பகவான் ஸ்ரீ இராமர் வரலாற்று நாயகனா, கற்பனை காவிய நாயகனா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பகவான் ஸ்ரீ இராமரை கற்பனை காவியத்தின் நாயகன் என்று அடியேன் ஒருபோதும் எழுத மாட்டேன் என்பதை அறிந்துள்ள வாசகர்கள், “இவர் ‘வரலாற்று உண்மை’ என்றுதான் கூறப் போகிறார், இதை ஏன் படிக்க வேண்டும்?” என்று எண்ணி விட வேண்டாம். ஸ்ரீ இராமரை கற்பனை காவிய நாயகனாக மாற்றத் துடிக்கும் துஷ்டர்களுக்கும் அவர்களை நம்பும் துர்பாக்கியர்களுக்கும் அவர்களுக்கு பதிலளிக்கத் தெரியாத நம்மவர்களுக்கும் ஒரு தெளிவை வழங்க அடியேன் முயல்கிறேன்.

எதிர்தரப்பினரின் வாதம்

இராமரை கற்பனை நாயகனாகக் கூறுவோர் முன்வைக்கும் வாதம்: “இராமாயணமே கற்பனை காவியம் என்பதால், அதன் நாயகனும் கற்பனையே. இராமாயணத்தின் பல சம்பவங்கள் இடத்திற்கு இடம் வேறுபடுவதால் இராமாயணத்தை கற்பனை என்றே கருதுகிறோம். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத விஷயங்கள் இதர மொழி இராமாயணங்களில் காணப்படுகின்றன. வால்மீகியின் கதைக்கும் மற்றவர்களின் கதைக்கும் ஆங்காங்கே வேறுபாடு உள்ளது. இராமாயணம் ஒரு வரலாறு என்றால், ஒரே சம்பவத்தை பல எழுத்தாளர்கள் எப்படி பலவாறு எழுதியிருப்பர்?”

இந்த வாதங்களுக்கு பக்குவமாக விடையளிப்போம்.

இராமாயண வேற்றுமைகள்

இராமாயணங்களை ஆய்வதற்கு முன்பாக, நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்: இராமாயண சம்பவங்கள் பல இலட்சம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. அவையனைத்தும் பக்குவமான முறையில் வால்மீகியினால் பதிவு செய்யப்பட்டு, இதிஹாஸம் என்று அறியப்படுகிறது. இதிஹாஸம் என்றால், “இவ்வாறு நிகழ்ந்தது” என்று பொருள். அதாவது, இராமாயணம் என்பது வரலாற்றை துல்லியமாக எடுத்துரைக்கும் நூலாகும்.

இருப்பினும், அன்றைய காலக்கட்டத்தில், இன்று இருப்பதைப் போல டிஜிட்டல் பிரதிகள் கிடையாது, அச்சகங்களும் கிடையாது—ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே இருந்தன. இராமாயணம் போன்ற பெரிய நூல்களைப் பல பிரதிகள் எடுப்பது எளிதான காரியமல்ல. மேலும், வடமொழியில் இருந்த இராமாயணத்தை வட்டார மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற தேவையும் ஏற்பட்டது. இன்றைய மொழிபெயர்ப்புகளைப் போன்று அந்த நாள்களில் யாரும் எதையும் அப்படியே உள்ளது உள்ளபடி மொழிபெயர்ப்பது கிடையாது. எந்தவொரு நூலும் உரைநடையில் எழுதப்பட்டதும் கிடையாது. செய்யுள் நடையில் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒரு வரலாற்றை மொழிபெயர்த்தல் என்பது சாதாரண காரியமல்ல. அவ்வாறு மொழிபெயர்க்கும்போது, அதன் ஆசிரியர்கள் சிலவற்றை சேர்த்தும், கழித்தும், மாற்றியும் வழங்குவது வழக்கம். இதற்கு இராமாயணம் விதி விலக்கல்ல. இராமாயணத்தில் பல வேற்றுமைகள் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம். அதே சமயத்தில், அந்த வேறுபட்ட இராமாயணங்களில்கூட சிலவற்றை ஓரளவிற்கு ஏற்கலாம், சிலவற்றை ஏற்கவே முடியாது. ஏனெனில், அந்த வேற்றுமைகளுக்கான காரணங்கள் வேறுபடுகின்றன.

கம்பர் முதலானோர் வால்மீகி இராமாயணத்தை மையமாக வைத்தே வட்டார மொழிகளில் இராமாயணம் இயற்றினர்.

மொழிபெயர்க்கப்பட்ட இராமாயணம்

வடமொழியை அறிந்த வட்டார அறிஞர்களும் புலவர்களும், இராமாயணத்தை தத்தமது மொழிகளில் மொழிபெயர்த்தனர். கம்ப இராமாயணம் (தமிழ்), ரெங்கநாத இராமாயணம் (தெலுங்கு), இராமசரித மானஸ் (இந்தி) முதலியவற்றை அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட இராமாயணங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

இந்த மொழிபெயர்ப்பு இராமாயணங்களின் ஆசிரியர்கள் வால்மீகியின் இராமாயணத்தை மையமாக எடுத்துக் கொண்டபோதிலும், இராமாயணத்தின் பல்வேறு சின்னஞ்சிறு கருத்துகள் இதர புராணங்களிலும் காணப்படுவதால், அத்தகு புராணங்களிலிருந்து பல பகுதிகளை எடுத்து தங்களது இராமாயணத்தில் அவர்கள் இணைத்துள்ளனர். எனவே, அந்த இராமாயண கதைகள் வால்மீகி வழங்கியதிலிருந்து சற்று வேறுபடுகின்றன.

புராணங்கள் ஏன் வேறுபடுகின்றன என்று சிலர் வினவலாம். பகவான் இராமர் ஒருமுறை மட்டும் அவதரிப்பவர் அல்லர். அவர் பிரம்மாவின் பகலில் பல முறை அவதரிப்பதால், ஒவ்வொரு முறையும் அவரது லீலைகளில் சில வேற்றுமைகள் காணப்படுகின்றன. இது கல்ப-பேதம் (வெவ்வேறு கல்பத்தினால் ஏற்படும் வேறுபாடு) என்று அறியப்படுகிறது.

மேலும், வால்மீகி இராமாயணத்தைப் போன்று வட்டார இராமாயணங்கள் பராமரிக்கப்படாத காரணத்தினால், அவற்றினுள் பல்வேறு இடைச்செருகல்களும் காணப்படுகின்றன; வட்டார மொழிகளில் இராமாயணம் இயற்றியோர் சில நுணுக்கமான தகவல்களில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இவையும் இந்த வேறுபாடுகளுக்கு காரணமாக அமைகின்றன.

எனவே, எல்லா இராமாயணத்திலும் வால்மீகி இராமாயணமே அதிகாரபூர்வமானதாக அங்கீகரிக்கப்

படுகிறது. இதர இராமாயணங்களின் கருத்துகளும் சம்பவங்களும் வால்மீகி இராமாயணத்திற்கு இணக்கமானதாக இருந்தால், அவற்றையும் ஏற்கலாம்.

கூத்துகளினால் பரவிய இராமாயணம்

இராமாயண கதைகள் பாரதத்திற்கு வெளியே சென்றபோது, அவை முக்கியமாக நாடகக் கூத்துகளின் மூலமாகப் பரவின. இலக்கியங்களின் மூலமாக பாரதத்தினுள் பரவிய இராமாயணங்களில் வேறுபாடுகள் குறைவாக இருப்பதையும் நாடகக் கூத்துகளின் மூலமாக வெளியே பரவிய இராமாயணங்களில் வேறுபாடுகள் அதிகமாக இருப்பதையும் காண்கிறோம். இராமாயணம் மிகவும் பிரபலமான வரலாறு என்பதால், இதன் கதைகள் சீனா, இந்தோனேஷியா, ஈரான் முதலிய நாடுகளுக்கும் பரவின. ஆயினும், அங்கிருந்த மக்களால் வடமொழியைப் புரிந்துகொள்ள இயலாது என்பதால், பெரும்பாலான கதைகள் நாடகங்களின் மூலமாக பரப்பப்பட்டதால், அந்த நாடுகளில் வசித்தவர்கள், முழுமையான இராமாயணத்தை முறையாகப் பெற முடியவில்லை.

செவி வழி வரலாறுகளில் வேற்றுமைகள் நிச்சயம் இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். சமீபத்திய வரலாற்று நூல்களில்கூட பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதை மறுக்க முடியுமா? வரலாற்றைப் பதிவு செய்கையில் சில வேற்றுமைகள் இருப்பதை வைத்து, வரலாறே இல்லை என்று கூறுதல் புத்திசாலித்தனமா?

உண்மையில், உலகின் பல்வேறு பகுதிகளில் இராமாயணக் கதைகள் (திரிபடைந்த நிலையில் இருந்தால்கூட) பரவியிருப்பதை வைத்தே இராமர் சாதாரண காவியத் தலைவர் அல்ல என்பதை எளிதில் உணரலாம். இராமர் ஒரு வரலாற்று உண்மை என்பதன் காரணத்தினாலேயே உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இராமாயணம் இன்றும் பிரபலமாக அறியப்படுகிறது.

இராமர் ஒரு வரலாற்று உண்மை என்பதன் காரணத்தினாலேயே உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இராமாயணம் இன்றும் பிரபலமாக அறியப்படுகிறது.

பொய்யான இராமாயணங்கள்

பௌத்த, ஜைன மதங்களின் சார்பில் இயற்றப்பட்ட இராமாயணங்கள் பகவான் ஸ்ரீ இராமரின் கதையினைக் குழப்புவதற்காக வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு திரித்து எழுதப்பட்டவை. அவை புறக்கணிக்கத்தக்கவை. இந்து சமய வரலாற்றைக் கெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மனம்போன போக்கில் புனையப்பட்டு எழுதப்பட்ட அத்தகு இராமாயணங்கள் கண்டனத்திற்கு உரியவை.

அதே வழக்கத்தைப் பின்பற்றி, இன்றும்கூட பல்வேறு அறிஞர்கள் தங்களது சொந்த கதைகளை இராமாயணம் என்ற பெயரில் அச்சிட்டு வெளியிடுகின்றனர், சின்னத்திரை நாடகங்களாக இயற்றி மக்களை உண்மை இராமாயணத்திலிருந்து திசைதிருப்புகின்றனர். இவையனைத்தும் கண்டனத்திற்கு உரியவை.

வேறு ஆதாரங்கள் இல்லையா?

இராமர் வரலாற்று நபர் என்பதற்கு இராமாயணம், புராணங்கள் ஆகியவற்றைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லையா என்று சிலர் வினவலாம். இராமர் வாழ்ந்த காலம் பல இலட்சம் வருடங்களுக்கு முந்தைய காலம் என்பதே அவர்களுக்கான அடிப்படை பதிலாகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த நபருக்குக்கூட புகைப்படம், வீடியோ முதலிய ஆதாரங்கள் ஏதும் கிடையாது. நூல்களும் கல்வெட்டுகளுமே ஆதாரங்களாக உள்ளன. அவ்வாறு இருக்கையில், இராமர் என்று வரும்போது மட்டும் நூல்களையும் கல்வெட்டுகளையும் ஆதாரமாக ஏற்க மறுப்பது ஏன்?

சீன நாட்டைச் சார்ந்த பௌத்த துறவியான யுவான் சுவாங் ( Xuan Zang ) என்பவர், ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் நான்கு வருடங்கள் பயணம் செய்து எடுத்துக் கொண்ட குறிப்புகளை நாம் ஆதாரமாக ஏற்கிறோம். இராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஆதாரமாக ஏற்கிறோம். இந்த ஆதாரங்களைக் கொண்டே யுவான் சுவாங் என்பவர் வாழ்ந்தார், இராஜராஜ சோழன் என்பவர் வாழ்ந்தார் என்பனவற்றை நம்புகிறோம். அவ்வாறு இருக்கையில், இராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு, இராமர் என்பவர் வாழ்ந்தார் என்பதை நம்புவதில் என்ன சிக்கல்?

ஈராக் நாட்டில் சமீபத்தில் கண்டறியப்பட்ட 4,000 வருடம் பழமையான இராமரின் புடைப்புச் சிற்பம். இராமாயண வரலாறு ஈராக் நாட்டில்கூட அறியப்பட்டிருந்ததை இது காட்டுகிறது.

முன்னோர்கள் வழங்கிய நூல்கள்

இராமர் அயோத்தியில் பிறந்தார், இவ்வாறெல்லாம் வாழ்ந்தார் என்பதற்கு வால்மீகி இராமாயணம் முக்கிய ஆதாரமாக உள்ளபோதிலும், நம்முடைய முன்னோர்கள் பலர் இராமரைப் பற்றிய குறிப்புகளை பல்வேறு நூல்களில் வழங்கியுள்ளனர்.

தமிழ் இலக்கியங்களில் மிகவும் புராதனமானதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில்கூட பல்வேறு இடங்களில் இராமரைப் பற்றிய கதைகள் காணப்படுகின்றன. புறநானூற்றுப் பாடல்களில் இராவணன் சீதையைக் கடத்திச் சென்றதைப் பற்றியும், சீதை வானரங்களைப் பார்த்து தனது அணிகலன்களை வீசியதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூற்றுப் பாடல்களில் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக இராமர் மேற்கொண்ட ஆலோசனைகளைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. பல்வேறு இராமாயண சம்பவங்கள் பரிபாடல் தொகுப்பிலும் காணப்படுகின்றன. சங்க காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களிலும் இராமாயண சம்பவங்கள் பலவும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தில் வந்த ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் பாடல்களிலும் இராமரைப் பற்றிய பல்வேறு பாடல்கள் காணப்படுகின்றன.

இராமர் கற்பனை காவியத்தின் நாயகனாக இருந்திருந்தால், அவர்கள் இராமரை அவ்வளவு உயர்வாகக் கூறியிருக்க மாட்டார்கள். மேலும், எங்காவது ஓரிடத்தில் அவர் கற்பனையானவர் என்றும் கூறியிருப்பர். நம் முன்னோர்கள் அனைவரையும் மடையர்களாகக் கருதி விட்டு நம்மை மட்டும் மதியர்களாகக் கருதுதல், மதி கெட்டவர்களின் செயலே தவிர வேறல்ல.

வழிவழியாக வரும் நம்பிக்கை

கல்லணையை கரிகாலச் சோழன் கட்டினார், தஞ்சாவூர் பெரிய கோயிலை இராஜராஜ சோழன் கட்டினார், தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டினார் என்பதற்கெல்லாம் என்ன ஆதாரம்? சில கல்வெட்டுகளைத் தாண்டி பலமான ஆதாரமாக இருப்பது வழிவழியாக மக்களிடையே நிலவும் நம்பிக்கையே. பன்னெடுங் காலமாக மக்களிடையே திகழும் நம்பிக்கையானது பன்னெடுங் காலத்திற்கு முன்பு எழுதப்பட்ட நூல்கள், கல்வெட்டிற்கு ஒத்துப்போகும்போது, அந்த நம்பிக்கையினை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதுபோலவே, “இராமர் ஒரு வரலாற்று நபர்,” என்னும் மக்களுடைய நம்பிக்கையானது இராமாயணம் முதலிய நூல்களின் மூலமாகவும் இராமரைப் பற்றிய எண்ணற்ற கல்வெட்டுகளின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இராமர் வாழ்ந்ததை வீடியோ எடுத்தா காண்பிக்க முடியும்? உண்மையாகக் கூறினால், இந்த காலத்தில் வெளிவரும் புகைப்படம், வீடியோ முதலியவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. உதாரணமாக, காந்தி எவ்வாறு வாழ்ந்தார் என்பதைக் காட்டுவதற்காக, அவர் ஒரு பெண்ணுடன் நடனமாடுவதைப் போன்ற படம் பல இடங்களில் உலா வருகிறது. ஆனால் அந்தப் படம் உண்மையான காந்தியின் படமல்ல என்பதும், திரைப்பட நடிகர் சூட்டிங்கிற்கு நடுவே எடுத்துக் கொண்ட படம் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?

எனவே, இராமர் பிறந்ததற்கும் வாழ்ந்ததற்கும் கண்ணால் காணக்கூடிய ஆதாரம் தேடுவதற்கு பதிலாக, முன்னோர்கள் பலரும் எழுதி வைத்த நூல்களையும் வழிவழியாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கையையும் சான்றாக ஏற்பது புத்திசாலித்தனமாக அமையும்.

கண்களுக்குப் புலப்படும் ஆதாரத்தைத் தேடுவோர் ஒரு விஷயத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வரலாறு என்று நாம் ஏற்கக்கூடிய பல்வேறு தகவல்கள் வழிவழியாக வரும் நம்பிக்கையே தவிர அவற்றிற்கு நேரடி ஆதாரம் என்று ஏதும் கிடையாது. இயேசு, நபிகள் நாயகம் முதலிய சமீப கால இறை தூதர்கள் வாழ்ந்ததற்குக்கூட நேரடி ஆதாரம் என்று ஏதும் கிடையாது. இயேசு இந்த இடத்தில் பிறந்தார் என்பது வழிவழியாக மக்களிடம் இருக்கும் நம்பிக்கை மட்டுமே.

பிரச்சனை என்னவெனில், வெளிநாட்டுக்காரனின் நம்பிக்கையை உண்மையானது என்றும் இந்தியர்களின் நம்பிக்கையை மூட நம்பிக்கை என்றும் இந்தியர்களிடையே அந்த வெளிநாட்டுக்காரர்கள் நம்ப வைத்து விட்டனர். அத்தகு மூட நம்பிக்கையைத் தகர்த்து, இராமர் உண்மையிலேயே வாழ்ந்தவர் என்பதை ஆதாரபூர்வமாக நாம் அறிந்துகொள்ள வேண்டும். மேலும், அவர் சாக்ஷாத் முழுமுதற் கடவுள் என்பதையும் அதே ஆதாரங்களைக் கொண்டு உணர வேண்டும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives