பக்திவினோத தாகூர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது.
சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட வைஷ்ணவ சம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து இருந்தது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையின் காரணத்தினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ சம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது. வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் மற்றும் பாகவதத்தில் புதைந்திருந்த ஆழமான தத்துவத்தினை பக்திவினோத தாகூர் தனது உயர்ந்த இறையன்பினால் வெளிக்கொணர்ந்தார். அவர் தனது தெய்வீக தொண்டினாலும், பாமரனும் புரிந்துகொள்ளக் கூடிய எளிய மொழியில் எழுதப்பட்ட தனது வார்த்தைகளாலும் இந்த தத்துவத்தை உலகிற்கு வழங்கினார். இவரது திருப்பணியினால் பல்வேறு நபர்கள் வைஷ்ணவ தர்மத்தின் மீது நம்பிக்கையையும் ஆன்மீக ஞானத்தையும் பெற்றனர்.
ஆரம்ப கால வாழ்க்கை
செப்டம்பர் 2, 1838 அன்று பிறந்த பக்திவினோத தாகூர் கேதாரநாத தத்தர் என்று பெயர் சூட்டப்பட்டார், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தபோதிலும், அவர் தனது இளவயதில் நிறைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிர்நகரில் (உலாக்ராமில்) இருந்த தாய்வழி தாத்தாவின் வீட்டில் அவர் தனது பிள்ளை பிராயத்தை கழித்தார், பதிமூன்று வயதில் தந்தையை இழந்த பின்னர் அங்கிருந்து கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தார். கல்விப் படிப்பை முடித்தவுடன் தனது தந்தை வழி தாத்தாவான ராஜவல்லப தத்தரின் மரணம் வரை அவருடன் தங்கியிருந்தார். அந்த உயர்ந்த ஆத்மா உடலை விட்டு மறைந்த பின்னர், கேதாரநாதர், அவருடைய அறிவுரைகளுக்கு ஏற்ப ஒரிசாவின் பல்வேறு முக்கிய கோயில்களையும் ஆஷ்ரமங்களையும் தரிசித்தார். அதன்பின், கல்வித் துறையின் பணியினுள் நுழைந்த பக்திவினோத தாகூர் ஆங்கிலக் கல்வியை ஒரிசாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். ஒரிசாவின் ஆஷ்ரமங்களைப் பற்றி ஒரு சிறிய புத்தகத்தையும் அவர் எழுதினார்.
பிரம்ம ராக்ஷசனை விரட்டிய பக்திவினோதர்
பின்னர், பக்திவினோத தாகூர் அரசாங்க பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வங்காளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். ஒரு நகரத்தில் ஸ்ரீமத் பாகவதம் பற்றிய அவருடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சொற்பொழிவு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது. தத்துவ எண்ணம் கொண்ட எல்லா மக்களாலும் படிக்கப்பட வேண்டிய ஸ்ரீமத் பாகவதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிந்திருக்கும் பொக்கிஷத்தை அவர் உலகிற்கு அறிய வைத்தார்.
சில வருடங்கள் கழித்து, சம்பாரன் என்ற நகரத்துக்கு பக்திவினோத தாகூர் மாற்றப்பட்டார். அந்த நகரத்தின் பெரிய ஆலமரம் ஒன்றில் ஒரு பிரம்ம ராக்ஷசன் (ஒரு வகையான பேய்) வாழ்ந்து வந்தான், அவனை கீழ்நிலை மனிதர்கள் பலர் ஆராதித்து வந்தனர். ஒருநாள் புகழ்பெற்ற பெண் பண்டிதர் ஒருவரின் தந்தை பக்திவினோத தாகூரின் உதவியை நாடி வந்தபோது, பக்திவினோத தாகூர் அவரை உடனடியாக அந்த பேய் வாழ்ந்து வந்த மரத்தினடியில் தினமும் பாகவதம் படிக்கும்படி நியமித்தார். ஒரு மாத காலத்தில், பாகவதம் முழுமையாக படித்து முடிக்கப்பட்டவுடன், அந்த மரம் முறிந்து விழுந்தது, அதிலிருந்த பேயும் நற்கதியை அடைந்தது. அந்த பேயை வழிபட்டு வந்த சில நேர்மையற்ற மனிதர்களைத் தவிர மற்ற அனைவரும் இச்செயலுக்கு மனமாற நன்றி தெரிவித்தனர்.
போலி அவதாரத்தை விரட்டுதல்
பக்திவினோத தாகூர் அடுத்ததாக புரிக்கு இடம் பெயர்ந்தார். பக்திவினோத தாகூர் தன் துறைக்கு மாற்றப்பட்டதால் அரசு ஆய்வாளர் (கமிஷனர்) மிக்க மகிழ்ச்சியடைந்தார், அரசாங்கத்தின் சார்பாக ஜெகந்நாதர் கோயிலின் நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பக்திவினோதரின் கடின உழைப்பினால் பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமின்றி, குறித்த நேரத்தில் காலம் தவறாமல் விக்ரஹங்களுக்கு நைவேத்யம் செய்வதும் ஒழுங்குபடுத்தப்பட்டது.
மஹா விஷ்ணுவின் அவதாரம் என்று தன்னைக் கூறிக் கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்ட பிஷிகிஷேனன் என்பவனை அடக்கும் பொறுப்பு பக்திவினோதரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவனைப் பற்றி விசாரித்ததில், அவன் ஓர் ஏமாற்று பேர்வழி என்றும் குற்றங்கள் பல புரிந்தவன் என்றும் தெரியவந்தது, அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மீறியதாக அவன் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கின் இறுதியில், அவனுக்கு ஒன்றரை வருட காலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது, ஆனால் சிறைக்குச் சென்ற குறுகிய காலத்திலேயே அவன் இறந்துபோனான். பிஷிகிஷேனனிடம் அசாதாரணமான சக்திகள் இருந்தது உண்மை; ஆயினும், அவை முறையான ஆன்மீக பயிற்சியினால் தோன்றியவை அல்ல என்பதால், தாகூர் அவனை அடக்க நினைத்தபோது, அவன் பணிய வேண்டி வந்தது. பிஷிகிஷேனனின் மேலிருந்த அச்சத்தின் காரணமாக, நீதியை நிலைநாட்டுவதாக இருந்தாலும், அவனுடைய வழக்கை கையாள வேண்டாமென ஸ்ரீல பக்திவினோதரை அனைவரும் அறிவுறுத்தினர், அவனது யோக சக்தியினால் தொல்லைகள் வரலாம் என்று அவர்கள் எண்ணினர். நேர்மைமிக்க பக்திவினோதர் தன் ஆன்மீக பலத்தையும் உண்மையான குணத்தினையும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக காட்டிக் கொள்பவர் அல்ல; இருப்பினும், அவரால் அந்த ஏமாற்றுக்காரனின் வித்தைகளை சுலபமாக முறியடிக்க முடிந்தது.
பிஷிகிஷேனனின் அழிவுக்கு பின்னர், பலராமன் என்ற மற்றொரு ஏமாற்றுக்காரன் வேறொரு கிராமத்தில் உருவானான். தங்களை பகவானின் அவதாரங்களாக கூறிக் கொண்டு பலரும் உருவெடுத்தனர், ஆனால் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் இதே போன்று முறியடிக்கப்பட்டது.
எழுத்துப் பணிகள்
பக்திவினோத தாகூர் ஜெகந்நாத புரியில் தங்கியிருந்தபோது, தன்னுடைய பெரும்பாலான நேரத்தை ஆன்மீகம் குறித்த விவாதங்களிலும், பலதேவ வித்யாபூஷணரின் விளக்கவுரையுடன் வெளியிடப்பட்ட வேதாந்த சூத்திரங்களுக்கு குறிப்புகள் எழுதுவதிலும் செலவிட்டார். மேலும், கல்யாண–கல்பதரு என்னும் நூலை இயற்றினார். 1877இல் அரசு பணி நிமித்தமாக புரியிலிருந்து இடம்பெயர்ந்தார், 1881இல் பிரபல ஆன்மீக இதழான ஸஜ்ஜன–தோஷனீ (தூய பக்தர்களின் திருப்தி) என்னும் ஆன்மீக இதழை ஆரம்பித்தார். மேலும், பகவான் கிருஷ்ணரின் ஆன்மீக இருப்பை விளக்கும் தத்துவத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்திய ஸ்ரீ க்ருஷ்ண–ஸம்ஹிதா எனும் புத்தகத்தையும் பிரசுரித்தார். இப்புத்தகம் படித்தவர்களின் கண்களைத் திறந்ததோடு மட்டுமின்றி, பகவானுடனான அவர்களின் நித்திய உறவையும் கற்பிப்பதாக அமைந்தது. மேலும், ஜெர்மானிய அறிஞர்கள் பலரும் இதனைப் பாராட்டினர். கிருஷ்ணரை காவிய நாயகனாக கருதியவர்களின் மத்தியில், அவரை பரபிரம்மனாக, பரம புருஷ பகவானாக, பரம்பொருளாக வேத சான்றுகளின் அடிப்படையில் பக்தி வினோத தாகூர் வெளிப்படுத்தினார்.
நராயில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோது, விருந்தாவனத்தை காணச் சென்றார். அப்பொழுது கஞ்ஜரஸ் என்று அறியப்பட்ட கொள்ளைக்கார கூட்டத்தை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. பலம்பொருந்திய இந்த கொள்ளைக்காரர்கள் விருந்தாவனத்தை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு அப்பாவி யாத்திரிகர்களை தாக்குவது வழக்கம். பக்திவினோத தாகூர் இச்செய்தியை அரசாங்கத்திற்கு தெரியபடுத்தியதுடன் பல மாதங்கள் கடுமையாக போராடி கொள்ளைக்காரர்களை விருந்தாவனத்திலிருந்து அடியோடு ஒழித்தார். அன்றிலிருந்து, பக்திவினோத தாகூர் பெருந்திரளான கூட்டங்களில், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே என்னும் திருநாம ஸங்கீர்த்தனத்தின் மகிமையை பிரச்சாரம் செய்தார்.
பாராஸத் என்னுமிடத்தில் தங்கியிருந்தபோது, பக்திவினோத தாகூர் புகழ்பெற்ற வங்காள எழுத்தாளரான பங்கிம்சந்திரரைச் சந்தித்தார். நாவலாசிரியரும் நாடக எழுத்தாளருமான இவர் அப்பொழுதுதான் கிருஷ்ணரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதி முடித்திருந்தார். பகவான் கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களில் பக்திவினோத தாகூர் கைதேர்ந்தவர் என்பதை அறிந்து, அவரது பார்வைக்காக தன்னுடைய கையெழுத்து பிரதியைக் கொடுத்தார். அந்நூல் முழுவதும் பௌதிகமான கண்ணோட்டத்துடன் இருந்தது. ஆயினும், நான்கு நாள்கள் விவாதத்திற்குப் பின்னர், பகவான் சைதன்யரின் புனிதமான உயர்ந்த கருத்துகளை வெளிப்படுத்தும் விதத்தில், பக்திவினோதர் பங்கிம்சந்திரரை அவ்வுரை முழுவதையும் மாற்றியமைக்கச் செய்தார். அவர் பாராஸத்தில் தங்கியிருந்த இறுதி வருடத்தில், பிரபல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஸ்ரீ விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் விளக்கவுரையுடனும் பக்திவினோத தாகூரின் மொழிபெயர்ப்புடனும் கூடிய பகவத் கீதையின் பிரதியை அச்சிடுமாறு அவரை கேட்டுக் கொண்டார். அதற்கான முகவுரையை எழுதிய பங்கிம்சந்திரர் பக்திவினோதரின் முயற்சியினை மனமாற பாராட்டினார். புத்தகம் வெளியானதும் அனைத்து பிரதிகளும் உடனே விற்றுப் போயின. அதன் பிறகு, பக்திவினோத தாகூர் பகவான் சைதன்யரின் தத்துவத்தையும் மேற்கத்திய தத்துவத்தையும் பற்றி எடுத்துரைக்கும் ஸ்ரீ சைதன்ய–ஷிக்ஷாம்ருதம் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில் மற்ற தத்துவங்களின் ஒவ்வொரு கருத்தும் தோற்கடிக்கப்பட்டு, சைதன்யரின் தத்துவம் தலைசிறந்ததாக நிரூபிக்கப்பட்டது. 1885இல் தூய ஹரி பக்தியைப் பரப்புவதற்காக ஸ்ரீ விஷ்வ-வைஷ்ணவ-ராஜ-ஸபா என்ற சங்கத்தை ஆரம்பித்தார். கல்கத்தாவின் பெரிய மனிதர்கள் பலரும் இச்சங்கத்தில் இணைந்தனர், பலவித சேவைகளுக்காக பல்வேறு குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
நவத்வீபத்திற்கு மாற்றம் பெறுதல்
பகவான் சைதன்யரின் பிறந்த இடத்தை காண்பதற்கு பேராவல் கொண்ட பக்திவினோத தாகூர், அதற்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு நகரத்திற்கு மாற்றுதல் கோரி பலமுறை விண்ணப்பித்தார். விரும்பிய பணிமாற்றம் கிடைக்காததால் பொதுப்பணியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை முன் வைத்தார், ஆனால் அஃது ஏற்கப்படவில்லை. பின்னர், நவத்வீபத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள கிருஷ்ண நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார், இது பக்திவினோதரை பெருத்த மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.
நவத்வீபத்திற்கு அருகில் வந்ததும், சிறிதும் தாமதிக்காமல் நவத்வீபத்தில் பகவான் சைதன்யரின் லீலைகள் நிகழ்ந்த இடங்களை துல்லியமாக கணிப்பதற்கான பணியில் இறங்கினார். அப்போதைய நவத்வீப நகரம் சுமார் 100 வருடங்களாகத்தான் புழக்கத்தில் இருப்பதை விரைவில் கண்டறிந்தார், பகவான் சைதன்யரின் உண்மையான பிறப்பிடத்தைத் தேடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். நவத்வீப நகரமானது உண்மையான பிறப்பிடமல்ல என்பதை உறுதி செய்த பின்னர், உண்மையான பிறப்பிடத்தை அறிவதற்கான தீவிர விசாரணையில் இறங்கினார். ஆனால் சைதன்யரின் பிறப்பிடம் நகரத்தில்தான் உள்ளது என்று நம்பிய மக்கள் அவரையும் நம்ப வைக்க முயன்றனர். ஆழ்ந்த விசாரணைக்குப் பின்னர், சைதன்யரின் உண்மையான பிறப்பிடம் கங்கை வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்பதை சிலரிடமிருந்து கேட்டறிந்தார். ஆயினும், அந்த விளக்கமும் அவருக்கு திருப்தி அளிக்காததால், தானே யோக-பீடத்தை (பிறப்பிடத்தை) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, முகமதியர்களின் வசமிருந்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடத்தைக் கண்டறிந்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த வரைபடங்களிலிருந்தும் உள்ளூர் விசாரணைகளிலிருந்தும் கிடைக்கப் பெற்ற வலுவான சான்றுகள், அவ்விடம் ஸ்ரீ மாயாபுர் என்பதை தெளிவாக உணர்த்தி, அந்த உண்மையான பிறப்பிடத்தை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்தன. பிறப்பிடத்தின் கண்டுபிடிப்பு நவத்வீப–தாம–மஹாத்ம்ய என்னும் புத்தகத்தின் வெளியீட்டிற்கு வழிவகுத்தது.
1895ஆம் ஆண்டு வைஷ்ணவ சரித்திரத்தில் மிக முக்கிய வருடமாகும், இவ்வருடத்தில்தான் ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தை பக்திவினோத தாகூர் அதிகாரபூர்வமாக நிறுவினார். மேலும், அவ்விடத்தின் உண்மை நிலையையும் மகத்துவத்தையும் பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஓய்வு பெற்ற வாழ்க்கை
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற குறுகிய காலத்திலேயே, அடக்கத்தின் உருவமாக திகழ்ந்த பக்திவினோத தாகூர் சைதன்யரின் பிறப்பிடத்தில் கோயில் ஒன்றை கட்டுவதற்காக வீடு வீடாக தானே நேரில் சென்று நிதி திரட்டினார். டிசம்பர் 6, 1894 அன்று அம்ரித பஜார் பத்ரிகா பின்வரும் கட்டுரையை பிரசுரித்தது: “தனது அரசுப் பணியில் மிகவும் தீவிரமாக செயல்பட்டவர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய உதவி தலைமை நீதிபதி பாபு கேதாரநாத தத்தர் தனது பதவியிலிருந்து சமீப காலத்தில் ஓய்வு பெற்றார். ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தில் கோயில் கட்டுவதற்கான குழுவின் சார்பில் கல்கத்தாவிலும் மற்ற இடங்களிலும் சந்தாதாரர்களை அதிகரிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இக்கோயிலின் திருப்பணிக்காக வீடுவீடாக சென்று அவர் நிதி திரட்டுகிறார், தேவைப்பட்டால் ஒவ்வொரு கண்ணியமான இந்துவிடமிருந்தும் இத்திருப்பணிக்காக ஒரு ரூபாயினை தானமாக பெறுவதற்கும் அவர் தயாராக உள்ளார். பாபு கேதார்நாத தத்தர் தனது செயலில் உறுதியுடனும் கையில் பையுடனும் சென்றால், பண்புமிக்க எந்தவொரு இந்துவும் தூய பக்தரான பாபு கேதார்நாதரின் மேன்மையான வரவால் தன் வீடு புனிதமடைந்ததாக உணர்வர், தன்னால் இயன்ற தொகையினை ஒவ்வொருவரும் கௌர-விஷ்ணுபிரியா கோயிலுக்காக நிச்சயம் வழங்குவர் என நம்புகிறோம். உண்மையில், தாகூர் பக்திவினோதர் தான் ஏற்ற காரியத்தை நிறைவேற்றுவதற்காக பலரின் வீடுகளுக்கு விஜயம் செய்து கௌரவித்தார். பகவான் சைதன்யருக்கான இத்திருப்பணி இருந்திருக்காவிடில், அவர் இந்த இல்லங்களுக்கெல்லாம் நிச்சயம் சென்றிருக்கமாட்டார். அவரது முயற்சிகள் நிச்சயம் பலனளித்தன, அவர் சேகரித்த தொகையானது பகவான் சைதன்யர் தோன்றிய புனித ஸ்தலத்தில் கோயில் எழுப்ப உதவின.”
இதர எழுத்துப் பணிகள்
ஹரி நாம பிரச்சாரமும் முழு வேகத்தில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. பகவான் சைதன்யரின் பிறப்பிடத்தை கண்டுபிடித்த குறுகிய காலத்தில் கௌராங்க–ஸ்மரண–மங்கள–ஸ்தோத்ர என்னும் நூலை எழுதினார், ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் ஆங்கில முகவுரையாகக் கொண்ட இந்நூல் உலகம் முழுவதும் இருந்த அறிஞர்களைச் சென்றடைந்தது.
பகவான் சைதன்யரின் நாமமும் பகவான் கிருஷ்ணரின் நாமமும் எந்தளவு பரவியதோ அவ்வளவு மகிழ்ச்சியை பக்திவினோத தாகூர் அடைந்தார். ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை, ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய இரண்டிற்கும் விளக்கவுரை அளித்தார். மேலும், ஸ்ரீ ஹரிநாம–சிந்தாமணி, பஜன–ரஹஸ்ய ஆகிய இரண்டு இணையற்ற பொக்கிஷங்களையும் இவ்வுலகிற்கு அருளினார். வைஷ்ணவ தத்துவங்களுடன் தொடர்பு கொண்ட ஸ்ரீமத் பாகவதத்தின் மிக முக்கிய ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீமத்–பாகவதார்க–மரீசி–மாலா என்னும் தொகுப்பிற்கு விளக்கவுரை எழுதி திருத்தியமைத்தார். அவருடைய பேனா சிறிதும் ஓய்வின்றி நிறைய வைஷ்ணவ கிரந்தங்களை உருவாக்கியது. அவர் தனது எழுத்துப் பணியினை அரசு அலுவல்கள் அனைத்தையும் முடித்த பிறகு, இரவில் தொடங்கி நள்ளிரவு ஒன்று அல்லது இரண்டு மணிவரை விழித்திருந்து பல்வேறு வைஷ்ணவ தத்துவ பாடல்களையும் புத்தகங்களையும் எழுதினார். அவருடைய பெரும்பாலான எழுத்துகள் ஸஜ்ஜன–தோஷனீ பத்திரிகையில் வெளிவந்தன. வங்காளத்தின் பல மாவட்டங்களில் ஹரி நாம பிரச்சாரம் செய்வதற்கும் எழுதுவதற்கும் சமமான நேரத்தை ஒதுக்கினார். கிராமப்புறங்களில் அவரது நேரடி பிரச்சாரம் மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நதீயாவிலுள்ள கோயிலை பராமரிப்பதற்காக, ஸ்ரீ–ஸ்வானந்த–ஸுகத–குஞ்ஜ எனும் பெயரில் ஸ்ரீ கோத்ரும-த்வீபத்தில் ஒரு வீட்டைக் கட்டினார். அங்கு ஹரி நாம பிரச்சாரம் முழு வேகத்தில் நடைபெற்றது.
வாழ்வின் இறுதி நாள்கள்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தன் வாழ்நாளை புரியில் கழிக்க எண்ணி கடற்கரையின் அருகில் ஒரு வீட்டினைக் கட்டினார். 1908ஆம் ஆண்டு ஸ்ரீல கௌரகிஷோர தாஸ பாபாஜியிடமிருந்து பாபாஜி தீக்ஷை பெற்று, துறவு வாழ்வை மேற்கொண்டபோது பலரும் அவரிடமிருந்து ஆசியைப் பெற்றனர். அவர் ஒரு பாபாஜியாக இருந்தபோதிலும், பலதரப்பட்ட மக்கள் தன்னை வந்து சந்திப்பதை தவிர்க்க முடியாமல் இருந்தார். அவர்கள் அனைவரும் கடலளவு ஆன்மீக பயிற்சிகள், அறிவுரைகள், மற்றும் ஆசியைப் பெற்று சென்றனர். 1910ஆம் ஆண்டு அவர் தன்னை முற்றிலும் சமாதியில் ஆழ்த்திக் கொண்டார், கிருஷ்ணரின் நித்திய லீலைகளில் தனது முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தினார். 1914ஆம் ஆண்டு, ஸ்ரீ கதாதரரின் மறைவு நாளன்று, பக்திவினோத தாகூர் பேரானந்தத்தின் இருப்பிடமான கோலோகத்திற்கு சென்றார். ஹரிதாஸ தாகூரின் சமாதியில் 1871ஆம் வருடத்தில் ஸ்ரீல பக்திவினோதர் எழுதிய வரிகளை இங்கு பிரசுரித்துள்ளோம். ஒரு வைஷ்ணவர் தனது மறைவிற்குப் பின்னும் இவ்வுலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை இவ்வரிகள் விளக்குகின்றன.
வைஷ்ணவர்கள் மடிவதாக கூறுவோர் துஷ்டர்கள்
அவர்கள் தங்களது சப்தத்தினால் வாழ்கின்றனரே!
வைஷ்ணவர்கள் வாழ்வதற்காக மடிகின்றனர்
திருநாமத்தைப் பரப்புவதற்காக வாழ்கின்றனர்!
உலகம் முழுவதும் ஹரி நாமத்தை பிரச்சாரம் செய்ய வெகுவிரைவில் ஒருவர் தோன்றுவார் என்று ஸ்ரீல பக்திவினோதர் முன்பே அறிவித்திருந்தார். அவரால் அறிவிக்கப்பட்டவர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரே என்பதை நம்மால் தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது.