மன்னர் பரதர்

Must read

மான்மீது கொண்ட மயக்கத்தால் மானிடத்தின் மகத்துவத்தை மறந்த மன்னரின் கதை

புகழுடனும் பக்தியுடனும் பாரதத்தினை ஆட்சி செய்து வந்த மாமன்னர் பரதர், ஒரு மானிடம் கொண்ட அதீத பற்றுதலால், மானாகப் பிறந்து ஒரு பிறவியை வீணடித்த வரலாறு ஸ்ரீமத் பாகவதத்தின் ஐந்தாம் காண்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் இங்கே பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக.

பரதர் வனவாசம் மேற்கொள்ளுதல்

பரதர் என்ற ஓர் அரசர், அறிவிற் சிறந்த அனுபவம் வாய்ந்த மாமன்னராக ஆட்சி புரிந்து வந்தார். நீண்ட காலம் அவர் ஆட்சி செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரோ தனது மனைவி, குடும்பம், நாடு என எல்லாவற்றையும் துறந்து வனவாசம் சென்றார். ஒருவன் தனது வாழ்வின் பிற்பகுதியை தன்னை அறிவதில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்று பாரதத்தின் மாமுனிவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி பரதர் வனவாசம் மேற்கொண்டார்.

தனது அரச பதவி நித்தியமானதல்ல என்பதை மன்னர் பரதர் உணர்ந்திருந்த காரணத்தினால், இறக்கும்வரை அரியணையில் அமர்ந்திருக்க அவர் முயற்சி செய்யவில்லை. ஒருவர் மன்னராக இருந்தாலும் சரி, இறுதியில் அவரது உடல், சாம்பலாகவோ புழுக்கள் அல்லது விலங்குகளுக்கு உணவாகவோ மாற வேண்டியுள்ளது. ஆனால் அந்த உடலுக்கு சொந்தமான ஆத்மா அழிவற்றதாகும். யோகத்தைப் பயிற்சி செய்வதன் மூலமாக ஒருவன் தன்னுடைய உண்மையான ஆன்மீக அடையாளத்தினை உணர முடியும். அதன் பின்னர், ஜடவுடல் என்னும் சிறையினுள் ஆத்மா மீண்டும் பந்தப்படத் தேவையில்லை.

பரதரின் ஆன்மீகப் பயிற்சிகள்

மறுபிறவியின் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே இந்த மனிதப் பிறவி கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையைப் புரிந்துகொண்ட மன்னர் பரதர், இமயமலையின் அடிவாரத்திலுள்ள புலஹ ஆசிரமம் என்னும் புனித ஸ்தலத்திற்குப் புறப்பட்டார். அங்கே கண்டகி நதிக்கரையில் அந்த முன்னாள் மன்னர் தனிமையில் வாழ்ந்து வந்தார். அரச உடைக்குப் பதிலாக மான்தோலை மட்டுமே உடையாக அணிந்தார். அவரது தலைமுடியும் தாடியும் நீளமாக வளர்ந்து சடையானது. தினமும் நதியில் மூன்றுமுறை நீராடியதால் அவரது சடைமுடி எப்போதும் ஈரமாகவே இருந்தது.

தினசரி காலையில் ரிக் வேத மந்திரங்களை உச்சரித்து பரதர் முழுமுதற் கடவுளை வணங்கி வந்தார். சூரிய உதயத்தின்போது அவர் பின்வரும் மந்திரத்தை உச்சாடனம் செய்வார்: “முழுமுதற் கடவுள் தூய ஸத்வ குணத்தில் வீற்றுள்ளார். அவர் பிரபஞ்சம் முழுவதையும் ஒளியூட்டுபவர், தனது பல்வேறு சக்திகளின் மூலம் பௌதிக இன்பத்தை விரும்பும் உயிர்வாழிகளை அவரே பராமரித்து வருகிறார், அவர் தனது பக்தர்களுக்கு எல்லா ஆசிகளையும் வழங்கக்கூடியவர்.”

பகல்வேளையில் பரதர் பல்வேறு பழங்களையும் கிழங்குகளையும் சேகரித்து, வேத நூல்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி பரம புருஷ பகவானுக்கு நைவேத்யம் செய்து, அதன் பின்னரே அவற்றை உண்பார். முன்பு புகழ்பெற்ற மன்னராக உலக ஐஸ்வர்யங்களுடன் இருந்தபோதிலும், பௌதிக இன்பத்தின் மீதான அவரது ஆசைகள் அனைத்தும் தவ வலிமையினால் தற்போது அழிந்துவிட்டன. பிறப்பு, இறப்பின் சுழற்சிக்கு மூல காரணமாக விளங்கும் பௌதிக ஆசை என்னும் பிணைப்பிலிருந்து அவர் விடுபட்டார்.

பரமபுருஷரின் மீதான இடைவிடாத தியானத்தினால், பரதர் ஆன்மீகப் பரவசத்தின் அறிகுறிகளை உணர ஆரம்பித்தார். அவரது இதயம் பரவசமெனும் நீரால் நிரப்பப்பட்ட ஏரியைப் போல இருந்தது. அவரது மனம் அந்த ஏரியில் நீந்தியபோது அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீ ர் பெருகியது.

குட்டி மானை நதியிலிருந்து பரதர் எடுத்து வருதல்

பரதரிடம் தஞ்சமடைந்த மான்குட்டி

ஒருநாள், பரதர் நதிக்கரையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது, நீர் அருந்துவதற்காக ஒரு பெண்மான் அங்கு வந்தது. கருவுற்றிருந்த அந்த மான் நீர் அருந்திக் கொண்டிருந்தபோது காட்டிலிருந்த சிங்கம் ஒன்று பெருத்த ஓசையுடன் கர்ஜித்தது. மிகவும் அச்சம் கொண்ட மான் நதியை விட்டுத் தாவி ஓடியது, ஓடும் நதியில் அச்சத்துடன் மான்குட்டியை ஈன்றது. அச்சத்தினாலும் குறைப் பிரசவம் நிகழ்ந்ததாலும் உடல் தளர்ந்த அந்த மான் ஒரு குகையினுள் நுழைந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

மஞ்சள்நிற மான்குட்டி நதியின் நீரில் மிதப்பதைக் கண்ட பரதர் மிகவும் அனுதாபப்பட்டார். நீரிலிருந்து அதனைத் தூக்கி வந்தார். தாயை இழந்த அனாதை என்பதால் அதனைத் தமது ஆசிரமத்திற்குக் கொண்டு வந்தார். கற்றறிந்த ஆன்மீகவாதிகளின் கண்ணோட்டத்தில் உடலின் வேறுபாடுகள் பொருளற்றவை. பரதர் தன்னுணர்வு பெற்றவராக இருந்ததால், எல்லா உடல்களிலும் ஆத்மாவும் பரமாத்மாவும் இருப்பதை அறிந்து, எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தார். மான்குட்டிக்கு தினமும் பசுமையான புற்களைக் கொடுத்து அதனை வசதியாக வைக்க முயற்சி செய்தார்.

 

மானிடம் பற்றுதல் கொண்ட பரதர்

இருப்பினும், விரைவாக அவர் அந்த மானிடம் பெரும் பற்றுதலை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்; மானுடன் உறங்கினார், மானுடன் நடந்தார், மானுடன் நீராடினார், மானுடனேயே உண்ணவும் செய்தார். பழங்கள், மலர்கள், மற்றும் கிழங்குகளைச் சேகரிக்க காட்டிற்குச் சென்றபோது, மானையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அதனைத் தனியாக விட்டுச்சென்றால், நாய்களாலோ நரிகளாலோ புலிகளாலோ அடித்துக் கொல்லப்படலாம் என்று பயந்தார். மான்குட்டி காட்டில் குழந்தையைப் போல தாவிக்குதித்து விளையாடுவதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.

சில நேரங்களில் மான்குட்டியை தோள்களில் வைத்து தூக்கிச் செல்வார். பகலில் அதனைத் தனது மடியில் வைத்திருப்பார். இரவில் அவர் உறங்கும்போது அந்த மான் அவரது மார்பில் படுத்து ஓய்வெடுக்கும். அந்த அளவிற்கு அவரது இதயம் மானின் மீதான பாசத்தால் நிரம்பியிருந்தது. எப்போதும் மானை வருடிக் கொடுப்பார், சில நேரங்களில் அதற்கு முத்தமும் கொடுப்பார். இவ்வாறாக அந்த மானின் மீதான பாசத்தினால் பரதர் பந்தப்படுத்தப்பட்டார்.

தனது ஆன்மீகக் கடமைகளுக்கு மத்தியில் மானிடம் மனதைப் பறிகொடுக்கும் பரதர்

தன்னுணர்வை இழந்த பரதர்

மானை வளர்ப்பதில் பற்றுதல் கொண்ட பரதர் படிப்படியாக முழுமுதற் கடவுளின் மீதான தியானத்தைத் தவிர்த்தார். தன்னுணர்வு என்னும் மனித வாழ்வின் உண்மையான நோக்கத்திலிருந்து அவரது கவனம் சிதறியது. தாழ்ந்த உயிரினங்களில் கோடிக்கணக்கான பிறவிகளைக் கடந்த பின்னரே ஓர் உயிர்வாழிக்கு மனிதப்பிறவி கிட்டுவதாக வேதங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. இந்த ஜடவுலகம் பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடல் என்றும், மனித உடல் அக்கடலைக் கடப்பதற்கு ஏற்ற உறுதியான படகு என்றும் ஒப்பிடப்படுகின்றன. வேத நூல்களும் ஆன்மீக குருமார்களும்

திறமையான படகோட்டிகள் என்றும், மனித உடலின் வசதிகள் படகினை விரும்பிய இலக்கை நோக்கிக் கொண்டு செல்லும் தென்றல் காற்று என்றும் ஒப்பிடப்படுகின்றன. இவ்வெல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டு, ஒருவன் தனது வாழ்வை தன்னுணர்விற்காக பயன்படுத்திக் கொள்ளாவிடில், அவன் ஆன்மீகத் தற்கொலை செய்து கொண்டவனாவான். மேலும், விலங்கின் உடலில் மீண்டும் பிறவியெடுக்கும் அபாயத்திற்கு அவன் உள்ளாகிறான்.

இக்கருத்துகளை எல்லாம் அறிந்திருந்தபோதிலும், “என்னிடம் தஞ்சமடைந்துள்ள இந்த மானை எப்படி என்னால் புறக்கணிக்க முடியும்? இஃது எனது ஆன்மீக வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தாலும் இதனை நான் அலட்சியப்படுத்த முடியாது. என்னிடம் சரணடைந்த ஆதரவற்ற நபரைப் புறக்கணிப்பது பெருங்குற்றம்” என்று பரதர் தன்னுள் நினைத்துக் கொண்டார்.

 

காணாமல் போன மான்

ஒரு நாள் தியானம் செய்து கொண்டிருந்தபோது, பரதர் வழக்கம்போல பகவானை நினைப்பதற்குப் பதிலாக மானை நினைக்க ஆரம்பித்தார். தியானம் செய்வதை நிறுத்திவிட்டு, மான் எங்குள்ளது என்று சுற்றிலும் தேடிப் பார்த்தார். ஆனால் மானைக் காண முடியவில்லை. பணத்தை இழந்த கஞ்சனைப்போல் அவரது மனம் தவித்தது. ஆசனத்திலிருந்து எழுந்து தனது ஆசிரமத்தைச் சுற்றிலும் தேடினார். ஆனால் அந்த மான் எங்கும் காணப்படவில்லை.

“எனது மான் எப்போது திரும்பி வரும்? புலிகளிடமிருந்தும் மற்ற விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பாக இருக்குமா? எனது தோட்டத்தில் அது நடந்து செல்வதையும் பசுமையான புற்களை உண்பதையும் நான் எப்போது மீண்டும் காண்பேன்?” என்று பரதர் எண்ணினார்.

பகல்பொழுது தேயத் தொடங்கியது, மான் திரும்பி வரவில்லை. பரதர் கவலையில் மூழ்கினார். “எனது மானை நாயோ நரியோ தின்றிருக்குமா? கொடிய பன்றிகளின் கூட்டத்தாலோ தனியாகத் திரியும் புலியினாலோ அது தாக்கப்பட்டிருக்குமா? சூரியன் இப்போது அஸ்தமித்துக் கொண்டுள்ளான். தனது தாயின் மரணத்திற்குப்பிறகு என்னையே நம்பியிருந்த அந்த அப்பாவி மிருகம் இன்னும் திரும்பி வரவில்லையே.”

மிருதுவான இளம் கொம்புகளை வைத்து தன்னுடன் அந்த மான் எவ்வாறு விளையாடும் என்பதை பரதர் நினைவுகூர்ந்தார். சில நேரங்களில் பரதரின் வழிபாட்டையோ தியானத்தையோ அந்த மான் இடையூறு செய்யும். அப்போது அவர் எரிச்சலடைவதுபோல நடித்து அதனை விரட்டுவார், அதனால் அச்சம் கொண்டு அஃது உடனடியாக சற்று தொலைவில் சென்று அமைதியாக அமர்ந்து கொள்ளும்–இவை எல்லாவற்றையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

“எனது மான் சின்னஞ்சிறு இளவரசன் போன்றவன். அவன் எப்போது திரும்பி வருவான்? எப்போது அவன் எனது புண்பட்ட நெஞ்சத்திற்கு அமைதியைத் தருவான்?”

பரதரின் மரணம்

தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல், மானின் காலடித் தடங்களை வைத்து அந்த மானைத் தேடி நிலவொளியில் புறப்பட்டார். “இந்த மான் எனக்கு மிகவும் பிரியமானது என்பதால், எனது சொந்த மகனை இழந்துவிட்டதுபோல நான் வருந்துகிறேன். பிரிவு என்னும் தகிக்கும் காய்ச்சலால், கொழுந்துவிட்டு எரியும் காட்டின் நடுவில் இருப்பதுபோல உணர்கிறேன். துயரத்தால் என் மனம் தீப்பற்றி எரிகிறது,” என்று ஒரு பித்தனைப் போல அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டார்.

அபாயகரமான காட்டுப் பாதையில், பரதர் இழந்த மானைக் கவலையுடன் தேடிச் சென்றபோது, திடீரென்று கீழே விழுந்து பலத்த காயமுற்றார், மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அப்போது திடீரென்று அந்த மான் அவருக்கு முன்பாக தோன்றியது, பரதரின் அருகில் ஒரு பாசமுள்ள மகனைப் போல அமர்ந்து அவரை உற்று நோக்கியது.

இவ்வாறாக மரணத் தருவாயில் மன்னரின் மனம் மானின் மீது முற்றிலும் மூழ்கியது. “ஒருவன் தனது உடலை விடும்போது எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன் அடைகிறான்” என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து (8.6) அறிவோம்.

பரதர் மானாகப் பிறத்தல்

மன்னர் பரதர் தனது அடுத்த பிறவியில் ஒரு மானின் உடலினுள் பிரவேசித்தார். உயிர்வாழிகள் தமது முந்தைய பிறவியின் வாழ்க்கையை பெரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. இருப்பினும் தான் அடைந்த ஆன்மீக முன்னேற்றத்தின் காரணத்தினால், மன்னர் பரதர் மானின் உடலில் இருந்தபோதிலும் அவ்வுடலில் பிறந்ததற்கான காரணத்தை அறிந்திருந்தார். “நான் எவ்வளவு முட்டாளாக இருந்துவிட்டேன். தன்னுணர்வுப் பாதையிலிருந்து விழுந்து விட்டேனே! குடும்பத்தினரையும் தேசத்தையும் துறந்து தியானம் செய்வதற்காக வனத்தில் புனிதமான ஒரு தனியிடத்திற்குச் சென்று அகிலத்தின் பகவானை எப்போதும் தியானித்து வந்தேன். ஆனால் எனது முட்டாள்தனத்தால் ஒரு மானின் மீது பற்று வைத்தேன். அப்பற்றுதலால் இவ்வுடலைப் பெற்றுள்ளேன். என்னுடைய தற்போதைய நிலைக்கு என்னைத் தவிர வேறு யாரையும் நான் பழிக்க முடியாது,” என்று அவர் வருந்தத் தொடங்கினார்.

மானின் நினைவுடன் பரதர் மரணமடைதல்

மானின் உடலில் ஆன்மீக முன்னேற்றம்

மானாக இருந்தபோதிலும் மதிப்பு வாய்ந்த நற்பாடத்தைக் கற்றுக் கொண்டதால், பரதர் தன்னுணர்வுப் பாதையில் தொடர்ந்து முன்னேறினார். அனைத்து பௌதிகப் பற்றுதல்களிலிருந்தும் விடுபடத் தொடங்கினார். அவர் சாறு நிறைந்த பசுமையான புற்களைப் பற்றி கவலைப்படவில்லை, தனது கிளைக் கொம்புகள் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன என்பது குறித்து துளியும் கண்டு கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, இதர மான்களின் சங்கத்தைத் தவிர்த்தார், தான் பிறந்த காலஞ்ஜர மலைப்பகுதியில் தனது தாயைத் துறந்தார், முற்பிறவியில் தியானத்தினைப் பயிற்சி செய்த புலஹ ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தார். இம்முறை பரம புருஷ பகவானை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தார். மிகச்சிறந்த முனிவர்களும் சாதுக்களும் வசித்த குடில்களுக்கு அருகில் தங்கினார், பௌதிகவாதிகளுடனான எல்லா தொடர்புகளையும் தவிர்த்து உலர்ந்த இலைகளை மட்டும் உட்கொண்டு எளிமையாக வாழ்ந்தார். “புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் எல்லா அறிவிற்கும் தோற்றுவாய். அவரே எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் வீற்றிருக்கும் பரமாத்மா. அவர் அழகாகவும் அனைவரையும் வசீகரிப்பவராகவும் உள்ளார். அவரது தெய்வீகமான அன்புத் தொண்டில் நான் நித்தியமாக ஈடுபட்டிருப்பேன் என்ற நம்பிக்கையுடன் அவருக்குத் தலை வணங்கியபடி நான் இந்த உடலைவிட்டு வெளியேறுகிறேன்,” என்ற பிரார்த்தனையினை மரண நேரம் வந்தபோது மானின் உடலிலிருந்த பரதர் முன்வைத்தார்.

(மானின் உடலிலிருந்து பிரிந்த பரதர் தன்னுணர்வின் பக்குவநிலையை அடைந்தது எவ்வாறு? அடுத்த இதழில் காண்போம்.)

மேலும் பார்க்க

மன்னர் பரதர் பாகம் 2
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives