ராதையின் திருநாமம் ஸ்ரீமத் பாகவதத்தில் இல்லையா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கிருஷ்ணர் என்றாலே அனைவரின் மனதிலும் உடனடியாக ராதையின் நினைவும் வருகிறது. ராதையும் கிருஷ்ணரும் பிரிக்க முடியாதவர்கள். கிருஷ்ண பக்தர்களில் அவரின் காதலியர்களாக விருந்தாவனத்தில் வசித்த கோபியர்களே தலைசிறந்தவர்கள் என்பதையும் அந்த கோபியர்களின் மத்தியில் ஸ்ரீமதி ராதாராணியே உயர்ந்தவள் என்பதையும் பலரும் அறிவர். அதே சமயத்தில், கிருஷ்ண லீலைகளை விரிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் இல்லாதது ஏன் என்பது சில பக்தர்களின் மனதில் வருத்தத்தையும், வேறு சிலரின் மனதில், “ஸ்ரீமதி ராதாராணியே தலைசிறந்த பக்தை என்பது சரியா?” என்ற ஐயத்தையும் ஏற்படுத்தலாம். அதற்கு விளக்கமளிக்க முயல்வோம்.

பெயர் இல்லவே இல்லையா?

ராதையின் திருப்பெயர் ஸ்ரீமத் பாகவதத்தில் எங்குமே இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ராதையின் திருப்பெயர் பாகவதத்தில் நேரடியாக இல்லை, மறைமுகமாக உள்ளது என்பதே உண்மை. “கிருஷ்ணர்” என்ற சொல்லிற்கு “அனைவரையும் வசீகரிப்பவர்” என்று பொருள். கிருஷ்ணர் எல்லாரையும் வசீகரிப்பவராகத் திகழ்வதால், அவர் அந்த திருநாமத்தினால் அழைக்கப்படுகிறார். அதுபோலவே, “ராதா” என்னும் பெயர், ஆராதன (வழிபாடு) என்னும் சொல்லிலிருந்து வருவதாகும். அவளது ஆராதனம் மற்ற அனைவரின் ஆராதனத்தையும் மிஞ்சக்கூடியதாக இருப்பதால், “ராதா” என்பது அவளது திருப்பெயராக உள்ளது, புராணங்களும் அவளை அவ்வாறு அழைக்கின்றன.

கிருஷ்ணர் ராஸ நடனத்தின் நடுவில், அங்கிருந்த கோடிக்கணக்கான கோபியர்கள் அனைவரையும் துறந்து, ஒரே ஒரு விசேஷ கோபியுடன் சென்றதை ஸ்ரீமத் பாகவதம் (பத்தாவது ஸ்கந்தம், 30ஆவது அத்தியாயம்) தெளிவாகக் குறிப்பிடுகிறது. அந்த ஒரு கோபியை திருப்தி செய்வதற்காக, கிருஷ்ணர் எல்லா கோபியர்களையும் துறப்பதற்கு தயாராக இருந்தார் என்பது தெளிவு. அந்த விசேஷ கோபியின் பெயர் வழங்கப்படாதபோதிலும், அது ராதையைக் குறிப்பதாக ஆச்சாரியர்கள் உரைக்கின்றனர்.

எப்படி கூறுகின்றனர்?

அந்த அத்தியாயத்தின் 28ஆவது ஸ்லோகம் பின்வருமாறு ராதையை மறைமுகமாகக் கூறுகிறது:

அனயாராதிதோ நூனம்
பகவான் ஹரிர் ஈஷ்வர:
யன் நோ விஹாய கோவிந்த:
ப்ரீதோ யாம் அனயத் ரஹ:

[கோபியர்கள் கூறினர்:] “அந்த கோபி எல்லா சக்திகளும் பொருந்திய பகவான் கிருஷ்ணரை மிகவும் பக்குவமாக ஆராதித்திருக்க வேண்டும். அதனால்தான், அவர் எங்கள் அனைவரையும் கைவிட்டு அவளை மட்டும் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.”
இந்த ஸ்லோகத்திலுள்ள ஆராதித: என்னும் சொல், ராதையின் திருநாமத்தை எடுத்துரைக்கின்றது.
ஏன் நேரடியாகக் கூறவில்லை என சிலர் வினவலாம். ராதையின் திருப்பெயர் மறைமுகமாகக் கூறப்பட்டிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில: ( 1 ) ராதையின் மீதான அன்பு, மரியாதை; (2) மறைபொருளாக வழங்கும் தன்மை; (3) ரஸிக பக்தர்களுக்கானது. இவற்றை விரிவாகக் காணலாம்.

சுகதேவ கோஸ்வாமி ராதையின் திருப்பெயரை நேரடியாகக் கூறாமைக்கு ராதையின் மீதான அவரது அன்பும் மரியாதையுமே முக்கிய காரணம்.

ராதையின் மீதான அன்பு, மரியாதை

ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி ராதையின் திருப்பெயரை ஸ்ரீமத் பாகவதத்தில் நேரடியாகக் கூறாமைக்கு ராதையின் மீதான அவரது அன்பும் மரியாதையுமே முக்கிய காரணம் என்று ஆச்சாரியர்கள் எடுத்துரைக்கின்றனர். சுகதேவரின் உண்மையான ஸ்வரூபம் ராதையின் சங்கத்திலுள்ள ஒரு கிளியாகும். அதன்படி, தனது எஜமானியின் பெயரை உச்சரிப்பது நெறிமுறைக்கு முரணானதாக இருக்கும் என்பதால், சுகதேவர் ராதையின் பெயரை நேரடியாகக் கூறவில்லை. உண்மையில், அவர் எந்தவொரு கோபியின் பெயரையும் குறிப்பிடவில்லை.

இன்றும்கூட தமிழகத்திலுள்ள வைஷ்ணவர்கள் பகவானைப் பெயர் கூறி அழைத்தால்கூட, பகவானின் துணைவியை பெரும்பாலும் “தாயார்” என்றே அழைப்பதை கவனித்தல் நன்று.

அதுமட்டுமின்றி, ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜருக்கு முழுமையாக எடுத்துரைக்க வேண்டும் என்பது சுகதேவர் மேற்கொண்டிருந்த திருப்பணியாகும். அந்தப் பணிக்கு அதிக கால அவகாசமும் இருக்கவில்லை. ஏனெனில், பரீக்ஷித்திற்கு ஏழு நாள்கள் மட்டுமே இருந்தது. ராதையின் பெயரை ஒருமுறை உரைத்தால்கூட உடனடியாக சுகதேவர் பரவசத்தின் மிகவுயர்ந்த நிலையினை அடைந்திருப்பார். அந்த நிலையில், குரல் தழுதழுத்து, உடல் நடுங்கி, மயக்கமுற்று, நிச்சயம் அவரால் ஸ்ரீமத் பாகவதத்தினை பரீக்ஷித்திற்கு தொடர்ந்து உபதேசித்திருக்க இயலாது.

பகவானுக்கு சேவை செய்யும்போது பரவசத்தின் அறிகுறிகள் தோன்றினால், அஃது அந்த சேவைக்கு தடையாக இருக்கும் என்பதால், பக்தர்கள் அத்தகு பரவசங்களைப் புறக்கணிக்கின்றனர். கிருஷ்ணருக்கு சாமரம் வீசும்போது அவரது சேவகரான தாருகன் தனது பரவசத்தினைத் தடுக்க முயன்றதையும், கிருஷ்ணரைக் காணும் கோபியர்கள் கண்களில் கண்ணீர் தோன்றி அவரைக் காண முடியாமல் அது தடுக்கின்றதே என்று ஏங்குவதையும் இதற்கு உதாரணமாகக் காணலாம். ஒருமுறை ஜய ராதா மாதவ பாடலைப் பாடிய ஸ்ரீல பிரபுபாதர் பரவசத்தில் மூழ்கி உபன்யாசம் வழங்க இயலாமல் போனது. சிறிது நேரத்திற்குப் பின்னர், பகவானின் சேவையில் தடை ஏற்பட்டு விட்டதே என்று பிரபுபாதர் மன்னிப்பு கோரினார்.

அதாவது, பரவசத்தைக் காட்டிலும் சேவைக்கே பக்தர்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். சேவையினால் எழும் பரவசம் சில நேரங்களில் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்பதால், பக்தர்கள் பரவசத்திற்கான காரணிகளை சேவையின்போது கவனமுடன் தவிர்ப்பது வழக்கம். இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன.

ஆகவே, ராதையின் திருப்பெயரை உச்சரித்து, அதனால் எழும் பரவசத்தை ஒருவேளை கட்டுப்படுத்த இயலாமல் போய் விட்டால், ஸ்ரீமத் பாகவதம் உரைத்தல் என்னும் சேவையினை நிறைவு செய்ய இயலாமல் போய் விடும் என்பதால், சுகதேவர் அப்பெயரை கவனமுடன் தவிர்த்தார்.

மறைபொருளாக வழங்கும் தன்மை

ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளும்படி உரைப்பது சாதாரண வழக்கம். ஆனால் ரிஷிகளின் வழக்கமோ அதனை மறைமுகமாக சிலருக்கு மட்டுமே புரியும்படி வழங்குவதாகும். இந்த வழிமுறை பரோக்ஷ என்று அறியப்படுகிறது. பரோக்ஷ-ப்ரியா இவ ஹி தேவா: என்று வேதங்கள் கூறுகின்றன. புராணங்களின் பல பகுதிகள் மறைமுகமான கதைகளின் மூலமாகவும் உவமைகளின் மூலமாகவும் விளக்கப்பட்டுள்ளன. முழுமுதற் கடவுள் பரோக்ஷ-ப்ரிய: என்று ஸ்ரீமத் பாகவதத்திலும் (4.28.65) கூறப்பட்டுள்ளார். சூட்சுமமான வினாக்களுக்கான விடைகள் மறைமுகமான முறையிலேயே வழங்கப்படுகின்றன.

பகவான் கிருஷ்ணர் ஸ்ரீமத் பாகவதத்தில் (11.21.35) உத்தவருக்கு உபதேசம் வழங்கியபோது கூறினார்: பரோக்ஷ-வாதா ருஷய: பரோக்ஷம் மம ச ப்ரியம், “ரிஷிகளும் மந்திரங்களும் இரகசியமான தகவல்களை மறைமுகமாக எடுத்துரைக்கின்றனர். நானும் அத்தகு வர்ணனைகளால் மிகவும் திருப்தியடைகிறேன்.” பரோக்ஷ வாதத்தைப் பற்றிய தகவல்கள் இதர பல வேத நூல்களிலும் காணப்படுவதை அறிஞர்கள் நன்கறிவர்.

அதன்படி, ராதையின் திருப்பெயரும் ஸ்ரீமத் பாகவதத்தில் மறைத்து வழங்கப்பட்டுள்ளது. வேதங்கள் அவ்வாறு மறைத்து வழங்க என்ன காரணம் என்று வினவலாம். வேதங்களின் உட்பொருள் அதனை முறையாக அணுகுவோருக்கு மட்டுமே கிடைக்கப் பெற வேண்டும். வேத சாஸ்திரங்களைப் புரிந்துகொள்வதற்கு கூர்மையான அறிவும் தெளிவான வழிகாட்டுதலும் அவசியம். அவை இல்லாவிடில், நேரடியான விளக்கங்களும்கூட தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எனவே, பரோக்ஷ வாதம் அவசியமாகிறது.

ஸ்ரீமத் பாகவதம் மோஹினி அவதாரத்தைப் போன்று அசுரர்களை ஏமாற்றி, அமிர்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறது.

ரஸிக பக்தர்களுக்கானது

ஸ்ரீமத் பாகவதத்தின் இரகசியங்கள் பக்தியில் உயர்ந்த ரஸிக பக்தர்களுக்கானவை, ரஸிகா புவி பாவுகா:. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3). இவை தகுதியுடைய பக்தர்களுக்கு மட்டுமே உரித்தானவை. மேலும், பொறாமையுடைய நபர்கள் பாகவதத்தை அணுகுதல் இயலாது, முற்றிலும் தூய்மையான இதயம் கொண்ட பக்தர்கள் மட்டுமே இதன் கருப்பொருளை உணர இயலும், நிர்மத்ஸராணாம் ஸதாம். (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2) இதர நபர்களால் பாகவதத்தின் மறைமுக பொருளைப் புரிந்துகொள்ள இயலாது, அவர்கள் சாரத்தைத் தவற விடுவர் என்பது உறுதி.

ஸ்ரீமத் பாகவதம் மோஹினி அவதாரத்தைப் போன்று அசுரர்களை ஏமாற்றி, அமிர்தத்தை பக்தர்களுக்கு வழங்குவதாக ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் கூறியுள்ளார். கிருஷ்ணர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்றுகூட சிலர் குறை கூறலாம். இல்லை, பகவான் தகுதியை அங்கீகரிக்கிறார், தன்னை அணுகுபவர் சிந்தனையுடைய நபராக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

மேலும், இலக்கியங்கள் எப்போதும் உவமைகளுடன் வழங்கப்படுவது வழக்கம், அஃது அவற்றின் செய்யுள்களை அழகுடையதாக சுவையுடையதாக ரசிக்க வைக்கின்றன. இவற்றைப் புரிந்துகொள்ள விரும்பும் மக்கள் சற்று அறிவுக்கூர்மையுடன் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இவை இலக்கியங்களின் உயர்விற்கு உதவுகின்றன.

பெயர் எங்குமே இல்லையா?

ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையின் பெயரை சுகதேவர் கூறவில்லை என்பதால், ராதையின் பெயர் எந்த சாஸ்திரத்திலும் இல்லை என்று முடிவு செய்து விடக் கூடாது. பத்ம புராணம், ஸ்கந்த புராணம் முதலிய புராணங்களிலும் பல்வேறு தந்திர சாஸ்திரங்களிலும் ராதையின் திருப்பெயர் காணப்படுகிறது. பத்ம புராணம் ராதையே கோபியர்களில் தலைசிறந்தவள் என்பதைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது:

யதா ராதா ப்ரியா விஷ்ணோஸ்
தஸ்யா: குண்டம் ப்ரியம் ததா
ஸர்வ-கோபிஷு ஸைவைகா
விஷ்ணோர் அத்யந்த-வல்லபா

“எல்லா கோபியர்களிலும் ராதையே பகவானுக்கு மிகவும் பிரியமானவள். அவள் பிரியமானவளாக இருப்பதைப் போலவே, அவளது குளமும் பகவானுக்கு மிகவும் பிரியமானது.”

ரிக் வேதத்தின் உப இலக்கியமான ரிக்-பரிஷிஷ்ட எனப்படும் நூல் தெரிவிக்கிறது: ராதயா மாதவோ தேவோ மாதவேநைவ ராதிகா / விப்ராஜந்தே ஜனேஷு. “எல்லாரையும் விட ஸ்ரீ ராதையின் சங்கத்திலேயே பகவான் மாதவர் மிகவும் பெருமைக்குரியவராகத் திகழ்கிறார். அவளும் அவரில் பெருமையடைகிறாள்.”

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் மிகச்சிறந்த ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர் பகவானது பெருமைகளை எடுத்துரைத்து எழுதிய யாதவாப்யுத்யம் என்னும் பாடல் தொகுப்பில் ஸ்ரீமதி ராதாராணியின் பெயரை இரண்டு இடங்களில் (9.90, 10.71) குறிப்பிட்டு, விருந்தாவன கோபியர்களில் ராதையே சிறந்தவள் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

ராதா-கிருஷ்ண வழிபாடு எல்லா வழிபாடுகளிலும் தலைசிறந்த வழிபாடாகக் கருதப்படுகிறது.

ராதையை வணங்குவோம்

ராதையின் திருநாமம் வேத சாஸ்திரங்களில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தில் சுகதேவர் ராதையை மறைபொருளாக வழங்கியுள்ளபோதிலும், ஆச்சாரியர்கள் வழங்கும் ஞான தீபத்தின் மூலமாக பக்தர்கள் பாகவதத்தில் ராதையைக் காண்கின்றனர். விருந்தாவனத்திற்குச் செல்வோர் அங்குள்ள மக்கள் ராதையின் மீது கொண்டுள்ள பேரன்பினை இன்றும் காணலாம்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்திலுள்ள ஹரே என்னும் சொல், ராதையை அழைப்பதாகும். நாம் நேர்மையான முறையில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கையில், ராதையே நம்மை கிருஷ்ணரிடம் அறிமுகப்படுத்தி, நமக்காகப் பரிந்துரை செய்கிறாள். கிருஷ்ண பக்தர்கள் எப்போதும் கிருஷ்ணரை அவரது பக்தர்களுடன் இணைந்தே வழிபடுகின்றனர், தனியாக வழிபடுவதில்லை.

அதிலும் குறிப்பாக, ராதா-கிருஷ்ணரின் வழிபாடு எல்லா வழிபாடுகளிலும் தலைசிறந்த வழிபாடாகக் கருதப்படுகிறது.
ராதா-கிருஷ்ணரை விக்ரஹ வடிவில் வழிபடுவதற்கு மிகவுயர்ந்த தகுதிகளும் ஆச்சாரியரிடமிருந்து பெற்ற மந்திரங்களும் அவசியம். அதே சமயத்தில், ஹரே கிருஷ்ண மந்திரத்தின் மூலமாக அனைவரும் ராதையை எளிதில் அணுகலாம். ராதை குறித்த ஐயங்களை விலக்கி, அவளது திருவடியில் சரண் புகுவோம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives