மானின் மீதான மயக்கத்தினால் மானிடத்தின் மகத்துவத்தை மறந்த மன்னரின் கதை
சென்ற இதழின் சுருக்கம்
மிகச்சிறந்த மன்னராக ஆட்சிபுரிந்து வந்த பரதர், பக்தித் தொண்டில் மேலும் பக்குவமடையும் பொருட்டு தனது அரச பதவியையும் குடும்பத்தினரையும் துறந்து, துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். இருப்பினும், காட்டில் தனது தாயை இழந்த ஒரு சிறு மான்குட்டியிடம் பற்றுதல் கொண்டு, அதனை வளர்க்கத் தொடங்கினார். மானின் மீதான பற்றுதல் வளர வளர, பக்தித் தொண்டில் அவரது கவனம் சிதறியது. இறுதியில் மரண நேரத்தில் மானை நினைத்த பரதர், தனது அடுத்த பிறவியில் மானாகப் பிறக்க நேர்ந்தது. இருப்பினும், கிருஷ்ணரின் கருணையால் தனது முந்தைய பிறவியை நினைவில் வைத்திருந்த அவர், மானாக இருந்தபோதிலும் மற்ற மான்களிலிருந்து விடுபட்டவராக வாழ்ந்து மரணமடைந்தார். இதன் தொடர்ச்சியை இந்த இதழில் காண்போமாக.
ஜட பரதரின் வாழ்க்கை
மன்னர் பரதர் தனது அடுத்த பிறவியில் தூய்மையான பிராமண பூஜாரியின் குடும்பத்தில் பிறந்தார், அப்போது அவர் ஜட பரதர் என்று அழைக்கப்பட்டார். பகவானின் கருணையால் அவர் தனது முந்தைய பிறவிகளை நினைவில் வைத்திருந்தார். ஜட பரதர் வளர்ச்சி பெற்றபோது, தனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மிகுந்த அச்சம் கொண்டார்; ஏனெனில் அவர்கள் பௌதிகத்தில் மிகுந்த ஆர்வமுடையவர்களாகவும், ஆன்மீக முன்னேற்றத்தில் துளியும் ஆர்வமற்றவர்களாகவும் இருந்தனர். அவர்களுடன் பழகினால், மீண்டும் விலங்காகப் பிறவி எடுத்து விடுவோமோ என்ற அச்சத்தில், அவர் எப்போதும் கவலையுடன் இருந்தார். எனவே, மிகவும் அறிவாளியாக இருந்தபோதிலும், அவர் ஒரு பித்தனைப் போல நடந்து கொண்டார். பௌதிக மக்கள் தன்னிடம் பேசக் கூடாது என்பதற்காக, சோம்பேறியாகவும் குருடனாகவும் செவிடனாகவும் இருப்பதுபோல் நடித்தார். ஆனால் தனக்குள் அவர் எப்போதும் பகவானை நினைத்தபடி அவரது புகழைப் பாடி வந்தார்.
ஜட பரதரின் மீது அவரது தந்தை மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஜட பரதர் ஒருநாள் பண்டிதனாவார் என்ற நம்பிக்கை அவரது மனதில் இருந்தது. ஆகவே வேத ஞானத்தின் நுணுக்கங்களை அவருக்கு உபதேசிக்க அவரது தந்தை முயற்சி செய்தார். ஆனால் ஜட பரதரோ தனது தந்தை தனக்கு அறிவுரை வழங்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே ஒரு முட்டாளைப் போல் நடந்து கொண்டார். அவரது தந்தை ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்படி கூறினால், அதற்கு எதிரான செயலையே அவர் செய்து வந்தார். ஆயினும், ஜட பரதரின் தந்தை, தனது மரண காலம் வரை, மகனுக்கு அறிவுரை வழங்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.
தன்னை உணர்ந்த நிலையில் பரதர்
ஜட பரதரின் ஒன்றுவிட்ட ஒன்பது சகோதரர்கள், அவரை மூளையற்றவர் என்று கருதி வந்தனர். தங்களின் தந்தை இறந்ததும், பரதருக்குக் கல்வி கற்றுத் தரும் முயற்சியை அவர்கள் கைவிட்டனர். ஜட பரதரின் முன்னேறிய ஆன்மீக நிலையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் உடல் சார்ந்த வாழ்விலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்ததால், சகோதரர்கள் தன்னை மோசமாக நடத்துவதை ஜட பரதர் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவரை நோக்கி வரும் உணவினை–அஃது அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும், ருசியாக இருந்தாலும் ருசியற்று இருந்தாலும்–அவர் ஏற்று உண்பார். முற்றிலும் தெய்வீக நிலையில் இருந்ததால், வெப்பம், குளிர் போன்ற இருமைகளால் அவர் பாதிக்கப்படவில்லை. அவரது உடல் காளையைப் போன்று உறுதியாக இருந்தது, அங்கங்கள் மிகவும் வலிமையாக காணப்பட்டன. குளிர்காலத்தின் பனி, கோடைகாலத்தின் வெப்பம், காற்று, மழை என எதற்கும் அவர் கவலைப்படவில்லை; தனது உடலை ஒருபோதும் மறைக்கவில்லை. நீராடாத காரணத்தினால் அவரது உடல் எப்போதும் அழுக்காக இருந்தது. மதிப்புமிக்க நகையினை அழுக்கும் கரியும் மறைப்பதுபோல, அவரது ஆன்மீக அறிவும் அதன் பேரொளியும் அவரது அழுக்கான உடலினால் மறைக்கப்பட்டிருந்தன. அழுக்கான கோவணமும் கருப்பான பூணூலுமே அவரது உடை. அவரை உபயோகமற்ற முட்டாளாகக் கருதிய மக்கள், ஒவ்வொரு நாளும் அவரை அவமானப்படுத்தி புறக்கணித்தனர்.
ஜட பரதரை ஓர் அடிமையைப் போன்று கருதிய அவரது சகோதரர்கள், தங்களது நிலங்களில் அவரை கடுமையாக வேலை வாங்கினர். ஆனால் ஒரு சிறு வேலையைக்கூட அவரால் ஒழுங்காக செய்ய முடியவில்லை, நிலத்தை சமன் செய்வது, மேடு பள்ளங்களை ஏற்படுத்துவது என எந்த வேலையும் அவருக்கு செய்யத் தெரியாது. சிறிதளவு நொய் அரிசியையும், பதர் அரிசியையும், புழுத்த, கருகிய தானியங்களையும், பிண்ணாக்கையும் அவரது சகோதரர்கள் அவருக்குக் கொடுத்தனர். ஆனால் ஜட பரதரோ அவற்றை அமிர்தம்போல மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார், ஒருபோதும் வருந்தவில்லை, கோபம் கொள்ளவில்லை. இவ்வாறாக, முற்றிலும் தன்னை உணர்ந்த ஆத்மாவாக அவர் நடந்து கொண்டார்.
ஜட பரதரை காளிக்கு பலி கொடுக்க முயற்சி
ஒருமுறை கொலை மற்றும் கொள்ளைக்காரக் கூட்டத்தின் தலைவன் ஒருவன், விலங்கைப் போன்ற மந்த புத்தி கொண்ட மனிதன் ஒருவனை பலி கொடுப்பதற்காக, பத்ரகாளியின் கோவிலுக்குச் சென்றான். இவ்விதமான பலிகள் வேதங்களில் சொல்லப்படவில்லை, ஆனால் பௌதிகச் செல்வத்தைப் பெறுவதற்காக கொள்ளையர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. இருப்பினும், பலி கொடுக்கப்பட இருந்தவன் தப்பிச் சென்றுவிட்டான், கொள்ளையர் தலைவனின் திட்டம் முறியடிக்கப்பட்டது. தப்பியவனைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி, தலைவன் தனது கூட்டத்தினரை ஏவினான். அவர்கள் இரவு முழுவதும் வயல்வெளிகளிலும் காடுகளிலும் தப்பியவனைத் தேடி அலைந்தனர்.
அப்போது காட்டுப் பன்றிகளின் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வயல்மேட்டில் அமர்ந்திருந்த ஜட பரதரை அவர்கள் கண்டனர். பலி கொடுப்பதற்கு ஜட பரதர் ஏற்றவர் என்று நினைத்த கொள்ளையர்கள் மிகவும் மகிழ்ந்து, அவரை பலமான கயிற்றால் கட்டி காளி கோவிலுக்குக் கொண்டு வந்தனர். முழுமுதற் கடவுளின் பாதுகாப்பில் முழு நம்பிக்கை கொண்டிருந்த ஜட பரதர் அவர்களை எதிர்க்கவில்லை.
கொள்ளையர்கள் ஜட பரதரை நீராட்டி, புதிய பட்டாடைகளை உடுத்தி, ஆபரணங்களையும் மாலைகளையும் அணிவித்து அலங்கரித்தனர். சுவையான இறுதி உணவைக் கொடுத்து அவரை உண்ணச் செய்தனர். பின்னர், அவரை காளியின் முன்பாகக் கொண்டுவந்து, பாடல்களாலும் பிரார்த்தனைகளாலும் அவளை வழிபட்டனர்; சிலையின் முன்பு ஜட பரதரை அமரச் செய்தனர். பின்னர், திருடர்களில் ஒருவன் தலைமை பூஜாரியின் பொறுப்பை ஏற்று, ஜட பரதரின் கழுத்தை வெட்டி, அவரது வெதுவெதுப்பான இரத்தத்தை காளிக்கு பானமாக அளிக்கும் பொருட்டு, மிகவும் கூரான கத்தியை உயர்த்தினான்.
ஜட பரதரை காளி காப்பாற்றுதல்
ஆனால் காளியினால் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த பாவப்பட்ட திருடர்களால் கொல்லப்பட இருப்பவர் பகவானின் மாபெரும் பக்தர் என்பதை அவள் புரிந்து கொண்டாள். திடீரென அந்த சிலை வெடித்தது, அதிலிருந்து காளி தோன்றினாள். அவளது உடல் கடும் வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. கடும் சினம் கொண்ட அவள் சுட்டெரிக்கும் கண்களுடனும் பயங்கரமான வளைந்த பற்களுடனும் தோன்றினாள். அவளது கறுஞ்சிவப்பான உருண்ட கண்களில் கனல் தெறித்தது, உலகம் முழுவதையும் அழிக்கத் தயாராக இருப்பதுபோல் தோற்றமளித்தாள். வழிபாட்டு மேடையிலிருந்து பெரும் சப்தத்துடன் அவள் குதித்தாள், ஜட பரதரைக் கொல்ல அவர்கள் பயன்படுத்திய அதே கத்தியைக் கொண்டு, அங்கிருந்த எல்லாக் கயவர்களையும் அவர்களது தலைவனையும் அவள் வெட்டிக் கொன்றாள்.
மன்னர் ரகூகணருக்கு பல்லக்கு தூக்குதல்
காளி கோவிலிலிருந்து விடுபட்ட பின்னர், ஜட பரதர் பௌதிகத்தில் நாட்டம் கொண்டிருந்த சாதாரண மனிதர்களிடமிருந்து விலகி, இங்குமங்குமாக அலையத் தொடங்கினார்.
ஒருநாள் சௌவீர நாட்டு அரசர் ரகூகணர் பல்லக்கில் அமர்ந்தபடி, கபிலாஷ்ரமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மன்னரின் பல்லக்கை சுமந்த சேவகர்கள், இக்ஷுமதி நதிக் கரையை அடைந்த போது, பல்லக்கை சுமப்பதற்கு மற்றுமொரு சேவகன் தேவை என்பதை உணர்ந்து, இன்னொரு ஆளைத் தேட ஆரம்பித்தனர். விரைவில் அவர்கள் ஜட பரதரைக் கண்டனர். அவர் மிகுந்த இளமையுடனும் காளை போன்ற வலிமையுடனும் இருந்ததால், பல்லக்கைத் தூக்குவதற்கு ஏற்றவராகத் தோற்றமளித்தார். மகாத்மாவான ஜட பரதர் அத்தகைய பணிகளுக்கு உகந்தவர் அல்ல, இருப்பினும் சிறிதும் தயக்கம் கொள்ளாத மன்னரின் சேவகர்கள் பல்லக்கை தூக்கும்படி அவரை வலியுறுத்தினர்.
ஜடபரதர் எல்லா உயிர்களையும் தனது சகோதரர்களாக பாவித்ததால், பல்லக்குத் தூக்கும் பணியை அவரால் சரியாகச் செய்ய முடியவில்லை. அவர் நடக்கும்போது, எறும்புகளின் மீது தனது கால்கள் படாதவாறு, நின்று நிதானித்து நடந்தார்.
மன்னர் ரகூகணரின் கோபம்
பார்த்துப் பார்த்து நடந்த ஜட பரதரால் மற்றவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பல்லக்கு தாமதமாகச் செல்வதற்கான காரணத்தை உணராத அரசர் ரகூகணர், இங்கு என்ன நடக்கிறது? இதை உங்களால் ஒழுங்காக தூக்க முடியாதா? ஏன் எனது பல்லக்கு இதுபோல ஆடுகிறது?” என்று கத்தினார்.
மன்னரின் அச்சம் தரும் குரலைக் கேட்டுப் பயந்த சேவகர்கள், ஜட பரதரே இடையூறுகளுக்கு காரணம் என்று கூறினர். உடல் தளர்ந்த முதியவரைப் போல பல்லக்கைத் தூக்கி வருவதாக ஜட பரதரின் மீது அரசர் கோபத்துடன் குற்றம் சாட்டினார். ஆனால் ஜட பரதர், தான் இந்த உடலல்ல என்பதை அறிந்தவர். அவர் பருத்தவருமல்ல, மெலிந்தவருமல்ல, உண்மையில் சதைக் குவியலும் எலும்புகளும் கொண்ட அந்த உடலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே, அரசரின் கோபமான பழிச் சொற்களால் அவர் பாதிப்படையவில்லை.
ஜட பரதர் அமைதியுடன் முன்பு போலவே பல்லக்கைச் சுமந்து சென்றார். ஆனால் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாத மன்னர், அயோக்கியனே, நீ என்ன செய்கிறாய்? நான் உனது தலைவன் என்று உனக்குத் தெரியாதா? எனக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கு நீ தவறியதால் உன்னை நான் தண்டிக்கப்போகிறேன்!” என்று கத்தினார்.
மன்னருக்கு ஜட பரதரின் உபதேசங்கள்
ஜட பரதரோ, “எனதன்பு அரசரே, என்னைப் பற்றி நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையே. உங்களது பல்லக்கைத் தூக்குவதில் நான் போதுமான அளவு உழைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அஃது உண்மையே. ஏனெனில், உங்களின் பல்லக்கை நான் தூக்கவில்லையே! எனது உடல்தான் தூக்கி வருகிறது, ஆனால் நானோ இந்த உடல் அல்ல. பருத்த உடலும் வலிமையும் என்னிடம் இல்லை என்று நீங்கள் குறை கூறினீர்கள். அந்த வார்த்தைகள் உடலுக்கும் ஆத்மாவிற்கும் இடையிலான வேறுபாட்டை அறியாதவரின் வார்த்தைகள். உடல் பருத்தோ மெலிந்தோ இருக்கலாம், ஆனால் கற்றறிந்தவன் எவனும் உள்ளே இருக்கும் ஆத்மாவைப் பற்றி இவ்வாறு சொல்லமாட்டான். என்னைப் பொறுத்தவரை நான் பருத்தவனும் அல்ல, கனத்த அங்கங்கள் கொண்டவனும் அல்ல,” என்று கூறினார்.
ஜட பரதர் மன்னருக்கு தொடர்ந்து அறிவுரை கூற ஆரம்பித்தார்: “நீங்கள் உங்களை எஜமானர், தலைவர் என்று நினைத்து, என்னை அதிகாரம் செய்தீர்கள். ஆனால் இது சரியல்ல. ஏனெனில், இவையனைத்தும் நிலையற்றவை. இன்று நீங்கள் அரசராகவும், நான் உங்களது சேவகனாகவும் உள்ளோம். ஆனால் அடுத்த பிறவியில் நமது நிலைமை தலைகீழாக மாறலாம், அதாவது நான் உங்களின் அரசனாகவும் நீங்கள் எனது சேவகனாகவும் மாறலாம்.”
ஜட பரதர் தொடர்ந்து கூறினார்: “எப்படிப் பார்த்தாலும், யார் தலைவன், யார் சேவகன்? ஒவ்வொருவரும் ஜட இயற்கையின் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எனவே, யாரும் தலைவனல்ல, யாரும் சேவகனுமல்ல.”
ஜடவுலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் நாடக மேடையின் நடிகர்களைப் போன்றவர்கள் என்றும், அவர்கள் ஓர் அதிகாரியின் ஆணைக்கு உட்பட்டு செயல்படுகின்றனர் என்றும் வேதங்கள் கூறுகின்றன. நாடக மேடையில் ஒருவன் தலைவனாகவும் மற்றவன் சேவகனாகவும் நடிக்கலாம். ஆனால் அவர்கள் இருவருமே அவர்களை இயக்கும் நாடக இயக்குநரின் சேவகர்களே.
ரகூகணரின் பணிவு
ஆன்மீக விஞ்ஞானத்தில் பயிற்சி பெற்றிருந்த அரசர் ரகூகணர் ஜட பரதரின் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்தார். ஜட பரதர் ஒரு மிகச்சிறந்த சாது என்பதை அங்கீகரித்த அரசர், உடனடியாக தனது பல்லக்கிலிருந்து கீழே இறங்கினார். தான் ஒரு பேரரசன் என்ற அவரது எண்ணம் அழிந்தது, புனிதமான ஜட பரதரின் திருப்பாதங்களில் தனது தலையைப் பதித்து, பணிவுடன் தரையில் விழுந்து வணங்கினார்.
“சாதுவே, யாருக்கும் தெரியாமல் இவ்வுலகில் நீங்கள் உலவுவது ஏன்? நீங்கள் யார்? எங்கே வசிக்கிறீர்கள்? இங்கு ஏன் வந்தீர்கள்? ஆன்மீக குருவே, நான் ஆன்மீக ஞானம் அறியாதவன். ஆன்மீக வாழ்வில் எவ்வாறு முன்னேறுவது என்று தயவுசெய்து எனக்கு விளக்குங்கள்.”
“உயிர்வாழியின் மனம் ஜட ஆசைகளால் நிரம்பியுள்ள காரணத்தால், அவன் இவ்வுலகில் பல்வேறு உடல்களை ஏற்று, பௌதிகச் செயல்களால் விளையும் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றான்” என்று ரகூகணருக்கு ஜட பரதர் பதில் கூறினார்.
இரவில் தூங்கும்போது, கனவின் வடிவில் பல்வேறு இன்ப துன்பங்களை மனம் உண்டாக்குகின்றது. ஓர் அழகான பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கனவு காணலாம், ஆனால் இம்மகிழ்ச்சி ஒரு மாயையே. தன்னை புலி துரத்துவதாகக்கூட கனவு காணலாம், ஆனால் அந்த பயமும் உண்மையானதல்ல. இதே போன்று ஜடவுடலால் ஏற்படும் இன்ப துன்பம், செல்வங்கள் என யாவும் மனதை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படுபவையே. ஒருவன் தனது உண்மையான ஆன்மீக உணர்வைப் பெறும்போது, இவற்றுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிவான். பரம புருஷ பகவானின் மீது மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக, இதில் வெற்றி பெற முடியும்.
“பல்வேறு உடல்களைப் பெறுவதற்கு மனமே காரணமாக அமைகிறது. அந்த உடல்கள் வெவ்வேறு உயிரினங்களின் உடல்களாக அமையலாம். ஒருவன் தனது மனதை ஆன்மீக அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தினால், அவன் உயர்ந்த உடலைப் பெறுகிறான். ஆனால் ஜட இன்பத்தைப் பெறுவதில் தனது மனதைப் பயன்படுத்துபவன் இழிந்த உடலைப் பெறுகிறான்,” என்று ஜட பரதர் கூறினார்.
ஜட பரதர் ஒரு விளக்கின் ஒளியுடன் மனதை ஒப்பிடுகிறார். “விளக்கு முறையாக எரியாவிடில், திரி எரிந்து, விளக்கில் கரி படிந்துவிடும். ஆனால் விளக்கில் போதிய நெய்யை நிரப்பி, திரியை முறையாக எரியச் செய்தால், அதே விளக்கு பிரகாசமான ஒளியைத் தருகிறது. அதுபோல, மனமானது முற்றிலும் ஜட வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டால், அது மறுபிறவியின் சுழற்சியில் சிக்க வைத்து முடிவற்ற துன்பத்தை தரும். ஆனால் அதே மனம் ஆன்மீக அறிவை வளர்ப்பதில் பயிற்சி செய்யப்பட்டால், ஆன்மீக வாழ்வின் உண்மையான பிரகாசத்தைப் பெற்றுத் தரும்.”
“எனதன்பு மன்னரே, கட்டுண்ட ஆத்மா, ஜடவுடலை ஏற்றுக்கொண்டிருக்கும்வரை, களங்கமான ஜட இன்பத்திலிருந்து விடுபடாத வரை, தனது புலன்களையும் மனதையும் வெற்றிகொள்ளாத வரை, ஆன்மீக அறிவை விழித்தெழச் செய்து தன்னையறியும் தளத்திற்கு உயர்வடையாதவரை, அவன் இந்த ஜடவுலகின் வெவ்வேறு உடல்களில் சுற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான்.”
மறுபிறவியிலிருந்து விடுபடுதல்
மறுபிறவியின் சுழற்சியிலிருந்து விடுதலை பெற விரும்புபவர்கள், தன்னுணர்வு பெற்ற பகவத் பக்தர்களின் சங்கத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த ஜட பரதர் தனது உபதேசங்களை முடித்துக் கொண்டார்.
பகவத் பக்தர்களின் சங்கத்தைப் பெறும் வாய்ப்பு ஒருவனுக்குக் கிடைக்காவிடில், ஆன்மீக வாழ்வின் ஆரம்ப விஷயங்களைக்கூட அவனால் அறிந்துகொள்ள முடியாது. தூய பக்தர்களின் சங்கத்தில், அரசியல், சமூகவியல் போன்ற விஷயங்களுக்கு இடமில்லை. தூய பக்தர்களின் சங்கத்தில், பரம புருஷ பகவானின் திருநாமங்கள், குணங்கள், அவதாரங்கள், மற்றும் லீலைகளைப் பற்றி மட்டுமே உரையாடப்படும். மறந்துபோன ஆன்மீக உணர்வை புதுப்பித்துக் கொள்வதற்கும், மறுபிறவி எனும் சுழற்சியை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், ஆன்மீக உலகிலுள்ள நித்தியமான வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதற்கும் இஃது ஒன்றே சுலபமான வழி; இஃது இரகசியமான வழியுமாகும்.
மாபெரும் பக்தரான ஜட பரதரிடம் உபதேசம் பெற்ற மன்னர் ரகூகணர் ஆத்மாவின் உண்மையான நிலையை முழுமையாகத் தெரிந்து கொண்டார். பிறப்பு, இறப்பு, என்னும் முடிவற்ற சுழற்சியின் மூலமாக, தூய ஆத்மாக்களை பந்தப்படுத்தும் உடல் சார்ந்த வாழ்க்கையை அவர் முற்றிலுமாக கைவிட்டார்.
மேலும் பார்க்க
மன்னர் பரதர் பாகம் 1