காட்சி: சுமார் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தைய குருக்ஷேத்திர பூமி. இன்றைய புதுதில்லிக்கு வடமேற்கில் சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், அரச பரம்பரையினர் அனைவரும் ஒரு கொடிய போருக்காக அணிவகுத்து காத்திருந்த தருணம். திடீரென்று ஒரேயொரு ரதம் மட்டும் இரண்டு சேனைகளுக்கும் இடையில் தனியாக வந்து நின்றது. அதில் அப்போரின் முக்கிய நாயகனான அர்ஜுனனும் அவனது சாரதியாக பகவான் கிருஷ்ணரும் இருந்தனர். தனது நண்பர்கள், உறவினர்கள், குருமார்கள் என எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டு, பாசத்தினால் மயங்கி, அவர்களை எவ்வாறு கொல்வது என்பதில் குழப்பமுற்ற அர்ஜுனன் தனது நண்பரான கிருஷ்ணரை குருவாக ஏற்று அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற விரும்பினான். அத்தருணத்தில் பகவத் கீதை எனப்படும் காலத்திற்கு அப்பாற்பட்ட உன்னத உபதேசங்களை பகவான் அருளினார்.