இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பல்வேறு அறிவை வளர்த்துக் கொண்டுள்ள நவீன சமுதாயத்தில் ஆத்ம அறிவின் அவசியம்குறித்து சுவாரஸ்யமான முறையில் உரையாடுகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆத்மாவைப் பற்றிய தற்போதைய விஞ்ஞான அறிவு என்ன?
டாக்டர் பென்ஃபோர்ட்: உண்மையில், ஆத்மாவைப் பற்றிய எந்த அறிவும் எங்களிடம் இல்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், விஞ்ஞானத்தில் நீங்கள் எந்தவோர் உண்மையான முன்னேற்றமும் அடையவில்லை.
டாக்டர் பென்ஃபோர்ட்: அவ்வாறு சொல்ல முடியாது, விஞ்ஞான அறிவு என்பது ஆத்மாவைப் பற்றிய அறிவிலிருந்து வேறுபட்டது.
ஸ்ரீல பிரபுபாதர்: இருக்கலாம். அறிவியலில் பல்வேறு துறைகள் உள்ளன: உடலைப் பற்றிய மருத்துவக் கல்வி, மனதைப் பற்றிய உளவியல் கல்வி, மற்றும் இறுதியில் தெய்வீகமான ஆன்மீகக் கல்வி. சட்டையும் அங்கியும் உடலுக்கு உறைகளாக இருப்பதைப் போலவே, இந்த மனமும் உடலும் ஆத்மாவின் உறைகளாகும். நீங்கள் சட்டையையும் அங்கியையும் மட்டும் கவனித்துக் கொண்டு, அவற்றினால் மறைக்கப்பட்டுள்ள நபரை கவனிக்காவிட்டால், அதனை அறிவின் வளர்ச்சி என்று நினைக்கிறீர்களா?
டாக்டர் பென்ஃபோர்ட்: அறிவின் எந்தப் பிரிவும் பயனற்றதல்ல என்று நான் நினைக்கிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த விஞ்ஞான அறிவு பயனற்றது என்று நாங்கள் கூறவில்லை. இயந்திரவியல், மின்னணுவியல் முதலியவையும் அறிவே. ஆயினும், அறிவியலின் பல்வேறு துறைகளை ஒப்பிடும்போது, அவற்றின் முக்கியத்துவம் வேறுபடும். உதாரணமாக, சிலர் அருமையாகச் சமைப்பதற்கு விரும்பலாம். அதுவும் ஓர் அறிவே. அறிவியலில் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், தன்னைப் பற்றி அறியும் அறிவே—ஆத்ம ஞானமே அனைத்திற்கும் மையப் பொருளாகும்.
டாக்டர் பென்ஃபோர்ட்: எந்த அறிவினை தர்க்க ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் நிரூபிக்க இயலுமோ, அஃது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும், நிரூபிக்கத் தகுந்த அறிவாகக் கருதப்படும்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆத்ம ஞானத்தினையும் தர்க்க ரீதியில் சரிபார்க்க முடியும்.
டாக்டர் பென்ஃபோர்ட்: அஃது எப்படி?
ஸ்ரீல பிரபுபாதர்: உங்கள் உடலை எடுத்துக்
கொள்ளுங்கள். ஒரு காலத்தில் உங்களுக்குக் குழந்தையின் உடல் இருந்தது. ஆனால், இப்பொழுது அந்த உடல் இல்லை; வேறு உடலைப் பெற்றுள்ளீர்கள். எனினும், உங்களுக்குக் குழந்தையின் உடல் இருந்தது என்பதை உங்களால் புரிந்துகொள்ள இயலும். ஆகவே, நீங்கள் மாற்றமின்றி அப்படியே உள்ளபோதிலும், உங்களது உடல் மாறிவிட்டது.
டாக்டர் பென்ஃபோர்ட்: “நான்” அதே நபரா என்பதை என்னால் உறுதியாகக் கூறவியலாது.
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அதே நபர்தான். பெற்றோர்கள் தங்களது மகன் வளர்ந்த பிறகு, “ஆஹா, எங்கள் பிள்ளை எப்படி வளர்ந்துள்ளான் பாருங்கள்,” என்று கூறுவதைப் பார்க்கலாம். அவன் அதே நபர்தான் என்று பெற்றோர் கூறுவர். அவனது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் அவ்வாறுதான் கூறுவர். இதுவே ஆதாரம். இதுகுறித்த ஆதாரம் வலுவாக உள்ளதால், நீங்கள் இதனை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். உங்களது உடல் மாறியுள்ளது என்பதால், நீங்கள் வேறு நபர் என்று யாரேனும் கூறினால், அதனை உங்களது தாய் நிச்சயம் மறுப்பார்.
டாக்டர் பென்ஃபோர்ட்: ஆனால், நான் முன்பு இருந்த அதே நபர் கிடையாதே.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உடலின் அடிப்படையில் “அதே நபரல்ல” என்று கூறலாம். உதாரணமாக, குழந்தையாக இருக்கும்போது ஒருவன் அர்த்தமின்றி பேசிக் கொண்டிருக்கலாம், ஆனால் வாலிப உடலினைப் பெற்ற பின்னர் அவன் முட்டாள்தனமாகப் பேசுவதில்லை. அவன் அதே நபராக இருப்பினும், உடலில் மாற்றம் ஏற்படும்போது உணர்விலும் மாற்றத்தைப் பெறுகிறான். ஆனால், ஆத்மாவாகிய அவனில் எவ்வித மாற்றமும் இல்லை. அவன் உடலுக்குத் தகுந்தாற் போல—தனது சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல—செயல்படுகிறான். உதாரணமாக, ஒரு நாயும் ஆத்மாவே. அவன் நாயின் உடலில் இருப்பதால், நாயைப் போன்று வாழ்கிறான், நாயைப் போன்று செயல்படுகிறான்.
அதுபோலவே, ஓர் ஆத்மா குழந்தையின் உடலிலிருக்கும்போது, அவன் குழந்தையைப் போன்று செயல்படுகிறான். அவன் வேறு உடலைப் பெறும்போது, அதே ஆத்மா மனிதனைப் போன்று செயல்படுகிறான். சூழ்நிலையைப் பொறுத்து அவனது செயல்கள் மாறுபடுகின்றன, ஆனால் அவன் மாற்றமடைவதில்லை. உதாரணமாக, நீங்கள் தற்போது ஒரு விஞ்ஞானியாக உள்ளீர்கள். உங்களது பிள்ளைப் பருவத்தில் நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருக்கவில்லை. எனவே, அப்போது உங்களின் நடத்தை ஒரு விஞ்ஞானியைப் போன்று இருக்கவில்லை. ஒருவனின் நடத்தையானது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம், ஆனால் அந்த நபர் ஒருவரே.
எனவே, ததா தேஹாந்த்ர–ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி, “உடல் அழியும்போது, ஆத்மா அவ்வுடலை விட்டு வேறு உடலை ஏற்கும்,” என்பது முடிவாகும். ததா தேஹாந்த்ர. தேஹாந்த்ர என்றால் “மற்றோர் உடல்.” இது பகவத் கீதையிலிருந்து பெறப்படும் அறிவாகும். ஆத்மா பெண்ணின் கருப்பையினுள் செலுத்தப்படும்போது, அது சிறிய உடலைத் தோற்றுவிக்கின்றது. படிப்படியாக, சுரப்பியின் சேர்க்கையினால், பட்டாணி அளவிற்கு உடல் வளருகின்றது; ஆத்மா இருப்பதனால் தான் அவை நிகழ்கின்றன. கண்கள், காதுகள், வாய், நாசித் துவாரங்கள் பாலுறுப்பு, ஆசனவாய் என ஒன்பது துவாரங்களை உடல் மெதுவாக உருவாக்குகிறது. இவ்விதமாக, ஏழு மாதங்களில் உடல் முழுமையான வளர்ச்சியைப் பெறுகின்றது. அதன் பின்னர், உணர்வு வெளிப்படுகின்றது.
டாக்டர் பென்ஃபோர்ட்: ஏழு மாதத்திலா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். குழந்தை வெளியே வர விரும்புகின்றது. அவன் அசெளகரியத்தை உணர்வதால், அருள்கூர்ந்து தன்னை இந்த பந்தத்திலிருந்து விடுவிக்கும்படி பகவானை வேண்டுகிறான், வெளியே வந்தவுடன் பகவானின் பக்தனாக இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறான். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவன் கருப்பையிலிருந்து வெளியே வருகின்றான். ஆயினும், அவனது பெற்றோர்கள் பக்தராக இல்லாவிடில், சூழ்நிலையைப் பொறுத்து அவன் கடவுளை மறந்துவிடுகிறான். அவனின் தந்தையும் தாயும் பக்தராக இருந்தால் மட்டுமே, அவன் கடவுள் உணர்வில் தொடருவான். எனவே, கடவுள் உணர்வுள்ள வைஷ்ணவர்களின் குடும்பத்தில் பிறப்பது பேரதிர்ஷ்டமாகும். இந்த கடவுள் உணர்வே உண்மையான விஞ்ஞான அறிவாகும்.
டாக்டர் பென்ஃபோர்ட்: இது போன்ற பெற்றோர்களின் குழந்தைகள் மற்ற பெற்றோர்களது குழந்தைகளைவிட ஆன்மீகத்தில் ஓரளவு முன்னேறியவர்கள் என்பது உண்மையா?
ஸ்ரீல பிரபுபாதர்: பொதுவாக, அப்படித்தான். அவர்கள் தாய் தந்தையிடமிருந்து பயில்வதற்கான வாய்ப்பினைப் பெறுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக, எனது தந்தை பெரும் பக்தராக இருந்ததால், ஆரம்ப காலத்திலேயே நான் இந்தப் பயிற்சியைப் பெற்றேன். எவ்வாறோ, இந்த கிருஷ்ண உணர்வுப் பொறி என்னிடமிருந்தது. அதனை எமது தந்தை கண்டறிந்தார். பின்னர், நான் ஆன்மீக குருவை ஏற்றுக் கொண்டேன். இவ்விதமாக, நான் இன்று சந்நியாச நிலைக்கு வந்துள்ளேன். முழுமையான கிருஷ்ண உணர்வினை நான் பெற்றிடும் வகையில் என்னைப் பார்த்துக் கொண்ட என் தந்தைக்கு நான் அதிகம் கடன்பட்டுள்ளேன். அவர் சாதுக்கள் பலரை எங்கள் இல்லத்திற்கு அழைத்து, அவர்களிடம், “எமது மகன் ராதாராணியின் சேவகனாகும்படி ஆசீர்வதியுங்கள்,” என்று கூறுவார். அதுவே அவரது ஒரே இலட்சியமாக இருந்தது. அவர் எனக்கு மிருதங்கம் வாசிக்கக் கற்றுத் தந்தார். “ஏன் இவனுக்கு மிருதங்கம் கற்றுக் கொடுக்கிறீர்கள்?” என்று என் தாய் சில நேரங்களில் அதிருப்தியுற்று கேட்பதுண்டு. ஆனால், எமது தந்தையோ, “இல்லை, இல்லை. இவன் மிருதங்கம் வாசிப்பதற்கு கற்றுக்கொள்ளட்டும்,” என்று கூறுவார். என் தந்தை என்னிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். ஆகவே, ஒருவன் தனது முந்தைய புண்ணியச் செயல்களின் மூலமாக, ஒரு நல்ல தாய் தந்தையரைப் பெற்றால், அஃது அவனுக்கு கிருஷ்ண உணர்வில் முன்னேறிட பெரும் வாய்ப்பாகிறது.
டாக்டர் பென்ஃபோர்ட்: உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்கும் அடுத்து என்ன நிகழும்?
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்வோம். கிருஷ்ணரின் பெயர், விலாசம், உருவம், லீலைகள் என அனைத்தும் எங்களிடம் உள்ளன. அவை அனைத்தையும் நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் அங்குச் செல்வோம். இதனை கிருஷ்ணர் பகவத் கீதையில் [4.9] உறுதிப்படுத்துகின்றார்:
ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ ’ர்ஜுன
கிருஷ்ணர் கூறுகிறார், “எவனொருவன் என்னை விஞ்ஞானபூர்வமாக, உண்மையாக அறிந்துள்ளானோ, அவன் இந்த உடலைக் கைவிட்டபின், மீண்டும் இந்த ஜடவுலகில் பிறவி எடுப்பதில்லை, மாறாக என் நித்திய உலகை அடைகிறான்.”