வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
“கீதாசாரம் போஸ்டர் இருக்கிறதா?”–பகவத் கீதையை விநியோகம் செய்யும் பக்தர்கள் பொதுமக்களிடமிருந்து கேட்டுகேட்டு அலுத்துப் போன ஒரு கேள்வி. “பகவத் கீதையை முழுமையாக வாங்கிக்கொள்ளுங்கள்” என்றால், “போஸ்டர் இருந்தால் போதுங்க” என்றுதான் பெரும்பாலும் விடை வரும். பல்வேறு கடைகளின் உரிமையாளர்களும் தொண்டு நிறுவனங்களும் ஆன்மீக அன்பர்களும், கீதாசாரம் போஸ்டர் அல்லது ஸ்டிக்கர் அடித்து மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர். “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,” என்று தொடங்கி சுமார் ஒரு டஜன் வரிகளில் பகவத் கீதையின் சாரம் அடங்கிவிட்டது என்று கூறுவோர் அநேகர். அவர்கள் கூறுவது உண்மையான சாரமா? இது சாரமல்ல என்றால், உண்மையான சாரம் என்ன?
இரண்டு வகையான சாரங்கள்
மருத்துவக் கல்வியில் உண்மையான ஆர்வம் கொண்டோர், அதற்கென்று இருக்கும் புத்தகங்களைப் படித்து விஷயங்களை அறிந்துகொள்வர். அதிக ஆர்வம் கொண்டோர் அப்புத்தகங்களை ஆழமாகப் படிப்பர். யாரேனும் ஒருவர் மருத்துவப் படிப்பின் சாரம் என்று ஒரு டஜன் வரிகளைக் கொண்டு வந்தால், அதை நாம் ஏற்போமா? மேலும், அந்த மருத்துவசாரத்திற்கும் மருத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லையெனில், என்ன செய்வோம்? முதல் கருத்து: மருத்துவசாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவத்தை அறிய இயலாது. இரண்டாவது கருத்து: மருத்துவசாரம் என்ற பெயரில் மருத்துவத்திற்கு சம்பந்தமில்லாத அல்லது முரணான தகவல்கள் இருப்பின், அந்த மருத்துவசாரம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, அதனை எழுதியவருக்கு தக்க தண்டனை வழங்கப்படலாம்.
இவ்வாறு இருக்கையில், மருத்துவக் கல்வியைக் காட்டிலும் மிகமிக ஆழமான ஆன்மீகக் கல்வியைக் கற்பிக்கும் பகவத் கீதையை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? கீதாசாரம் என்று யாரேனும் எதையாவது கொண்டு வந்தால், மக்கள் அதனை உடனடியாக ஏற்றுக்கொள்வது விநோதமாக உள்ளது. மருத்துவ புத்தகத்தை யாரேனும் வெளியிட்டால், அதனை சோதித்து அனுமதிப்பதற்கு சிலர் உள்ளனர்; ஆனால் ஆன்மீகம் என்று வந்தால், ஒவ்வொருவரும் தத்தமது சொந்த கருத்துகளை கூறுவது ஏன்?
மருத்துவசாரத்தின் உதாரணத்தைக் கொண்டு யாம் தெரிவிக்கும் கருத்துகள் இரண்டு: (1) கீதாசாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு கீதையை உண்மையாக அறிய இயலாது. (2) அந்த கீதாசாரத்தில், பகவத் கீதைக்கு புறம்பான தகவல்கள் இருப்பின், அதனை நிராகரிக்க வேண்டும். இவற்றை ஒவ்வொன்றாக காணலாம்.
உபநிஷத்துகளின் சாரமான கீதை
ஏதேனும் ஒரு பொருளை நாம் வாங்கினால், அதனுடன் அப்பொருளைப் பற்றி விளக்க குறிப்பும் வருகின்றது. அதுபோல, இவ்வுலகத்தை பகவான் படைத்தபோது, இதில் எவ்வாறு வாழ்வது, இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து அவராலேயே கொடுக்கப்பட்ட விளக்கமே வேத சாஸ்திரங்கள். அதிலும் குறிப்பாக, வேதங்களின் ஒரு பகுதியான உபநிஷத்துகள் மக்களுக்குத் தேவையான ஆன்மீக அறிவை வழங்குகின்றன. இருப்பினும், கலி யுகத்தின் குறை புத்தி கொண்ட மனிதர்களால், அனைத்து வேத சாஸ்திரங்களையும் அறியவியலாது என்பதால், பகவான் கிருஷ்ணர் மிகுந்த கருணையுடன் உபநிஷத்துகளின் சாரமான பகவத் கீதையை நமக்கு அருளிச் செய்துள்ளார். இடையர் குலச் சிறுவனாக புகழ்பெற்று விளங்கும் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை என்னும் பசுவினைக் கறக்க, கன்று போன்ற அர்ஜுனன் அதனைப் பெற்றுக் கொண்டான். அதனால் கீதை என்ற ஒரு சாஸ்திரம் போதும் என்று சொல்லப்படுவதுண்டு. ஞானத்தின் பொக்கிஷமான கீதை அனைவரும் அவசியம் அறிய வேண்டியதாகும்.
அறிவு விசாலமானது
இவ்வுலகம் மிகவும் ஆழமானது, இங்குள்ள ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் எத்தனையோ தகவல்கள் தினம்தினம் வலம்வந்து கொண்டுள்ளன. உலகின் ஒவ்வொரு நகரங்களிலும் தினந்தோறும் எத்தனையோ பத்திரிகைகள் வெளிவருகின்றன. அவை ஒவ்வொன்றும் எத்தனை எத்தனையோ பக்கங்களில் உலகச் செய்திகளை வெளியிடுகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் அவற்றை வாங்கி படிக்கின்றனர். அவை மட்டுமல்லாது, உலகின் ஒவ்வொரு சிறிய விஷயத்தைப் பற்றியும் எத்தனையோ புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்த உலகம் குறித்த அறிவானது மிகவும் விசாலமானது, அதனை சிறிய பெட்டியினுள் அடைத்துவிட முடியாது.
கீதையின் விளக்கங்கள்
இருப்பினும், இவ்வுலகம் மட்டுமின்றி இதுபோன்ற பல்வேறு உலகின் செய்திகளையும், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஆன்மீக உலகின் செய்திகளையும் பகவத் கீதை எழுநூறு ஸ்லோகங்களில் சாரமாக விளக்குகின்றது. உலகைப் படைத்த பகவானுக்கு இதனை எழுநூறு ஸ்லோகங்களில் வழங்குவது கடினமல்ல. பகவான் அதனை எழுநூறு ஸ்லோகங்களில் வழங்கிவிட்டபோதிலும், அதன் ஞானம் அளவிட முடியாததாக பரந்து காணப்படுகிறது. இதனால்தான், வரலாற்றின் சிறப்புமிக்க ஆச்சாரியர்களில் பலர் பகவத் கீதைக்கு விளக்கவுரை எழுதியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட பரம்பரையைச் சார்ந்த பல்வேறு ஆச்சாரியர்கள் அதனை விரிவுபடுத்தினரே தவிர, அதனைச் சுருக்கி டஜன் வரிகளில் வெளியிடவில்லை. பகவத் கீதையே ஒரு சாரம் என்னும்போது, அதனை விரிவுபடுத்தவே ஆச்சாரியர்கள் விரும்பினரே தவிர, அதற்கு ஒரு சாரம் வழங்க வேண்டும் என்று முயலவில்லை. பரந்த ஞானத்தை நல்கும் கீதையை மேலும் சுருக்க முயல்வது தகுமோ? சாரத்தை மட்டுமே தேடும் நபர்களுக்காக பகவத் கீதையை ஓரளவு சுருக்கலாம், ஆனால் டஜன் வரிகளில் வழங்க நினைப்பது நிச்சயம் உகந்ததல்ல.
கீதையின் உண்மையான சாரமும் கீதாசாரமும்
உண்மையில் கீதையினை இரண்டே ஸ்லோகங்களில் சுருக்கமாக கூறிவிட முடியும்; அந்த சுருக்கத்தினை சாக்ஷாத் பகவான் தாமாகவே கீதையில் வழங்குகிறார். (அதனை அடுத்த இதழில் காண்போம்) பகவான் அருளிய கீதைக்கு அவர் மட்டுமே சாரம் வழங்க முடியும். இருப்பினும், அந்த சுருக்கத்தினைப் புரிந்துகொள்வதற்கு மொத்த கீதையையும் அறிதல் அவசியம். கீதையை முழுமையாக அறியாவிடில், கிருஷ்ணர் உரைக்கும் சாரத்தினைப் புரிந்துகொள்ள இயலாது. இஃது ஒருபுறமிருக்க, கீதாசாரம் என்ற பிரபலமான ஒரு டஜன் வரிக்கும் கீதையின் இறுதியில் கிருஷ்ணர் கூறும் சாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது படிப்பவருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை.
மக்களின் சோம்பேறித்தனம்
உண்மையில் சொல்லப்போனால், கீதாசாரம் போன்ற சுருக்கங்களுக்கான தேவை மக்களின் சோம்பேறித்தனத்தினால் மட்டுமே எழுகின்றது. தற்போதைய உலக மக்களில் பெரும்பாலானோர் எதிலும் எப்போதும் பெரும் சோம்பேறிகளாக உள்ளனர்; சோம்பேறிகளால் எதையும் அறிந்துகொள்ள இயலாது. அவர்களுக்கு எல்லா விஷயங்களும் சுருக்கமாகவும் உடனடியாகவும் தேவைப்படுகின்றன.
மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரியமான விஷயங்களில் ஒன்று: சாப்பிடுதல். நவீன கால சோம்பேறிகள் சாப்பிடுவதில்கூட உடனடிப் பொருட்களை எதிர்பார்க்கின்றனர்; உடனடி புளியோதரை, உடனடி நூடுல்ஸ், உடனடி சாம்பார், உடனடி இட்லி, என எத்தனையோ உடனடிகள் வந்துவிட்டன. சாப்பிடுவதற்கே சோம்பேறிகளாக இருக்கும் நவீன காலத்தின் மூடர்கள் பகவத் கீதையை அறிந்துகொள்வதில் சோம்பேறிகளாக இருப்பதிலும், கீதாசாரம் என்று சிறிய போஸ்டரை எதிர்பார்ப்பதிலும் ஆச்சரியம் இல்லை.
கீதாசாரம் போஸ்டர்
சுருக்கத்தைத் தேடும் நவீன கால மக்கள் உண்மையைத் தேடுவது இல்லை. பகவத் கீதையை முழுமையாக படித்தவர்கள், கீதாசாரம் போஸ்டரில் இருக்கும் வரிகள், கீதையில் எங்கே உள்ளன” என்று தேடிப் பார்த்தால், அவை அங்கு இல்லை என்பதை உணரலாம். கீதாசாரத்தில் உள்ள கருத்துகளை கீதையிலிருந்து மறைமுகமாக கொண்டு வரலாம்; ஆனால் அவை கீதையின் நேரடி வாக்கியங்கள் அல்ல, கீதையின் சாரமும் அல்ல. இந்த கீதாசாரத்தை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. கேரளாவில் யாரோ ஒருவர் இவ்வாறு எழுதி போஸ்டர் அடித்ததாகவும், பின்னர் அது பிரபலமாகிவிட்டது என்று சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ, கீதாசாரம் இன்று உலகின் பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டு, ஸ்டிக்கர் விற்பவர்களுக்கு ஒரு விற்பனைப் பொருளாகிவிட்டது.
சில வருடங்களுக்கு முன்பு, சென்னையைச் சார்ந்த ஒரு நிறுவனத்தினர், கணபதியின் படத்தை தங்களது மனதிற்கு தோன்றினாற்போல வரைந்து, அப்படத்திற்கு “கண்திருஷ்டி கணபதி” என்று அவர்களே பெயர் வைத்து, “இப்படம் அகத்தியரால் அருளப்பட்டது” என்று கூறி, தமிழகமெங்கும் அச்சடித்து விநியோகம் செய்து பணம் சம்பாதித்தனர். தற்போதும் இந்த கண்திருஷ்டி கணபதியை தமிழக வீடுகளின் வாயில்களில் காணலாம். கீதாசாரம் என்ற பெயரில் வெளிவந்த போஸ்டரும் இப்பிரிவையே சாரும். மக்களின் சோம்பேறித்தனத்தை தங்களுக்கு வசதியாக எடுத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயலும் நபர்களின் படைப்பே கீதாசாரம். இதை வைத்துக் கொண்டு கீதையை அறிந்துவிட்டதாகவும் அறிவதாகவும் அறியப்போவதாகவும் நினைப்பது மூடத்தனம். ஆயுள் முழுக்க தினமும் கீதாசாரத்தை உச்சரித்தாலும், அதில் எந்தப் பயனும் யாரும் பெறப்போவதில்லை.
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
இரண்டாவதாக, இந்த கீதாசாரத்தின் கருத்துகள் கீதைக்கு ஒத்துப்போகிறதா என்பதை சிந்தித்துப் பார்க்கலாம். கீதாசாரத்தின் இந்த அழகிய வரிகளை ஒரு நல்ல கவிதையாக ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் கீதாசாரமாக ஏற்க முடியாது. பல்வேறு கவிஞர்கள் உலக வாழ்க்கையைக் குறித்த தங்களது எண்ணங்களை கவிதையின் வடிவில் அருமையாக வடித்துள்ளனர்; அத்தகு கவிதைகளில் ஒன்றான இதனை மிகச்சிறந்த அறிவுப் பொக்கிஷத்தின் (பகவத் கீதையின்) சாரம் என்று கூறுதல் நிச்சயம் கண்டிக்கத்தக்கது. உண்மையில், யாரெல்லாம் இந்த கீதாசாரத்தை பிரசுரித்து விநியோகம் செய்கின்றார்களோ படிக்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் மிகப்பெரிய தெய்வ குற்றத்தை இழைக்கின்றனர். அதனால் அவர்கள் இறைத் தண்டனைக்கு உட்பட்டவர்கள்.
கவிதை எழுத நினைப்பவர்கள் கவிதை என்ற பெயரில் அதனைப் பிரசுரித்தல் நாகரிகம்; அதற்கு வேறொருவரின் பெயரை இட்டு (இங்கு பகவான் கிருஷ்ணரின் பெயரை இட்டு) பிரசுரித்தல் அநாகரிகம். இதனை அரசாங்கம் தட்டிக் கேட்க முன்வருமா?
கீதாசாரத்தை எதிர்க்கும் எமது கருத்துகள் சிலருக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம்; ஆனால் எமக்கோ கீதாசாரத்தை எதிர்க்காமல் அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ஆச்சரியமாகத் தோன்றுகின்றனர். பகவத் கீதையை தங்களின் புனித நூலாக ஏற்று மதிப்பவர்கள், கீதையின் பெயரில் சில கவிதை வரிகளை எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. பகவத் கீதை எல்லாருக்கும் பொதுவானது என்பதை அறியாமல், பகவத் கீதை எங்களின் புனித நூல்” என்று மார்தட்டிக் கொள்வோர் கீதையைப் படிப்பதில்லை என்பதை அவர்கள் கீதாசாரத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து அறியலாம். மதத் துறவிகளையும் மதக் கடவுள்களையும் யாராவது தவறாக சித்தரித்தால், அதனை மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால் மதத்தின் உயர்ந்த உண்மைகளை (பகவத் கீதையை) தவறாக சித்தரிக்கக்கூடிய கீதாசாரத்தை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.
கீதாசாரத்தில் இருக்கும் தவறுதான் என்ன?” என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
அனைத்தும் நல்லதா?
கீதாசார கவிதையின் முதல் கருத்து, நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை என அனைத்தும் நன்றே.” இதை சற்று எதார்த்தமாகவும் தத்துவப்பூர்வமாகவும் அணுகினால், சுத்த பொய் என்பது தெரியவரும். அனைத்தும் நன்றே என்பதை கீதையின் சாரமாக எடுத்துக் கொண்டவர்கள், உலகில் நிகழும் பேரழிவுகள் அனைத்தையும் நன்மையாக ஏற்றுக்கொள்வார்களா? சுனாமி வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர், தினம்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து விபத்தினால் மரணமடைகின்றனர், உலகில் எத்தனையோ குழந்தைகள் அநாதைகளாகத் திரிகின்றனர், உண்ண உணவும் உடுத்த உடையும் இன்றி இருப்பவர்கள் ஏராளமானோர், உலகில் எத்தனையோ பிரச்சனைகள்–இவையெல்லாம் நன்றா? சற்று யோசித்துப் பாருங்கள்! கீதாசார கவிதையின் இக்கருத்து நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியதா?
கீதை கூறுவது என்ன?
நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை குறித்து பகவத் கீதை கூறுவது என்ன? அவை நன்மையா, தீமையா? பகவத் கீதையின்படி, இவ்வுலகில் நடப்பவை எதுவுமே நல்லதல்ல. நமது பார்வையில் கெட்டதாகப் தென்படுபவை மட்டும் கெட்டது அல்ல; நாம் எதனை பொதுவாக நன்மை என்று நினைக்கின்றோமோ அதுவும் தீமையே. இவ்வுலகின் அனைத்து நிகழ்வுகளின் தன்மையையும், பகவான் கிருஷ்ணர் இரண்டே வார்த்தைகளில் அற்புதமாக வடித்துள்ளார்: து:காலயம் அஷாஷ்வதம், இவ்வுலகம் துன்பம் நிறைந்தது, தற்காலிகமானது.” (பகவத் கீதை 8.15) நாம் வாழும் இவ்வுலகம் துக்கம் நிறைந்த இடம் என்றும், இங்குள்ள அனைத்தும் தற்காலிகமானது என்றும் கிருஷ்ணர் கூறுகிறார்; ஆனால், கீதாசாரம் அனைத்தும் நல்லதே” என்று கூறுகின்றது, அதனை கீதாசாரமாக ஏற்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வுலகில் நாம் பெறும் இன்ப துன்பங்கள் அனைத்தும் உண்மையில் துன்பமே; இன்பம் என்பது துன்பத்திற்கு இடைப்பட்ட சிறிய கால இடைவெளியே. இவ்வுலகம் முழுவதும் ஒரு சிறைச்சாலையைப் போன்றது; சிறையினுள் சில நேரங்களில் நாம் இரும்புச் சங்கிலியாலும் சில நேரங்களில் தங்க சங்கிலியாலும் பிணைக்கப்பட்டுள்ளோம். தங்க சங்கிலிகளால் பிணைக்கப்படும்போது அதனை மகிழ்ச்சி என்றும், இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்படும்போது அதனை துன்பம் என்றும் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் உண்மையில் இரண்டு நிலைகளும் துன்பத்தின் வெளிப்பாடுகளாகும்.
கிருஷ்ணரின் நித்திய அம்சங்களான நாம் அவரை மறந்த காரணத்தினால் இவ்வுலகில் பல்வேறு உடல்களை எடுத்து துன்பப்பட்டு வருகிறோம் என்பதே கீதையில் (15.7) நாம் காணும் உண்மை. அனைத்தும் நன்மைக்கே என்பதை கீதையில் நாம் காண்பதில்லை.
விரலை இழந்த மன்னர்
எல்லாம் நன்மைக்கே” என்னும் வாசகத்தைப் பரப்ப நினைப்போர் அடிக்கடி கூறும் கதை: விரலை இழந்த மன்னர். எல்லா நிகழ்வுகளையும் நன்மையாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்ற (?) மந்திரியையும் அதைப் புரிந்துகொள்ள இயலாத மன்னரையும் வைத்து சொல்லப்படும் இக்கதை முற்றிலும் அபத்தமானதாகும். விரலை இழந்த அம்மன்னர் அதனால் காட்டுவாசிகளிடமிருந்து தப்பினார் என்பதை எடுத்துக் கொண்டால், விரலை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான நபர்கள் அதனால் அடைந்த நன்மை என்ன? இத்தகைய கதைகள் உடல் அங்கஹீனம் கொண்டவர்கள் தன்னம்பிக்கையைப் பெற்று வாழ்வில் சோர்வின்றி வாழ வழிவகுக்குமே தவிர, உண்மையான தத்துவ ஆராய்ச்சிகளுக்கு துளியும் உதவாது. மனோதத்துவ வல்லுனர்கள் இக்கதையினை உபயோகிக்கலாம், ஆனால் கிருஷ்ணர் இதுபோன்ற கதைகளைச் சொல்லி நம்மை ஏமாற்றக்கூடியவர் அல்ல.
பாவமும் புண்ணியமும்
இவ்வுலகிலுள்ள அனைத்தும் ஒவ்வொருவரின் கர்ம வினைப்படி நடக்கின்றது. புண்ணியம் செய்தோர் நற்பலன்களையும் பாவம் செய்தோர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது கிருஷ்ணர் கீதையில் கூறும் தத்துவம். எல்லாம் நன்மையே” என்பதை எடுத்துக் கொண்டால், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். மும்பையில் நடந்த தீவிரவாதச் செயல்களை நன்மைகளாக எடுத்துக்கொள்ள முடியுமா?
நூற்றுக்கணக்கான மக்களை நான் கொன்றது நன்றாகவே நடந்தது, என்னை வெளியில் செல்ல அனுமதித்தால் இன்னும் நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கொல்வேன், அதுவும் நன்றாகவே நடக்கும்,” என்று தீவிரவாதி கசாப் கூறியிருந்தால், அதனை மக்களால் ஏற்றிருக்க முடியுமா? அவன் செய்த செயல் நல்லதல்ல என்பதால்தானே அவனை தூக்கிலிட்டார்கள், அனைத்தும் நன்றாகவே நடந்தது என்பதை ஏற்பதாக இருந்தால், அவனை ஏன் தூக்கில் இட்டிருக்க வேண்டும்? பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் தெளிவான வேறுபாடுகள் உள்ளன; இரண்டும் ஒன்றே, இரண்டும் நல்லதே என்று கூறுதல் மூடத்தனத்தின் உச்சகட்டம். (தொடரும்)
கீதாசாரத்தின் இதர வரிகளின் தவறுகளையும் உண்மையான கீதாசாரத்தையும் அடுத்த இதழில் காணலாம்.