போலி கடவுள்களிடம் ஏமாறாதீர்!

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

போலி கடவுள்களிடம் ஏமாறாதீர்!

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே காலை நடைபயிற்சியின்போது நிகழ்ந்த உரையாடல்.

ஸ்ரீல பிரபுபாதர்: எங்கெல்லாம் எனது புத்தகங்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் நமது இயக்கத்திற்கு வெற்றி நிச்சயம். மக்கள் அறியாமையில் உள்ளனர்; தற்காலிகமான ஜடவுடலே எல்லாம் என்று கருதுகின்றனர். நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. ஆனால் இந்த புத்தகங்கள் வேதங்களில் வழங்கப்பட்டுள்ள ஆத்ம விஞ்ஞானத்தை நமது ஆன்மீகத் தன்மை மற்றும் நித்திய வாழ்வைப் பற்றிய அறிவைத் தரவல்லவை.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, இருப்பினும் நமது இயக்கத்திற்கு தொந்தரவு செய்பவர்களும் உள்ளனரே. டென்வரை தலைமையகமாகக் கொண்ட பல போலி ஆன்மீக இயக்கங்களை நாம் சமாளிக்க வேண்டியுள்ளது. ஒரு குழுவினர் தன்னையே கடவுளாகக் கூறிக்கொள்ளும் உடல் பெருத்த தலைவனால் வழிநடத்தப்படுகிறது. அந்த குண்டு மனிதர் தனது தலையில் மயிலிறகையும் கையில் புல்லாங்குழலையும் வைத்துக் கொண்டு கிருஷ்ணரைப் போல வேடமிட்டுக்கொள்வதை அவர்களது பத்திரிகையில் நீங்கள் பார்த்திருக்கலாம். இத்தகைய இயக்கங்கள் அருவவாத மற்றும் நாத்திக கருத்துகளை பிரச்சாரம் செய்கின்றன: “கடவுள் ஒரு நபர் அல்லர்.” “இருப்பவை எல்லாம் கடவுளே.” “நாம் அனைவரும் கடவுள். குறிப்பாக, நமது குரு கடவுள்.”

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்களும் அவர்களுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள். வேத வாக்கியங்களும் குரு பரம்பரையும் பகவான் கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக வந்தவை. நமது அடிப்படை வலுவானது. இந்த முட்டாள் அயோக்கியர்களிடம் என்ன இருக்கிறது? அவர்கள் போலிகள், முட்டாள்கள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். அவனது தொண்டர்கள் அந்த குண்டனை கடவுளாக வழிபடுகின்றனரா? இத்தகு நவீன நாகரிகமடைந்த நகரத்தில் இத்தகைய அயோக்கியன் கடவுளாக வழிபடப்படுகிறானா?

சீடர்: உண்மை என்னவெனில், உள்ளூர் மக்கள் அவனை வெறுக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: நான் சவால் விடுகிறேன். அந்த அயோக்கியன் பொது இடத்தில் என்னை சந்திக்கட்டும். நான் அவனது முகத்தில் உதைக்கிறேன். அவன் கடவுளாக இருந்தால், மந்திரத்தின் மூலமாகவோ தனது சக்தியின் மூலமாகவோ என்னைக் கொல்லட்டும். அப்போது நான் அவனைக் கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன். இதுவே எனது சவால்.

அவனது தொண்டர்களிடம் கேட்கிறேன், “இத்தனை பெரிய முட்டாளாக உள்ளீர்களே! இந்த அயோக்கியனை கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளீர்களே? பல்வேறு வசதிகளைக் கொண்ட முன்னேறிய நாடான அமெரிக்காவில் இருக்கும் நீங்கள், ஏன் அடிமுட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் உள்ளீர்? இந்த அயோக்கியனால் இத்தனை எளிதாக ஏமாற்றப்பட்டு, முட்டாளாகிவிட்டீர்களே?”

சீடர்: சமீபத்தில் இந்தக் கடவுள் கள்ளக் கடத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளான். இப்போது அவனை கைது செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: அந்த ஸர்வ வல்லமை படைத்தவரிடம் கைது ஆணையை தள்ளுபடி செய்யும் ஆற்றல் உள்ளதா? இறைவன் மிகப்பெரியவர் என்பதை அனைவரும் அறிவர். அவன் கடவுளைப் போன்று மிகப்பெரிய நபரா என்ன? இருப்பினும், அவனை கடவுள் என்று நம்ப வேண்டுமா? இந்தப் பாவியைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கடவுள் மதிப்பற்றவரா? அயோக்கியனை கடவுள் என்று ஏற்றுக்கொள்வதா? என்ன முட்டாள்தனம்!

“இருப்பினும், கடவுளைப் பற்றிய வினாக்களையேனும் எழுப்புவதற்காக உங்களை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் உங்களது வினாக்களை பிரம்ம-மாத்வ-கௌடீய ஸம்பிரதாயம் மற்றும் வேத இலக்கியங்களின் அதிகாரபூர்வமான நபர்களிடம் வினவ வேண்டும்.”

[இயற்கையின் வரலாறு பற்றிய அருங்காட்சியகம் ஒன்றைச் சுட்டிக்காட்டியவாறு]: நம்மால் வரலாற்றை எவ்வளவு கால அளவிற்கு துல்லியமாகக் கணக்கிட முடியுமா? சூரியனின் வரலாற்றை அறிய முடியுமா? அஃது எப்போது படைக்கப்பட்டது? எப்போது செயல்பாட்டிற்கு வந்தது? டார்வினால் சூரியன், சந்திரன், ஆகாயம் முதலியவற்றின் வரலாற்றைக் கூற முடியுமா?

இவற்றின் வரலாற்றை வேத சாஸ்திரங்களின் பக்கங்களில் காணலாம். ஆனால் நீங்கள் கூறும் வரலாறு வெறும் கற்பனையே: “ஒரு துகள் இருந்தது, அது வெடித்தது. அஃது எப்படியோ சூரியனாகவும் சந்திரனாகவும் மற்ற அனைத்துமாகவும் உருவானது. பின் நாளடைவில் உயிரற்ற மூலக்கூறுகள் உணர்வினைப் பெற்று நம்மை போன்ற உயிர்வாழிகளை தோற்றுவிக்க ஆரம்பித்தன. ஜீவாத்மாவுக்கோ படைப்பாளியான பரமாத்மாவுக்கோ எந்தவொரு தேவையும் இல்லை.” என்ன ஒரு முட்டாள்தனம்? இன்னும் என்னென்ன முட்டாள்தனத்தையெல்லாம் எங்களை நம்பச் சொல்கிறீர்கள்?

இன்று நான் மொழிபெயர்த்த ஸ்ரீமத் பாகவத ஸ்லோகத்தில் இதுகுறித்து சிறந்த உதாரணம் ஒன்று உள்ளது: எவ்வாறு வேசி ஒருத்தி தனது தோற்றத்தினால் மக்களை ஏமாற்ற முயல்கிறாளோ அதே போல ஜட இயற்கையும் நம்மை ஏமாற்றுவதற்காக தனது தோற்றத்தை போலி குருக்களாகவும் விஞ்ஞானிகளாகவும் மாற்றிக்கொள்கிறது. நாமும் முட்டாள்களைப் போல இந்த வேசியிடம் நீண்ட நாள் உறவை ஏற்படுத்திக்கொள்ள விழைகிறோம். நாம் அவளுடைய கணவனாக முயல்கிறோம். வேசியை மணந்த ஒருவனால் மகிழ்ச்சியாக வாழ முடியுமா?

எனவே, சாணக்கிய பண்டிதர் கூறுகிறார், துஷ்டா பார்யா ஷடம் மித்ரம் ப்ருத்யஷ் சோத்தர-தாயக:/ ஸ-ஸர்பே க்ருஹே வாஸோ ம்ருத்யுர் ஏவ ஸம்ஷய:, “வேசியை மனைவியாகக் கொண்டவனும், கபடதாரியை நண்பனாகக் கொண்டவனும், தான்தோன்றியை வேலைக்காரனாகக் கொண்டவனும், வீட்டிற்குள் பாம்பைக் கொண்டவனும் இறப்பான்.” அவன் இறந்துவிடுவான். அதில் சந்தேகம் ஏதுமில்லை. அவனது வாழ்வு நாசமாகும். இதுவே சாணக்கிய பண்டிதரின் வாக்கு.

சாணக்கியர் மேலும் கூறுகிறார், மாதா யஸ்ய க்ருஹே நாஸ்தி பார்யா சாப்ரிய-வாதினீ/ அரண்யம் தேன கந்தவ்யம் யதாரண்யம் ததா க்ருஹம். அதாவது, “இல்லத்தில் பாசமான தாயைப் பெறாதவன் அல்லது இனிமையாகப் பேசும் மனைவியைப் பெறாதவன்—கோபமாக பேசும் மனைவியைப் பெற்றவன்—வீட்டைத் துறந்து வனத்திற்குச் செல்ல வேண்டும். உண்மையில் அவனுக்கு காடும் வீடும் ஒன்றுதான்.”

முற்காலத்தில், குறைந்தது தாயிடமிருந்தேனும் அன்பை எதிர்பார்க்க முடிந்தது. ஆனால் தற்காலத்தில் அதுகூட இல்லாமல் போய்விட்டது. இதுவே நாகரிக முன்னேற்றம். ஒருவனால் தனது தாயைக்கூட நம்ப இயலாதபோது, மற்றவர்களைப் பற்றி என்ன கூறுவது? குழந்தை ஒன்று தாயின் மடியில் ஆழ்ந்து உறங்குகிறது. ஏனெனில், தாயின் மடியில் தான் பாதுகாப்பாக உள்ளதாக அக்குழந்தை உணர்கிறது. ஆனால், இன்று தாயானவள் அயோக்கிய மருத்துவரின் உதவியுடன் தனது குழந்தையைக் கொல்லவும் தயங்குவதில்லை. நவீன நாகரிகத்தின் முன்னேற்றம் இதுவே.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே! நமது கோயிலுக்கு அருகே மருத்துவர்களும் உயர்குடி மக்களும் வசிக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: பிறப்பு, இறப்பு சுழற்சியெனும் பௌதிக நோயினை குணப்படுத்துபவரே உண்மையான மருத்துவராவார்! நவீன கால மக்களான நீங்களோ உங்கள் உண்மையான நலனிற்கு எதிரான போலி மருத்துவர்களாலும் போலி யோகிகளாலும் போலி தியானிகளாலும் ஏமாற்றப்படவே விரும்புகிறீர்கள். எனவேதான், இந்தக் கயவர்கள் மக்களின் ஆதரவுடன் பிரபலமடைந்துள்ளனர். சிறு குழுவினர் மட்டுமே என்னிடம் வந்துள்ளனர். பெரும்பாலானோர் கிருஷ்ண பக்தி இயக்கத்தை அறியாதவர்களாகவே உள்ளனர்.

சீடர்: பலர் எந்தவொரு தத்துவத்தையும் கேட்பதில் ஆர்வமற்றவர்களாக உள்ளனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: எனவேதான் பல்வேறு போக்கிரிகளால் அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். தற்போது ஓர் எளிய தத்துவத்தைக்கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மக்கள் மூடர்களாகிவிட்டனர். பகவத் கீதையில் கிருஷ்ணரால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை அறிவுரையைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை: குழந்தைக்கு ஓர் எதிர்காலம், சிறுவனுக்கு ஓர் எதிர்காலம், மற்றும் இளைஞனுக்கு ஓர் எதிர்காலம் இருப்பதுபோல, வயோதிகனுக்கு ஏன் ஓர் எதிர்காலம் இருக்கக் கூடாது? ஆத்மா இந்த ஒரு பிறவியிலேயே பல சிறிய பிறவிகளை—குழந்தை, சிறுவன் என பல உடல்களை—ஏற்கின்றான். இவ்வாறு பல உடல்களை ஏற்றாலும்—பல சிறிய பிறவிகளைக் கடந்தாலும்—“நான் அதே நபர்” என்ற உணர்வினை ஆத்மா தக்கவைத்துக்கொள்கிறது. எனவே, இந்தப் பிறவி முடிந்தபின், ஒரு வயோதிகனுக்கு ஏன் மறுபிறவி இருக்கக் கூடாது? நவீன கால மக்களுக்கு இத்தனை மழுங்கிய மூளையா!

“வருங்காலத்தில் எனக்கு புதிய உடல் ஏதும் இருக்காது. நான் இப்படியே குழந்தையாக இருப்பேன்,” என்று ஒரு குழந்தை கூறினால், அது சரியாகுமா? அதுபோலவே “வருங்காலத்தில் எனது வயோதிக உடல் அழிவுற்றவுடன் எல்லாம் முடிந்து விட்டது, எனக்கு புதிய உடல் இருக்காது,” என்று கருதினால் அது சரியாகுமா?

இத்தகைய எளிய உண்மைகளைக்கூட புரிந்துகொள்ள இயலாத அளவிற்கு மக்களின் மூளை மழுங்கி விட்டது. தேஹினோ ’ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா/ ததா தேஹாந்தர ப்ராப்திர், “தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்து செல்வதைப் போல, ஆத்மா மரணத்தின்போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகிறது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” இதுவே உண்மை நிலை. கிருஷ்ணரால் வழங்கப்பட்டுள்ள இந்த உதாரணம் மிகவும் எளிமையானதும் சிறந்ததுமாகும். இருப்பினும், மக்களால் இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மக்களிடம் இருப்பது என்ன மிருகங்களின் மூளையா?

எனது புத்தகங்கள் மட்டுமே இத்தகைய மக்களைக் காப்பதற்கான ஒரே நம்பிக்கை. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கும் எனது புத்தகத்தை வழங்குங்கள். நான் வழங்கியுள்ள புத்தகங்களின் மதிப்பை மக்கள் என்றாவது ஒருநாள் உணர்வார்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives