சென்னை மக்களைக் கவர்ந்த ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர்

Must read

இஸ்கான் சென்னையின் சார்பாக, புதிதாக திறக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர் திருக்கோவில் சென்னை மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டது.

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண–எங்குத் திரும்பினாலும் ஹரே கிருஷ்ண. 6.5 ஏக்கர் நிலம்–ஆனால் நடப்பதற்குக் கூட இடமில்லை, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், சிறப்பு விருந்தினர்கள் என கிழக்குக் கடற்கரைச் சாலையின் இப்பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டது.

ஏப்ரல் 26, வியாழன்: அழகான கிழக்குக் கடற்கரை சாலையில், விஜிபி கோல்டன் பீச் அருகில் இஸ்கான் சென்னையின் சார்பாக புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. சமஸ்கிருத புலமையும் சாஸ்திர ஞானமும் மட்டுமின்றி வாஸ்து, சிற்பக் கலை ஆகியவற்றிலும் கைதேர்ந்தவரான திரிதண்டி சந்நியாசி, தவத்திரு. பானு ஸ்வாமி அவர்களின் வழிகாட்டுதலில், பல்லவர் காலத்து கட்டிடக் கலையையும் வட இந்தியாவின் கட்டிடக் கலையையும் இணைத்து சுமார் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் மிகப்பெரிய இராதா கிருஷ்ணர் கோவில் காண்போரைக் கவர்வது உறுதி.

ஏதேனும் ஒரு பொருளைப் பெறுவதற்கு நாம் நீண்ட நாள்களாக ஏங்கி தவம் கிடந்தால், அப்பொருள் நம்மை வந்தடையும் போது அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. அதுபோலவே, சென்னையில் பிரம்மாண்டமான ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர் திருக்கோவில் வர வேண்டும் என்னும் ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பம் என்று நிறைவேறும் என்று ஏங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் கூடிய பக்தர்கள், அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர் களுடனும் வெளிநாடு உட்பட தொலைவிலிருந்து வந்திருந்த இதர பக்தர்களுடனும் இணைந்து ஜாதி, மத, இன வேற்றுமைகள் என எல்லாவற்றையும் களைந்து ஹரி நாமத்தை உரக்கப் பாடியதை வந்திருந்தோர் எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

சென்னையில் தற்போது திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர் திருக்கோவிலின் முன்பக்கத் தோற்றம்

அபிஷேகத்தைக் காண கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர்

கும்பாபிஷேகத்திற்கு முன்பாக, ஆதிவாஷ் என்று அழைக்கப்படும் நான்கு நாள் சிறப்பு நிகழ்ச்சியின் மூலமாக பிரதிஷ்டை செய்யப் படுவதற்கு விக்ரஹங்கள் தயார் செய்யப்பட்டனர். பின்னர், கும்பாபிஷேக நாளன்று பிராண பிரதிஷ்டை, மஹா அபிஷேகம் மற்றும் கீர்த்தனத்துடன், ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர் லலிதா விசாகா, ஸ்ரீ ஸ்ரீ ஜகந்நாத பலதேவ சுபத்ரா, ஸ்ரீ ஸ்ரீ கௌர நித்தாய், ஸ்ரீ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆகிய விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

ஜெயபதாக ஸ்வாமி, கோபால கிருஷ்ண கோஸ்வாமி, பானு ஸ்வாமி, லோகநாத ஸ்வாமி, பக்தி விகாஸ ஸ்வாமி, சுகதேவ கோஸ்வாமி, பக்தி வினோத ஸ்வாமி ஆகிய சந்நியாசிகள் உட்பட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்களை மகிழ்ச்சியூட்டினர்.

விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது நிகழ்ந்த அபிஷேகம், அனைவரின் ஆனந்தத்திற்கும் மகுடமாகத் திகழ்ந்தது, பால், தயிர், தேன், கரும்புச் சாறு, நெய், பல தரப்பட்ட பழ ரஸங்கள், பூக்கள் என சுமார் ஒரு மணி நேரத்தில் அனைத்து விக்ரஹங்களுக்கும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த அற்புதமான அபிஷேகத்தை இதுவரை தமிழகத்தில் யாரும் கண்டிருக்க முடியாது என்றால் அது மிகையல்ல. அதன் பின்னர், கோவிலின் உச்சியிலுள்ள அழகிய கலசங்களும் (கும்பங்கள்) சுதர்ஸன சக்கரமும் புனித நீரால் சிறப்பாக நீராட்டப்பட்டன.

மின்னொளியில் ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர் திருக்கோவில்

கும்பாபிஷேகத்திற்குப் பின்னர், ஆர்வத்துடன் காத்திருந்த பக்தர்களுக்கு புத்தாடைகளுடன் பகவான் தரிசனம் கொடுத்தபோது, பக்தர்கள் அனைவரும் ஆனந்தத்தில் வானில் பறந்தனர். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் தெய்வீக சப்தம் விண்ணைப் பிளந்தது.

கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொண்ட சுமார் 30,000 பக்தர்களுக்கும் அருசுவை பிரசாதம் வழங்கப்பட்டது.மாலை வேளையில், பக்தி விகாஸ ஸ்வாமி, கோபால கிருஷ்ண கோஸ்வாமி, ஜெயபதாக ஸ்வாமி ஆகியோர் உபன்யாஸம் வழங்கினர்.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனத்தினர் நிகழ்ச்சியை படம் பிடித்து, பக்தர்களிடம் பேட்டி கண்டு தங்களது தொலைக்காட்சிகளில் அன்றைய தினமும் மறுநாளும் ஒளிபரப்பு செய்தனர். சங்கரா தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சிகள் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மறுநாள், அனைத்து செய்தித்தாள்களும் புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டனர்.

அதனைத் தொடர்ந்த மூன்று நாள்களுக்கு வில்லுப் பாட்டு, நாடகம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டே இருந்தது. அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, துளியும் சோர்வடையாமல், உற்சாகத்துடன் கோவிலைப் பற்றி விளக்கமளித்த இஸ்கான் பக்தர்கள் தன்னலமற்ற பக்தித் தொண்டிற்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கினர்.

ஸ்ரீ ஸ்ரீ ஜகந்நாதர், பலதேவர், மற்றும் சுபத்ரையின் விக்ரஹங்கள்

ஸ்ரீ ஸ்ரீ கௌர நித்தாய் விக்ரஹங்கள்

கோவில் கட்டமைப்பு சில தகவல்கள்

கோவில் என்பது முழுமுதற் கடவுளின் வசிப்பிடம் என்பதால் இஃது ஒரு பிரபஞ்சத்திற்கு ஒப்பிடப்படுகிறது என்றும், இறைவனின் விராட (பிரபஞ்ச) ரூபமாகக் கருதப்படுகிறது என்றும் விளக்கிய தவத்திரு. பானு ஸ்வாமி அவர்கள் இக்கோவிலை பல்வேறு நுணுக்கங்களுடன் சாஸ்திரங்களின் சூட்சும விஷயங்களை அனுசரித்து வடிவமைத்துள்ளார்.

கோவிலின் நுழைவாயிலில், வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் பூலோகத்தின் அமைப்பினைக் காட்டும்படியாக ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது. உலகின் மையமாக உள்ள மேரு மலையும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பூலோகத்தின் பல்வேறு தீவுகளும் பளிங்குக் கற்களில் காட்டப்பட்டுள்ளன.

பூமியில் வாழும் நம் அனைவருக்கும் தாயான பூமி, ஒரு பசுவின் வடிவில் நுழைவாயிலில் காட்சி தருகிறாள். பூமித்தாய் தனது எல்லா குழந்தைகளையும் பராமரிக்கின்றாள் என்பதை கன்றுடன் தத்ரூபமாக காட்சி தரும் இந்த பசு எடுத்துரைக்கின்றது.

கோவிலின் நுழைவாயில் பகவானின் விராட ரூபத்தின் கால் பகுதியைக் குறிக்கின்றது; தலை கர்ப கிரகத்தைக் குறிக்கின்றது.

ஆன்மீக ஞானம் பெற விரும்பி யோகப் பயிற்சியை மேற்கொள்வோர், தங்களின் உடலிலுள்ள ஆறு சக்கரங்களைத் தாண்டி வருவதைப் பிரதிபலிக்கும் பொருட்டு, இராதா கிருஷ்ணரை தரிசிக்க வருவோர் கோவில் என்னும் விராட ரூபத்திலுள்ள சக்கரங்களையும் தாண்டி வருகின்றனர். கோவிலை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளில் ஆறு சக்கரங்கள் உரிய நிறத்துடன் பளிங்கு கற்களில் பதிக்கப்பட்டுள்ளன. ஏழாவது சக்கரம் விக்ரஹத்தை தரிசிக்கும் அறையின் மையப் பகுதியில் வண்ண விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஏழாவது சக்கரத்தை அடைந்தோர் ஆன்மீக வாழ்வில் பக்குவம் பெறுகின்றனர்; அதாவது, இராதா கிருஷ்ணரின் தரிசனத்தைப் பெறுகின்றனர்.

எட்டு திசைகளும் எட்டு அவதாரங்களால் கட்டுப்படுத்தப்படுவதைக் குறிக்கும் வகையில், கோவிலின் எட்டு திசைகளிலும் அதற்குரிய அவதாரங்களின் அழகிய வண்ணப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன, அவர்களுக்குரிய எந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

மேரு மலையைச் சுற்றியுள்ள பூகோள அமைப்பு

கோவில் வாசலில் கன்றுடன் நிற்கும் பசு

கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்கரங்களில் சில

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives