துயருற்றவர்களின் மீது பக்தர்களின் கருணை

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பக்தர்கள் எப்போதும் கருணை நிறைந்தவர்களாக மற்றவர்களின் நன்மையைப் பற்றி சிந்திப்பவர்களாக உள்ளனர் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

அதிர்ஷ்டசாலிகளாக மாற்றுதல்

பரீக்ஷித் மஹாராஜர் நரக லோகங்களைப் பற்றிய விவரங்களை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து கேட்டறிந்தவுடன், மக்களை அதிலிருந்து எவ்வாறு விடுவிப்பது என்று வினவினார். அவர் ஒரு வைஷ்ணவர் (பக்தர்). வைஷ்ணவன் எப்போதும் பிறரின் துன்பத்திற்காக வருந்துபவன், பிறரின் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும். எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாயினும், எல்லா வைஷ்ணவர்களும் அதாவது பக்தர்கள் அனைவரும் கடவுள் உணர்வுள்ளவர்கள், கருணையுள்ளம் படைத்தவர்கள் ஆவர்.

உயிர்வாழிகள் பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள பற்பல கிரகங்களில் பல்வேறு உயிரினங்களில் சுற்றித் திரிந்து கொண்டுள்ளனர். அவ்வாறு திரிந்து கொண்டிருக்கும் எண்ணற்ற உயிர்வாழிகளில் யாராவது ஒருவர்தான் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார். அதிர்ஷ்டசாலியாக இருப்பவர் மட்டுமே கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவார். கிருஷ்ண உணர்வு தாராளமாக வழங்கப்பட்டாலும், மக்கள் ஏன் அதைப் பயன்படுத்திக்கொள்வதில்லை? ஏனெனில், அவர்கள் அதிர்ஷ்டமற்றவர்கள்.

வீடுவீடாகச் சென்று அதிர்ஷ்டமற்றவர்களை அதிர்ஷ்டசாலிகளாக்குவது ஒவ்வொரு வைஷ்ணவனின் கடமை. “மக்களை நரக வாழ்விலிருந்து விடுவிப்பது எவ்வாறு?” என்று ஒவ்வொரு வைஷ்ணவனும் எண்ணுகிறான். பரீக்ஷித் மஹாராஜரும் அதையே வினவினார்: “ஒருவன் தன் பாவச் செயல்களின் விளைவாக நரக வாழ்வை அனுபவிப்பதாகக் கூறுகிறீர்கள். இந்த மக்களைக் கடைத்தேற்றுவதற்கான வழி என்ன?” பாவச் செயல்களின் காரணமாகத் துன்புறுபவர்களை விடுவிப்பதே வைஷ்ணவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

பக்தனின் கவலை

பிரகலாத மஹாராஜர் நரசிம்மதேவரை தரிசித்தபோது கூறினார்:

நைவோத்விஜே பர துரத்யய-வைதரண்யாஸ்

த்வத்-வீர்ய-காயன-மஹாம்ருத-மக்ன-சித்த:

ஷோசே ததோ விமுக-சேதஸ இந்த்ரியார்த்த-

மாயா ஸுகாய பரம் உத்வஹதோ விமூடான்

“அன்பான பிரபுவே, நான் என் சொந்த முக்தியைப் பற்றிக் கவலைப்படவில்லை,” என்று பிரகலாத மஹாராஜர் கூறுகிறார். (ஸ்ரீமத் பாகவதம் 7.9.43) மாயாவாதிகளோ தம் சொந்த முக்திக்குத் தடங்கல் ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். “நான் மற்றவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்யப் போனால், எனக்கு வீழ்ச்சி ஏற்படலாம். எனது ஆன்மீக வாழ்வு முடிந்துவிடலாம்,” என்று அவர்கள் எண்ணுகின்றனர். எனவே, அவர்கள் மக்களைக் காக்கும் பிரச்சாரத்திற்கு வருவதில்லை. வைஷ்ணவர்களோ வீழ்ச்சிக்கான அபாயம் இருக்கும்போதிலும், பிரச்சாரத்திற்கு வருகிறார்கள். ஆயினும், அவர்கள் வீழ்வதில்லை. அவர்கள் நரகத்திற்குச் சென்றும்கூட கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். பிரகலாத மஹாராஜரின் கூற்று இதுவே.

அவர் மேலும் கூறுகிறார், “நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை; ஏனெனில், எப்படியோ நான் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் இருக்க பழகியிருக்கிறேன். ஆயினும், எனக்கு ஒரே ஒரு கவலை மட்டும் உண்டு.” கவனியுங்கள். அவர் தன்னைப் பற்றி கவலைப்படாவிட்டாலும், அவருக்கும் கவலையிருக்கிறது. ஷோசே ததோ விமுக-சேதஸ: “நான் கிருஷ்ண உணர்வு இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறேன். அதுவே என் கவலை.” மாயா-ஸுகாய பரம் உத்வஹதோ விமூடான், இந்த அயோக்கியர்கள் தற்காலிக சுகத்திற்கான பொய்யான நாகரிகத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்.

நரசிம்மதேவரை தரிசித்த பிரகலாதர் மக்களின் நிலை கண்டு வருந்தினார்.

பொய்யான சுகத்தில் வாழும் மக்கள்

மாயா-ஸுகாய. ஆம், நாம் பொய்யான நாகரிகத்தை உருவாக்கியிருக்கிறோம். ஆண்டுதோறும் பலதரப்பட்ட கார்கள் தயாரிக்கப்படுகின்றன, அதன் காரணத்தால் எத்தனையோ சாலைகளை அமைக்க வேண்டியுள்ளது. இதனால் பிரச்சனைகள் மேல் பிரச்சனையே ஏற்படுகிறது. எனவே, இது மாயா-ஸுகாய, பொய்யான மகிழ்ச்சி; இருந்தும், இவ்வகையான மகிழ்ச்சியையே நாம் நாடுகிறோம்.

உங்கள் நாட்டில் கார்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்திருக்கிறது; ஆனால் பிரச்சனைகளை அது தீர்க்கவில்லை. வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நீங்கள் கார்கள் தயாரிக்கிறீர்கள். ஆனால் இதனால் பிரச்சனைகள் அதிகமாவதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். என் சீடரான தயானந்தர் லாஸ் ஏஞ்சலஸிலுள்ள ஒரு மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்ல விரும்பியபோது, மருத்துவரைச் சந்திப்பதற்கு நான் காரில் முப்பது மைல் பயணம் செய்ய நேரிட்டது. ஒருமுறை கார்களை உற்பத்தி செய்துவிட்டால், உங்களது நண்பர்களைச் சந்திக்க முப்பது-நாற்பது மைல் பயணித்தாக வேண்டும்.

நியுயார்க்கிலிருந்து போஸ்டனுக்கு ஒரு மணி நேரத்தில் பறந்து செல்லலாம். ஆனால் விமான நிலையத்திற்குச் செல்ல அதைவிட அதிக நேரம் பிடிக்கிறது. இப்படிப்பட்ட நிலையே மாயா-ஸுகாய எனப்படும். நாம் வசதியான சூழ்நிலையை உருவாக்க முயல்கிறோம். ஆனால், அதன் விளைவாக மற்றோர் அசௌகரியமான நிலை ஏற்படுகிறது. இதுவே பௌதிக உலகின் நியதி. கடவுளும் இயற்கையும் வழங்கியுள்ள இயற்கையான வசதிகளோடு நாம் திருப்தியடையாமல், செயற்கையான வசதிகளை விரும்புகிறோம். இதை பெரும்பாலான மக்கள் உணர்வதில்லை. வசதியான சூழ்நிலையை உண்டாக்குவதாக எண்ணிக் கொண்டு, வாழ்விற்கான ஊதியத்தைத் தேடி—அலுவலகத்திற்குச் செல்ல ஐம்பது மைல் அங்கிருந்து வீடு திரும்புவதற்கு மீண்டும் ஐம்பது மைல்—என பயணம் மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்ட பிரகலாத மஹாராஜர் கூறுகிறார்: இந்த விமூட (மூடர்கள்) அயோக்கியர்கள் தற்காலிக இன்பத்திற்காகத் தங்களின் மீது தேவையற்ற சுமையை ஏற்றிக்கொள்கின்றனர்.

பிரகலாதரோ, “எப்போதும் கிருஷ்ண உணர்விலிருக்கும் கலையை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறுகிறார். அஃது என்ன கலை? த்வத்-வீர்ய-காயன-மஹாம்ருத-மக்ன-சித்த: பகவானின் வெற்றிகரமான வீரச் செயல்கள் மற்றும் லீலைகளின் புகழைப் பாடுவதே அந்தக் கலையாகும்.

பிரகலாத மஹாராஜர் கூறுகிறார், “நான் எங்குச் சென்றாலும் உமது வீரச் செயல்களின் புகழைப் பாடி பாதுகாப்பாக இருப்பேன் என்ற உறுதி எனக்குண்டு. நான் வீழ்ச்சியடைவது சாத்தியமல்ல. ஆயினும், எப்போதும் கடினமாக உழைக்கக்கூடிய இந்த நாகரிகத்தை உருவாக்கியுள்ள மக்களுக்காக நான் கவலைப்படுகிறேன்.”

சொந்த முக்தி முக்கியமல்ல

பிரகலாத மஹாராஜர் மேலும் கூறுகிறார்:

ப்ராயேண தேவ முனய: ஸ்வ-விமுக்தி-காமா

மௌனம் சரந்தி விஜனே ந பரார்த்த-நிஷ்டா:

நைதான் விஹாய க்ருபணான் விமுமுக்ஷ ஏகோ

நான்யம் த்வத் அஸ்ய ஷரணம் ப்ரமதோ ’னுபஷ்யே

(ஸ்ரீமத் பாகவதம் 7.9.44)

தமது சொந்த முக்தியில் பற்றுதல் கொண்டுள்ள சாதுக்களும் முனிவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இமயமலை போன்ற தனிமையான இடங்களை நாடிச் செல்கிறார்கள். அவர்கள் யாரிடமும் பேசுவதில்லை. சாதாரண மக்களோடு பழகினால் தமது உறுதி கெட்டுவிடுமோ வீழ்ச்சியடைந்து விடுவோமோ என்று அஞ்சு

கிறார்கள். ஆயினும், “இந்த மிகச்சிறந்த முனிவர்கள், இரவுபகலாக கடினமாக உழைக்கும் நாகரிகத்தையுடைய நகரங்களுக்கு வந்து மக்களுடன் பழகு

வதில்லையே,” என்று பிரகலாத மஹாராஜர் வருந்துகிறார். இத்தகைய முனிவர்கள் கருணை இல்லாதவர்கள். பிரகலாதரோ புலனின்பத்திற்காக தேவையின்றி கடினமாக உழைக்கும் வீழ்ச்சியடைந்துள்ள மனிதர்களுக்காகக் கவலைப்படுகிறார்.

பிரகலாத மஹாராஜர் கூறுகிறார், நைதான் விஹாய க்ருபணான் விமுமுக்ஷ ஏக:, “எம்பெருமானே, நான் எனக்கு மட்டும் முக்தியை விரும்பவில்லை. இந்த மூடர்களை என்னுடன் அழைத்துச் செல்லாமல் நான் வரப் போவதில்லை.” நிலையிழந்த ஆத்மாக்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் அவர் கடவுளின் ராஜ்ஜியத்திற்குச் செல்ல விரும்பவில்லை. வைஷ்ணவர் இப்படிப்பட்டவர். நான்யம் த்வத் அஸ்ய ஷரணம் ப்ரமதோ ’னுபஷ்யே, “உம்மிடம் சரணடைவது எப்படியென்பதை நான் இவர்களுக்குக் கற்றுத்தர விரும்புகிறேன். அதுவே என் இலட்சியம்.”

ஓர் அசௌகரியத்தைப் போக்க நாம் கண்டுபிடிக்கும் பொருட்கள் மேலும் பல அசௌகரியங்களைக் கொடுக்கின்றன.

எவ்வாறு கடைத்தேற்றுவது?

ஒருவன் பகவானிடம் சரணடைந்துவிட்டால், அவனுக்கு பாதை தெளிவாகத் தெரியும் என்பதை வைஷ்ணவன் அறிவான். “எப்படியாவது கிருஷ்ணருக்கு முன் மக்கள் தலைவணங்கட்டும்.” இது மிக எளிதானதாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நம்பிக்கையுடன் கிருஷ்ணரின் முன் நமஸ்காரம் செய்து, “பகவான் கிருஷ்ணரே, இத்தனை காலம், பல பிறவிகளாக உம்மை மறந்திருந்தேன். இப்போது நான் உணர்வு பெற்றுவிட்டேன்; தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளும்” என்று பிரார்த்திப்பதாகும். இந்த உத்தியைக் கற்று முழு மனதுடன் பகவானிடம் சரணடையும்போது பாதை திறக்கப்படுகிறது. வைஷ்ணவனின் தத்துவம் இதுவே. நிலையிழந்த ஆத்மாக்களை எவ்வாறு கடைத்தேற்றுவது என்பதைப் பற்றியே வைஷ்ணவன் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பான். கோஸ்வாமிகளைப் போல் அவன் அதற்கான வழியைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பான்.

பாவங்களுக்கு சாட்சியாக கிருஷ்ணர்

மக்கள் பல்வேறு வகையான குற்றங்களில் (பாவங்களில்) ஈடுபடுகின்றனர். மனதால், வார்த்தையால், செயலால் என எவ்வாறு செய்யப்பட்டாலும், பாவம் பாவமாகவே என்று கருதப்படுகிறது. இத்தகைய பாவச் செயல்களுக்குத் தண்டனையாக ஒருவன் துன்புற்றேயாக வேண்டும். அன்றாட வாழ்வில் நாம் சட்டப்படி நடக்காவிடில் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றோமோ, அவ்வாறே கடவுளின் சட்டங்களினால் நாம் தண்டிக்கப்படுவோம். அதிலிருந்து தப்பிக்க முடியாது, அது சாத்தியமல்ல. நான் மற்றவர்களை ஏமாற்றலாம், திருடிவிட்டு ஒளிந்துகொள்ளலாம். நாட்டின் சட்டத்திலிருந்து வேண்டுமானால் தப்பலாம், ஆனால் உயர்நிலைச் சட்டமாகிய இயற்கையின் சட்டத்திலிருந்து தப்ப முடியாது. எத்தனையோ சாட்சிகள் உள்ளன. பகலில் சூரிய ஒளி, இரவில் நிலவொளி—இவையெல்லாம் சாட்சிகள்.

எல்லாவற்றிற்கும் மேலான சாட்சி கிருஷ்ணர். அவர் உங்களின் இதயத்தில் வீற்றுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு எல்லா வசதியும் செய்து தருகிறார். புலன்களை திருப்திப்படுத்த நீங்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், அதற்கான வசதியை கிருஷ்ணர் ஏற்படுத்தித் தருகிறார். இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ, “நான் ஒவ்வொருவர் இதயத்திலும் வீற்றிருக்கிறேன்.” மத்த: ஸ்மிருதிர் ஜ்ஞானம் அபோஹனம் ச, “என்னிலிருந்தே ஞாபகமும் அறிவும் மறதியும் ஏற்படுகின்றன.”

எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ள கிருஷ்ணர் நமது எல்லா செயல்களுக்கும் சாட்சியாக இருக்கிறார்.

தேர்வு நம் கையில்

இப்படியாக கிருஷ்ணர் நமக்கு வாய்ப்பளித்துள்ளார். நீங்கள் கிருஷ்ணரை அடைய விரும்பினால், அதற்கான வாய்ப்பை அவரே வழங்குவார். அவர் உங்களுக்கு வேண்டாமென்றால், அவரை மறக்கும் வாய்ப்பையும் வழங்குவார். கிருஷ்ண உணர்வுடன் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், அதில் முன்னேறும் வாய்ப்பை அவர் உங்களுக்கு வழங்குவார். இதெல்லாம் உங்களைப் பொறுத்தது.

கிருஷ்ண உணர்வில்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாயிருக்க விரும்பினால், கிருஷ்ணர் அதை ஆட்சேபிப்பதில்லை. யதேச்சஸி ததா குரு, அர்ஜுனனுக்கு உபதேசம் செய்துவிட்டு கிருஷ்ணர் கூறினார், ‘‘நான் எல்லாவற்றையும் உனக்கு விளக்கிக் கூறிவிட்டேன். இனி உன் விருப்பம்போல் செய்துகொள்.” அர்ஜுனன் உடனடியாகக் கூறிய பதில்: கரிஷ்யே வசனம் தவ, “நான் உங்கள் கட்டளையை நிறைவேற்றுகிறேன்.” அதுவே கிருஷ்ண உணர்வு.

உங்களது சிறு சுதந்திரத்தில் கடவுள் தலையிடுவதில்லை. கடவுளின் ஆணைப்படி நடக்க நீங்கள் விரும்பினால், கடவுள் உங்களுக்கு உதவுவார். சில வேளைகளில் நீங்கள் வீழ்ச்சியடைந்தாலும், மீண்டும் முழு மனதுடன், “இன்று முதல் நான் கிருஷ்ண உணர்வில் அவரது கட்டளைகளை நிறைவேற்றுவேன்,” என்று உறுதியெடுத்துக் கொண்டால், அப்போது கிருஷ்ணர் உங்களுக்கு உதவுவார். எல்லாச் சூழ்நிலைகளிலும்—நீங்கள் வீழ்ச்சியுற்ற நிலையில் இருப்பினும்—அவர் உங்களை மன்னித்து உங்களுக்கு நல்லறிவை வழங்குவார். “இதைச் செய்யாதே, இப்போது உன் கடமையைத் தொடர்ந்து செய்,” என்று அந்த அறிவு உங்களுக்குச் சொல்லும். ஆனால் நீங்கள் கிருஷ்ணரை மறக்க விரும்பினால் கிருஷ்ணரில்லாமல் மகிழ்ச்சியாயிருக்க விரும்பினால், பிறவிதோறும் நீங்கள் அவரை மறப்பதற்கான வாய்ப்புகளை அவர் உங்களுக்கு அளிப்பார்.

கண்ணை மூடினால் தண்டனை விலகாது

கடவுள் இல்லையென்று ஒருவன் சொன்னால் அவர் இல்லாமல் போய்விடுவார் என்பதல்ல, அவனது செயலுக்கு அவன் பொறுப்பாளியாகமாட்டான் என்பதல்ல. அப்படிச் சொல்வது நாஸ்திகமாகும். நாஸ்திகர்கள் கடவுளை விரும்புவதில்லை; ஏனெனில், அவர்கள் எப்போதும் பாவத்தைச் செய்பவர்கள். அவர்கள் கடவுள் இருப்பதாக எண்ணினால், தண்டனையை எண்ணி நடுங்க வேண்டிவரும். ஆகவே, அவர்கள் கடவுள் இருப்பதை மறுக்கிறார்கள். அஃது அவர்களின் வழிமுறை. கடவுளை ஒப்புக்கொள்ளாவிட்டால் தண்டனையில்லை என்றும், எதுவும் செய்யலாமென்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

முயலைப் பெரிய மிருகம் தாக்கும்போது, “நான் கொல்லப்பட மாட்டேன்” என்று முயல் கண்ணை மூடிக் கொண்டு எண்ணுகிறது. ஆயினும், அது கொல்லப்படுகிறது. அதுபோல, கடவுளையும் அவரின் நியதியையும் நாம் மறுக்கலாம், ஆனால் கடவுளும் அவரின் சட்டங்களும் இருக்கவே செய்கின்றன. “அரசின் சட்டத்தை நான் கண்டுகொள்வதில்லை” என்று நீங்கள் மறுத்தால், சிறையில் அடைபட்டுத் துன்புறுவீர்கள். அதுபோலவே, முட்டாள்தனமாக “கடவுள் இல்லை,” அல்லது “நானே கடவுள்” என்று நீங்கள் கூறலாம். ஆனால் உங்கள் நடத்தைக்கு, அது நன்னடத்தையானாலும் தீய நடத்தையானாலும், நீங்களே பொறுப்பு.

மரணத்திற்குப்பின் என்ன நேரிடுகிறது என்பதைக் கற்பிக்கும் கல்வித் திட்டம் இல்லாதது இன்றைய நாகரிகத்தின் குறைபாடாகும்; ஏனெனில், மரணத்திற்குப்பின் என்ன நேரிடுகிறது என்பதை அறியாமல் மரணமடைபவன் ஒரு மிருகத்தைப் போல் மடிகிறான். மரணத்திற்குப்பின் வேறு உடலைப் பெறவிருப்பதை மிருகம் அறியாது; அதற்கு அந்த அறிவு இல்லை.

ஒவ்வொரு கணமும் நாம் அனைவரும் உடலை மாற்றிக் கொண்டிருக்கிறோம். உடலை மாற்றுவதன் இறுதி நிலையே மரணம் எனப்படுகிறது. ஆயினும், கிருஷ்ணர் கூறுகிறார், “எனது தோற்றம், மறைவு மற்றும் செயல்களின் உன்னதமான தெய்வீகத் தன்மையை எவனொருவன் (மேலெழுந்தவாரியாக அல்லாமல்) தத்துவபூர்வமாக அறிகிறானோ, அவன் இந்த உடலை விட்டபின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை.” (பகவத் கீதை 4.9)

அப்படிப்பட்டவனுக்கு என்ன நேர்கிறது? அவன் கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்கிறான். நீங்கள் கிருஷ்ணரைச் சென்றடைய வேண்டுமானால், உங்கள் ஆன்மீக உடலை தயார் செய்துகொள்ள வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு. நீங்கள் கிருஷ்ண உணர்வில் இருந்தால், படிப்படியாக அடுத்த உடலை தயார் செய்துகொள்ளலாம். அந்த ஆன்மீக உடல் உங்களை கிருஷ்ணரின் இருப்பிடமான கிருஷ்ண லோகத்திற்கு உடனடியாக அழைத்துச் செல்லும்; அங்கு நீங்கள் நிரந்தரமாகத் தங்கி ஆனந்தமாக வாழலாம்.

கிருஷ்ணரிடமிருந்தே ஞாபகமும் அறிவும் மறதியும் வருகிறது. எனவே, அவரை அடைவதும் அடையாமல் இருப்பதும் நமது
கையில்தான் இருக்கிறது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives