ஜட இயற்கையைப் புரிந்துகொள்ளுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 ஸ்கந்தங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், இருபத்தேழாம் அத்தியாயம்

சென்ற இதழில் ஜட இயற்கையின் அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிய கபிலரின் விளக்கங்களை அறிந்தோம். இந்த இதழில் உலக இயல்பு மற்றும் பக்தித் தொண்டில் கபிலரின் அறிவுரைகளைக் காணவிருக்கிறோம்.

முக்தி தரும் பக்தித் தொண்டு

கதிரவன், நீரில் காணப்படும் அதன் பிரதிபலிப்பிலிருந்து எப்போதும் விலகியிருப்பதைப் போல, ஆத்மாவானது ஜடவுடலில் தங்கியிருந்தாலும் ஜட இயற்கை குணங்களால் பாதிக்கப்படாமலும் அதன் உரிமையாளராகக் கருதாமலும் செயல்படுவதால் செயல் விளைவுகளிலிருந்து விலகியிருக்க முடியும். ஜட இயற்கையால் எழும் பொய் அஹங்காரத்தின் மயக்கத்தால் ஒருவர் தன் உடலை தானாக இனம் கண்டு ஜட செயல்களில் ஆழ்ந்து விடுகிறார். மேலும் எல்லாவற்றிற்கும் தானே உரிமையாளர் என்று தவறாக எண்ணுகிறார். இதனால் கட்டுண்ட ஆத்மா 84 இலட்சம் வகையான உயிரினங்களில் உடல் விட்டு உடல் மாற வேண்டியுள்ளது.

உண்மையில், ஆத்மா ஜடவுலகத்திற்கு அப்பாற்பட்டது. இருப்பினும் ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான தனது ஆசையினால் ஜடவுலகின் இன்ப துன்பங்களால் பாதிக்கப்படுகிறான். இது கனவைப் போன்றது. இந்த போலியான சூழ்நிலையிலிருந்து முக்தி பெற ஒருவர் உலகப் பற்றின்றி மிகவும் தீவிரமாக கிருஷ்ணருக்குத் தொண்டு புரிவதே வழியாகும். பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிப்பதாலும் அவரைப் பற்றி கேட்பதாலும் கலப்படமற்ற பக்தித் தொண்டின் நிலைக்கு ஒவ்வொருவரும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

எல்லா உயிரினங்களையும் சமமாகவும் யாரிடமும் பகைமையின்றியும் அதே சமயம் பற்றின்றியும் மனத் துறவுடன் அமைதியாக பரம புருஷரிடம் எல்லா முடிவுகளையும் விட்டுவிட்டு என்றும் அழியாத நித்திய தொண்டினை ஆற்ற வேண்டும். ஒரு பக்தர் எளிதாகக் கிடைக்கும் வருமானத்தில் திருப்தியடைய வேண்டும். மிதமான உணவு, தனியிடத்தில் வசித்தல், தெய்வீக சிந்தனையுடன் அமைதியாக, நட்பாக அன்புடன் தன்னையுணர்ந்த நிலையில் அடக்கத்தோடு இருத்தல் வேண்டும்.

ஜடம் மற்றும் உணர்வு (உயிர்) இவற்றிற்கு இடையிலுள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டு ஜடமான இந்த உடலுடன் இனம் காண்பதால் உடல் சம்பந்தமானவற்றில் கவரப்படும் தவறை செய்யக் கூடாது. இவ்வாறு உலகியல் கருத்துகளிலிருந்து விடுபட்டு உன்னதமான நிலையில் பொய் அஹங்காரமின்றி தூய்மையடைந்த புலன்களுடன் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்ய வேண்டும்.

தன்னையறிதல்

அனைத்து பொருள்களிலும் பரம புருஷ பகவான் இருப்பதை தூய பக்தரால் காண முடியும். அப்பொருட்களில் அவர் ஒரு பிரதிபலிப்பாக மட்டும் இருந்தாலும், இருளான ஜட மாயையின் ஒளியாக இருப்பவர் பரம புருஷர் மட்டுமே என்பதை தூய பக்தர்கள் புரிந்துகொள்ள முடியும்.

சூரியன் வெகு தொலைவில் இருந்தாலும், அது நீரிலுள்ள பிம்பத்தில் ஒரு தோற்றமாகவும், அதன் ஒளி அறையின் சுவர்களில் மற்றொரு தோற்றமாகவும் வெளிப்படுகிறது. சூரியனை இவ்வாறு அதன் தோற்றங்களில் உணர்வதைப் போலவே, பரம புருஷ பகவானையும் அவரது சக்தியான ஜடப் பொருட்களில் ஒரு தூய பக்தர் உணர்கிறார்.

தன்னையுணர்ந்த ஆத்மா தான் பகவானின் நித்திய தொண்டன் என்று நினைக்கும்பொழுது, ஸத்வ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு, சுத்த-ஸத்வ நிலையை அடைகிறது. மேலும், உடல் மற்றும் மனமே தான் என்னும் தவறான எண்ணத்திலிருந்து விடுதலை அடைகிறது. தூய பக்தர் பௌதிக இன்பத்திற்கான பொருட்களுடன் தொடர்புடையவராக தோன்றினாலும் அவர் பொய் அஹங்காரத்திலிருந்து விடுபட்டவர் என்பதை அறிய வேண்டும்.

ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காணும்பொழுது, அவர் தன்னை வேறுபட்ட நபராகவும் தன்னை இழந்தவராகவும் நினைத்துப் பார்க்கிறார். உண்மையில், நமது தனித்தன்மை எவ்வித மாறுபாடுமின்றி குறைபடாமல் இருக்கிறது. அதுபோலவே, ஜீவனின் தனித்தன்மை எச்சூழ்நிலையிலும் இழக்கப்படுவதில்லை. ஆன்மீக உலகிலும் நமது தனித்தன்மை தொடர்கிறது.

 

தூய பக்தித் தொண்டு

அன்னை தேவஹூதி கபிலரிடம் தொடர்ந்து வினவினாள்: “ஜடப்பொருளாகிய இயற்கை என்றேனும் ஆத்மாவிற்கு விடுதலை தருகிறதா? ஒன்று மற்றொன்றை நித்தியமாக பற்றிக் கொண்டிருப்பதால் அவற்றின் பிரிவு எவ்வாறு சாத்தியமாகிறது? ஆத்மா நேரடியாக செயல் செய்யாதிருப்பினும், அவன் ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில் ஜடவுணர்வுடன் இருக்கும் வரை அவனுக்கு விடுதலை எவ்வாறு கிடைக்கும்? கட்டுண்ட வாழ்வைப் பற்றிய பயம் தத்துவ விசாரணைகளாலும் மனக்கற்பனைகளாலும் தற்காலிகமாக தவிர்க்கப்பட்டாலும், மூல காரணம் தொடர்ந்து இருப்பதால், அந்த பயம் மீண்டும்மீண்டும் தோன்றி தொல்லை தருமே?”

தேவஹூதியின் அறிவார்ந்த கேள்விகளுக்கு பகவான் கபிலர் பதிலளித்தார்: அன்புள்ள அன்னையே, ஒருவர் (ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளதுபடி) என்னைப் பற்றிய உபதேசங்களை அல்லது (ஸ்ரீமத் பகவத்கீதை, கபிலரின் போதனைகள் போன்ற) நான் எடுத்துரைத்த உபதேசங்களை கவனமாகக் கேட்பதன் மூலமாகவும், என்னுடனான பக்தித் தொண்டை தீவிரமாக நிறைவேற்றுவதன் மூலமாகவும் ஜடத்தளைகளிலிருந்து விடுதலை பெற முடியும். இந்நிலையில் அவர் செய்யும் செயல்களுக்கு எதிர்விளைவுகள் கிடையாது, ஜடவுலகின் எல்லா களங்கங்களிலிருந்தும் அவர் விடுதலையடைகிறார்.

நெருப்பை உண்டாக்கும் மரக்குச்சிகளே நெருப்பிற்கு இரையாவது போல புலன்களால் செய்யப்படும் பக்தித் தொண்டினால் புலன்கள் தூய்மைபடுத்தப்படுகின்றன. ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் தனது தவறினை உணர்ந்து ஜட விஷயங்களை பகவானின் தொண்டில் ஈடுபடுத்துவதால் உயிர்வாழி விடுதலையடைகிறான். கனவில் அச்சுறுத்தும் விஷயங்கள் விழித்தெழுந்த பின் பாதிப்பதில்லை. அதுபோலவே மாசடைந்த நிலையில் உள்ள உணர்வு, தூய்மையடைந்து கிருஷ்ண உணர்வாக முன்னேற்றம் அடையும்பொழுது, அது விழிப்புற்ற நிலை எனப்படுகிறது. அத்தகைய அறிவொளி பெற்ற ஆத்மாவை ஜடவுலக செயல் விளைவுகள் பாதிப்பதில்லை.

இத்தகைய தூய பக்தர், பிரம்ம லோகத்திற்கு ஏற்றம் பெற்று நீண்ட வாழ்வு வாழும் ஆசை உட்பட எவ்வித ஆசையும் அற்றவராகிறார். அவர் எனது எல்லையற்ற கருணையினால், எனது நித்ய சேவகன் என்னும் தனது உண்மை நிலையை அடைகிறார். இவ்வாறு எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு எனது ஆன்மீக சக்தியின் முழு பாதுகாப்பிலுள்ள எனது தெய்வீக இருப்பிடத்தை நோக்கி நிலையாக முன்னேறுகிறார். தற்போதைய பூதவுடலைக் கைவிட்ட பின் எனது இருப்பிடத்தினை அடையும் அவர் அங்கிருந்து மீண்டும் துன்பகரமான இவ்வுலகிற்கு வருவதில்லை.

பக்குவமடைந்த யோகி, யோக சித்திகளிலும் ஜடப்பொருட்களிலும் கவர்ச்சியற்றவராகும்பொழுது, மிகவிரைவில் என்னை அடைகிறார். அவர் முழுமையாக என்மீது பற்று கொண்டிருப்பதால் மரணம் அவரைத் தீண்டாது.

நெருப்பை உருவாக்கும் மரக்குச்சி நெருப்பிற்கு இரையாகுவதைப் போலவே, புலன்களால் செய்யப்படும் பக்தியினால் புலன்கள் தூய்மையடைகின்றன.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives