ஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்

Must read

சென்ற இதழில் புரியிலுள்ள பக்தர்களுடன் மஹாபிரபு நிகழ்ந்த லீலைகளையும் கண்டோம். இந்த இதழில் ஹரிதாஸ தாகூரின் மறைவு மற்றும் ஜகதானந்ரின் கோபம் புரிந்த லீலைகளையும் காண்போம்.

ஹரிதாஸரின் நோய்

ஒருமுறை மஹாபிரபுவின் சேவகரான கோவிந்தர் வழக்கம்போல ஜகந்நாதரின் பிரசாதத்தை ஹரிதாஸ தாகூருக்கு கொண்டு வந்தார். அப்போது, பார்ப்பதற்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், ஹரிதாஸர் மெதுவாக ஜபம் செய்தபடி படுத்திருப்பதைக் கண்டு, கோவிந்தர் வினவினார், “என்ன பிரச்சனை?” “என்னால் எனது ஜபத்தை நிறைவு செய்ய முடிவதில்லை,” என்று ஹரிதாஸர் பதிலளித்தார். பிரசாதத்தை அங்கு வைத்துவிட்டு, மஹாபிரபுவிடம் திரும்பிய கோவிந்தர், ஹரிதாஸரின் நிலையை அவருக்கு எடுத்துரைத்தார்.

மறுநாள் அங்கு வந்த பகவான் சைதன்யர் ஹரிதாஸரின் உடல்நலனை விசாரித்தபோது, “நான் ஜபிக்க வேண்டிய சுற்றுகளை நிறைவு செய்ய இயலவில்லை, இதுவே எனது நோய்,” என்று ஹரிதாஸர் மீண்டும் உரைத்தார். மஹாபிரபுவோ, “தற்போது உங்களுக்கு வயதாகிவிட்டது. மேலும், ஏற்கனவே பக்குவமடைந்த பக்தர் என்பதால், நீங்கள் இத்தனைச் சுற்றுகள் ஜபிக்க வேண்டிய தேவையில்லை,” என்று பதிலளித்தார்.

மறைவதற்கான விருப்பம்

“எம்பெருமானே, தயவுசெய்து எனது உண்மையான விருப்பத்தைக் கேளுங்கள். நீங்கள் இவ்வுலகில் நீண்ட காலம் தங்கப் போவதில்லை, நீங்களின்றி இங்கு வாழ்வதை என்னால் தாங்க முடியாது. தயவுசெய்து தங்களுக்கு முன்னரே செல்வதற்கு என்னை அனுமதியுங்கள்,” என்று ஹரிதாஸர் மன்றாடினார்.

“ஹரிதாஸரே! தாங்கள் மிகவுயர்ந்த நபர். நீங்கள் இங்கிருந்து புறப்பட்டால், அஃது இவ்வுலகிற்கு பெரும் நஷ்டத்தை விளைவிக்கும்.”
“நான் முக்கியத்துவமற்றவன். ஓர் எறும்பு இறந்தால், யாருக்கு என்ன நஷ்டம்? நிலவைப் போன்ற தங்களது திருமுகத்தைப் பார்த்தபடி இப்பூவுலகினை விட்டுச் செல்ல நான் விரும்புகிறேன்.”

ஹரிதாஸரின் திருமேனியை த் தமது கையில் ஏந்தியபடி நடனமாடும் பகவான் ஸ்ரீ சைதன்யர்.

ஹரிதாஸரின் மறைவு

மறுநாள், தமது சகாக்களுடன் அங்கு வந்த மஹாபிரபு ஹரிதாஸரின் குணங்களையும் நடத்தையையும் விவரித்தார். ஹரிதாஸர் தமது வாழ்நாள் முழுவதும் செய்த அதிஅற்புதமான செயல்களைக் கேட்ட பக்தர்கள் அதில் கவரப்பட்டனர். ஹரிதாஸர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலும் பொறுமையுடனும் பணிவுடனும் அமைதியான முறையில் திருநாமத்தைத் தொடர்ந்து ஜபித்து வந்தார். மேலும், திருநாமத்தின் மகிமைகளைப் பரந்த அளவில் பிரச்சாரமும் செய்தார்.

கௌராங்கர் கீர்த்தனத்தை ஆரம்பிக்க, ஹரிதாஸர் அவருக்கு முன்பாக மண்டியிட்டார். விறுவிறுப்பு அதிகமானபோது, ஹரிதாஸர் தமது அன்பிற்குரிய இறைவனின் தாமரைத் திருமுகத்தினை உற்று நோக்கியபடி, “ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய” என்று மீண்டும்மீண்டும் திருநாமத்தை உச்சரித்த நிலையில், இவ்வுலகை விட்டுச் சென்றார்.

மஹாபிரபு ஹரிதாஸரின் திருமேனியைத் தமது கரங்களில் ஏந்தி ஆடினார். பின்னர், அந்தத் திருமேனியைக் கடலில் நீராட்டி கடற்கரையில் ஒரு சமாதியை ஏற்பாடு செய்தார். ஹரிதாஸரின் பெருமைமிக்க உடலால் தீண்டப்பட்ட அந்த சமுத்திரம் தற்போது மஹா-தீர்த்தமாகி விட்டது என்று மஹாபிரபு அறிவித்தார். ஹரிதாஸ தாகூரின் மறைவினைக் கௌரவிப்பதற்காக திருவிழா ஒன்றை நடத்த விரும்பிய கெளராங்கர், ஜகந்நாதரின் பிரசாதத்தினை அனைத்து கடைக்காரர்களிடமும் யாசித்து பெற்றார். அவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் இறையன்பை அடைவதற்கு ஆசிர்வதித்தார்.

வங்காள பக்தர்களின் பாசம்

ஒவ்வொரு வருடமும் வங்காளத்திலிருந்து புரிக்கு வரும் பக்தர்கள் சாதுர்மாஸ்யத்திற்குப் பிறகும்கூட புரியை விட்டு விலகுவதற்கு மிகவும் தயங்குவர். அதுபோலவே, மஹாபிரபுவும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கத் தயங்குவார். ஒவ்வொரு வருடமும் அவர்கள் தங்களது புறப்பாட்டினை சில நாள்களுக்குத் தள்ளி வைப்பர். பின்னர், மீண்டும் சிறிது நாள்கள் என நீட்டிப்பர்.

ஒருமுறை அவர்கள் புறப்பட தயாரான சமயத்தில், பகவான் சைதன்யர் உணர்ச்சியுடன் உரைத்தார்: “என்னுடைய திருப்திக்காகவே நீங்கள் அனைவரும் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் இங்கு வருகின்றீர். அத்வைத ஆச்சாரியருக்கு வயதாகிவிட்டபோதிலும் தொடர்ந்து இங்கு வருகின்றார். எனது பிரிவைத் தாங்கவியலாத நித்யானந்தர், ‘வங்காளத்தில் தங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்னும் எனது கட்டளையை மீறி தொடர்ந்து வருகிறார். நீங்கள் அனைவரும் என்னிடம் மிகுந்த பற்றுதல் வைத்துள்ளபோதிலும் உங்களுக்குத் திருப்பிச் செய்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இவ்வுடலைத் தவிர வேறு எந்த உடைமையும் இல்லாத ஏழை சந்நியாசி நான். எனவே, தங்களுடைய அன்பிற்காக நான் என்னையே தங்களுக்குத் தருகிறேன்.”

அன்பினால் மெருகேற்றப்பட்ட அவ்வார்த்தைகளைக் கேட்ட பக்தர்களின் இதயம் உருகியது, தாரைதாரையாக ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சைதன்ய மஹாபிரபு தமது எல்லா பக்தர்களையும் அரவணைத்த பின்னர், அப்பக்தர்கள் தங்களது குடும்ப காரியங்களைக் கவனிக்கப் புறப்பட்டனர்.

சந்தன எண்ணெயை ஸ்ரீ சைதன்யர் ஏற்க மறுத்ததால், கோபமுற்ற ஜகதானந்தர் அதனை உடைத்தல்

ஜகதானந்தரின் சந்தன எண்ணெய்

ஜகதானந்த பண்டிதர் கௌராங்கருடன் குழந்தைப் பருவத்திலிருந்தே நெருங்கிய தோழராக இருந்தவர். பகவான் சைதன்யர் சந்நியாசம் ஏற்று புரிக்கு வந்தபோது அவருடன் அங்கு வந்த ஜகதானந்தர் அன்றிலிருந்து அங்கேயே இருந்தார். கிருஷ்ண லீலையில் ஜகதானந்தர் கிருஷ்ணரின் முக்கிய இராணிகளில் ஒருத்தியான சத்தியபாமா ஆவார். எவ்வாறு சத்தியபாமா கிருஷ்ணருடனான அன்புச் சண்டைகளுக்குப் புகழ் பெற்றவளோ, அதுபோலவே ஜகதானந்தர் சைதன்ய மஹாபிரபுவிடம் அடிக்கடி கோபம் கொள்பவர் என்று அறியப்பட்டிருந்தார். பகவானும் அவரது மனோபாவத்தைப் புரிந்து கொண்டு செயல்பட்டார்.

ஒருமுறை தன்னைப் பற்றிய செய்திகளைத் தெரிவிப்பதற்காக மஹாபிரபு ஜகதானந்தரை வங்காளத்திற்கு அனுப்பினார். அவர் அங்கிருந்தபோது, நிறைய சந்தனக் கட்டைகளைச் சேகரித்து, மிகுந்த உழைப்புடனும் சிரமத்துடனும் அதிலிருந்து எண்ணெயைச் சுரந்தார். அதனை மஹாபிரபுவின் தலைக்குத் தேய்ப்பதற்கு விரும்பினார். ஒரு துளிகூட சிந்தாமல் மிகுந்த கவனத்துடன் அந்த மதிப்புமிக்க எண்ணெயை ஒரு பெரிய பானையில் புரிக்குக் கொண்டு வந்த ஜகதானந்தர், பெரும் மகிழ்ச்சியுடன் அதனை கௌரஹரியிடம் சமர்ப்பித்தார். ஆனால் பகவானோ, அதனை மறுத்து கூறினார், “நான் ஒரு சந்நியாசி. நறுமணமிக்க எண்ணெயை உபயோகித்தால், நான் பெண்களுடன் உறவு வைத்துள்ளதாக மக்கள் எண்ணுவர். இந்த எண்ணெயை ஜகந்நாதர் கோவிலின் விளக்குகளை எரிப்பதற்கு உபயோகப்படுத்தினால், தங்களது முயற்சி பயனுடையதாகும்.”

ஜகதானந்தரின் கோபம்

கடும் கோபமுற்ற ஜகதானந்தர் சந்தன எண்ணெய் பானையைக் கையிலெடுத்து, முற்றத்தில் வீசி உடைத்தார். இல்லத்திற்குச் சென்று கதவைத் தாழிட்டுவிட்டு படுக்கையில் படுத்துக் கொண்டார், மூன்று நாள்களுக்கு எதையும் உண்ணவில்லை. நான்காவது நாள் சைதன்ய மஹாபிரபுவே அங்கு வந்து நளினமாகக் கூறினார், “ஜகதானந்தரே, இன்று தங்களால் எனக்குத் தளிகை செய்ய இயலுமோ?”
ஜகதானந்தர் தமது கோபத்தை மறந்தார், எழுந்தார், குளித்தார், மிகப்பெரிய பிரசாத விருந்தை பகவானுக்காகச் சமைத்தார். அவரே பிரசாதத்தைப் பரிமாறவும் செய்தார். கௌராங்கரின் தட்டினைத் தொடர்ந்து நிரப்பியபடி, மேன்மேலும் சாப்பிடுமாறு வலியுறுத்தினார். உணவருந்துவதை நிறுத்தினால், ஜகதானந்தர் மீண்டும் மனமுடைந்து விரதத்தைத் தொடர்ந்துவிடுவாரோ என்ற அச்சத்துடன் இறைவன் தொடர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். இறுதியில், வழக்கத்தைவிட பத்து மடங்கு அதிகமாக உணவருந்திவிட்டதாகக் கூறி, ஜகதானந்தரையும் பிரசாதம் ஏற்றுக்கொள்ளும்படி கெளராங்கர் வேண்டினார்.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives