உண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்

இன்றைய சமுதாயமானது பணத்தினை ஈட்டுவது, கட்டுபாடின்றி இன்பம் நுகர்வது போன்ற உணர்வுகளில் வெகு ஆழமாக சென்றுள்ளது. இத்தகைய உணர்வுகளின் விளைவுகள் என்ன என்பதையும் வேதங்கள் நமக்கு உபதேசிக்கும் உணர்வு என்ன என்பதையும் வேதங்கள் உணர்த்தும் உணர்வினை அடைவதால் என்ன பயன் என்பதையும் சற்று விளக்கமாக உணர்வோம்.

பண உணர்வு

பணமே அனைத்து வளங்களையும் கொடுக்கும், பணமே மகிழ்வினைக் கொடுக்கும், பணமே உறவுகளில் மரியாதையினைக் கொடுக்கும், பணமே நல்ல மருத்துவத்தைக் கொடுக்கும், அல்லது பணமிருந்தால்தான் சாகக்கூட முடியும்–இதுவே இன்றைய நிலை. பணத்தினை மையமாக வைத்துள்ள இந்த உலகில், பணம் வைத்திருந்தால் எவ்வளவு மகாபாதகங்களைச் செய்திடினும், சட்டங்களிலிருந்து தப்பிவிடலாம் என்பதை நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் காண்கின்றோம். கற்றவர்களும் அதிகாரிகளும், பணக்காரர்களைத் திருப்தி செய்வதற்காக அவர்களுக்கு சட்டத்திற்கு புறம்பான வழிகளை போதிப்பதும், சட்டத்தின் ஓட்டைகளின் மூலமாக அவர்கள் வெளியேறிட உதவுவதும், அதன் மூலமாக சில செல்வங்களை வெகுமதியாகப் பெறுவதும் நாம் காண்பதுவே. இயற்கை வளங்களான ஆறுகள், கனிமங்கள், மலைகள் போன்றவை எல்லாம் இன்று எவ்வாறு பணத்தாசையினால் கொள்ளை போகின்றன, அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு எவ்வளவு உதவுகின்றார்கள் என்பதனை நாம் தினசரி பத்திரிகை களில் காண்கின்றோம். குடிக்க தண்ணீர்கூட இல்லாத நிலைக்குச் செல்வதை இவர்கள் உணர்வதே இல்லை. பணமிருந்தால் போதும் என்ற மந்த உணர்வு அனைவரையும் ஆட்டி வைக்கின்றது.

உணவு உணர்வு

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று நாவினை தூண்டி, இன்று நாம் உட்கொள்ளும் உணவினால் எத்தனை வியாதிகள்? பெரும்பாலான மக்கள் உணவினை உயிர்வாழ்வதற்கு உண்பதில்லை, நாவிற்காகவே உண்கிறார்கள். “மாமிசம் இல்லாது எங்களால் ஒருநாளைக்கூட கடத்த இயலாது” என்று பெருமையாகக் கூறுகின்றார்கள். பிற உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊனினை உண்ணுதலை விடக் கீழான உணர்வு நிலை ஏதுமில்லை. “காய்கறிகளிலும் உயிர் உள்ளது, எல்லாமே உயிர்தான்; எனவே, மாமிசம் உட்கொள்ளுவதில் தவறு இல்லை” என்று போலியாக வாதிட்டு வளர்கின்றனர். (இதுகுறித்து மேலும் தகவல்களைப் பெற, “கொன்றால் பாவம், தின்றால் போகுமா?” என்ற கட்டுரையைப் படிக்கவும் (பகவத் தரிசனம்–ஜனவரி, 2015).

காம உணர்வு

நவீன நாகரிகத்தில் மக்கள் உணர்வு காமத்தினைச் சுற்றியே எப்போதும் கிடக்கின்றது. ஆணிற்கு பெண் உடலின் மீதும், பெண்ணிற்கு ஆண் உடலின் மீதும் காமம் வளர்ந்த வண்ணம் உள்ளது. தாம்பத்ய வாழ்வு மகிழ்ச்சியளிப்பதைப் போன்று தோன்றினாலும், அது முழு திருப்தியினை வழங்க வில்லை என்பதனை திருமணமானவர்கள் அனைவரும் உணர்வர். இருப்பினும், மாற்றான் மனைவி, சிறு பிள்ளை, பெண் குழந்தைகளைக்கூட காமத்தினால் பார்க்கும் வியாதி எங்கும் பரவிய வண்ணம் உள்ளது. சாராய விளம்பரம், முடி வெட்டும் பிளேடின் விளம்பரம், ஊறுகாய் விளம்பரம், வாகன விளம்பரம் என அனைத்திலும் பெண்களின் உடல்களைக் காட்டி ஆண்களை மயக்குகின்றார்கள். (துணி, தங்கம், வைரம், வீடு என) பேராசைகளைத் தூண்டிவிட்டு பெண்களை மயக்குகின்றார்கள்.

வெற்று மத உணர்வு

மக்கள் தாம் பிறந்த மதத்தினை எந்தவொரு ஆழமான ஞானமும் இன்றி, ஒரு விதமான பற்றுதலுடன் பின்பற்றுகின்றனர். பிறப்பினால் தம்மை இந்து, கிறிஸ்துவன், முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தமக்கு இருக்கின்ற சின்னஞ்சிறு அறிவைக் கொண்டு, “எனது மதமே சிறந்த மதம்” என்று தர்க்கம் செய்கின்றனர். ஆனால் தாங்கள் பின்பற்றும் மத உபதேசங்களைப் பற்றிய அறிவு சிறிதுமின்றி, மதங் களின் சின்னங்களை அணிவதில் சண்டையிடுவர். தங்களின் மத உட்பிரிவுகளுக்குள் பலிவாங்குபவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அன்பினைப் பொழிவது போன்றும் சமாதானத்தினை விரும்புவது போன்றும் காணப்படக்கூடிய போலி மத உணர்வு சமுதாயத்திற்கு ஒரு தலைவலியே.

வாழ்நாள் உணர்வு

புதிதாக பிறந்த கன்றுகுட்டி சில மணி நேரங்களிலேயே எழுந்து, தடுமாறி நடந்து, பின்னர் குறுகிய காலத்திலேயே தலை கால் புரியாது துள்ளிக் குதித்து ஓடுவதைக் காணலாம். அதுபோன்று, இன்றைய மக்களும் பிறந்தவுடன் வாழ்வின் இலட்சியத்தினை நோக்கி (பணத்தினை நோக்கி) ஓடுகின்றனர். கல்வி கற்காவிடில் இவ்வுலகில் வாழவே முடியாது என்ற எண்ணம் பரப்பப்படுகின்றது. அதுவும் கணிப்பொறி பற்றி தெரியாவிடில் வாழ்க்கையே வீண் எனவும், Facebook, Twitter கணக்கு இல்லாவிடில் வேற்று கிரகவாசி போன்றும் பார்க்கப்படுகின்றனர். குழந்தைகளை இரண்டே வயதில் பள்ளியில் சேர்க்கும் கல்வி வியாபாரம் இன்று வெகு ஜோராக நடக்கின்றது. இரண்டு அல்லது மூன்று வயதில் கல்வி கற்க ஆரம்பிக்கும் ஒரு குழந்தை தனது இருபத்திநான்கு வயது வரை, குறைந்தது இருபத்திரண்டு வருடங்களுக்கு கல்வி பயின்று வெளிவர வேண்டும் என இன்றைய உலகம் நிர்பந்திக்கின்றது. ஆனால் படிப்பு முடிந்து வெளிவந்தவுடன் வேலை இல்லாத அவலம்.

 

ஆறு நாட்கள் சில ஆயிரங்களுக்காகக் கடின உழைப்பு; விடுமுறையன்று ஒரு வேளை மாமிச உணவு, சினிமா, வெட்டிபேச்சு, குடி; பண்டிகை நாள்களில் கூடுதல் கேளிக்கை; வீட்டுப் பெண்களைச் சீர்குலைக்கும் நாடகங்கள்–இவையே இன்றைய மக்களின் உயர்ந்த இலட்சியங்கள். ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர்களது தகுதிகளைப் பார்க்காமல் சில நூறு அல்லது ஆயிரங்களுக்கும் ஒரு வேளை மாமிச உணவிற்கும் மதுவிற்கும் ஓட்டினைப் போட்டுவிட்டு, தண்ணீர் முதல் சுகாதாரம் வரை அனைத்திற்கும் அழக் கூடிய நிலையில்தான் நம்முடைய உணர்வு உள்ளது.

கசாப்புக் கடை ஆடு உணர்வு

“எப்போது வேண்டுமானாலும் மரணம் வரட்டும், அதுவரை இன்பத்தினைத் தேடு, அதற்காக உழை” என்பதே இவ்வுலகத்தின் உணர்வாகும். இதற்கு நாம் கசாப்புக் கடையில் கட்டப்பட்டுள்ள ஆட்டினை உதாரணமாகக் காட்டலாம். கசாப்புக் கடைக்காரர் தான் வளர்க்கும் ஆடு நன்றாக வளருகின்றதா, சரியாக புல்லினை மேய்கின்றதா என்பனவற்றை கவனத்துடன் பார்த்துக்கொள்வார். அந்த அன்பினை உண்மையான அன்பு என்று அந்த ஆடு நினைத்தால், அஃது அறியாமையே. ஞாயிற்றுக்கிழமையில், தனக்கு அடுத்து உள்ள ஆடு வெட்டப்பட்டுவிட்டபோதிலும், இந்த ஆடு எதையும் யோசிக்காமல் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறிதளவு புல்லினை உண்டு கொண்டிருக்கும். தானும் வெட்டப்படப்போகிறேன் என்பதை அந்த ஆடு யோசித்துப் பார்க்காமல், புல்லை மேய்வதிலேயே கவனம் செலுத்தும். அதுபோன்று மீண்டும் மீண்டும் நிச்சயமாக வரக்கூடிய மரணத்திலிருந்து நிரந்தரமாக எவ்வாறு வெளியேறுவது என்பதை நாம் யோசிக்காமல் இருந்தோமானால், நமக்கும் அந்த ஆட்டிற்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

அபசித்தாந்த (தவறான தத்துவ) உணர்வு

“பிறப்பு என்பது ஒருமுறைதான், மரணத்திற்குப் பின் ஒன்றுமில்லை, நாம் அனைவரும் வெறும் வேதியியல் கூறுகளே, ஆத்மா என்று ஒன்று இல்லை, கடவுள் இல்லை, மரணத்திற்கு பின் யாரேனும் வந்து கூறினார்களா, இந்த சாஸ்திரங்கள் எல்லாம் யாரோ சிலர் மனிதர்கள் ஒழுக்கமாக வாழ்வதற்காக எழுதி வைத்தது, கடவுள் இருந்தால் ஏன் துன்பங்கள்? சிறு குழந்தைகள் எல்லாம் என்ன செய்தது, ஏன் அவர்கள்கூட துன்பப்பட வேண்டும்? எல்லாவற்றிற்க்கும் ஆசைப்படு, வாழ்க்கை வாழ்வதற்கே, இந்த சிறிய வயதில் ஏன் கோயிலுக்கு செல்கின்றாய், பக்தி என்பது 60 வயதிற்கு மேல்தான், தன்னுணர்வை தனக்குள்ளேயே உணர வேண்டும், புத்தகம் தேவை இல்லை (கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்)”–இதுபோன்ற ஆயிரக்கணக்கான அபத்தமான கருத்துக்கள் நம்மிடையே பரவலாக உள்ளன. இவை அனைத்துமே கடவுள் உணர்விலிருந்து மக்களை மாற்றிட அல்லது ஏற்கனவே மாறிய மக்கள் கடவுள் உணர்விற்குத் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவும், சில புகழ்பெற்ற கற்பனையாளர்களால் பரப்பப்படுகின்றன.

வேதங்கள் போதிக்கும் உண்மையான உணர்வு

மேற்கூறியவை போன்ற பல்வேறு உணர்வுகளுடன் வாழும் மக்களிடம் சென்று, “பழி, பாவம், புண்ணியம், ஆலயம், கடவுள்” போன்றவற்றைப் பற்றி கூறினால், “பழம் பஞ்சாங்கம்” என்று ஏளனம் செய்வதுண்டு. பலர் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், கடவுள் நமது வாழ்விற்கு உதவுபவர், தேர்வுக்கு உதவுபவர், நோய்களைத் தீர்ப்பவர் என்றுதான் நம்பி வருகின்றனர்.

வேதங்கள் நமக்கு எடுத்துரைக்கும் உணர்வு என்ன?

பிறந்தவர்கள் அனைவரும் சில காலங்கள் வாழ்ந்து மாண்டு போவது திண்ணம். இந்த ஜடவுலகிலுள்ள வாழ்க்கை என்பது மரணத்தினை நோக்கியும், மரணம் என்பது மறுபிறவியினை நோக்கியும் அமைந்துள்ளது. எனவே, இந்த உலகில் எவ்வாறு நன்றாக வாழ்வது என்று யோசிப்பது சிறந்த உணர்வு அல்ல.

வேத நாகரிகம் எவ்வாறு வாழ்வது என்றும், வாழ்வின் முடிவில் நமது உணர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், எதன் மீது பற்றுதலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் போதிக்கின்றது. மீண்டும்மீண்டும் நாம் இந்த உலகில் பிறவியெடுப்பதற்கான காரணத்தின் மையத்தினை நமக்குக் காண்பிக்கின்றது, கட்டுண்ட வாழ் வின் முடிச்சுகளை நமக்குக் காட்டுகின்றது, அதிலிருந்து வெளிவரும் பாதைகளையும் தெளிவாக காட்டுகின்றது.

எனவேதான், நமது ஆசைகளையும் பேராசை களையும் கட்டுப்படுத்தும்படி அறிவுரை வழங்குகின்றது. நவீன விஞ்ஞானம் மனதின் ஆசைகளைத் திருப்திபடுத்திட வழி செய்கின்றது. அதே பழக்கத்துடன் இருக்கும் இன்றைய மத பிரசாரகர்களும் கடவுள் என்பவர் மனதின் ஆசைகளைப் பூர்த்தி செய்பவர் என்று விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால் வேத நாகரிகம் உடல் சார்ந்த ஆசைகளை முதன்மைப்படுத்துவதில்லை. அதற்காக இந்த உடலினை அப்படியே விட்டுவிடுகிறோம் என்பதல்ல, இதனைக் கடவுளின் சேவையில் ஈடுபடுத்துவதே முறையான செயலாகும். புலனின்ப ஆசைகளே நமது மிகப்பெரிய விரோதி.

நமது ஆசைகள் பல்வேறு வகையான பற்றுதல்களாக வெளிப்படுகின்றன. ஒரே முறை பிறப்பு, ஒரே முறை இறப்பு என்னும் கொள்கைகளைக் கொண்டவர்கள்கூட, “எனது உடல், எனது குடும்பம், எனது வீடு,” என்றும் “நான், என்னுடையது” என்றும் பற்றுதல் கொள்கின்றனர். இத்தகு அடையாளங்களை நாம் துறக்க வேண்டும். ஆசைப்படுதல், வெறுத்தல் என்ற இரண்டுமே நேர்மறை அல்லது எதிர்மறை பற்றுதல்களே. எனவே, வெறுத்தல் அல்லது துறத்தல் என்றால், எந்த பொருளையும் நாம் அடையாமல் இருத்தல் என்று பொருள் அல்ல. இறைவனின் சேவையில் ஈடுபடுத்த முடியும் என்றால் அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொள்வதும், அது சாத்தியமல்ல என்றால் தனக்குப் பிடித்த பொருட்களையும் துறத்தலே உண்மையான துறவாகும். புறத்தில் துறந்து அகத்தில் எண்ணி வாழ்தல் துறவு அல்ல.

நாம் இறைவனின் அங்க உறுப்பு, பகவான் கிருஷ்ணரின் சேவகர்கள் என்ற அடையாளத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதன், தான் மனிதன் என்பதனை மறந்து, “ஒரு நடிகனின் ரசிகன், அரசியல் தலைவரின் தொண்டன்” போன்ற தவறான அடையாளங்களை வளர்த்து எவ்வாறு தனது வாழ்நாளை வீணாக்குகிறானோ, அதுபோலவே, நாம் அனைவரும் கிருஷ்ணரின் சேவகர்கள் என்னும் உண்மையான அடையாளத்தினை மறந்து, நம்மை இந்த உடலாக நினைத்து உடல் சார்ந்த தவறான அடையாளங்களை வளர்த்து நமது வாழ்நாளை வீணாக்குகின்றோம், உண்மையான இன்பத்தினைத் தள்ளிப் போடுகின்றோம்.

இத்தகு அறியாமையிலிருந்து நம்மை வெளிக்கொண்டு வருவதற்கும் உண்மையான இன்பத்தினை அடைவதற்கும் வேதங்கள் நமக்கு உதவுகின்றன. இன்றைய சூழ்நிலையில், சென்னை போன்ற மாநகரத்தில் வாழ்பவன், “சுமார் 1,000 சதுர அடியில் வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், இரண்டு பிள்ளைகளின் கல்வி, திருமணம்,”–இவ்வளவுதான் தன் வாழ்நாளில் சாதிக்க இயலும் என்று எண்ணுகிறான். இதனை அடைபவன் வாழ்வில் வெற்றி பெற்றவனாக கருதப்படுகிறான். இதனை மரணத்திற்கு முன்பாக அடைந்திட வேண்டும் என்ற புயல் வேக வாழ்க்கைப் போராட்டத்தில் அவன் ஈடுபட்டுள்ளான். வேதங்கள் இவற்றை அறிவுறுத்தவில்லை. எவ்வாறு துன்பங்கள் தானே வருகின்றனவோ, அதுபோல உலக இன்பமும் தானே வரும். எனவே, இத்தகு இன்பத்தைத் தேடி வாழ்வினைத் தொலைக்க வேண்டாம் என்று வேதங்கள் அறிவுறுத்துகின்றன. மற்ற உயிரினங்களைப் போல மனித வாழ்வும் தற்காலிகமானது என்றாலும், துன்பமயமானது என்றாலும், இதனை முறையாகப் பயன்படுத்தினால், பிறப்பு இறப்பு சுழலிலிருந்து நிரந்தரமாக வெளியேறிட இயலும் என்றும் வேதங்கள் போதிக்கின்றது.

மரணத் தருவாயில் நாம் எதை நினைக்கின்றோமோ, அதனை நிச்சயமாக மறுபிறவியில் அடைவோம் என்று பகவத் கீதையில் (8.6) கிருஷ்ணர் கூறுகின்றார். எனவே, மரணத் தருவாய் என்பது ஒவ்வொரு உயிர்வாழிக்கும் முக்கியமான தருணமாகும். அந்த நேரத்தில் இறைவனை நினைக்காது போனால், மீண்டும் பிறப்புதான். எனவே, மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைக்குமாறு வேதங்கள் நமது வாழ்வினை செதுக்குகின்றன. நமது உணர்வு கிருஷ்ண உணர்விற்கு மாற்றப்பட வேண்டும், நாம் அதில் நிலை பெற வேண்டும், அந்த தீராத பக்தியுடன் நமது தற்போதைய உடலினைக் கைவிட வேண்டும். அப்போது நாம் இறைவனின் சேவையில் நிரந்தரமாக இருப்போம்.

இப்போது தெரிகின்றதா–நாம் எந்த உணர்வில் இருக்கின்றோம், எந்த உணர்விற்கு மாற வேண்டும் என்பது? இனி எவ்வாறு மாறுவது என்பதைப் பார்ப்போம். வேதங்கள் அதற்கும் வழி கூறுகின்றன. இந்த கலி யுகத்தில் கிருஷ்ணரை நினைப்பதற்கு அவரது பெயர்களை உச்சரிப்பதே வழி என்று போதிக்கின்றன. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தினை தினமும் உச்சரித்து கிருஷ்ண உணர்விற்கு ஏற்றம் பெறுவோம்.

About the Author:

திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment