மஹாபிரபுவின் மகத்துவ லீலைகள்

Must read

பகவத் கீதையை அறிந்த மகான்

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையில் சாதுர்மாஸ்ய காலத்தில் நான்கு மாதங்கள் திருவரங்கத்தில் தங்கியிருந்த காலம் அது. அவர் நாள்தோறும் காவிரியில் நீராடி அரங்கனை தரிசித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடுவார். அவரது திருமேனியின் அழகையும் பரவசத்தையும் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைக் காண்பதற்காகவும் அவருடன் இணைந்து ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் பாடுவதற்காகவும் திருவரங்கத்தில் கூடினர்.

அச்சமயத்தில் திருவரங்கத்தில் ஓர் எளிமையான பிராமணர் வசித்து வந்தார், அவர் தினமும் அரங்கனை தரிசித்து அரங்கனின் கோயிலில் அமர்ந்தவாறே முழு பகவத் கீதையையும் வாசிப்பது வழக்கம். பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயத்தையும் தினமும் பெரும் பரவசத்துடன் அவர் படித்தார், ஆனால் அவரது உச்சரிப்பில் பல்வேறு பிழைகள் இருந்தன. அவர் பிழைகளுடன் உச்சரிப்பதைக் கண்டு பலரும் அவரை கேலி செய்தனர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை, தொடர்ந்து படித்தபடி பரவசத்தில் லயித்தார். கீதையைப் படிக்கையில் அவரது கண்களில் கண்ணீர் நிரம்பியது, உடலில் மயிர்கூச்செறிந்தது, உடல் நடுங்கியது, வியர்வையும் சொரிந்தது. இதைக் கண்ட ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பெரிதும் மகிழ்ச்சியுற்றார்.

மஹாபிரபு பிராமணரிடம் வினவினார், மாமனிதரே உங்களது பரவசத்திற்கு என்ன காரணம்? கீதையிலுள்ள எந்த கருத்து இந்த பரவசத்தை உங்களுக்கு வழங்கியது?”

பிராமணர் பதிலளித்தார், நான் ஒரு முட்டாள், கீதையின் வார்த்தைகளுக்கான பொருளை யான் அறியேன். என் ஆன்மீக குருவின் கட்டளையின்படி இதைப் படிக்கிறேன், ஆனால் சில நேரத்தில் சரியாகவும் சில நேரத்தில் பிழையாகவும் படிக்கிறேன். கிருஷ்ணர் இங்கே அர்ஜுனனின் தேரோட்டியாக அமர்ந்திருப்பதை மட்டுமே நான் காண்கிறேன். பேரழகுடன் தேரில் அமர்ந்தபடி அவர் அர்ஜுனனுக்கு வழங்கும் உபதேசம் எனக்கு பேரானந்தத்தை தருகிறது. கீதையைப் படிக்கும்போது கிருஷ்ணரின் அழகிய தரிசனத்தை தவிர எதையும் நான் காண்பதில்லை. இதற்காகவே நான் தினமும் படிக்கின்றேன். என் மனம் இதிலிருந்து விலக மறுக்கிறது.”

மஹாபிரபு மொழிந்தார், பகவத் கீதையைப் படிப்பதற்கு நீங்களே அதிகாரம் பொருந்தியவர். நீங்கள் எதை அறிந்துள்ளீரோ அதுவே கீதையின் சாரம்.” இவ்வாறு கூறி மஹாபிரபு பிராமணரை அன்புடன் அரவணைத்தார். பிராமணர் மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளைப் பிடித்து அழத் தொடங்கினார், உங்களது தரிசனத்தினால் எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது. நீங்கள் சாக்ஷாத் கிருஷ்ணரே.”

பிராமணரின் மனம் தூய்மையாக இருந்ததால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பற்றிய உண்மையை அவரால் உணர முடிந்தது. பிராமணருக்கு அறிவுரை வழங்கிய மஹாபிரபு தாம் கிருஷ்ணரே என்பதை யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பிராமணரும் மஹாபிரபுவின் மாபெரும் பக்தராகி நான்கு மாதங்களை மஹாபிரபுவின் சங்கத்தில் கழித்தார்.

கருத்து: பகவத் கீதையின் சாரத்தினை வெறும் பாண்டித்துவத்தினாலும் புத்தியினாலும் புரிந்துகொள்ள முடியாது, உண்மையான பக்தரிடமிருந்து கேட்பதால் மட்டுமே உணர முடியும். எல்லா வேத சாஸ்திரங்களும் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அறியப்பட வேண்டியவை, வெறும் புத்தியினால் அல்ல. அதனால்தான் நாங்கள் பகவத் கீதை உண்மையுருவில் என்னும் நூலைப் படைத்துள்ளோம்.

ஆதாரம்: ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 9.93-107

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives