பலன்நோக்குச் செயல்களின் பந்தம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: திரு. வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், முப்பத்திரண்டாம் அத்தியாயம்

சென்ற இதழில் கருவின் வளர்ச்சி, சிசுவின் பிரார்த்தனை, குழந்தைப் பருவம், பொய் அஹங்காரத்தின் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய கபிலதேவரின் விளக்கங்களைப் பார்த்தோம். இந்த இதழில் பலன்தரும் செயல்களால் வரும் சிக்கல்களைக் காணலாம்.

பிரவ்ருத்தி, நிவ்ருத்தி

பகவான் கபிலர் தனது அறிவுரைகளைத் தொடர்ந்தார்.

தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விரும்பி பலன்நோக்கு கர்மங்களில் ஈடுபடும் குடும்பஸ்தன் அவற்றை அடைவதற்காக மீண்டும்மீண்டும் அத்தகைய பலன்நோக்கு கர்மங்களைச் செய்கிறான். அதற்கான ஆசைகளால் மயக்கமுற்று முன்னோர்களையும் தேவர்களையும் மிகுந்த சிரத்தையுடன் வழிபடுகிறான், அவன் கிருஷ்ண உணர்விலோ பக்தித் தொண்டிலோ ஆர்வம்கொள்வதில்லை.

இவ்வாறு புலனுகர்ச்சியால் கவரப்பட்டு தேவர்கள் மற்றும் முன்னோர்களை வழிபடுபவன் சந்திர லோகத்தை அடைகிறான். ஆயினும், புண்ணியம் தீர்ந்தவுடன் மீண்டும் திரும்பி வருகின்றான். இவ்வாறு புலனின்பத்துடன் இணைந்த வழிபாட்டு முறை ப்ரவ்ருத்தி மார்கம் எனப்படுகிறது. பகவான் விஷ்ணு அனந்தசயனத்தில் துயில்கொள்ளும்போது இவர்கள் அடையும் உலகங்களும் அழிவுறுகின்றன.

மற்றொரு தரப்பினரோ, தமது விதிக்கப்பட்ட கடமைகளின் பலன்களில் பற்றின்றி அப்பலன்களை பகவானிற்கு அர்ப்பணிக்கும் அறிவுடையோராக உள்ளனர். அவர்கள் பரம புருஷரின் திருப்திக்காக செயல்படுகின்றனர். உரிமை உணர்வு, பொய் அஹங்காரம் ஆகியன இன்றி தூய உணர்வில் நிலைபெற்று, இதயம் தூய்மையடைந்த அவர்கள் சூரிய கிரகத்தின் வழியாக ஆன்மீக மற்றும் ஜட உலகங்களுக்கு மூலமானவரும் உரிமையாளருமான பரம புருஷ பகவான் வாழும் ஆன்மீக உலகை அடைகின்றனர். இது நிவ்ருத்தி மார்கம் எனப்படுகிறது.

இதர தரப்பினர்

மற்றொரு தரப்பினர், ஹிரண்யகர்பத்தை வழிபடுகிறார்கள்; அவர்கள் நேரடியாக வைகுண்டத்திற்குச் செல்வதில்லை, ஸத்ய லோகத்தில் பிரம்மாவின் ஆயுள் வரை தங்கி, அவருடனேயே ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படுகின்றனர்.

மனதைக் கட்டுப்படுத்தி சுவாசப் பயிற்சியில் ஈடுபடும் யோகிகளும் பௌதிக உலகின் மிகவுயர்ந்த லோகமான ஸத்ய லோகத்தை அடைகின்றனர். பகவானின் நேரடித் தொடர்பில் இல்லாததால் அவர்கள் மீண்டும் பிறக்க வாய்ப்புள்ளது.

பிரம்மதேவர், ஸனத் குமாரர்கள், மரீசி போன்ற முனிவர்களும் படைப்பின்போது மீண்டும் பௌதிக உலகிற்கு வர வேண்டும். இவர்கள் சாதாரண உயிர்வாழிகள் இல்லை, மிகவும் வல்லமை படைத்தவர்கள், யோக சக்திகளைப் பெற்றவர்கள். ஆயினும், இவர்களிடம் பரமனுடன் ஒன்றாக கலப்பதற்கான விருப்பம் உள்ள வரை, முதல் புருஷ அவதாரமாகிய மஹாவிஷ்ணுவிடம் சென்றபோதிலும், உலகப் படைப்பின்போது மீண்டும் இந்த உலகிற்கே திரும்பி வருகின்றனர்.

இந்த உலகத்தில் மிகவும் பற்றுதல் கொண்டுள்ளவர்கள் விதிக்கப்பட்ட கடமைகளை மிகவும் நன்றாகவும் நம்பிக்கையுடனும் பலன்களை எதிர்பார்த்து நிறைவேற்றுகின்றனர். அவர்கள் ரஜோ குணத்தால் தூண்டப்பட்டு, கவலைகள் நிறைந்தவர்களாக, கட்டுப்படுத்தப்படாத புலன்களால் எப்போதும் புலனுகர்ச்சிக்கு ஆசைப்படுபவர்களாக உள்ளனர். அவர்கள் முன்னோர்களை வழிபடுவர்.

அவர்களின் குடும்ப, சமுதாய மற்றும் தேசிய பொருளாதார முன்னேற்றத்திற்காக அல்லும்பகலும் அயராது பாடுபடுகின்றனர். அறம், பொருள், இன்பத்தில் மட்டுமே பற்றுதல் கொண்டுள்ளதால் இவர்கள் த்ரிவர்க எனப்படுகின்றனர். வீடுபேறு தரும் பகவானின் லீலைகளில் இவர்களுக்கு ஆர்வமில்லை. பகவானின் லீலைகளையும் அறிவுரைகளையும் உள்ளடக்கிய ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, போன்ற புனித நூல்களைக் கேட்பதிலும் படிப்பதிலும் ஈடுபடாது, புலனுகர்ச்சியைத் தூண்டக்கூடிய பற்பல செய்தித்தாள்களையும் நாவல்களையும் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் நரக நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். இவர்களை பகவானும் பக்தர்களும் கண்டிக்கின்றனர்.

இவர்கள் சூரியனின் தெற்குப் பாதை வழியாக பித்ரு லோகத்திற்குச் செல்கின்றனர். சிறிது காலத்திற்குப் பின் தம் புண்ணிய செயல்களின் பலன் தீர்ந்ததும் தங்களது வம்சங்களில் பிறவி எடுத்து மீண்டும் அதே போன்ற செயல்களில் மூழ்குகின்றனர்.

சமத்துவமுள்ள பக்தர்

இதனால் கபிலர் தமது அன்னையிடம், பரம புருஷரிடம் சரணடைந்து பக்தித் தொண்டில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறார். இதனால் ஞானம், பற்றின்மை, தன்னுணர்வு முதலியவற்றில் முன்னேற்றம் காண முடியும். மிகவுயர்ந்த பக்தரின் மனம், புலன்களுக்கான செயல்களில் விருப்புவெறுப்பின்றி சமநிலை அடைகிறது. அவர் அனைத்தையும் பகவானின் திருப்திக்காக பயன்படுத்திக்கொள்கிறார். அதனால் அவர் பற்றுதல் மட்டுமின்றி பற்றின்மையிலிருந்தும் விடுபடுகிறார். அதுவே சமத்துவத்தின் உன்னத நிலையாகும். தூய பக்தர் பகவானின் இன்பத்தில் தனது வாழ்வை அனுபவிக்கிறார்.

 

பக்தித் தொண்டின் உயர்வு

பகவானே பூரண மெய்ப்பொருள். ஆயினும், அவர் அருவ பிரம்மன், பரமாத்மா, பரம புருஷ பகவான் என பலவகையில் புரிந்துகொள்ளப்படுகிறார். பகவானை இந்த மூன்று முறையில் வழிபடுவோர் அனைவருக்கும் பொதுவான நெறி யாதெனில், புலனுகர்விற்கான பொருட்களில் பற்றின்றி இருத்தல் என்பதாகும்.

பகவானை வழிபடுவோர் அவரை நம்பிக்கையுடனும் தளராத உறுதியுடனும் முழு பற்றின்மையுடனும் பக்தித் தொண்டில் ஈடுபட்டு வழிபடுகின்றனர். பகவானின் நினைவில் எப்போதும் மூழ்கியுள்ளவன் முழுமையான அறிவைப் பெற முடியும். அதன் மூலம் ஜடம், ஆத்மா இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றின் உண்மைநிலையைப் புரிந்துகொள்ள முடியும். இத்தகு தத்துவ ஆராய்ச்சியின் முடிவு பரம புருஷரைப் புரிந்துகொள்வதாகும். இவ்வாறு பகவானைப் புரிந்து கொண்டவர் இயற்கை குணங்களிலிருந்து விடுதலை அடையும்பொழுது பக்தித் தொண்டில் உயர்நிலை அடைகிறார்.

பக்தித் தொண்டு இல்லாவிடில், ஞான யோகமோ அஷ்டாங்க யோகமோ வெற்றி பெற இயலாது. வேள்வி, தானம், தவம், வேதக் கல்வி, தத்துவ ஆராய்ச்சி, மனக் கட்டுப்பாடு, புலனடக்கம், துறவு, விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல், யோகப் பயிற்சி, தன்னையறியும் விஞ்ஞானம், பற்றின்மை போன்ற எல்லாவற்றின் இறுதி நோக்கம் பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதே.

செவியுற தகுதியற்றவர்

பொறாமை உள்ளவன், பௌதிக இன்பத்தில் அதீத பற்றுடையவன், நடத்தையில் தூய்மை யற்றவன், வஞ்சகன், செல்வச் செருக்கு உடையவன், பேராசைக்காரன், குடும்ப வாழ்வில் அதீத பற்றுடையவன், அபக்தன், பக்தனிடம் பொறாமைப் படுபவன் ஆகியோருக்கு பக்தி தொண்டுகுறித்த இந்த அறிவுரையைக் கூறக் கூடாது.

 

செவியுற தகுதியுடையவர்

ஆன்மீக குருவிடம் மதிப்புள்ள பக்தன், பொறாமையற்றவன், எல்லா உயிரினங்களிடமும் நட்பு கொண்டிருப்பவன், நம்பிக்கையுடையவன், சேவை புரிய ஆர்வமுள்ளவன் ஆகியோர் பக்தித் தொண்டின் இந்த அறிவுரையைச் செவியுறுவதற்கு தகுதியானவர்கள்.

மேலும், பரம புருஷ பகவானை ஏற்பவன், முழுதும் தூய்மையடைய விரும்புபவன், கிருஷ்ண உணர்வின் வளர்ச்சிக்கு சாதகமற்ற விஷயங்களில் பற்றின்றி இருப்பவன் ஆகியோர் ஆன்மீக குருவிடம் இந்த அறிவுரைகளைக் கேட்டறிய தகுதியானவர்களாவர்.

“நம்பிக்கையுடனும் அன்புடனும் என்னை தியானித்து என்னைப் பற்றிக் கேட்டு எனது திருநாமத்தை உச்சரிக்கும் ஒருவன் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருவான்,” என்று கூறி, பகவான் கபிலதேவர் தேவஹூதியிடம் அனைத்தையும் விளக்கமாக விவரித்து நிறைவு செய்தார்.

ஆன்மீக குருவிடம் நம்பிக்கைக் கொண்டு அவருக்கு சேவை செய்ய விரும்புபவன், பக்தித் தொண்டினைப் பற்றி செவியுறுவதற்கு தகுதியுடையவன்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives