நாம் அனைவரும் நம் வாழ்நாளின் ஒரு காலத்தில் முழுமுதற் கடவுளுக்கு வாக்களித்தோம்; அதைக் காப்பாற்றலாமே!
வழங்கியவர்: திருமதி. ரேவதி கோபி தேவி தாஸி
நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு குதூகலமாக அன்புடனும் உரிமையுடனும் பழகி சுதந்திர வாழ்வில் நாம் அனைவருமே ஆனந்தம் அடைகிறோம். ஆனால் நாம் பலமுறை சிறை சென்றுள்ளோம். இருள் நிறைந்த தனிமைச் சிறைகளில் வாழ்ந்துள்ளோம். நம்மைச் சார்ந்தோர் என யாருமே இன்றி, செய்வதறியாது திகைத்து திக்கற்று நின்றோம். அக்கடும் சிறையினுள்கூட நம்மைப் பிரியாத ஓர் அன்புத் துணைவனை அத்தகைய துயரமான நிலையில் அடையாளம் கண்டோம். கருணையே வடிவான அந்த கார்மேக வண்ணன் இமைப்பொழுதும் நம்மை நீங்காமல் நம்மிடம் பரிவுகாட்டுவதை உணர்ந்து பெரும் ஆறுதல் அடைந்தோம்.
இதெல்லாம் எப்போது நடந்தது?
தாயின் கருவறையில் நாம் சிறைப்பட்டிருந்த ஒவ்வொரு முறையும் இவையனைத்தும் நடந்தன. ஸ்ரீமத் பாகவதத்தின் மூன்றாம் காண்டம் 31வது அத்தியாயத்தில் பகவான் கபிலதேவர் தனது தாய் தேவஹுதிக்குக் கூறிய அறிவுரைகளில் இவ்விஷயம் தெளிவாக விவரிக்கப்படுகிறது. “அன்னையின் அடிவயிற்றினுள் குருதி, மலம் மற்றும் சிறுநீரால் ஆன குளத்தில் விழுந்து, அடிவயிற்றின் நெருப்பால் உடல் வாட்டப்பட, வெளியில் வர மிகவும் விரும்பி, உடல்பெற்ற ஆத்மாவானது தன் மாதங்களை எண்ணிக்கொண்டு, “எனதன்பு இறைவனே, துயர் மிகுந்த ஆத்மாவாகிய நான் எப்பொழுது இந்தச் சிறையிலிருந்து விடுதலை அடைவேன்?” என்று வேண்டுகிறது. (ஸ்ரீமத் பாகவதம் 3.31.17)
இவ்வாறு பகவானிடம் கருணை மனு கொடுத்து நாம் அவரையே நம்பியிருந்தோம். மேலும், “(கருவிலிருந்து) விடுவிக்கப்பட்டபிறகு எனதன்பு கிருஷ்ணரிடம் சரணடைந்து பக்தித் தொண்டு செய்து மகிழ்வேன். அதன் மூலம் மீண்டும் ஒரு கருவறையை அடையாமல் நான் என்னைக் காத்துக் கொள்வேன்,” என நாம் தீர்மானித்திருந்தோம். கருவறையிலுள்ள அதிர்ஷ்டசாலி ஆத்மாவிற்கு, அவனது முந்தைய நூறு பிறவிகளில் அவன்பட்ட துயரங்கள் அனைத்தும் ஞாபகம் வரலாம் என பாகவதம் கூறுகிறது. இந்த ஜடவுடலோடு ஜடவுலகில் வாழும் வாழ்க்கை எவ்வளவு அவலமானது என்பதை நன்கு உணர்ந்திருந்தோம்.
கருவறைக் கால நிகழ்வுகள் சில
மஹாராஜா பரீக்ஷித், தன் தாய் உத்தரையின் கருவறையில் இருந்தபோது, அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரம் பெரும் சக்தியுடன் அவரை அழிக்க வந்தது. அப்போது கருணையே வடிவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உத்தரையின் பிரார்த்தனைக்கு உகந்து, மிகுந்த பேரொளியுடன் கருவறையில் தன்முன் தோன்றி தன்னைக் காப்பாற்றுவதை பரீக்ஷித் கண்டார். தன்னைக் காப்பாற்றிய அந்த நபர் யார் என வியந்த அவர், பிறந்த பின்னரும் அவரையே தேடிய வண்ணம் இருந்ததால், பரீக்ஷித் என்று பெயர் பெற்றார்.
பிரஹலாத மஹாராஜா, தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது, நாரத முனிவரின் உபதேசங்களைக் கேட்டு மாபெரும் பக்தரானார். மாபெரும் அசுரனான ஹிரண்யகசிபுவால் எதுவுமே செய்ய இயலாத வகையில், திடசித்தமுள்ள பக்தராக அவர் விளங்கியதை நாம் அறிவோம்.
அர்ஜுனன் “சக்ரவியூகம்” பற்றி விவரித்துப் பேசியதைக் கருவறையிலிருந்து கேட்ட அவரது மகன் அபிமன்யு பின்னாளில் அதை ஞாபகம் வைத்திருந்தார்.
சுகதேவ கோஸ்வாமி தன் தாயின் கர்ப்பத்தை விட்டு வெளிவர மறுத்து பல ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார். வெளியே வந்தாலும் மாயையில் சிக்காமல் காப்பாற்றுவேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு உறுதியளித்த பிறகே அவர் வெளியே வந்தார்.
கருவில் சிசுவைத் தாக்கும் “சடம்” என்ற வாயுவை “ஹு”ங்காரத்தால் (தெய்வீக கோபத்தால்) அடக்கி, ஜடவாழ்விலிருந்து தன்னைக் காத்துக் கொண்டதால், நம்மாழ்வார் “சடகோபர்” என்று பெயர் பெற்றார்.
கருவில் இருந்தபோது நாம் உணர்வு பெற்றிருந்தோம் என்பதற்கு இவை சில உதாரணங்களாக அமைகின்றன. நமது துயர நிலைக்காக இரங்கி, நம் வேண்டுதலை இறைவன் நிறைவேற்றுகிறார். நம் ஆத்ம நண்பரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் (5.29), ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம், எல்லா உயிர்களின் பிரிய நண்பன் நானே,” என்று கூறுகிறார். நாம் அவரை மறந்தாலும் அவர் நம்மை ஒரு கணமும் மறப்பதில்லை, நம்மை விட்டுவிலகுவதும் இல்லை.
இவ்வளவு அன்பு ஏன்?
பகவத் கீதையில் (15.7), மமைவாம்ஷோ ஜீவ-லோகே ஜீவ-பூத: ஸனாதன:, “ஜீவன்கள் எனது நித்தியமான அம்சங்கள்,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். அஹம் பீஜ ப்ரத: பிதா, “எல்லோருக்கும் விதையளிக்கும் தந்தை நானே.” (பகவத் கீதை 14.4) மேலும், ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ, “நான் எல்லோருடைய இதயங்களிலும் வீற்றுள்ளேன்,” (பகவத் கீதை 15.15)
கிருஷ்ணர் நமது இதயத்தில் எப்போதும் வீற்றுள்ளார். நாம் அவரை மறந்து, பிரிந்து வந்தாலும், அவர் நம்மைவிட்டு விலகாமல் பரமாத்மாவாக நம் ஒவ்வொருவருடனும் இருக்கிறார். நாம் கிருஷ்ணரின் நித்திய தொண்டர்கள், அவரது நித்திய அம்சங்கள், அவரே நம்மை விதைத்த தந்தை, அவரே நம் இதயத்தில் அமர்ந்து நம்மை வழிகாட்டுபவர், என்பதையெல்லாம் நாம் மறந்துவிட்டாலும், கிருஷ்ணர் மறப்பதில்லை. தன் பாதுகாப்பை விட்டு அகன்றுவிட்ட மைந்தனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பாசமுள்ள தந்தையாகவே அவர் எப்போதும் இருக்கிறார். நாம் கீழ்நிலை உடல்களை ஏற்கும் சமயங்களில்கூட கருணையுடன் அவர் நம்முடனே உள்ளார்.
சுதந்திரம் பெற்றுவிட்டோமா?
கிருஷ்ணரிடம் உதவி பெற்று கருவறைச் சிறையிலிருந்து நாம் விடுதலை பெற்றோம். ஆனாலும் உண்மையில் அது விடுதலையா? நாம் தற்போது சுதந்திரமாக இருக்கின்றோமா? நிச்சயமாக இல்லை. நாம் கிருஷ்ணரை மறக்கின்றபோது உடனடியாக முக்குணங்களால் ஆட்கொள்ளப்படுகிறோம். இந்த ஜடவுலகிலுள்ள ஒவ்வொன்றும் முக்குணங்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இவ்வுலகம், து:காலயம் அஷாஷ்வதம், அதாவது, துக்கத்தின் இருப்பிடமும் நிரந்தரமற்றதுமாகும். இத்தகு உலகில் சுதந்திரமாக அனுபவிக்க நாம் எவ்வளவு போராடினாலும், அது வீண் முயற்சியே. கானல் நீரைக் கண்டு மயங்கும் மான்போல், இன்பம் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தைக் கண்டு நாம் அதைத் தேடித் தேடியே வாழ்வை முடிக்க நேரிட்டு விடுகிறது.
சுதந்திரம் நமது பிறப்புரிமை
தைவீ ஹ்யேஷா குண-மயீ மம மாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே
“ஜட இயற்கையின் முக்குணங் களாலான எனது இந்த மாயா சக்தி வெல்லுவதற்கரியது. ஆயினும் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.” (பகவத் கீதை 7.14)
கிருஷ்ணரிடம் நாம் எப்படி சரணடைவது? நாம் கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது? மிகச்சிறந்த கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் அருளிய, ஜீவ் ஜாகோ என்ற பாடலில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்:
“உறங்குகின்ற ஜீவன்களே, எழுந்திருங்கள். மாயை என்னும் பிசாசின் மடியில் நீண்ட காலம் உறங்கிவிட்டீர்கள். உறங்கியது போதும். ’எனதன்பு இறைவனே, நான் நிச்சயம் தங்களது பக்தித் தொண்டில் ஈடுபடுவேன் என்று கூறிக்கொண்டு இந்த உலகினில் பிறந்தீர்கள். ஆனால் அந்த வாக்குறுதியை மறந்து பெரும் அறியாமையில் வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
“உங்களைக் காப்பாற்றவே நான் அவதரித்துள்ளேன். என்னைத் தவிர உங்களுடைய நண்பனாக யார் இருக்க முடியும்? மாயையின் மயக்கத்திலிருந்து உங்களை விடுவிக்கும் மருந்தை நான் கொண்டு வந்துள்ளேன். அது ஹரியின் திருநாமமாகும். சிறப்புமிக்க அந்த ஹரி நாம மஹா மந்திரத்தை என்னிடம் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்.”
நாம் கொடுத்த வாக்கை ஞாபகப்படுத்தி, அதைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியதையும் மிகச் சுலபமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வெளிப்படுத்துகிறார். “பெற்ற தாயினும் ஆயின செய்யும்” (நாலாயிர திவ்ய பிரபந்தம், 956, திருமங்கையாழ்வார்) ஹரி நாமத்தில், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தில் சரணாகதியடைவோம். தாம் பெற்ற குழந்தைகளையும் தம்மை நம்பியுள்ளோரையும், இப்பிறவியின் முடிவில், பகவான் கிருஷ்ணரை மீண்டும் சென்றடைய உதவி செய்வதே பெற்றோர் மற்றும் தலைவர்களின் முக்கியக் கடமையாகும். எனவே நாம் நமது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு, இனிய ஹரி நாமத்தில் ஈடுபட்டு புனிதமடைவோம்.
கிருஷ்ணரை மறவாதிருப்பவர் களோடு மக்களுக்குத் தொடர்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இஸ்கான் தொடங்கப்பட்டுள்ளதாக உபதேசாம்ருதத்தின் விளக்கவுரையில் ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார். பெறற்கரிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் பெருவாழ்வு பெறுவோமாக.
ஹரி: ஓம் தத் ஸத்