியே எழில்மிக்க நந்தவனம் ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றிலும் அழகிய மரங்களும் செடிகொடிகளும் உள்ளன, பறவைகள் சப்தமிட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தக் குளத்திலிருந்து குளிர்ந்த நீர்த்துளிகளை ஏந்தி வரும் இனிய காற்று அங்குள்ள மரங்களின் கிளைகளையும் இலைகளையும் அசைந்தாடச் செய்கிறது. அங்கிருக்கும் வன விலங்குகள் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்வதில்லை. அங்குள்ள குயில்களின் இனிய கூவல் செல்லும் வழிப்போக்கர்களை அழைப்பது போலுள்ளது.
புரஞ்ஜனனின் மோகம்
இவ்வாறு அழகுற விளங்கிய அந்த நந்தவனத்தில் இங்குமங்கும் அலைந்து திரிந்து வந்த மன்னன் புரஞ்ஜனன், தற்செயலாக நகரிலிருந்து வெளியே வந்த ஓர் அழகிய பெண்ணைக் கண்டான். அவளுடன் பத்து காவலாளிகளும் அவர்கள் ஒவ்வொருவருடன் நூற்றுக்கணக்கான மனைவியரும் வந்தனர். அப்பெண்ணுக்கு ஐந்து தலை நாகம் எல்லா திசையிலும் பாதுகாவலாக இருந்தது. இளமையும் எழிலும் மிக்க அப்பெண் தனக்கேற்ற மணாளனைத் தேடிக் கொண்டிருந்தாள்.
அவளது நாசி, பற்கள், நெற்றி, கழுத்து, கன்னம், கொங்கை என எல்லா அங்கங்களும் எழில்மிக்கவையாக இருந்தன. மஞ்சள் வண்ண ஆடையுடுத்தி இடையில் பொன் ஆபரணத்தை அணிந்திருந்த அவள் பார்ப்பதற்கு தேவகன்னிகையைப் போல இருந்தாள்.
மிகச்சிறந்த வீரனான புரஞ்ஜனன் அவளைக் கண்டு, அவளது அழகால் கவரப்பட்டு காம இச்சை எனும் அம்பினால் துளைக்கப்பட்டு, அவளிடம் உரைத்தான், “செந்தாமரை விழியாளே, நீ யார்? யாருடைய மகள்? எங்கிருந்து வருகிறாய்? இங்கே வந்த நோக்கம் என்ன? என்ன செய்ய முயல்கிறாய்? இந்தப் பணியாட்கள் யார்? நீ மஹாவிஷ்ணுவைத் தேடும் இலக்ஷ்மியா?, பிரம்மாவின் மனைவி சரஸ்வதியா? சிவனின் மனைவி பவானியா? ஆயினும், நீ மேற்கூறிய பெண்களாக இருப்பதற்கு வாய்ப்பில்லையே. ஏனெனில், உனது பாதங்கள் பூமியைத் தொட்டுக் கொண்டுள்ளனவே. வீரர்களில் சிறந்தவனான என்னை உனது கணவனாக அடைவாயாக. அழகே! உனது கடைக்கண் பார்வை என்னை மயக்கிவிட்டது, என் மீது கருணை காட்டுவாயாக.”
புரஞ்ஜனனின் திருமணம்
இப்படிக் கெஞ்சிக் கேட்கும் புரஞ்ஜனனைப் பார்த்து அவள் கூறினாள், “வீரனே, நான் யார் என்பதையோ, என் தந்தை யார் என்பதையோ நான் அறியேன். நாமனைவரும் தற்போது இந்நகரத்தில் இருக்கிறோம் என்பதைத் தவிர வேறொன்றையும் அறியேன்.
“இந்த ஆடவர்கள் எனது நண்பர்கள், இப்பெண்கள் எனது தோழிகள். நான் உறங்கும்போது இந்தப் பாம்பு விழித்திருந்து இந்நகரத்தைக் காக்கிறது. பகைவரை வெல்பவரே! தற்செயலாக நீங்கள் இங்கு வந்தது எனது பெரும் பாக்கியமே. தங்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகட்டும். நாம் இருவரும் மணமுடித்து ஒன்பது வாயில்கள் உள்ள இந்த நகரத்தில் நூறாண்டுகள் மகிழ்ச்சியோடு வாழ்வோமாக.”
அந்தத் தம்பதிகள், ஒருவரையொருவர் அரவணைத்த வண்ணம் நகரினுள் பிரவேசித்து நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். இசைக் கலைஞர்கள் புரஞ்ஜனனின் பெருமைகளையும் வீர தீரச் செயல்களையும் போற்றிப் பாடினர். மன்னர் கோடை காலங்களில் தடாகங்களுக்கு நீராடச் செல்வது வழக்கம்.
அந்தப் பட்டணத்தின் ஏழு வாயில்கள் மேலேயும் இரண்டு வாயில்கள் கீழேயும் இருக்கின்றன. அந்நகரத்து அரசன் செல்வதற்கென்றே ஒன்பது வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஐந்து வாயில்கள் கிழக்கிலும், ஒன்று தெற்கிலும், மற்றொன்று வடக்கிலும், மீதம் இரண்டும் மேற்கு நோக்கியும் இருக்கின்றன.
கிழக்கு திசை வாயில்கள்: கத்யோதை, ஆவிர்முகி என்னும் வாயில்களின் வழியே புரஞ்ஜனன் தனது நண்பனான த்யூமான் என்பவனுடன் விப்ராஜிதம் என்ற நாட்டிற்குச் செல்கிறான். நளினி, நாளினி என்னும் வாயில்களின் வழியாக அவன் அவதூதன் எனும் தோழனுடன் செளரபம் என்ற நாட்டிற்குச் செல்கிறான். முக்யா என்கிற ஐந்தாவது வாயில் வழியே ரஸக்ஞன் என்பவனுடன் பஹீதனம் என்ற நாட்டிற்கும், விபணன் என்பவனோடு ஆபணம் என்ற நாட்டிற்கும் செல்கிறான்.
இதர வாயில்கள்: புரஞ்ஜனன் தென் திசையிலுள்ள பித்ருஹீ வாயில் வழியே சுருததரன் என்பவனுடன் தென் பாஞ்சால நாட்டை அடைகிறான். நகரின் வட திசையிலுள்ள தேவஹீ வாயில் வழியே சுருததரனுடன் வட பாஞ்சாலத்திற்குச் செல்கிறான். மேற்கிலிருக்கும் ஆஸிரி என்கிற வாயில் வழியே துர்மதனனுடன் கிராமகம் என்கிற நாட்டிற்கும், நிர்ருதி வாயில் வழியே லுப்தகனுடன் வைசஸம் எனும் நாட்டை அடைகிறான்.
இந்நகரத்தில் வசிப்பவர்களில் நிர்வாக், பேசஸ்கிருத் ஆகிய இருவர் மட்டுமே குருடர்கள். புரஞ்ஜனன் கண்படைத்த பிரஜைகளுக்கு மன்னனாக இருந்தும், இந்த இரு பார்வையற்றவர்களின் உதவியைக் கொண்டே இங்குமங்கும் அலைந்து தன் அலுவல்களை கவனிக்கிறான்.
மனைவிக்குக் கட்டுப்படுதல்
விஷீசீனன் எனும் தனது முக்கிய பணியாளுடன் புரஞ்ஜனன் தனது அந்தப்புரத்திற்குச் செல்கிறான். அங்கே அவன் தனது மனைவி மக்களிடம் கொண்ட பாசத்தால் மயங்குகிறான், மகிழ்ச்சி அடைகிறான்; காமத்திற்கு அடிமையாகி அறிவிழந்த புரஞ்ஜனன் தன் அரசி எதைச் செய்கிறாளோ, அவற்றையெல்லாம் தானும் செய்து ஏமாற்றமடைகிறான்.
அரசி மதுவருந்தும்போது அரசன் புரஞ்ஜனனும் மதுவருந்தினான், அரசி உண்ணும்போது தானும் உண்டான்; அவள் நடக்கும்போது அவனும் நடந்தான், அவள் அசையாது நின்றால் அவனும் அசையாது நின்றான், அவள் அமரும்போது அமர்ந்தான். இவ்வாறாக, மன்னன் புரஞ்ஜனன் தனது ஆசை மனைவியிடம் வசப்பட்டு அவளது கட்டுப்பாட்டிலேயே இருந்து ஏமாற்றப்பட்டான்.
நாரதரின் இந்த உபதேசக் கதை ஆத்மா இவ்வுலகில் எவ்வாறு வாழ்கிறான் என்பதை விளக்கக்கூடிய உவமானத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். அந்த உவமானங்களும் அவை உணர்த்தும் நெறிகளும் இங்கே பட்டியலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.