தக்ஷன் நாரதரை சபித்தல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 5–6

சென்ற இதழில் பிரஜாபதி தக்ஷனின் ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனையை அறிந்தோம். இந்த இதழில் தக்ஷனுக்கும் நாரதருக்கும் இடையிலான உரையாடலைக் காணலாம்.

ஹர்யஸ்வர்களின் தவம்

பகவானின் மாயா சக்தியால் தூண்டப்பட்டு பிரஜாபதி தக்ஷன், அஸிக்னி என்ற பாஞ்சஜனீயின் மூலம் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அந்த மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணத்தில் சாந்தமானவர்களாகவும் பணிவுமிக்கவர்களாகவும்  இருந்தனர். தந்தையின் கட்டளையை ஏற்று, மேற்கில் சிந்து நதி கடலுடன் சங்கமிக்கும் நாராயண சரஸ் என்னும் புனித தீர்த்தத்திற்குச் சென்றனர். அங்கு தினமும் புனித நீரில் தூய்மையடைந்து முனிவர்களின் சகவாசத்தால் பரமஹம்ஸர்களுக்குரிய செயல்களில் நாட்டம் கொண்டனர்.

எனினும், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கடுந்தவம் புரிந்தனர். அதைக் கண்ட நாரத முனிவர் கருணையோடு அவர்களை அணுகினார்.

நாரதரின் உவமை

ஹர்யஸ்வர்களிடம் நாரத மாமுனிவர் கூறினார். “ஹர்யஸ்வர்களே! இந்த பூவுலகின் எல்லையை நீங்கள் இன்னும் காணவில்லை. ஒரே ஒரு புருஷர் (அனுபவிப்பவர்) மட்டுமே வாழக்கூடிய ராஜ்ஜியம் ஒன்று உள்ளது. அங்குள்ள ஒரு துவாரத்தினுள் புகுந்தவன் எவனும் வெளியே வந்ததில்லை. அங்குள்ள நெறி தவறிய பெண் ஒருத்தி பல்வேறு கவர்ச்சியான உடைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தனது கணவனுடன் வசிக்கிறாள்.

“அந்த ராஜ்ஜியத்தில், இரு திசைகளிலும் ஓடக்கூடிய நதி, இருபத்தைந்து பொருட்களாலான ஓர் அற்புதமான வீடு, பல்வேறு ஒலிகளை எழுப்பும் அன்னப் பறவை, கூர்மையான கத்திகளாலும் வஜ்ரங்களாலும் உருவாக்கப்பட்டு தானாகச் சுழலும் ஒரு பொருள் ஆகியவை உள்ளன. இவற்றை இன்னும் நீங்கள் பார்க்கவில்லை என்பதால், உங்களது அறிவு முதிர்ச்சியடையவில்லை, நீங்கள் அனுபவமற்ற சிறுவர்களாவீர். இவ்வாறு இருக்கையில், உங்களால் எவ்வாறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்?

“உங்களின் தந்தை எல்லாம் அறிந்தவர். நீங்களோ அவரது உண்மையான உத்தரவையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ளவில்லை.” நாரதரின் புதிரான வார்த்தைகளைக் கேட்ட ஹர்யஸ்வர்கள் தங்கள் மதிநுட்பத்தால் அதனை ஆராய்ந்து பின்வருமாறு புரிந்துகொண்டனர்.

தக்ஷனின் மகன்களுக்கு நாரதர் பிரச்சாரம் செய்தல்

ஹர்யஸ்வர்களின் முக்தி

பூவுலகம் என்பது செயல்களின் தளமாகிய பௌதிக உடல்களைக் குறிக்கிறது. ஜீவனால் அடையப்படும் உடல்களுக்கு எல்லையே இல்லை. இந்த பந்தத்தை முறிக்காமல், தற்காலிக பலன்நோக்குச் செயல்களில் ஈடுபடுவதில் என்ன பயன்?

புருஷர் என்பது போட்டிக்கு எவரும் இல்லாதவரும், ஆன்மீக மற்றும் பௌதிக உலகங்கள் முழுமைக்கும் உரிமையாளரும் அனுபவிப்பாளருமான பரம புருஷ பகவானைக் குறிக்கிறது. அவரைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல், நிலையற்ற இன்பத்திற்காக அல்லும்பகலும் மிருகங்களைப் போல கடினமாக உழைப்பதால் என்ன பயன்?

துவாரம் என்பது பாதாள உலகங்களைக் குறிக்கிறது. கீழான புலனின்ப வாழ்விற்குள் சென்றவர்கள் மீண்டும் உயர்வாழ்வுக்கு வருவதில்லை (அவ்வாறு வருதல் மிகவும் கடினம்).

மேலும், துவாரம் என்பது உன்னதமான இனிமையான தூய்மையான வைகுண்ட உலகங்களையும் குறிக்கிறது. பகவானின் நித்திய உலகங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் துன்பம் மிகுந்த இவ்வுலக வாழ்விற்குத் திரும்புவதில்லை. அத்தகைய ஆனந்தமயமான ஆன்மீக வாழ்வை அறியாமல் வாழ்வதால் என்ன பயன்?

நெறியற்ற பெண் என்பது நிலையற்ற புத்தியைக் குறிக்கிறது. அவளது கணவன் என்பது ஜீவன்களை (நம்மை) குறிக்கிறது. நிலையற்ற புத்தியே ஜீவன்களை ஜடவுலகுடன் பிணைத்து வைக்கின்றது.

இருபுறமும் ஓடும் நதி என்பது மாயையின் படைத்தல், அழித்தல் என்பதைக் குறிக்கிறது. இவ்விரு செயல்களும் மாறிமாறி நிகழ்கின்றன. மாயையின் அந்த நதியினைக் கடக்க முயலாமல், பலன்நோக்குச் செயல்களில் ஈடுபடுவதால் என்ன பயன்?

இருபத்தைந்து பொருட்கள் என்பது நமது உடலையும் உலகத்தையும் உருவாக்கியுள்ள இருபத்தைந்து மூலப்பொருட்களைக் குறிக்கிறது. இவை அனைத்திற்கும் பகவானே மூல இருப்பிடமாகவும் தோற்றுவாயாகவும் இருக்கிறார். அவரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளாமல், வீட்டில் வசதியாக வாழ்வதில் என்ன பயன்?

பல்வேறு ஒலிகளை எழுப்பும் அன்னப் பறவை என்பது, பகவானின் ஐஸ்வர்யங்கள், பந்தம் மற்றும் மோக்ஷத்தின் தன்மைகள், ஜடம் மற்றும் சேதனத்தின் தன்மைகள் ஆகியவற்றைப் பற்றி பேசக்கூடிய வேத சாஸ்திரங்கள் அல்லது நபர்களை (பரமஹம்ஸர்களை) குறிக்கிறது.

தானாகச் சுழலும் பொருள் என்பது, நித்திய கால சக்கரத்தைக் குறிக்கிறது. காலத்தின் அதிகார வலிமையைப் பற்றி அறிந்துகொள்ளாமல் நிலையற்ற பௌதிகச் செயல்களில் ஈடுபடுவதால் என்ன பயன்?

தந்தை என்பது, பரம புருஷ பகவானிடம் திரும்பிச் செல்வதற்கான பாதையை விளக்குகின்ற சாஸ்திர உபதேசங்களைக் குறிக்கிறது. சாஸ்திரங்களே உண்மையான தந்தை. பௌதிகச் செயல்களில் ஈடுபடுத்தும் தந்தை உண்மையான தந்தையல்ல.

இவ்வாறாக, நாரதரின் உபதேசங்களை ஆராய்ந்து புரிந்து கொண்ட ஹர்யஸ்வர்கள், நாரதரைத் தங்களது ஆன்மீக குருவாக ஏற்று, உறுதியான நம்பிக்கையுடன் அவரது வழிகாட்டுதலை பின்பற்றி, முழுமையடைந்து, பிறப்பற்ற நித்திய வாழ்வுதரும் இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.

அதன் பின்னர், நாரதர் தமது தெய்வீக வீணையை மீட்டியபடி ஹரி நாமத்தைப் பாடிக் கொண்டு தக்ஷனின் இல்லத்திற்குச் சென்று நடந்த விவரங்களைக் கூறினார். தக்ஷன் தமது விருப்பம் நிறைவேறாமல் போனதை அறிந்து மிகவும் வருந்தினார். அவரை பிரம்மதேவர் சமாதானம் செய்தார்.

சாவலாஸ்வர்கள்

அதன் பிறகு தக்ஷன் மீண்டும் ஆயிரம் மகன்களைப் பெற்றார். அவர்கள் சாவலாஸ்வர்கள் என்று அறியப்பட்டனர். ஜனத்தொகையைப் பெருக்கும்படி தக்ஷன் அவர்களுக்கும் கட்டளை வழங்க, அவர்களும் நாராயண சரஸ் தீர்த்தத்தில் நீராடி கடுந்தவங்களை மேற்கொண்டனர். புனித நீரின் ஸ்பரிசத்தால் அவர்களது பௌதிக ஆசைகள் அகன்றன, அனைவரும் தூய்மையடைந்தனர்.

அவர்களை அணுகிய நாரதர், “நீங்கள் அனைவரும் உங்களது தமையர்களான ஹர்யஸ்வர்களிடம் மிகவும் அன்பு கொண்டவர்கள். அவர்களின் தர்ம வழியிலேயே நடந்து நீங்களும் வாழ்வில் வெற்றியடைவீராக,” என்று கூறி உவமைப் புதிர் சொற்களை உபதேசித்தார்.

நாரதர் சென்ற பின்னர், சாவலாஸ்வர்களும் தமது தமையன்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பக்தித் தொண்டில் ஈடுபட்டு பரம புருஷ பகவானின் இருப்பிடத்தைச் சென்றடைந்தனர்.

தக்ஷனின் சாபம் நாரதருக்கு நன்மையாகவே அமைந்ததால், அவர் எங்கேயும் தங்காமல் தொடர்ந்து பயணம் செய்தபடி பிரச்சாரம் செய்கிறார்.

தக்ஷன் நாரதரை சபித்தல்

ஜனத்தொகையைப் பெருக்கும் தமது முயற்சியில் இருமுறை தோல்வியடைந்த தக்ஷன் நாரத முனிவரிடம் கடுங்கோபம் கொண்டு சபித்தார்: “உங்களால் பிரபஞ்சம் முழுவதும் பயணிக்க முடிந்தாலும்கூட, எந்தவொரு நிரந்தர வசிப்பிடமும் உங்களுக்குக் கிடைக்காது.”

இதைக் கேட்ட நாரதர், “உமது வாக்கு நல்லதாயிற்று. இதை நான் ஏற்கிறேன்,” என்று பொறுமையுடன் கூறினார். பதிலுக்கு சாபம் தரும் வல்லமையைப் பெற்றிருந்தும், பொறுமையும் கருணையும் கொண்ட மிகச்சிறந்த சாதுவான நாரதர் அவ்வாறு செய்யாமல் தம் தரத்தில் நிலைபெற்றிருந்தார்.

தக்ஷனின் சாபம் உண்மையில் நாரதருக்கு நன்மையாகவே அமைந்தது. அவர் எந்தவொரு இடத்திலும் தங்காமல் தொடர்ந்து பயணம் செய்தபடி பிரச்சாரம் செய்வதற்கு அந்த சாபம் வசதியாக மாறியது.

தக்ஷனின் புதல்விகள்

நாரதரை சபித்த பின்னர், பிரம்மதேவனின் கட்டளைப்படி தக்ஷன் அஸிக்னியின் அறுபது புதல்விகளைப் பெற்றார். அப்புதல்விகள் எல்லாரும் தங்கள் தந்தையிடம் அன்புமிக்கவர்களாக இருந்தனர்.

பிரஜாபதி தக்ஷன் தம் பத்து புதல்விகளை தர்மராஜருக்கும், 27 புதல்விகளை சந்திரதேவனுக்கும், பூதர், அங்கிரர், க்ருஸாஸ்வர் ஆகியோருக்கு இரண்டிரண்டு புதல்விகளையும், மீதமிருந்த 17 பேரை கஸ்யப முனிவருக்கும் திருமணம் செய்து கொடுத்தார்.

தர்மராஜரின் வம்சம்

தர்மராஜனின் பத்து மனைவிகளின் பெயர்களும் அவர்களது வம்சத்தில் வந்தவர்களின் பெயர்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

மனைவி பானுவின் மகன் தேவரிஷபன்; அவனது மகன் இந்திரசேனன்.

லம்பாவின் மகன் வித்யோதன், அவன் மேகங்களை உற்பத்தி செய்தான்.

ககுத்தின் மகன் சங்கடன்; அவனது மகன் கீகடன், கீகடனிலிருந்து துர்கர்கள் எனும்

தேவர்கள் வந்தனர்

யாமியின் மகன் சுவர்கன்; அவனது மகன் நந்தி.

விஸ்வாவின் மகன்கள் விஸ்வதேவர்கள்; அவர்களுக்கு சந்ததி இல்லை.

சாத்யாவின் மகன்கள் சாத்யர்கள்; அவர்களின் மகன் அர்த்தசித்தி.

மருத்வதியின் மகன்கள் மருத்வான், ஜயந்தன் (உபேந்திரர்)

முஹுர்தாவின் மகன்கள் மௌஹுர்த்திகள்.

சங்கல்பாவின் மகன் சங்கல்பன், அவரிலிருந்து காமம், இச்சை பிறந்தது.

வஸுவின் மகன்கள் எட்டு வஸுக்கள்.

அஷ்ட வஸுக்களின் வம்சம்

துரோணர் + அபிமதி – ஹர்ஷன், சோகன், பயன்.

பிராணன் + ஊர்ஜஸ்வதி – சஹன், ஆயுஷ், புரோஜவன்.

துருவன் + தரணி – பல்வேறு நகரங்கள்.

அர்கன் + வாசனா – தர்ஷன்

அக்னி + தாரா – திரவிணகன்

அக்னி + கிருத்திகா – கார்த்திகேயன், அவரது மகன் விசாகன்.

தோஷன் + சர்வரி – சிசுமாறன்.

வாஸ்து + ஆங்கிரசி – விஸ்வகர்மா.

விஸ்வகர்மா + ஆக்ருதி – சாக்ஷுஷ மனு à விஸ்வ தேவர்கள், சாத்யர்கள்.

விபாவஸு + ஊஷா – வியூஷ்டன், ரோசிஷன், ஆதபன் à பஞ்சயாமன் (காலம்).

பல்வேறு வம்சங்கள்

பூதர் + சரூபா – ஒரு கோடி ருத்திரர்கள், 11 ருத்திரர்கள் முக்கியமானோர்.

பூதர் + மற்றொரு மனைவி – பேய், பிசாசுகள்.

அங்கிரர் + சுவதா – பிதாக்கள்

அங்கிரர் + சதி – அதர்வாங்கிரஸ் வேதம்

கிருசாஸ்வர் + அர்சிஸ் – தூமகேது

கிருசாஸ்வர் + தீஷனா – வேதசிரா, தேவலர், வயுனர், மனு

கஸ்யபர் + பதங்கி – பறவைகள்

கஸ்யபர் + யாமினி – வெட்டுக்கிளிகள்

கஸ்யபர் + வினதா – கருடன், அருணன்

கஸ்யபர் + கத்ரூ – பலவகைப் பாம்புகள்

கஸ்யபர் + திமி – நீர்வாழ் உயிரினங்கள்

கஸ்யபர் + ஸரமா – புலி, சிங்கம்

கஸ்யபர் + சுரபி – எருமைகள், பசுக்கள், பிளவுபட்ட குளம்புடையவை.

கஸ்யபர் + தாம்ரா – கழுகுகள், பருந்துகள் மற்றம் பல

கஸ்யபர் + முனி – தேவதைகள்

கஸ்யபர் + குரோதவஸர் – பாம்புகள், கொசுக்கள்

கஸ்யபர் + இளா – மரம், செடி கொடிகள்

கஸ்யபர் + சுரசா – இராட்சஸர்கள்

கஸ்யபர் + அரிஷ்டா – கந்தர்வர்கள்

கஸ்யபர் + காஷ்டா – குதிரைகள், பிளவுபடாத குளம்புடையவை

கஸ்யபர் + தனு – 61 மகன்கள்

கஸ்யபர் + அதிதி – ஆதித்யர்கள்

கஸ்யபர் + திதி – தைத்யர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives