—நவ யோகேந்திர ஸ்வாமியின் பேட்டியிலிருந்து
இரவு மணி 9:30. விருந்தாவனத்தில் கோடை கால இரவு வேளையில், ஸ்ரீல பிரபுபாதர் என்னை அவரது அறைக்கு அழைத்து சில சேவைகளை வழங்கிய பின்னர் கூறினார், “நீங்கள் இப்போது ஓய்வெடுக்கச் செல்லலாம்.” அதனைத் தொடர்ந்து, ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்கு முன்பாக நான் எனது பாய், கொசு வலை முதலியவற்றை தயார் செய்ய பதினைந்து நிமிடம் ஆயிற்று. சுமார் பத்து மணி இருக்கும். பிரபுபாதருடைய அறையிலிருந்து சப்தம் கேட்டது. பிரபுபாதர் உறங்கியிருக்க வேண்டுமே என்று நினைத்தபடி, ஜன்னலில் பார்க்க, அவர் சாஸ்திரங்களை மொழிபெயர்த்து விளக்கவுரை வழங்கிக் கொண்டிருந்தார். அவர் மறுநாள் காலை வரை அப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
பிரபுபாதர் என்னை அழைத்தபோது, நான் அவரிடம் கூறினேன், “பிரபுபாதரே, நீங்கள் சற்றும் உறங்கவில்லை. உங்களின் உடல் ஆரோக்கியமாக இல்லை, நீங்கள் சிறிதளவேனும் உறங்கியிருக்க வேண்டும்.” பிரபுபாதர் என்னைப் பார்த்து கூறினார், “நவ யோகேந்திரனே, சில நேரத்தில் இந்த உடல் நோயுற்று இருக்கலாம், சில நேரம் நன்றாக இருக்கலாம்; ஆனால் எல்லா நிலையிலும் நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும். அதுவே உங்களுடைய நித்தியமான சொத்து. அது மட்டுமே உங்களுடன் வரும்.”
கிருஷ்ண சேவையைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் எவ்வளவு சிந்தித்தார் என்பதைப் பாருங்கள்! அவர் கிருஷ்ணரிடம் தம்மை எவ்வளவு அர்ப்பணித்திருந்தார்! அவர் வயதில் முதியவராக உடல் நலம் குன்றியவராக இருந்தபோதிலும், உறங்காமல் பணியாற்றினார். அவர் பணம் சம்பாதிப்பதற்காக கடின உழைப்பில் ஈடுபடவில்லை. அவர் மற்றவர்களின் நன்மைக்காக பணியாற்றினார், ஒவ்வொருவரின் நன்மைக்காகவே உழைத்தார். பிரபுபாதர் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பணியாற்றினார்.
பிரபுபாதர் கூறினார்: “இந்த உடல் பயனற்றது. ஒரு மிருகம் மடியும்போது, அதன் உடல் பயனுள்ளதாக உள்ளது. அதன் தோல், எலும்பு, சதை என அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் மனித உடலோ மரணத்திற்குப் பின்னர் பயனற்றதாக உள்ளது.கிருஷ்ண சேவைக்காக நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதுவே நமது சொத்து. உயிர் வாழும்போது நாம் கிருஷ்ணருக்குத் தொண்டாற்ற வேண்டும். கிருஷ்ண சேவையை ஒருபோதும் கைவிடக் கூடாது. யாரேனும் கிருஷ்ணருக்கு சேவை செய்யவில்லை என்றால், அஃது அந்த நபரின் துர்பாக்கியமாகும்.” ஸ்ரீல பிரபுபாதர் தம்மை எவ்வளவு அர்ப்பணித்திருந்தார்! அவர் தமது உடலைப் பற்றி சிந்திக்கவில்லை, மற்றவர்களின் நன்மையைப் பற்றி சிந்தித்தார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!