வழங்கியவர்: ஜீவன கெளரஹரி தாஸ்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் அழகான கங்கைக் கரையோரத்தில் அமைந்திருப்பதே கோல்கத்தா மாநகரம். வேத சாஸ்திரங்கள் ஆச்சாரியரின் பிறப்பிடத்தை ஸ்ரீபாத க்ஷேத்திரம் என போற்றுவதால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தோன்றிய கோல்கத்தா நகரை பக்தர்கள் ஸ்ரீபாத க்ஷேத்திரம் என அழைக்கின்றனர்.
கோல்கத்தாவும் கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களும்
கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தின் அச்சாணியாக திகழ்ந்த கெளடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் இவ்வுலகில் தோன்றுவதற்கும் இறுதியாக கிருஷ்ணரின் நித்திய லீலையில் மீண்டும் நுழைவதற்கும் கோல்கத்தா நகரையே தேர்ந்தெடுத்தார். ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு கோல்கத்தாவையே தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்யும்படி நித்யானந்த பிரபுவிடம் கட்டளையிட்டபோது, நித்யானந்த பிரபு கோல்கத்தாவை மையமாக வைத்தே செயல்பட்டார். நித்யானந்த பிரபு கோல்கத்தாவிற்கு அருகிலிருக்கும் கர்தஹா என்னுமிடத்தில் இல்லத்தை ஏற்படுத்தி முழு வீச்சில் தீவிரமாக கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சைதன்ய மஹாபிரபு இன்றைய கோல்கத்தா நகருக்கு அருகில் வசித்த பாகவத ஆச்சாரியரிடமிருந்து தொடர்ச்சியாக ஏழு நாள் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாட்டு வடிவில் கேட்டதால், கெளடீய வைஷ்ணவர்கள் இவ்விடத்தை குப்த விருந்தாவனம் என்றும் போற்றுகின்றனர்.
இன்றைய கோல்கத்தா நகரைச் சுற்றி சைதன்ய மஹாபிரபு, நித்யானந்த பிரபு மற்றும் அவரது சகாக்களின் எண்ணற்ற லீலைகள் நிகழ்ந்துள்ளதாலும், ஆச்சாரியர்கள் பலரின் லீலா ஸ்தலங்கள் அமைந்துள்ளதாலும், இவ்விடத்தில் கிருஷ்ண உணர்வு சேவையில் ஈடுபடுவது அதிக நன்மையைக் கொடுக்கும். ஸ்ரீல பிரபுபாதர் தமது குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரை முதன்முதலில் கோல்கத்தாவில் சந்தித்தபோதுதான், இஸ்கான் இயக்கத்திற்கு விதை ஊன்றப்பட்டது. இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைநகரமான மாயாபுர் நிலம் குறித்த இறுதி முடிவுகளும் கோல்கத்தாவில் அரங்கேறிய காரணத்தினால், ஸ்ரீல பிரபுபாதர் கோல்கத்தாவே மாயாபுரின் நுழைவாயில் என பிரகடனப்படுத்தினார்.
ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீகப் பயணத்திற்கு அஸ்திவாரமாகத் திகழ்ந்த கோல்கத்தாவின் முக்கிய லீலா ஸ்தலங்களைச் சற்று காண்போம்.
ஸ்ரீல பிரபுபாதரின் பிறப்பிடம்
ஸ்ரீல பிரபுபாதர் செப்டம்பர் 1, 1896ஆம் ஆண்டு கோல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் கெளர் மோகன் தே, ஸ்ரீமதி ரஜனி தம்பதியருக்கு தெய்வீக மகனாகத் தோன்றினார். ஸ்ரீல பிரபுபாதருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் அபய் சரண் (கிருஷ்ணரின் திருவடிகளில் தஞ்சமடைந்ததால், அச்சமின்றி இருப்பவர் ). ஸ்ரீல பிரபுபாதரின் அன்னையான ஸ்ரீமதி ரஜனி தனது தாய் வீட்டின் பலா மரத்தடியில் ஸ்ரீல பிரபுபாதரை ஈன்றெடுத்தாள். நூற்றுநாற்பது வருடம் பழமை வாய்ந்த இப்பலாமரத்தை பக்தர்கள் தற்போதும் காணலாம்.
ஸ்ரீல பிரபுபாதர் தமது பிறப்பிடத்தை இஸ்கான் இயக்கம் வாங்க வேண்டும் என 1977இல் விருப்பப்பட்டார். அவரது விருப்பம் 2013ஆம் ஆண்டில் நிறைவேறியது. ஸ்ரீல பிரபுபாதரின் பிறப்பிடம் இனி வரக்கூடிய தலைமுறைக்காகப் பாதுகாக்கப்பட்டு, அங்கு ஒரு சிறு கோயிலும் எழுப்பப்பட உள்ளது.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது ஆன்மீக குருவான ஈஸ்வர புரியின் பிறப்பிடமான குமாரஹட்டத்திற்கு விஜயம் செய்தபோது, அங்கிருந்த மண்ணில் உருண்டு புரண்டு, அந்த தூசிகளே தமது உண்மையான செல்வம் என்றும் உயிர்மூச்சு என்றும் பிரகடனப்படுத்தினார். அந்த மண்ணை அவர் பத்திரமாக பாதுகாத்து, தினந்தோறும் அதனை மஹாபிரசாதமாக சிறிது உண்டார். ஆச்சாரியர்களின் பிறப்பிடத்தை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற்கு சைதன்ய மஹாபிரபு இச்செயலின் மூலம் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
ராதா-மதனமோஹனரின் கோயில்
ஸ்ரீல பிரபுபாதரின் பிறப்பிடத்திற்கு எதிரில் 300 மீட்டர் தெற்கே நானூறு வருடம் பழமை வாய்ந்த ராதா-மதனமோஹனர் கோயில் அமைந்துள்ளது. அபய் சரண் பிறந்த ஆறாவது நாளில் பாரம்பரிய சடங்குகள் இக்கோயிலில் நிறைவேற்றப்பட்டன. அபய் தமது சிறு வயதில் அடிக்கடி இக்கோயிலுக்குச் செல்வது வழக்கம்.
கோவிந்த பவனம்
ஸ்ரீல பிரபுபாதரின் தந்தையான கௌர் மோகன் தே அலகாபாத் நகருக்கு இடம்பெயரும் வரை கோல்கத்தாவின் மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள கோவிந்த பவனில் வசித்தார். அவர் தினமும் காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை பூஜையில் ஈடுபடுவார். அவர் தமது துணி வியாபாரத்தை கவனித்து விட்டு, இரவு 10 மணிக்கு மேல் இல்லம் திரும்பி, மீண்டும் பூஜையில் ஈடுபடுவார். அவர் ஸ்ரீஸ்ரீ ராதா கோவிந்தருக்கு சேவை செய்வதையே தமது முக்கிய கடமையாகக் கருதினார், குடும்பத்தைப் பராமரிப்பதற்காக சிறு வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார்.
ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தரின் கோயில்
கோவிந்த பவனிற்கு எதிரில் சற்று தொலைவில் மகாத்மா காந்தி சாலையில் அமைந்திருப்பதே ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தரின் கோயில். குறுகலான நுழைவாயில் கொண்ட இப்பெரிய கோயிலில் அஷ்டதாதுவினால் செய்யப்பட்ட அற்புத அழகைக் கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தரின் விக்ரஹம் உள்ளது. இந்த விக்ரஹம் தரிசிப்பவர்களின் இதயத்தை உடனடியாக ஈர்க்கும் வகையில் கிருஷ்ணர் திரிபங்க வடிவில் (மூன்று வளைவுகளுடன்) காட்சியளிக்கிறார்.
ஸ்ரீல பிரபுபாதர் தமது சிறு வயதிலேயே அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை அழைத்து இக்கோயிலின் முற்றத்தில் ஜகந்நாதரின் ரத யாத்திரையை மேற்கொண்டார். இன்று இஸ்கான் சார்பாக உலகின் எல்லா பெருநகரங்களிலும் ஜகந்நாதரின் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. தமது ஆரம்ப கால கிருஷ்ண உணர்வில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தரே பல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி கூறுவார்.
ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தருடைய கோயிலுக்கு எதிர் திசையில் அமைந்திருக்கும் பழமையான நீண்ட கட்டிடத்தின் ஒரு பகுதியில் கெளர் மோகன் துணி வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார்.
மோதிலால் பள்ளி
மகாத்மா காந்தி சாலையின் சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ளது மோதிலால் பள்ளி. இங்குதான் ஸ்ரீல பிரபுபாதர் தமது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். ஸ்ரீல பிரபுபாதர் பெளதிகப் படிப்பில் அதிக நாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என அவரது அன்னை விரும்பினாள், தந்தையோ இவர் ஸ்ரீமதி ராதாராணியின் தூய பக்தராக சேவை புரிய வேண்டும் என விரும்பினார். எனவே, அபய் சரணின் தந்தை தமது இல்லத்திற்கு பல வைஷ்ணவ சாதுக்களை அழைத்து, தமது மகன் ஸ்ரீமதி ராதாராணியின் தூய பக்தனாகச் செயல்பட, ஆசிர்வதிக்கும்படி வேண்டுவார்.
ஸ்ரீல பிரபுபாதர் தமது கல்லூரி பருவத்தை கிறிஸ்துவ கல்லூரியான ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் ஆரம்பித்தார். அங்கு அவர் சமஸ்கிருதம், ஆங்கிலம், மற்றும் தத்துவமும் பயின்றார். அவர் தமது கல்லூரி நாள்களில் நண்பர்களுடன் இணைந்து சைதன்ய மஹாபிரபுவைப் பற்றிய ஒரு நாடகத்தையும் அரங்கேற்றினார்.
உல்தடங்கா சந்திப்பு
ஸ்ரீல பிரபுபாதர் தமது நண்பரான நரேந்திர நாத்தின் வற்புறுத்தலினால் 1922ஆம் ஆண்டு கெளரி பாரி சாலையிலுள்ள உல்தடங்கா என்னுமிடத்தில் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரை சந்தித்தார். அந்த முதல் சந்திப்பிலேயே ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அபய் சரணிடம், “நீங்கள் படித்த இளைஞனாக இருக்கிறீர். நீங்கள் ஏன் சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களை மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யக் கூடாது?” என வினவினார்.
அச்சமயத்தில் ஸ்ரீல பிரபுபாதர் காந்தியடிகளின் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தினால், நாட்டிற்கு சுதந்திரம் வாங்குவதே முதல் நோக்கம் எனக் கூறினார். ஆயினும், கிருஷ்ண உணர்வு நேரம், இடம், மற்றும் சூழ்நிலையைச் சார்ந்து இருப்பதில்லை என்று ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் பதிலளித்தார். கிருஷ்ண உணர்வைப் பரப்புவதே அவசர கடமை என்றும், உடல் சார்ந்த சுதந்திர உணர்வினால் மகிழ்ச்சி அடைய முடியாது என்றும் அவர் குறிப்பிட, ஸ்ரீல பிரபுபாதர் அவரது கூற்றை ஏற்று, அவரைத் தம் குருவாக ஏற்றார்.
பாக்பஜார் கெளடீய மடம்
ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் 1930ஆம் ஆண்டிலேயே மிக பிரமாண்டமான கோயிலை பளிங்கு கற்களால் கோல்கத்தாவின் பாக்பஜார் பகுதியில் நிறுவினார். அதற்கு முன் அவரும் அவரது சீடர்களும் உல்தடங்கா பகுதியில் சாதாரண அறைகளில் தங்கியிருந்தனர். அவர் 1936ம் ஆண்டு இம்மடத்தின் மாடியில்தான் தம் உடலை விட்டு கிருஷ்ணரின் நித்திய லீலையில் புகுந்தார். இன்றும் கோல்கத்தா செல்லும் பக்தர்கள் இந்த அற்புதமான கோயிலை தரிசிக்கலாம்.
கிதர்புர் துறைமுகம்
மேற்கத்திய நாடுகளில் கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக குருவின் கட்டளையினை நிறைவேற்ற ஸ்ரீல பிரபுபாதர் ஆகஸ்ட் 13, 1965ஆம் ஆண்டு ஜலதூதா என்னும் சரக்கு கப்பலில் கோல்கத்தாவின் கிதர்புர் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். கையில் சற்றும் பணமில்லாமல், குருவின் ஆணையிலும் கிருஷ்ணரின் திருநாமத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, ஜீவராசிகளின் மீதான அபரிமிதமான கருணையுடன் திகழ்ந்த ஸ்ரீல பிரபுபாதரை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த பெருமை கிதர்புர் துறைமுகத்தைச் சாரும்.
இஸ்கான் கோல்கத்தா
இந்தியாவின் முதல் இஸ்கான் கோயில் கோல்கத்தாவின் ஆல்பர்ட் சாலையில் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீ ஸ்ரீ கௌர நடராஜ ராதா-கோவிந்தர், ஜகந்நாதர்-பலதேவர்-சுபத்திரை ஆகியோரின் விக்ரஹங்கள் அனைவரையும் கவருகின்றனர். கோல்கத்தாவில் இஸ்கான் சார்பாக நிகழ்த்தப்படும் ஜகந்நாதரின் ரத யாத்திரை உலகின் மாபெரும் ரத யாத்திரைகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. புரி ரத யாத்திரையில் முப்பது இலட்சம் பேர் பங்கேற்கின்றனர். கோல்கத்தா ரத யாத்திரையில் ஏழு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். ஒன்பது நாள் விழாவில் மொத்தம் 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
கோல்கத்தாவில் ரத யாத்திரைக்கு காலப்போக்கில் மேற்குவங்க அரசாங்கம் விடுமுறை வழங்கும் என்றும், கோல்கத்தா நகரைச் சுற்றி பத்து இஸ்கான் கோயில்கள் எழுப்பப்பட வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீல பிரபுபாதரின் ஆசிர்வாதம்
மாயாபுர் செல்லும் பக்தர்கள் அனைவரும் ஓரிரு நாட்கள் கோல்கத்தாவில் தங்கி மேற்கூறிய இடங்களை தரிசிப்பதன் மூலம் ஸ்ரீல பிரபுபாதருக்கு நன்றியைத் தெரிவிக்கலாம். அது மட்டுமின்றி, இதன் மூலமாக ஸ்ரீல பிரபுபாதரின் மீதான நமது உறவும் ஆழமாகும், ஆன்மீகப் பயணத்திலும் திருப்புமுனை ஏற்படும்.
இஸ்கான் கோல்கத்தா கோயிலில் ஸ்ரீல பிரபுபாதர் தொடர்பான லீலா ஸ்தலங்களை தரிசிக்க வருபவர்களுக்கு வழிகாட்டி சேவை செய்வதற்காக ஒரு குழுவையும் ஏற்படுத்தி உள்ளனர். ஸ்ரீல பிரபுபாதரின் லீலா ஸ்தலங்களை தரிசித்து கலி யுக மக்களுக்கு கிருஷ்ண உணர்வைப் பரப்பிய அவரின் கருணை உள்ளத்திற்கு தலை வணங்குவோம்.