மஹாபிரபு சந்நியாசம் ஏற்று புரிக்குச் சென்று அங்கே ஸார்வபௌம பட்டாசாரியருடன் வேதாந்த விவாதத்தில் ஈடுபட்டு அவரை பக்தராக மாற்றியதை சென்ற இதழில் கண்டோம். இந்த இதழில், மஹாபிரபு மேற்கொண்ட தென்னிந்திய யாத்திரையைப் பற்றிக் காண்போம்.
யாத்திரையின் தொடக்கம்
மஹாபிரபுவின் மூத்த சகோதரரான விஸ்வரூபர் சந்நியாசம் ஏற்ற பின்னர், அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரைத் தேடுவதாக காரணம் கூறி, கௌராங்கர் தென்னிந்தியா செல்ல விரும்பினார். எனினும், அவரின் தென்னிந்தியப் பயணத்திற்கான உண்மையான காரணம், அங்குள்ள ஒவ்வொருவரையும் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் களங்கமற்ற பக்திப் பாதைக்கு மாற்றுவதே. மஹாபிரபுவின் பயணத்தை அறிந்த அவரது பக்தர்கள் அனைவரும் நித்யானந்த பிரபுவின் தலைமையில் அவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்; ஆயினும், மஹாபிரபு தனியாகச் செல்வதையே வலியுறுத்தினார். இருப்பினும், காலா கிருஷ்ணதாஸர் என்பவரை சேவகனாகக் கூட்டிச்செல்லுமாறு பக்தர்கள் வேண்டினர், அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
மேலும், பிரதாபருத்ர ராஜ்ஜியத்தின் தென் பகுதியின் ஆளுநராக இருந்த சிறந்த பக்தரான இராமானந்த ராயரைத் தமது பயணத்தின்போது சந்திப்பதற்கு பகவான் ஒப்புக் கொண்டார்.
தொழுநோயாளியின் விடுதலை
மஹாபிரபுவின் பயண வழியில் இருந்த கூர்மக்ஷேத்திரம் என்னும் கிராமத்தில், வாசுதேவர் என்ற பக்தர் ஒருவர் வசித்து வந்தார். அவரது உடல் தொழுநோயினால் அழுகிக் கொண்டிருந்தது, அந்த உடலை புழுக்கள் உண்டு வந்தன. ஆயினும், அவர் ஓர் உயர்ந்த பக்தராக இருந்த காரணத்தினால், தமது அச்சூழ்நிலையை முந்தைய பாவங்களின் விளைவு என்று ஏற்றுக் கொண்டிருந்தார். உடலின் வலியைப் பொறுத்துக் கொண்டு, ஹரே கிருஷ்ண மந்திரத்தை பக்தியுடன் உச்சரிப்பதே மிகச்சிறந்த தீர்வுக்கான வழி என்பதை உணர்ந்திருந்தார். அவரது உடலிலிருந்து ஏதேனும் ஒரு புழு கீழே விழுந்தால், அப்புழு ஒருவேளை மடிந்து விடுமோ என்ற எண்ணத்தில், மீண்டும் அதனை தமது உடலில் இடுவார்.
மஹாபிரபு கூர்மக்ஷேத்திரத்திலிருந்து புறப்பட்ட பின்னர், வாசுதேவர் அவர் தங்கியிருந்த இல்லத்தை அடைந்தார். மஹாபிரபுவைக் காணத் தவறிய துக்கத்தினால் வாசுதேவர் தரையில் மூர்ச்சையுற்று விழுந்தார். தமது பக்தனின் துன்பத்தை நிவர்த்தி செய்வதற்காக, ஸர்வசக்தி கொண்ட பகவான், உடனே திரும்பி வந்து அவரை அரவணைத்தார். என்னே ஆச்சரியம்! வாசுதேவர் முற்றிலும் குணமடைந்தார், அவரது உடல் அழகுற்றது. எம்பெருமானே! இந்த அழகிய உருவத்தினால் கர்வமடைந்து வாழ்வின் குறிக்கோள் கிருஷ்ணரைத் திருப்திப்படுத்துவதே என்பதை நான் மறந்து விடக் கூடாது,” என்று பிரார்த்தித்தார். பகவான் சைதன்யரும் அவ்வரத்தை அவருக்கு அளித்தார்.
மக்களுக்கு அறிவுரை
பகவான் சைதன்யரின் பிரகாசமான தோற்றம் அவரைக் கண்ட அனைவரையும் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மிகவும் கவரப்பட்ட ஒரு பிராமணர், உடனடியாக அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர விரும்பினார். எம்பெருமானே, நான் லௌகீகமான குடும்ப வாழ்வில் மூழ்கியுள்ளேன். தங்களுடன் பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் தயவுசெய்து என்னை விடுவியுங்கள்,” என்று அவர் பிரார்த்தித்தார். ஆனால் பகவான் சைதன்யரோ, இல்லை. நீங்கள் இங்கேயே தங்கி, ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து, மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்து, அவர்களை பக்தர்களாக்கவும். எங்கெல்லாம் செல்கின்றீர்களோ யாரையெல்லாம் சந்திக்கின்றீர்களோ அவர்களுக்கு கிருஷ்ணரைப் பற்றி உபதேசிக்கவும். இவ்வாறு எனது ஆணையினால் குருவாகி, இந்நாட்டை விடுவிக்கவும். நீங்கள் எனது உபதேசங்களைப் பின்பற்றினால், ஜட வாழ்வின் துன்பங்களினால் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டீர்கள்,” என்று பதிலளித்தார்.
எங்கெல்லாம் மஹாபிரபு சென்றாரோ அங்கெல்லாம் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடும்படி மக்களை வேண்டுவார். கிருஷ்ண உணர்வினால் தூண்டப்பட்ட அம்மக்கள், அடுத்த கிராமத்திற்குச் சென்று அவர்களையும் கிருஷ்ண உணர்வினால் தூண்டுவர். அவர்களோ மேலும் பலரை கிருஷ்ண உணர்வினால் தூண்டுவர். இவ்வாறாக ஹரே கிருஷ்ண கீர்த்தனம் தென்னிந்தியா முழுவதும் பரவியது.
இராமானந்தரைச் சந்தித்தல்
கோதாவரி நதிக்கரையில் இராமானந்த ராயரை சந்தித்த பகவான் ஆன்மீகத்தின் ஆழ்ந்த விவாதங்களில் விரைவில் நுழைந்தார். அனைத்தையும் அறிந்த, எவரையும் சார்ந்திருக்காத மஹாபிரபு, இராமானந்த ராயரை உள்நோக்கி ஊக்குவித்து பக்குவமான பதில்களை அளிக்கச்செய்யும் வகையில் கேள்விகளைக் கேட்கத் தீர்மானித்தார். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? அதை அடைவதற்கான வழி என்ன?” என்னும் முதல் கேள்விக்கு, வர்ணாஸ்ரம முறைப்படி கடமை களைச் செய்வதால் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும்,” என்று இராமானந்த ராயர் பதிலளித்தார். இது மேலோட்டமானது. தயவுசெய்து இதைவிட ஆழமாகக் கூறும்,” என்று கூறி மஹாபிரபு அதனை நிராகரித்தார்.
படிப்படியாக உயர்ந்த வழிமுறைகளை விளக்கிய இராமானந்த ராயர், பலனில் பற்று கொள்ளாமல் கடமைகளை செய்வதை அறிவுறுத்தினார். ஆனால் கௌராங்கர் அதை நிராகரித்தார். அடுத்ததாக வர்ணாஸ்ரமத்தின் கடமைகளைத் துறப்பதை ஆதரித்துப் பேசினார். பகவான் சைதன்யர் அதையும் நிராகரித்தார். அதன் பின்னர் இராமானந்தர் ஞானத்தை வளர்க்கும் பாதையை முன்மொழிந்தார். ஆனால் மஹாபிரபு அதையும்கூட நிராகரித்தார். இறுதியில், புலனுகர்ச்சியை அடைவதற்காக, அல்லது ஞானம் பெறுவதற்கான முயற்சி யிலிருந்து விடுபட்டு, கிருஷ்ணருக்குத் தூய பக்தி செய்வதன் மூலம் ஒருவன் வெற்றியடைய முடியும்,” என்று இராமானந்த ராயர் கூறினார். அதனைத் தகுந்த பதிலாக ஒப்புக்கொண்டபோதிலும், தயவுசெய்து இன்னும் அதிகமாகக் கூறவும்,” என்று பகவான் சைதன்யர் வேண்டினார்.
அதனைத் தொடர்ந்து, கிருஷ்ண உணர்வின் முன்னேற்ற நிலைகளை இராமானந்த ராயர் பல்வேறு இரவுகளில் விளக்கினார்; இறுதியில், ராதா கிருஷ்ணரின் அந்தரங்க லீலைகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துரைத்தார். பின்னர் பகவான் சைதன்யர் தனது உண்மையான ராதா கிருஷ்ண ரூபத்தை அவருக்கு வெளிப்படுத்தினார். பகவான் சைதன்யரும் இராமானந்தரும் பரஸ்பர தொடர்பில் கிருஷ்ணரைப் பற்றி விவாதிப்பதன் ஆனந்தத்தை அனுபவித்தனர். தயவுசெய்து இங்கு நீண்டநாள்கள் தங்கவும். அதன்மூலம் நாம் நிறைய உரையாட முடியும்,” என்று இராமானந்தர் வேண்டினார். நாம் இந்த விவாத விஷயங்களை சில நாள்களுக்கு மட்டுமின்றி, மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இணைந்து அனுபவிக்க விரும்புகிறேன். ஆனால் முதலில் எனக்கு தென்னிந்தியாவில் சில பிரச்சாரக் கடமைகள் உள்ளன. சில வருடங்கள் கழித்து நான் புரிக்குத் திரும்பிவிடுவேன். அதற்கு மத்தியில் தாங்களும் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகி புரிக்குச் செல்வீராக. அங்கு நாம் இணைந்து வாழலாம்,” என்று சைதன்ய மஹாபிரபு பதிலளித்தார்.
ஸ்ரீரங்கத்தை அடைதல்
பின்னர், அஹோபிலம், திருப்பதி, ஸ்ரீசைலம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி என பல்வேறு இடங்களுக்கு மஹாபிரபு தனது யாத்திரையைத் தொடர்ந்தார். விஷ்ணு கோயில்களை மட்டுமின்றி தேவர்களின் கோயில்களையும் தரிசித்தார். தேவர்களை சுதந்திரமான கடவுள்களாகப் பார்க்காமல், முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் தலைசிறந்த பக்தர்களாகக் கண்டார். அவர் பல்வேறு புண்ணிய நதிகளிலும் நீராடினார். மேலும், கிருஷ்ண உணர்வை கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்தார்; ஒவ்வோர் இரவும் ஒரு கோயிலில் தங்கியிருந்து அங்கிருந்த பண்டிதர்களுக்கு வைஷ்ணவ தத்துவத்தை அளிப்பார்; பொதுமக்களை ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடும்படித் தூண்டுவார்.
பகவான் சைதன்யர் அப்பயணத்தில் ஸ்ரீரங்கத்தை அடைந்தபோது சாதுர்மாஸ்யம் ஆரம்பமாயிற்று. அம்மாதங்கள் முழுவதும் தனது வீட்டில் தங்குமாறு உள்ளூர் பிராமணரான வேங்கடபட்டர் விடுத்த அழைப்பை ஏற்று, கௌராங்கர் அங்குத் தங்கினார். அவர் தங்களுடன் இருப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய ஸ்ரீ ரங்கநாதரின் பக்தர்கள், கோயில் விக்ரஹத்தின் முன்பு அவர் பரவசத்தில் ஆடிப் பாடுவதைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிராமணர்கள் அவரை மதிய உணவிற்கு அழைப்பர்.
வேங்கடபட்டருடன் ஒரு விவாதம்
ஒருமுறை வேங்கடபட்டரிடம் மஹாபிரபு வேடிக்கையாகக் கூறினார்: உமது வழிபாட்டிற்குரிய லக்ஷ்மி எப்பொழுதுமே நாராயணரின் மார்பில் இருக்கின்றாள். ஆயினும், அவள் பசுக்களை மேய்ப்பதில் ஈடுபட்டுள்ள எனது பெருமான் ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைவதற்கு ஏன் விரும்பினாள்? அந்த இலக்கை அடைவதற்காக அவள் நீண்ட விரதங்களையும் எண்ணிலடங்காத தவங்களையும் ஏன் மேற்கொண்டாள்?”
வேங்கடபட்டர் பதிலளித்தார், ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ நாராயணரும் ஒருவரே; எனினும், கிருஷ்ணரின் லீலைகள் அவற்றின் விளையாட்டுத் தன்மையினால் மிகவும் மகிழ்வூட்டக்கூடியவை. கிருஷ்ணர், நாராயணர் இருவரும் ஒரே நபர் என்பதால், கிருஷ்ணரின் மீதான லக்ஷ்மியின் விருப்பத்தில் எந்தப் பிழையும் இல்லை.”
ஆம்; இருப்பினும், அவளால் ராஸ நடனத்தினுள் பங்குகொள்ள முடியவில்லை. அஃது ஏன் என்று தங்களால் கூற முடியுமா?” என்று மஹாபிரபு கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவத்தின் மர்மத்தினுள் என்னால் நுழைய முடியாது, சாதாரண உயிர்வாழியான நான் எவ்வாறு முழுமுதற் கடவுளின் செயல்களைப் புரிந்துகொள்ள முடியும்? அவை இலட்சக்கணக்கான சமுத்திரங்களைவிட ஆழமானவை,” என்று வேங்கடபட்டர் விடையளித்தார்.
பகவான் சைதன்யர் பின்வருமாறு விளக்கமளித்தார்: முழுமுதற் கடவுளின் மீதான பயபக்தியுடன் கூடிய வழிபாட்டின் காரணத்தினால், ராஸ லீலையினுள் லக்ஷ்மி இணைய முடியவில்லை. வைகுண்டத்தில் பகவானின் மீது மதிப்பும் மரியாதையும் மேலோங்கியுள்ளது, ஆனால் விருந்தாவனமோ கிருஷ்ணரின் மீது எளிமையாகவும் இயற்கையாகவும் அன்பு செலுத்துவதற்குரிய இடமாகும். பழங்கள், பூக்கள், பசுக்கள், மற்றும் யமுனை நதியினால் விருந்தாவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலை மிகவும் நெருக்கமானதாக உள்ளது. லக்ஷ்மியால் தனது வைகுண்ட மனப்பான்மையைக் கைவிட முடியவில்லை; மேலும், வைகுண்ட ரூபத்தைக் கைவிட்டு இடையர் பெண்களின் ரூபத்தை மேற்கொண்டு விருந்தாவனவாசிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதற்கும் அவள் தயாராக இல்லை. கிருஷ்ணரின் ராஸ லீலையினுள் நுழைவதற்கு கோபியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதே பக்குவமான வழிமுறை.
இவ்வாறாக நகைச்சுவை கலந்த முறையில், கிருஷ்ணரை வழிபடுவதன் உயர்தன்மையை, நெருக்கமான உறவின் மனோபாவங்கள் முதலியவற்றை பகவான் சைதன்யர் எடுத்துரைத்தார். எனினும், தவறாக எண்ணாதீர். நாம் வெறும் வேடிக்கையாகவே பேசினோம். நான் தங்களை எவ்விதத்திலும் குறை கூறவில்லை,” என்று சமாதானமும் செய்தார்.
சீதையை இராவணன் கடத்தினானா?
மதுரைக்கு அருகில் பயணம் செய்தபோது, ஸ்ரீ இராமரிடம் சரணடைந்திருந்த பக்தர் ஒருவரின் வீட்டிற்கு மஹாபிரபு வந்தார். அன்னை சீதையை இராவணன் கடத்திச் சென்றுவிட்டான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதை நினைத்து அவர் எப்பொழுதும் வருத்தத்துடன் இருந்தார். அப்போது, பகவான் சைதன்யர், உண்மையில் இராவணனால் சீதையைக் கடத்தியிருக்க இயலாது,” என்று கூறி அவரைச் சற்று சமாதானப்படுத்தினார்.
சில நாள்கள் கழித்து, மஹாபிரபு இராமேஸ்வரத்திற்குச் சென்றபோது அங்கிருந்த ஓர் ஆஸ்ரமத்திலிருந்து கூர்ம புராணத்தின் பழங்கால கையெழுத்துப் பிரதி ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், இராவணன் உண்மையான சீதையைக் கொண்டு செல்லவில்லை என்றும், அவளது மாயத் தோற்றத்தையே கொண்டு சென்றான் என்றும், அத்தருணத்தில் சீதையின் உண்மையான உருவம் அக்னி தேவரால் பாதுகாக்கப்பட்டது என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக கூர்ம புராணத்தின் சம்பந்தப்பட்ட பக்கத்தை மதுரையில் இருந்த பக்தரிடம் பகவான் சைதன்யர் கொண்டு வந்தார். அதனைப் படித்து, அப்பக்தர் துயரத்திலிருந்து உடனடியாக விடுபட்டார், சந்நியாசியைப் போன்று தோற்றமளிக்கும்போதிலும், உண்மையில் தாங்கள் எனக்குப் பிரியமான ஸ்ரீ இராமரே,” என்று உறுதியுடன் கூறினார்.
படிப்படியாக, தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையை அடைந்த மஹாபிரபு, திருவனந்தபுரம், உடுப்பி, சிருங்கேரி போன்ற புனித ஸ்தலங்களுக்கு விஜயம் செய்தார்.
(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது)
அடுத்த இதழில்: ரத யாத்திரையில் மஹாபிரபு