வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்:  திரு. ஜீவன கௌர ஹரி தாஸ்

வெங்காயமும் பூண்டும் காய்கறி வகையில் ஒன்றுதானே! அவற்றை ஏன் ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் நிராகரிக்கின்றனர்? அவற்றை உண்பதால் என்ன தீங்கு நேரிடும்? இவை மக்கள் எம்மிடம் வியப்புடன் எழுப்பும் கேள்விகள். வெங்காயம், பூண்டினை இஸ்கான் பக்தர்கள் மட்டுமல்லாது, ஸநாதன தர்மத்தை பின்பற்றும் அனைவரும் தவிர்க்கின்றனர். அவ்வளவு ஏன்? பௌத்தர்களும் ஜைனர்களும்கூட பூண்டு, வெங்காயத்தை நிராகரிக்கின்றனர். ஜெயின் ஓட்டல்களில் இன்றும் பூண்டு, வெங்காயம் உபயோகிக்கப்படுவதில்லை என்பது மக்கள் அறிந்த ஒன்றுதான். இவற்றை ஒதுக்குவதற்கான பின்னணியை இக்கட்டுரையில் காண்போம்.

இறையுணர்வில் நாவின் முக்கியத்துவம்

வைஷ்ணவ பரம்பரையில் ஒன்றான கௌடீய ஸம்பிரதாயத்தில் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதே சமயம் உயர்ந்த இலக்கான தூய கிருஷ்ண பக்தியை அடைவதற்கு இடையூறாக இருக்கும் இதர விஷயங்களைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது. கிருஷ்ண உணர்வின் முக்கிய செயல்களான திருநாம உச்சாடனம், கிருஷ்ண பிரசாதத்தை ஏற்று மதித்தல் ஆகிய சேவைகள் நாவினால் செய்யப்படுவதால், ஸேவோன் முகே ஹி ஜிஹ்வாதௌ, பக்தித் தொண்டு நாவிலிருந்தே ஆரம்பமாவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக, கிருஷ்ண பக்தியை அடைவதற்கு நாவே முதல்படியாகத் திகழ்கின்றது.

மூவகை குணங்களும் உணவுகளும்

ஸத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களாலான பௌதிக உலகில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இங்கு வாழும் அனைத்து ஜீவராசிகளும் இந்த முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றனர். நாம் விரும்பி உண்ணும் உணவிலும் ஜட இயற்கையின் குணங்களுக்கு ஏற்ப மூன்று வகைகள் உள்ளன.

தமோ குணத்தை அறவே தவிர்த்து, ரஜோ குணத்தை ஒழுங்குபடுத்தி, ஸத்வ குணத்தை வளர்த்துக்கொள்வதற்காக சாஸ்திரங்களில் இத்தகைய உணவுப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயுள், ஆரோக்கியம், அறிவு, பலம் ஆகியவற்றை வளர்ப்பதும், சாறு நிறைந்ததும், ஊட்டச்சத்து மிக்கதும், இதயத்திற்கு இதமளிப்பவையுமான உணவுகள் ஸத்வ குண உணவுகளாகும்.

மிகவும் புளிப்பான, மிகவும் காரமான, எரிகின்ற உணவுகள் ரஜோ குணத்தைச் சார்ந்தவை, இவை துன்பம், சோகம், மற்றும் நோயை உண்டாக்குகின்றன.

பழையனவும், ஊசிப்போனதும், எச்சில்பட்டது மான உணவுகள் தமோ குணத்தைச் சார்ந்தவை.” (பகவத் கீதை 17.8-10)

எனவே, ரஜோ, தமோ குணங்களைச் சார்ந்த வெங்காயம், பூண்டை உட்கொள்வதால் மனம் மாசடையும், ஆன்மீக சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள இயலாது, மந்த புத்தி ஏற்படும்.

ஸத்வ குண உணவின் முக்கியத்துவம்

முக்குணங்களாலான இவ்வுலகிருந்து விடுபடுவதற்கு நாம் ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஞானத்தை வளர்ப்பதற்கு ஸத்வ குணம் உதவியாக இருக்கும் என்பதால், ஸத்வ குணத்தை வளர்த்தல் அறிவுறுத்தப்படுகிறது. ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞானம், ஸத்வ குணத்திலே ஞானம் பிறக்கின்றது (பகவத் கீதை 14.17). ஸத்வ குணத்தில் கிருஷ்ண உணர்வை சிறப்பாக பயிற்சி செய்ய இயலும். ஒருவன் தான் இந்த உடலல்ல, ஆத்மா என்பதை உணர்வதற்கு ஸத்வ குணம் இன்றியமையாதது. எனவே, ஸத்வ குணத்தைச் சார்ந்த உணவுகளை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, அதன் பின்னர் அதனை பிரசாதமாக (சுத்த-ஸத்வ குணத்தில்) நாம் ஏற்க வேண்டும்.

தூய்மையான உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சாந்தோக்ய உபநிஷத் (7.26.2) கூறுகிறது, ஆஹார ஷுத்தௌ ஸத்த்வ-ஷுத்தி: ஸத்த்வ-ஷுத்தௌ: த்ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதி-லம்பே ஸர்வ-க்ரந்தீனாம் விப்ரமோக்ஷ, தூய்மையான உணவை (கிருஷ்ண  பிரசாதத்தை) உட்கொள்வதால் மனம் தூய்மை அடைகிறது. தூய்மையான மனதினால் பகவானை நினைக்க இயலும். இவ்வாறு பகவானை இடைவிடாது நினைப்பதால் அனைத்து பந்தங்களிலிருந்தும் விடுபட்டு இறைவனின் திருநாட்டிற்குச் செல்லவியலும்.” எனவே, ஆன்மீகத்தில் முன்னேற விரும்புபவர்கள் தூய்மையான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆன்மீக பக்குவத்தை அடைய விரும்புபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்குறித்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.

இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தகாதவை

தற்கால மக்கள் நாவிற்கு அடிமையாகி, வேதப் பண்பாட்டில் புறக்கணிக்கப்பட்ட பூண்டு, வெங்காயம் உட்பட அனைத்தையும் உட்கொள்கின்றனர். வெங்காயம், பூண்டு இல்லாத (சாம்பார், சட்னி, கூட்டு, பொரியல், பச்சடி) உணவுகளைக் காண்பதே இன்று அரிதாகிவிட்டது.

பூண்டு, வெங்காயம் இவை இரண்டும் தாவரங்களே என்றும் இவற்றை இறைவனுக்கு அர்ப்பணிப்பதில் என்ன தவறு என்றும் கேட்கலாம். ஆயினும், நாம் எந்தவொரு செயலையும் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடியே செய்ய வேண்டும். சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து மனம்போன போக்கில் செயல்படுபவன் பக்குவத்தையோ, சுகத்தையோ அடைவதில்லை, ஆகவே, தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதற்கு சாஸ்திரங்களை பிரமாணமாகக்கொள்ள வேண்டும்,” என்று கிருஷ்ணர் கீதையில் (16.24) கூறுகிறார்.

பூண்டு, வெங்காயம் ஆகியவை சாஸ்திரங்களில் பல இடங்களில் உண்ணத்தகாத உணவுகள் என்றும், இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தகாதவை என்றும் கூறப்பட்டுள்ளதால், அவற்றை நாம் இறைவனுக்கு அர்ப்பணிப்பதில்லை. இறைவனுக்கு அர்ப்பணிக்காத எதையும் நாம் உட்கொள்வதில்லை. இதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் பூண்டு, வெங்காயத்தை உண்ணாமல் இருப்பதற்கான காரணமாகும்.

இராகுவின் தலையை மோஹினி துண்டித்தபோது சிதறிய இரத்தமே வெங்காயம், பூண்டு உருவாகுவதற்கான அடிப்படையாகும்.

பூண்டு, வெங்காயத்தின் தோற்றம்

பூண்டு, வெங்காயத்தின் தோற்றம் சாஸ்திரங்களில் பலவிதங்களில் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கதை:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை பகவான் விஷ்ணு (மோஹினி ரூபத்தில்) தேவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் அசுரன் இராகுவும் தேவர்களின் வரிசையில் அமர்ந்து அமிர்தத்தைப் பெற்றான். இதைக் கண்ட சூரியனும் சந்திரனும் பகவானிடம் இதைத் தெரிவித்தனர். அமிர்தம் அந்த அசுரனின் தொண்டையிலிருந்து வயிற்றிற்குச் செல்வதற்குள் பகவான் விஷ்ணு தனது சக்கரத்தினால் அவனின் தலையைக் கொய்தார். அப்போது அவனது தொண்டையிலிருந்த இரத்தம் கீழே சிந்தியது. சிந்திய இரத்தத்திலிருந்து பூண்டு, வெங்காயம் தோன்றின. அந்த இரத்தத்தில் அமிர்தம் துளியளவு கலந்திருந்த காரணத்தினால், வெங்காயம், பூண்டு இரண்டும் உண்பவர்களுக்கு சில நன்மைகளைத் தரலாம். இருப்பினும், அவை அசுரர்களின் இரத்தம் என்பதால், அவை உண்பவர்களுக்கு அசுர குணத்தை வழங்குகின்றன. அசுரனின் இரத்தத்திலிருந்து தோன்றிய காரணத்தினால், இவற்றை பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்க இயலாது.

மற்றொரு கதை: பிராமணரின் மனைவியினால் திருடப்பட்ட பசு மாமிசத்திலிருந்து வெங்காயம், பூண்டு தோன்றியதாக மற்றொரு வரலாறு கூறுகிறது. இதனால் வெங்காயம், பூண்டினை உண்பது பசு மாமிசத்தினைச் சாப்பிடுவதைப் போன்று பாவகரமானதாகும்.

சாஸ்திர மேற்கோள்

வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் (1.96.72) கூறுகிறது. வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் (7.10.12) கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் (4.56), மனு சம்ஹிதை (5.5), ஹரி பக்தி விலாஸம் (8.158) ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன.

விஞ்ஞானிகளின் கூற்று

வெங்காயம், பூண்டில் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (உதாரணம்: டாக்டர். ரோபர்ட் சி பெக், அமெரிக்கா அவர்களின் ஆராய்ச்சி) மேலும், மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

வேறு சில விஞ்ஞானிகள் வெங்காயம், பூண்டினை நன்மையானவை என்றும் கூறலாம், அபிப்பிராய பேதங்கள் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் இருப்பது ஆச்சரியமல்ல.

பக்தர்கள் வேத சாஸ்திரங்களையும் ஆச்சாரியர் களின் வார்த்தைகளையும் ஏற்று வெங்காயம், பூண்டினைத் தவிர்க்கின்றனர்.

நடைமுறை தீர்வு

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரம் நாவிற்கு உயர்ந்த சுவையை வழங்குகிறது, இதனை நாள்தோறும் உச்சரிப்பதால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களின் மீதான சுவை நம்மை அறியாமல் தானாகவே சென்றுவிடும். இதனால், வெங்காயம், பூண்டை தவிர்ப்பதில் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இருப்பதில்லை.

பக்தர்களின் ஸத்சங்க நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு, கிருஷ்ண பிரசாதத்தை உட்கொள்வதன் மூலம் வாழ்வு பிரகாசமாக மாறிவிடுகிறது. பிரகாசமான வாழ்வினால் நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியை உணர்வர்.

கிருஷ்ணருக்கு அன்புடன் அர்ப்பணித்து அதன் பின்னர் உண்ணப்படும் பிரசாதம், தாழ்ந்த சுவைகளைக் கைவிட உதவுகிறது.

பிரசாத மகிமை

கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்க முடியாது என்பதாலேயே, கிருஷ்ண பக்தர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்கின்றனர். கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்காத எதையும் பக்தர்கள் உண்பதில்லை. பக்தர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை நடைமுறையில் காணலாம். கிருஷ்ணர் ஏற்கும் உணவுகள் அனைத்தும் அமிர்தமாகத் திகழ்கின்றன. கிருஷ்ண பிரசாதத்தை சுவைத்தவன் வேறு எதையும் சுவைக்க விரும்புவதில்லை. கிருஷ்ண பிரசாதத்தின் அமிர்தமான சுவையையும் மணத்தையும் எவரும் எளிதில் உணர முடியும்.

கைவிடுதல் எளிதானதே

ரஸ-வர்ஜம் ரஸோ  பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே, உயர்ந்த சுவை கிடைக்கும்போது தாழ்ந்த சுவையில் இருக்கும் பற்றுதல் தானாகவே சென்றுவிடும்,” என்று கிருஷ்ணர் கீதையில் (2.59) கூறுகிறார். கிருஷ்ண பிரசாதம் எனும் உயர்ந்த சுவையில் நமக்கு பற்றுதல் ஏற்படும்போது, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படாத (பிரசாதமல்லாத) எல்லா உணவுப் பொருட்களின் மீதான பற்றுதலும் அகன்று விடுகின்றன எனும்போது, பூண்டு, வெங்காயத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ!

1 COMMENT

  1. இந்திரிய சுகத்துக்கு ஊக்கம்
    ஆத்ம நலத்தில் தேக்கம்
    இவை உண்பவர் பக்கம்
    யாரும் செல்லத் தயக்கம்
    விட்டு ஒழிப்பார் எவர்க்கும்
    உய்யவழி அன்றே பிறக்கும்.

Leave a Reply to K S Srinivasan Cancel reply

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives