பழிக்குப் பழி

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி

மனிதர்களிடையே தங்களுக்கு தீங்கு இழைத்தவர்களை பழி வாங்கும் குணம் இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு தொடர் நிகழ்வுகளாகி பேரழிவை ஏற்படுத்தியதை வரலாற்றில் கேள்விப்பட்டுள்ளோம். யாராவது நம்மை அவதூறாகப் பேசினாலோ தவறாக நடத்தினாலோ அவர்களை எப்படி பழி வாங்கலாம் என்பதிலேயே மனம் குறியாக இருக்கிறது. ஆனால் இதிகாச வரலாற்றில் பக்தர்கள் எதிர்மறையான நிகழ்வுகளை எவ்வாறு சந்தித்தனர், தங்களுக்கு தீங்கு செய்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

பரீக்ஷித் மஹாராஜர் செத்த பாம்பை முனிவரின் கழுத்தில் போடுதல்

பாகவதத்தில் வரும் தூய பக்தர் பரீக்ஷித் மஹாராஜர்

ஒருமுறை பரீக்ஷித் மஹாராஜர் வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்கு கடும் தாகம் எடுத்தது. தண்ணீரைத் தேடி சமீக ரிஷியின் ஆஷ்ரமத்திற்கு வந்தார். ஆனால் சமீக ரிஷியோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார், இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. பல முறை தண்ணீர் கேட்டும் அவர் கண் திறக்கவே இல்லை. பரீக்ஷித் மஹாராஜர் கோபமடைந்தார், அங்கிருந்து போகும் போது கீழே இறந்து கிடந்த ஒரு பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டு விட்டு சென்று விட்டார். அரண்மனை திரும்பிய மஹாராஜர் தன் தவறை எண்ணி வருந்தினார். இப்படி ஓர் அபராதத்தை முனிவருக்கு இழைத்து விட்டோமே என்பதை எண்ணி எண்ணி துயருற்றார்.

இஃது இவ்வாறு இருக்க, சமீக ரிஷியின் மகன் சிருங்கி அரசரால் தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட பிழையைக் கேள்விப்பட்டு சினத்தினால் சபித்தான், “இன்றிலிருந்து ஏழாவது நாளில் ஸர்ப்ப ராஜன் தக்ஷகன் மன்னரைக் கடிக்கப் போகிறான்.” பரீக்ஷித் மன்னர் சபிக்கப்பட்டதை  தன் மகனிடமிருந்தே கேட்ட ரிஷி அவனுடைய செயலைப் பாராட்டவில்லை. மாறாக, “ஐயோ, எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்து விட்டாய். சிறிய பிழைக்கு பெரிய தண்டனையை விதித்து விட்டாயே” என்று கூறி வருந்தினார். மன்னனுக்கு இதைப் பற்றி செய்தி அனுப்பினார். சாபத்தைக் கேள்விபட்ட பரீக்ஷித் மஹாராஜர் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார். திரும்ப சபிப்பதற்கு அவருக்கு எல்லா சக்திகள் இருந்தும், அவர் அவ்வாறு செய்யாமல் அந்நிகழ்வை முமுமுதற் கடவுளின் ஏற்பாடாக ஏற்றுக் கொண்டார். அந்த ஏழு நாள்களில் அவர் ஸ்ரீமத் பாகவதத்தை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து கேட்டு பகவானின் திருநாட்டை அடைந்தார். தன் மீது செத்த பாம்பைப் போட்டதற்கு சமீக ரிஷியும் பழி வாங்கவில்லை, தான் இறந்து போவதற்கு சாபம் பெற்ற மன்னனும் சிறுவனைப் பழி வாங்கவில்லை.

பக்தர்களின் உயர்ந்த குணம் ஸ்ரீமத் பாகவதம் 1.18.48இல் வர்ணிக்கப்பட்டுள்ளது.

திரஸ்க்ருதா விப்ரலப்தா: ஷப்தா: க்ஷிப்தா ஹதா அபி

நாஸ்ய தத் ப்ரதிகுர்வந்தி தத்-பக்தா: ப்ரபவோ ’பி ஹி

“பகவத் பக்தர்கள் மிகவும் பொறுமைசாலிகள் என்பதால், தாம் நிந்திக்கப்பட்டாலும், வஞ்சிக்கப் பட்டாலும், சபிக்கப்பட்டாலும், தொந்தரவு செய்யப்பட்டாலும், அலட்சியப்படுத்தப்பட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும், அதை திருப்பிச் செய்வதில்லை.”

இதன் பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் எழுதுகிறார்: “தூய பக்தர் பெளதிக நன்மை தீமைகளில் பாராமுகமாக இருந்து விடுவார். இதனால் நிந்தனை, சாபம், அலட்சியம் போன்றவற்றை எதிர்த்து பக்தர்கள் செயல்படுவதில்லை. இவை தங்களைச் சார்ந்த செயல்களாக இருக்கும்பொழுது, பக்தர்கள் பாராமுகமாக இருந்து விடுகின்றனர். இருப்பினும், இச்செயல்கள் பகவானுக்கு எதிராகவோ அவரது பக்தர்களுக்கு எதிராகவோ செய்யப்படும்பொழுது, அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.”

பழி வாங்கும் எண்ணத்தை மாற்றும் பக்தி யோகம்

ஒருமுறை அசுரர்களின் தாயாகிய திதி தனது மகன்களாகிய ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரும் கொல்லப்பட்டதால், இந்திரனைக் கொன்று பழி தீர்க்க வேண்டும் என்று திட்டமிட்டாள். அதற்காக அவள் தன் கணவராகிய கஷ்யப முனிவரை அணுகினாள். அவரிடம் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று பணிவோடு வேண்டினாள். அவளின் உள்நோக்கத்தை அறிந்த கஷ்யபர், அவளை பகவான் விஷ்ணுவை நோக்கி பும்சவன விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறினார். அதன்படி அவளும் விரதத்தை அனுஷ்டித்தாள், கர்ப்பமும் ஆனாள்.

இதை அறிந்த இந்திரன், வயிற்றில் வளரும் குழந்தையைக் கொல்ல நினைத்தார். சிற்றன்னையாகிய திதிக்குத் தொண்டு புரிகிறேன் என்று நாடகமாடினார். அவளது விரதத்தில் ஏதேனும் குற்றம் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தி அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கொன்று விடலாம் என திட்டமிட்டார். அதன்படி, ஒருமுறை திதி சாப்பிட்ட பிறகு துரதிர்ஷ்டவசமாக வாய், கை, கால்களைக் கழுவாமல் சந்தியா வேளையில் உறங்கி விட்டாள்.

இந்திரன் தமது அணிமா சித்தியினால் திதியின் கர்ப்பத்தினுள் புகுந்தார், தமது வஜ்ராயுதத்தால் பொன்நிறமான கருவை ஏழு துண்டுகளாக வெட்டினார். ஆனால் அக்குழந்தை மடியவில்லை, மாறாக, ஏழு குழந்தைகள் அழத் தொடங்கினர். அவை ஒவ்வொன்றையும் மீண்டும் 7 துண்டுகளாக வெட்டினார். ஆயினும், அவை 49 குழந்தைகளாக மாறி, இந்திரனை வேண்டின: “இந்திரனே நாங்கள் உமது சகோதரர்களான மருத்துகள். எங்களை ஏன் கொல்ல முயல்கிறீர்?” அக்குழந்தைகள் தேவர்கள் என்பதை அறிந்தவுடன் இந்திரன் தனது கொலை முயற்சியைக் கைவிட்டார்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், திதி செய்த பக்தித் தொண்டின் விளைவால், பகவான் அவளுடைய குழந்தைகளைப் பாதுகாத்தார். மேலும், அவர்கள் தேவர்களாயினர். பழி வாங்கும் எண்ணத்தை இருவருமே கைவிட்டனர். இதுவே பக்தித் தொண்டு செய்வதன் சிறப்பாகும்.

திதியின் சிசுவை இந்திரன் ஏழு துண்டுகளாக வெட்டியபோது, ஏழு குழந்தைகள் உருவாயினர்.

துருவ மன்னரின் சரித்திரம்

துருவ மன்னர் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை அவர் தமது தந்தை உத்தானபாதரின் மடியில் அமர முயன்றார். அப்போது அவருடைய சிற்றன்னையாகிய சுருசி அவரைத் தடுத்து, மன்னரின் மடியில் அமர துருவன் அவளது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று கூறினாள். மேலும், அதற்காக நாராயணரை வழிபடு என்று கடுமையாகக் கூறினாள். கோபத்தில் மனம் உடைந்த துருவன், தன்னுடைய தாய் சுனிதியிடம் முறையிட்டார். அவளும் தனது துர்பாக்கிய நிலையைக் கூறி பகவான் நாராயணரையே வழிபடச் சொன்னாள்.

அதன்படி, துருவனும் காட்டிற்குச் சென்று, அங்கு நாரதரின் வழிகாட்டுதலைப் பெற்று, அதன்படி கடுந்தவம் புரிந்து ஆறே மாதத்தில் பகவானை நேரில் தரிசித்தார். துருவனுக்கு பகவானின் அளவில்லா ஆசியும் மிகப்பெரிய ராஜ்ஜியமும் கிட்டியது. துருவன் தீவிரமான பக்தித் தொண்டின் காரணத்தினால், பழி வாங்கும் எண்ணத்தை முற்றிலுமாக மறந்தார். நமக்கு அவமரியாதை செய்தவரை நாம் பழிவாங்குவதற்கு பதிலாக, நாம் பகவானிடம் தீவிர பக்தித் தொண்டு செய்தால், அப்போது பகவான் நமக்கு மிகவுயர்ந்த நிலையை நல்குவார் என்பதை இதிலிருந்து உணரலாம்.

அதே சமயத்தில், துருவனை அவமதித்த சிற்றன்னை சுருசியும் அவளது மகனாகிய உத்தமனும் அவர்களுடைய கொடிய செயலுக்காக பகவானாலேயே தண்டிக்கப்பட்டனர்.

தந்தை உத்தானபாதரின் மடியில் அமர முயன்ற துருவனை சிற்றன்னையாகிய சுருசி தடுத்து, அவமரியாதை செய்தல்.

பழி வாங்க வேண்டாம்

நாம் யாரையும் பழி வாங்கத் தேவையேயில்லை; ஏனெனில், அவர்களின் செயலே அவர்களைப் பழி வாங்கி விடும். இதை அம்பரீஷ மஹாராஜரின் வாழ்க்கையிலிருந்து அறிகிறோம். ஒருமுறை அம்பரீஷ மஹாராஜர் ஏகாதசி விரதத்தை முடித்து உணவருந்தச் சென்றபோது, துர்வாசர் அவரது அரண்மனைக்கு வந்தார். அரசர் முனிவரை உணவருந்த அழைத்தபோது, துர்வாசர் நீராடி விட்டு வருகிறேன் என்று சென்றார். சென்றவர் வருவதற்கு மிகவும் தாமதமாகியது. குறித்த நேரத்தில் விரதத்தை முடிக்க வேண்டும் என்பதால், மன்னர் அரசவை பிராமணர்களை ஆலோசித்து, மூன்று சொட்டு நீர் மட்டும் அருந்தி விரதத்தை முடித்தார்.

ஆயினும், துர்வாசர் மிகவும் கோபமுற்று அம்பரீஷரைக் கொல்ல ஓர் அரக்கனை ஏவினார். அவரோ அரக்கனை எதிர்க்காமல் பகவானை பிரார்த்தனை செய்து கொண்டு நின்றார். அப்போது உடனடியாக பக்தர்களைக் காக்கும் ஸுதர்சன சக்கரம் அங்கு தோன்றி அரக்கனைக் கொன்றது, துர்வாசரையும் துரத்தத் தொடங்கியது. துர்வாசர் பிரம்ம லோகம், கைலாயம் என பிரபஞ்சம் முழுவதும் பயணித்தார், எங்குச் சென்றாலும் அவருக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. இறுதியில் அவர் வைகுண்டத்திற்குச் சென்று நாராயணரிடமே சரணடைந்தார். ஆயினும், பகவானோ தம்மால் ஏதும் செய்ய முடியாது என்று கூறி, அம்பரீஷரிடமே சரணடையும்படி கட்டளையிட்டார்.

அதன்படி, துர்வாசரும் அம்பரீஷரிடம் திரும்பி வந்தார். அம்பரீஷர் கருணையோடு மன்னித்தார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்ப அம்பரீஷ மன்னர் நடந்து கொண்டார்.

முடிவுரை

பக்தர்கள் தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை பழி வாங்குவதில் ஈடுபடாமல் பகவானின் சேவையில் ஈடுபட்டு உயர்கின்றனர். காலமாகச் செயல்படும் பகவான் தீயவர்களையும் அபராதிகளையும் தக்க சமயத்தில் தண்டித்து திருத்துவார். எனவே, நாமும் நம்மை அவமானப்படுத்துவோர், ஏமாற்றுவோர், தீங்கிழைப்போர் முதலியோரை பழி வாங்குவதில் நேரத்தை வீணடிப்பதைக் கைவிட்டு, பகவானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டால், நமக்கு எல்லாம் நன்மையில் முடியும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives