வழங்கியவர்: ஸ்ரீ கேசவ தாஸ்
உண்ணாவிரதம்–கடந்த சில மாதங்களாக மக்களின் காதுகளில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு வார்த்தை. நாட்டில் வழக்கம் போல எத்தனையோ பிரச்சனைகள்; பிரச்சனைகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குபவர்களில் சிலர் உண்ணாவிரதம் என்பதை கையிலெடுத்துக் கொள்கின்றனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தல், சமுதாய நன்மையைப் பாதுகாத்தல், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைத்தல் போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசியல்வாதிகள், ஆட்சி யாளர்கள், ஆன்மீகவாதிகள் (?), தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அடிக்கடி நிகழும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தடுப்பதற்காக எவரேனும் உண்ணாவிரதம் இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. உண்ணாவிரதம் என்னும் உயர்ந்த கொள்கை இத்தகையோரால் கேலிக் கூத்தாக மாறி வருவது வருந்தத்தக்க உண்மை. உண்ணாவிரதம் என்பது எதற்காக இருக்க வேண்டும், உண்ணா விரதத்தின் வகைகள் யாவை, செயற்கையான உண்ணாவிரதம் யாது என்பன போன்ற தகவல்களைச் சற்று ஆராய்வோம்.
உண்ணாவிரதம்–ஓர் அடிப்படை விளக்கம்
மனிதனாகப் பிறவியெடுத்தோர் ஒவ்வொருவரும், “நான் இந்த உடலல்ல, ஆத்மா” என்பதை உணர்ந்து, “உடல் சார்ந்தவை அனைத்தும் தனக்குரியவை” என்னும் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். மனிதர்களை அத்தகு நிலைக்கு உயர்த்தும் பொருட்டு, கர்ம யோகம், ஞான யோகம், தியான யோகம், பக்தி யோகம் என்னும் நான்கு யோக முறைகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு யோக முறைகளிலும், தர்மத்தின் நான்கு தூண்களில் ஒன்றான தவம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்காக, புலனின்பச் செயல்களை விருப்பத்துடன் குறைத்துக் கொள்வதே “தவம்” எனப்படுகிறது. காட்டில் வசித்தல், கிடைக்கும் உணவை உட்கொள்ளுதல், ஒற்றைக் காலில் நிற்றல், உறக்கத்தைக் குறைத்தல், உணவைக் குறைத்தல், குளிர், வெப்பம், மழை, போன்றவற்றை சகித்துக் கொள்ளுதல் போன்றவை ஆன்மீக நன்மைக்காகச் செய்யப்படும்போது, அவை தவம் எனப்படுகின்றன.
பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக தங்களுடைய உறக்கத்தைக் குறைத்து பாடம் படிக்கும் மாணவர்கள் ஏராளம். அம்மாணவர்கள் தங்களது ஒரு புலனின்பத்தை மற்றொரு புலனின்பத்திற்காகக் கைவிடுகின்றனர். அத்தகு செயல் தவமாகாது. மாறாக, யாரேனும் ஒருவர் இறைவனின் திருப்திக்காக தமது உறக்கத்தைக் குறைத்து, நேரத்தை ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுத்தினால், அது தவம் எனப்படுகிறது. கிருஷ்ண உணர்வு என்னும் விஞ்ஞானத்தில் முன்னேறும் பொருட்டு, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள தவங்களை (அவை உடலுக்குத் துன்பத்தைக் கொடுத்தாலும்) ஏற்றுக்கொள்ள வேண்டும். வேத நெறிகளுக்கு எதிராகவோ தேவையற்ற முறையிலோ தவங்களையும் விரதங்களையும் மேற்கொள்ளுதல் கூடாது.
வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள தவங்களில், உபவாசம் எனப்படும் உண்ணாவிரதமும் ஒன்றாகும். யோகத்தைப் பயிற்சி செய்யும் அனைத்து பிரிவினரும் தமது உணவைக் குறைத்துக்கொள்ளுதல் தொன்றுதொட்டு வரும் வழக்கம். ஆனால் உணவைக் குறைத்தல் என்பது அவர்களின் அன்றாடச் செயல்களை எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது. அவ்வாறு பாதித்தால், அத்தகைய உண்ணாவிரதத்தினால் பூரண பலனை அடைய முடியாது. பொதுவாக, ஆன்மீகப் பாதையை ஏற்பவர்கள் தங்களது உணவைக் குறைப்பதற்கு படிப்படியாக பயிற்சியளிக்கப்படுவர். அதிகமாக உண்பவனும் சரி, குறைவாக உண்பவனும் சரி, யோகியாக முடியாது என்று பகவத் கீதையில் (6.16) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளார்.
பல்வேறு பிரச்சனைகளைக் கொண்ட கலி யுகத்தில் கர்ம யோகம், ஞான யோகம், தியான யோகம் ஆகிய வழிமுறைகள் பொருந்தாதவை. ஒரே தீர்வான ஹரி நாம சங்கீர்த்தனத்தை அடிப்படையாகக் கொண்ட பக்தி யோக வழிமுறையின்படி, உபவாசம் என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவை (பிரசாதத்தை) மட்டுமே உண்பது என்ற நிலையில் உறுதியாக இருப்பதன் மூலமும், சில குறிப்பிட்ட தினங்களில் உண்ணாவிரதம் அனுசரிப்பதன் மூலமாகவும் அடையப்படுகிறது. அவ்வாறு உண்ணாவிரதம் அனுசரிப்பவன் யோகப் பயிற்சியில் பக்குவமடைந்து கிருஷ்ண உணர்வில் நிலைபெறுகிறான்.
உணவின்றி பட்டினி கிடப்பவனுக்கு புலன்களைத் திருப்திசெய்யும் ஆசை மேன்மேலும் அதிகரிக்கக்கூடும். “வயிறு நிறையும்போது இதயம் நிறைகிறது” என்று தென் அமெரிக்காவில் ஒரு பழமொழி உண்டு. போதுமான அளவு உண்பவன் மகிழ்ச்சியாக இருப்பான், ஆனால் அளவிற்கு அதிகமாக உண்பவனும் அளவிற்குக் குறைவாக உண்பவனும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உணவு கிடைக்காதவன் எப்போதும் உணவையே நினைத்து, நாவிற்கு அடிமையாகவே இருப்பான். எனவே, கிருஷ்ண பிரசாதத்தை மட்டும் உண்ணுதல் என்னும் நடைமுறைக்கு ஏற்ற தவத்தின் மூலம், ஒருவனின் இதயம் படிப்படியாகத் தூய்மையடைந்து, அவன் பக்குவநிலையை அடைய முடியும்.
உண்ணாவிரதம் இருப்பதற்கான காலம்
கர்ம யோகத்தைப் பயிற்சி செய்வோர் பின்பற்ற வேண்டிய நியமங்கள் பற்பல. உதாரணமாக, தினமும் உணவு உண்பதற்கு முன்பு வெளியில் சென்று, “யாரேனும் பசியுடன் உள்ளீரா” என்று மூன்று முறை கூவி அழைக்க வேண்டும். அவ்வாறு பசியுடன் வருபவர்களுக்கு உணவளித்துவிட்டு மீதி இருந்தால் மட்டுமே ஓர் இல்லறத்தான் உண்ண வேண்டும். இல்லாவிடில் அன்றைய தினம் பட்டினி கிடக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. மேலும், அமாவாசை, பௌர்ணமி என்று பல்வேறு நாள்களிலும் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நெறிமுறைகள் இன்றைய காலத்திற்கு ஒத்துவராதவை.
பக்தி யோகத்தின்படி, வளர்பிறை மற்றும் தேய்பிறையின் பதினொன்றாம் நாளில், அதாவது ஏகாதசி திதி அன்று விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம சதுர்தசி போன்ற பகவானின் அவதார தினங்களிலும் ஆச்சாரியர்களின் தோற்றம் மற்றும் மறைவு தினங்களிலும் உண்ணாவிரதம் இருப்பது பரிந்துரை செய்யப்படுகிறது. ஏகாதசி விரதத்தின் முக்கிய குறிக்கோள், உண்ணாமல் இருப்பது அல்ல; மாறாக, உடல் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீதான அன்பை வளர்க்கும் பொருட்டு, திருநாமங்களை ஜெபித்தல், அவரது தெய்வீக லீலைகளைக் கேட்டல் போன்றவற்றிற்கு நேரத்தை செலவிடுவதே என்று பிரம்ம வைவர்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மாதத்திற்கு இருமுறை வரும் ஏகாதசியன்று விரதம் இருத்தல் அனைத்து பக்தர்களுக்கும் அவசியமானதாகும். சில பக்தர்கள் நீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பர்; சிலர் நீர் மட்டும் அருந்துவர்; சிலர் பால், பழங்களை ஏற்றுக்கொள்வர்; மற்ற பக்தர்கள் குறைந்தபட்சம் தானியங்கள், பயிறு வகைகள், பீன்ஸ் போன்ற காய்கள், கடுகு போன்றவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்வர்.
உண்ணாவிரதத்தில் மூன்று வகை
பகவத் கீதையின் பதினேழாவது அத்தியாயத்தில் முக்குணங்களின் அடிப்படையிலான மூன்று விதமான விரதங்கள் விளக்கப்பட்டுள்ளன. எந்தவொரு இலாபத்தையும் எதிர்பார்க்காமல், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் திருப்திசெய்வதற்காக உன்னத நம்பிக்கையுடன் செய்யப்படும் விரதங்கள், ஸத்வ குணத்தின் விரதங்கள் எனப்படுகின்றன. மானம், மரியாதை, மற்றும் வழிபாட்டை எதிர்பார்த்து தற்பெருமையுடன் செய்யப் படும் விரதங்கள் ரஜோ குணத்தின் விரதங்கள் எனப்படுகின்றன. பிறரை அழிப்பதற்காக, துன்புறுத்துவதற்காக, அல்லது தன்னையே வருத்திக் கொண்டு முட்டாள்தனமான முறையில் செய்யப்படும் விரதங்கள், தமோ குணத்தின் விரதங்கள் என்று அறியப்படு கின்றன. உண்மையான நன்மையைப் பெற விரும்புவோர் ஸத்வ குணத்தின் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்; ஏனெனில், ஸத்வ குணம் மட்டுமே உயர்வு பெற உதவும்.
“காமம் மற்றும் பற்றுதலினால் உந்தப்பட்டு, சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத கடுமையான விரதங்களை தற்பெருமையுடனும் கர்வத்துடனும் செய்பவர்கள் உடலைத் துன்புறுத்துவது மட்டுமின்றி, உள்ளே உறைந்துள்ள பரமாத்மாவையும் துன்புறுத்துகிறார்கள். அத்தகு முட்டாள்கள் அசுரர்களாக அறியப்பட வேண்டும்.” (பகவத் கீதை 17.5-6)
இந்த ஸ்லோகத்திற்கான ஸ்ரீல பிரபுபாதரின் பொருளுரையிலிருந்து சில வரிகள்: “சாஸ்திரங்களில், உண்ணாவிரதம் என்பது ஆன்மீக முன்னேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது, சில அரசியல் நோக்கத்திற்காகவோ சமூக இலக்கிற்காகவோ அல்ல. அத்தகு விரதங்களை ஏற்பவர்கள் பகவத் கீதையின்படி நிச்சயமாக அசுரத் தன்மையுடையவர்கள். மேலும், இவற்றால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் உண்டாகாது. உண்மையில், தற்பெருமை, கர்வம், காமம், பௌதிக இன்பத்திற்கான பற்றுதல் ஆகியவற்றால் இவர்கள் செயல்படுகின்றனர்… அரசியலைக் குறிக்கோளாகக் கொண்ட அத்தகு விரதங்களும் தவங்களும் மற்றவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுப்பது நிச்சயம்… தனது எதிரியையோ இதர கட்சியினரையோ இத்தகு முறையினால் தனது விருப்பத்திற்கு உடன்படும்படி வலியுறுத்தலாம் என்று அசுரத்தனமான மனிதன் நினைக்கலாம், ஆனால் சில சமயங்களில் இத்தகு விரதத்தினால் ஒருவன் மரணமடையவும் கூடும். இத்தகு செயல்களை பரம புருஷ பகவான் அனுமதிப்பதில்லை. மேலும், இவ்வாறு ஈடுபடுபவர்களை அசுரர்கள் என்று அவர் கூறுகின்றார்.”
பிராயசித்த உண்ணாவிரதம்
ஒருவன் தான் செய்த தவறுக்கு பிராயசித்தமாக உண்ணாவிரதம் இருப்பதும் வேத காலத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வழிமுறையாகும். இதர ஜீவன்கள், வைஷ்ணவர்கள் அல்லது முழுமுதற் கடவுளுக்கு எதிராக ஒருவன் ஏதேனும் குற்றம் செய்துவிட்டால், அதற்கு பிராயசித்தமாக அதாவது பரிகாரமாக உண்ணாவிரதம் இருத்தல் உகந்ததாகும். உதாரணமாக, காம எண்ணத்துடன் ஒரு பெண்ணைப் பார்த்த காரணத்திற்காக சோட்டா ஹரிதாஸர் என்னும் தனது சீடனை சைதன்ய மஹாபிரபு தனது சங்கத்திலிருந்து ஒதுக்கி வைத்தபோது, தான் செய்த குற்றத்திற்கு பிராயசித்தமாக சோட்டா ஹரிதாஸர் உண்ணாவிரதம் ஏற்றதை நாம் சைதன்ய சரிதாம்ருதத்தில் (அந்திய லீலை 11.19) காணலாம்.
சாகும் வரை உண்ணாவிரதம்
மரணத்தை நெருங்கிய பக்தர்கள், இவ்வுலகில் தங்களுக்கு எஞ்சியுள்ள நாள்களை பூரண கிருஷ்ண உணர்வில் கழிக்கும் பொருட்டு, எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளாமல், மரண நேரம் வரை உண்ணாவிரதம் இருத்தல், ப்ராய உபவேஷம் எனப்படும்.
ஏழு நாள்களில் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்த பரீக்ஷித் மஹாராஜர், உடனடியாக ப்ராய உபவேஷத்தை ஏற்று எஞ்சிய நாள்களை முழுமையான கிருஷ்ண பக்தியில் ஈடுபடுத்துவதற்காக கங்கைக் கரையை அடைந்தார். அங்கு அவர் ஏழு நாள்களுக்குத் தொடர்ந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உயர்ந்த இலக்கியமான ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்டு, அதன் பின்னர் தனது உடலை நீத்தார். (இப்பத்திரிகையின் அட்டைப்படத்திலும் இக்கட்டுரையின் தொடக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ள படம், மன்னர் பரீக்ஷித் உபவாசம் இருந்தபடி பாகவதம் கேட்டதை சித்தரிக்கும் படம்) இஸ்கான் இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரும் தனது வாழ்வின் இறுதி நாள்களில் ப்ராய உபவேஷம் மேற்கொண்டு உடலை நீத்தார்.
உண்ணாவிரதத்தின் தன்மைகள்
உண்ணாவிரதம் கிருஷ்ணரை மறந்து உடலை நினைப்பதற்காக அல்ல. அத்தகைய உண்ணாவிரதத்தை அனுசரிக்காமல் இருப்பதே நன்று. சுகதேவ கோஸ்வாமியின் கடல் போன்ற திருவாயிலிருந்து பெருகிய அமிர்தம் போன்ற பகவத் செய்தியைப் பருகிக் கொண்டிருந்த காரணத்தினால், உண்ணாவிரதத்தின் எந்தவொரு சோர்வையும் தான் உணரவில்லை என்று பரீக்ஷித் மன்னர் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியுள்ளார். இதுவே உண்ணாவிரதத்தின் தன்மை. உண்ணாவிரதம் இருப்போர் உடல் தேவையினால் அலைக்கழிக்கப்பட்டால், அத்தகைய உண்ணாவிரதம் அவசியமற்றதாகும்.
மிகப்பெரிய ஜமீன்தாரின் குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், ரகுநாத தாஸ கோஸ்வாமி இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை கையளவு மோர் மட்டுமே பருகி வந்தார். இருப்பினும் அவர் தனது அன்றாட பக்தி செயல்களில் துளியும் பிறழவில்லை. ராதா குண்டத்தில் மூன்று முறை குளித்தல், ஆயிரம் முறை கிருஷ்ணரை விழுந்து நமஸ்கரித்தல், இரண்டாயிரம் முறை வைஷ்ணவர்களை விழுந்து நமஸ்கரித்தல், கோவர்தன மலையைச் சுற்றி வருதல் (சுமார் 23 கிலோமீட்டர்), 64 மாலைகள் ஹரி நாம ஜபம் செய்தல்–இவையாவும் அவரது தினசரி ஆன்மீகப் பயிற்சிகள். கையளவு மோர் மட்டும் பருகியதால், அவர் களைப்படைந்து உறங்கவில்லை.
கடுமையான விரதங்களை அனுசரிக்க விரும்புவோர், ரகுநாத தாஸ கோஸ்வாமியைப் போன்று தொடர்ந்து தங்களது சேவையைச் செய்ய முடிந்தால் நிச்சயம் அனுசரிக்கலாம் என்றும், அவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரை நகல் செய்ய முயற்சிக்கக் கூடாது என்றும் ஸ்ரீல பிரபுபாதர் நம்மை எச்சரித்துள்ளார்.
கடுமையான உண்ணாவிரதம்
பக்தி யோகத்தைப் பயிற்சி செய்பவர்கள், பொதுவாக கடுமையான உண்ணாவிரதங்களைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்றபோதிலும், அரிய நேரங்களில் அவர்கள் கடும் உண்ணாவிரதத்தை மேற்கொள்வதும் உண்டு. அவர்களின் உண்ணாவிரதம் நிச்சயம் பகவானைத் திருப்திசெய்வதற்காகவே அமையும். துருவ மன்னர் ஐந்து வயது நிரம்பிய சிறுவனாக இருந்தபோது, நாரத முனிவரின் உபதேசத்தின்படி மதுவனம் என்னும் காட்டை அடைந்து கடுந்தவத்தை மேற்கொண்டார். முதல் மாதத்தில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை பழங்களை உண்டும், இரண்டாம் மாதத்தில் ஆறு நாள்களுக்கு ஒருமுறை காய்ந்த சருகுகளை உண்டும், மூன்றாம் மாதத்தில் ஒன்பது நாள்களுக்கு ஒருமுறை நீரைப் பருகியும், நான்காம் மாதத்தில் பன்னிரண்டு நாள்களுக்கு ஒருமுறை காற்றை சுவாசித்தும் அவர் விரதம் மேற்கொண்டார்.
பக்தர்களின் வாழ்வில் உண்ணாவிரதம் என்பது முக்கிய மானதல்ல–கிருஷ்ணரின் மீதான நினைவு (ஸ்மரணம்) மட்டுமே முக்கியமானதாகும். கிருஷ்ண பக்தர்கள் யாரையும் அவர்களது உண்ணாவிரதத்தை வைத்து நாம் பக்தர்களாகக் கருதுவதில்லை, அவர்களது பக்தியை வைத்து பக்தர்களாகக் கருதப்படுகின்றனர்.
கடும் உண்ணாவிரதம் மேற்கொண்ட அசுரர்கள்
பல்வேறு அசுரர்களும் தங்களது உடலை வருத்தி, கடுந் தவங்களையும் உண்ணாவிரதங்களையும் மேற்கொண்டதை நாம் வரலாற்றில் காண்கிறோம். உண்மையில் பார்த்தால், கடுந்தவம் புரிந்தவர்களில் பக்தர்களைக் காட்டிலும் அசுரர்களே அதிகம். ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த ஹிரண்யகசிபு தனது உண்ணாவிரதத்தினால் தேவர்களையும் நடுங்கச் செய்தான். பல்வேறு அசுரர்கள் தங்களது உண்ணாவிரதத்தினால் வேண்டிய பலனைப் பெற்றதையும் அதன் பின்னர் தேவர்களால் அழிக்கப்பட்டதையும் நாம் புராணங்களில் காண்கிறோம்.
அசுரர்களுடைய உண்ணாவிரதம் ஆன்மீக நோக்கத்திற்கானது அல்ல; தங்களது எதிரியை அழிக்க வேண்டும், அல்லது எதிரியை அழிப்பதற்கான சக்தியைப் பெற வேண்டும்–இதுவே குறிக்கோள். அன்றைய அசுரர்களைப் போன்று ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடுமையான விரதத்தினை இன்றைய உலகில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் மேற்கொள்வதில்லை, சில நாள்கள் சொகுசான உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் இருவருடைய குறிக்கோளும் ஒன்றுதான்ஶீஎதிரிகளை அழிக்க வேண்டும் என்பதே. மேலோட்டமாகப் பார்த்தால், இவர்கள் வயிற்றைக் கட்டுப்படுத்துவதுபோலத் தோன்றினாலும், இவற்றின் அடிப்படை புலனுகர்ச்சியே.
பயனற்ற உண்ணாவிரதங்கள்
ஆன்மீக காரணங்கள் ஏதுமின்றி, இதர காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதற்காக அனுசரிக்கப்படும் உண்ணா விரதங்கள் செயற்கையானவை. அவை சாஸ்திரங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஒரு நற்செயலை அங்கீகரிக்கப்படாத முறையில் செய்வோர், அச்செயலின் மதிப்பைக் குறைத்து, அதனைக் கேலிக்கூத்தாக மாற்றி விடுகின்றனர்.
ஆன்மீக நன்மைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் அதற்கான பலனை நிச்சயம் அடைவர். பௌதிக நன்மைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் பெரும் பாலான நேரங்களில் விரும்பிய பலனை அடைவதற்கு முன்பே தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம். அவர்களது உண்ணாவிரதங்கள் புகழைக் கொடுக்கலாம், பிரச்சனைக்கான தீர்வைக் கொடுப்பதில்லை.
பல்வேறு சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்தி “சாகும் வரை உண்ணாவிரதம்” இருந்தோர் பலர். அவற்றில் பல உண்ணாவிரதங்கள் யாரேனும் ஒருவரின் வாக்குறுதியை ஏற்று கைவிடப்படுவதும், அந்த வாக்குறுதிகள் நிறைவேறாமல் போவதும் நம் வாழ்வில் அவ்வப்போது காணக்கூடிய ஒன்றாகும். உண்ணாவிரதம் இருந்து சிலர் மடிந்துள்ளனர் என்பதும் உண்மை, அத்தகைய மரணம் தற்கொலைக்கு சமமானது, சட்டத்திற்கு விரோதமானது–ஆனால் பிரச்சனை தீர்ந்ததா? நிச்சயம் இல்லை.
எனவே, உண்ணாவிரதம் என்னும் புனிதமான பயிற்சியினை ஆன்மீகம் என்னும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டும் விட்டுவிட்டு, மற்றவர்கள் வேறு உபாயத்தைத் தேடினால் சிறப்பாக அமையும்.