சந்நியாசம் ஏற்று புரியை அடைதல்

அன்னையை சமாதானம் செய்தல்

நிமாய் சந்நியாசம் ஏற்று தங்களைவிட்டுச் செல்லப் போகிறார் என்பதை எண்ணிப் பார்த்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பிரியமான மகனைப் பிரிகின்றோம் என்று நினைத்த அவரின் தாய் மற்றவர்களைக் காட்டிலும் அதிக துக்கமடைந்தாள். எனினும், கௌராங்கர் பின்வருமாறு கூறி அவளை சமாதானப்படுத்தினார்: அன்னையே, தயவுசெய்து அர்த்தமற்ற துன்பங்களால் பாதிக்கப்படவோ, பேராசை, கோபம், தற்பெருமை அல்லது அறியாமைக்கு உட்படவோ வேண்டாம். உண்மையில் தாங்கள் யார், தங்களின் மகன் யார், தங்களின் தந்தை யார் என்பதை எண்ணிப் பாருங்கள். உனது, எனது என்ற பொய்யான அடையாளங்களுக்காக ஏன் வருந்துகிறீர்? கிருஷ்ணருடைய தாமரைத் திருவடிகள் மட்டுமே உண்மையான புகலிடம். கிருஷ்ணர் மட்டுமே நமது தந்தை, அவர் மட்டுமே நமது நண்பர். அவரே பரம்பொருள், அவரே உன்னத பொக்கிஷம். அவரின்றி அனைத்துமே பயனற்றவை.

எனது இதயம் கிருஷ்ணரின் பிரிவால் அழுகின்றது. தங்களின் பாதங்களில் பணிந்து நான் வேண்டுகிறேன். அன்னையே, தாங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தீர். எனது முக்தியானது தங்களது முக்திக்கும் உத்தரவாதம் அளிக்கும். தயவுசெய்து என் மேல் உள்ள பற்றை கைவிட்டு, கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்யுங்கள். கிருஷ்ண பிரேமையை அடைய நான் நிச்சயம் சந்நியாசம் ஏற்றாக வேண்டும்.”

இடது: சந்நியாசம் ஏற்பதற்கு முன்பாக, மஹாபிரபுவிற்கு சவரம் செய்யப்பட்ட மரத்தடி (இடம்: கட்வா).

வலது: மஹாபிரபு சந்நியாசம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கௌராங்க பரி கோயிலின் விக்ரஹங்கள்

சந்நியாசம் ஏற்றல்

குறுகிய காலத்தில் கேசவ பாரதி என்ற சந்நியாசி நவத்வீபத்திற்கு வந்தார். சந்நியாசம் ஏற்பதுகுறித்து அவரிடம் ஸ்ரீ சைதன்யர் ஆலோசனை செய்தார். கேசவ பாரதி அங்கிருந்து புறப்பட்டவுடன், நள்ளிரவில் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறிய பகவான் சைதன்யர், கங்கையை நீந்திக் கடந்து, கேசவ பாரதியிடம் சந்நியாசம் பெறும் எண்ணத்துடன், நவத்வீபத்திற்கு வடக்கே சுமார் முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கட்வாவை நோக்கி முன்னேறினார்.

சந்நியாசம் ஏற்பதற்கு முன்பு நிமாயின் தலை சவரம் செய்யப்பட வேண்டும். அழகிய நிமாய் தமது நீண்ட, சுருண்ட, பளபளப்பான கருங்கேசத்தை இழக்க இருப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள் மிகவும் வருத்தமுற்றனர், சவரத் தொழிலாளியும் அழுது கொண்டே சவரம் செய்தார். ஆனால் கௌராங்கரோ தீர்மானமாக இருந்தார். மற்றவர்களை கிருஷ்ண உணர்விற்குத் தூண்டக்கூடியவர்,” என்னும் பொருள் கொண்ட, ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்ற சந்நியாச நாமத்தை கேசவ பாரதி அவருக்கு அளித்தார். அதன் பின்னர், உடனடியாக ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் விருந்தாவனத்தை நோக்கிப் புறப்பட்டார்.

அத்வைதரின் இல்லத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

நித்யானந்தரின் தந்திரம்

ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்தபடி, கங்கைக் கரையின் ஓரமாக பகவான் சைதன்யர் மூன்று நாள்களாக நடந்து சென்றார். விருந்தாவனத்திற்குச் செல்லும் எண்ணத்தில் முற்றிலும் மூழ்கியிருந்ததால், தான் எங்கு இருக்கிறோம், அது பகலா இரவா என்றெல்லாம் அவர் அறியவில்லை. நித்யானந்த பிரபு, முகுந்தர், உட்பட மற்றொரு பக்தரும் அவரைப் பின்தொடர்ந்ததைகூட அவர் உணரவில்லை. அவர்கள் அத்வைத ஆச்சாரியர் வசித்து வந்த சாந்திபுரிலுள்ள கங்கைக்கு எதிரில் இருக்கும் கல்னாவை வந்தடைந்தபோது, பகவான் நித்யானந்தர் முகுந்தரிடம், அத்வைத ஆச்சாரியரின் இல்லத்திற்கு விரைந்து சென்று அவரை ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் வருகைக்குத் தயாராகும்படி கூறுக,” என்றார்.

பகவான் சைதன்யரை நித்யானந்தர் அணுக, நிதாய், தாங்கள் எவ்வாறு இங்கு வந்தீர்கள்?” என்று சைதன்யர் வினவினார். நான் தங்களை கட்வாவிலிருந்து பின்தொடர்ந்து வந்துள்ளேன்,” என்று நித்யானந்தர் பதிலுரைக்க, தயவுசெய்து விருந்தாவனம் எங்குள்ளது என்று எனக்குக் காட்டவும்,” என்று பகவான் சைதன்யர் வினவினார். இதுதான் விருந்தாவனம்,” என்று பதிலளித்தார் நித்யானந்தர். யமுனை எங்கே?” இதோ யமுனை! பாருங்கள்,” என்று கங்கையைக் காட்டினார் நித்யானந்தர்.

இரு பகவான்களும் நதியை நோக்கி நடந்தபோது, அத்வைத ஆச்சாரியர் படகு ஒன்றில் எதிர்புறமாக வருவதைக் கண்டனர். பகவான் சைதன்யர் சந்தேகத்துடன், அத்வைத ஆச்சாரியர் இங்கே எப்படி வந்தார்? அவர் சாந்திபுரில் வசிப்பவராயிற்றே. என்னை நீர் ஏமாற்றிவிட்டாய் என்று நினைக்கிறேன். இது யமுனையும் அல்ல, நாம் விருந்தாவனத்திலும் இல்லை,” என்று உரைத்தார். எம்பெருமானே, நீங்கள் உங்களின் இதயத்தில் விருந்தாவனத்தைத் தாங்கியிருப்பதால், நீங்கள் எங்கு உள்ளீர்களோ, அதுவே விருந்தாவனம்,” என்று அத்வைத ஆச்சாரியர் பணிவுடன் பதிலளித்தார்.

மஹாபிரபுவும் நித்யானந்த பிரபுவும் அத்வைதரின் இல்லத்தில் பிரசாதம் ஏற்றல்

அத்வைதரின் இல்லத்தில்

நவத்வீபத்திலிருந்து வந்திருந்த அனைத்து பக்தர்களும் அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் குழுமியிருக்க, மஹாபிரபு அங்கே அழைத்து வரப்பட்டார். தங்களால் இனிமேல் அவரை அடிக்கடி காண இயலாது என்பதை அறிந்த அப்பக்தர்கள், கௌர ஹரியை இறுதியாக ஒருமுறை தரிசிக்க விரும்பினர். அங்கு வந்திருந்த அன்னை ஸச்சிதேவி, மழித்த தலையுடன் காணப்பட்ட நிமாயைக் கண்டு மிகவும் வருந்தினாள். அவளது கண்ணீரைக் கண்ட பகவான், அங்கேயே சில நாள்கள் தங்குவதற்கும் அவளது கரங்களால் உணவருந்துவதற்கும் ஒப்புக் கொண்டார். அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் ஸங்கீர்த்தன திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள், பகலில் கிருஷ்ணரைப் பற்றி விவாதிப்பர், இரவில் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்வர்; அனைவரும் ஸச்சிமாதாவினால் செய்யப்பட்ட பிரசாதத்தை ஏற்றுக்கொள்வர்.

பத்து நாள்கள் கழித்து, நான் புறப்பட வேண்டும், சந்நியாசியாகிய நான் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சூழலில் வசிக்கக் கூடாது,” என்று பகவான் சைதன்யர் அறிவித்தார். அப்படியெனில், தயவுசெய்து புரியில் தங்கவும். வங்காளத்திலுள்ள மக்கள் அடிக்கடி புரிக்குச் செல்வர். நீ அங்கு தங்கினால் உன்னைப் பற்றிய செய்தியாவது அவ்வப்போது எனக்குக் கிடைக்கும்,” என்று சச்சிமாதா வேண்டினாள். அதனை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், மற்றும் கதாதரருடன் புரிக்குப் புறப்பட்டார்.

புரிக்கான வழியில்

பகவான் சைதன்யர் வழியெங்கும் கிருஷ்ண பிரேமையில் மூழ்கி, ஹரி! ஹரி!” என்று திருநாமத்தை உச்சரித்தார். அவர் சில சமயங்களில், மயக்கத்தில் தள்ளாடியபடி மெதுவாக நடந்தார்; சாலையை சிங்கத்தைப் போல தாக்கினார்; ஆனந்தமாக ஆடும்பொழுது திருநாமங்களை கர்ஜித்தார்; திடீர் திடீரென்று அழுதார்; அவரது திருமேனின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மயிர்கூச்செறியும்; மேலும் சில சமயங்களில் அவர் மெதுவாகவும் ஆழமாகவும் சிரித்தார்.

ஒருமுறை அவர் நதியில் நீராடச் சென்ற போது, தனது சந்நியாச தண்டத்தை (குச்சியை) நித்யானந்தரிடம் ஒப்படைத்திருந்தார். சைதன்ய மஹாபிரபுவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக உணர்ந்திருந்த நித்யானந்தர், அவர் வெறும் சடங்கிற்காகவே சந்நியாசம் ஏற்றுக் கொண்டார் என்பதாலும், வர்ணாஸ்ரம தர்மத்தின் நெறிகளுக்கு அவர் அப்பாற்பட்டவர் என்பதாலும், அவருக்கு தண்டம் தேவையில்லை எனக் கருதி, அதனை மூன்று துண்டுகளாக உடைத்து நதியில் எறிந்தார். குளியலை முடித்தபின், பகவான் சைதன்யர் நித்யானந்தரிடம் தனது தண்டத்தைக் கேட்க, தாங்கள் பரவசத்தில் ஆடியபோது அதன் மீது விழுந்துவிட்டீர்கள்; அதனால் அஃது உடைந்துவிட்டது, நான் அதனை வீசியெறிந்துவிட்டேன்,” என்று நித்யானந்தர் பதிலளித்தார். நித்யானந்தர் தம்மை ஏமாற்றுகின்றார் என்பதை அறிந்து கொண்ட கௌராங்கர், நான் உங்கள் அனைவரையும் விட்டு விட்டு புரிக்குத் தனியாகச் செல்கிறேன்,” என்று கோபத்துடன் உறுதியெடுத்தார்.

மஹாபிரபுவின் தண்டத்தை நித்யானந்த பிரபு மூன்று குச்சிகளாக உடைத்தெறிதல்

நித்யானந்த பிரபுவும் இதர பக்தர்களும் மஹாபிரபுவை உணர்வு நிலைக்குக் கொண்டு வருதல்

மூர்ச்சையடைதல்

மஹாபிரபு புரியை அடைந்தவுடன் ஜகந்நாதரின் கோயிலை எதிர்நோக்கி விரைந்தார். பயணம் முழுவதும் அவரது தியானம் பகவான் ஜகந்நாதரின் (கிருஷ்ணரின்) மீதே இருந்தது. கோயிலினுள் நுழைந்ததும் ஜகந்நாதரை நோக்கி ஓடிய மஹாபிரபு பேரானந்தத்தினால் மூர்ச்சையடைந்தார். தரையில் உணர்வற்று விழுந்த அவரைக் கண்டு சஞ்சலமுற்ற கோயில் காவலர் அவரை தாக்குவதற்கு முன்வந்தார்.

அதிர்ஷ்டவசமாக ஒரிசா மன்னரான பிரதாபருத்ரரின் ஆலோசகரும் புரியின் பிரபலமான பண்டிதருமான ஸார்வபௌம பட்டாசாரியர் அங்கு இருக்க நேர்ந்தது. அடையாளம் தெரியாத இந்த சந்நியாசியை யாரும் தவறாக நடத்தக் கூடாது என்று அவர் தடுத்தார். இவர் இறந்திருக்கக்கூடுமோ என்று ஸார்வபௌமர் அச்சப்படுமளவிற்கு, சைதன்ய மஹாபிரபு மிகவும் உணர்விழந்த நிலையில் இருந்தார். பட்டாசாரியர் அவரை தனது இல்லத்திற்கு கவனமாகக் கொண்டு சென்றார். அங்கே இத்துறவியின் நாசியினடியில் ஒரு சிறு பஞ்சை வைத்து அவரது சுவாசத்தைச் சோதித்தார். அப்பஞ்சு மெதுவாக அசைந்து அவர் உயிருடன் இருப்பதை வெளிப்படுத்தியது.

புரியை வந்தடைந்த நித்யானந்தரும் இதர பக்தர்களும் நேரடியாக கோயிலுக்குச் சென்றனர். அழகிய பொன்னிற மேனியுடன் ஒரு சந்நியாசி அங்கு வந்ததாகவும், அவர் மூர்ச்சையடைந்ததால் ஸார்வபௌம பட்டாசாரியரின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், மக்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டனர். அவர்கள் அனைவரும் இணைந்து பகவானைக் காணப் புறப்பட்டனர். அவர்கள் ஸார்வபௌம பட்டாசாரியரின் இல்லத்தை அடைந்தபோது, அவர் கவலையுடன் இருப்பதைக் கண்டனர். இந்த சந்நியாசி ஆறு மணி நேரமாக உணர்விழந்த நிலையில் உள்ளார்,” என்று அவர் கூறினார்.

என்ன செய்ய வேண்டுமென்பது பக்தர்களுக்குச் சரியாகத் தெரியும். அவர்கள் சப்தமாக ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்க, சிறிது நேரத்தில் பகவான் சைதன்யர் உணர்வு நிலைக்குத் திரும்பினார். மஹாபிரபுவின் உடலில் உயர்ந்த பிரேமையின் அறிகுறிகள் அனைத்தையும் கண்டு ஸார்வபௌமர் திகைப்படைந்தார். எனினும், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரை முழுமுதற் கடவுள் என்று தமது மைத்துனர் சாஸ்திரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தியபோதும், அதனை ஸார்வபௌமர் மறுத்தார்.

ஸார்வபௌமருடன் விவாதம்

வேதாந்த தத்துவத்தில் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்த ஸார்வபௌமர் ஒரு குடும்பஸ்தராக இருந்தபோதிலும், சந்நியாசிகளுக்கு வேதாந்தத்தைக் கற்றுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பகவான் சைதன்யரின் பௌதிக தளத்திற்கு அப்பாற்பட்ட நிலையை உணர்ந்துகொள்ளாத ஸார்வபௌமர், இளமையுடனும் அழகுடனும் இருக்கும் சைதன்யரால் சந்நியாசத்தைத் தக்க வைத்துக் கொள்வது கடினம் என்று கருதி, அவரை துறவில் நிலைபெறச் செய்வதற்காக அருவவாத வேதாந்த தத்துவத்தைக் கற்றுக் கொடுக்கத் தீர்மானித்தார். ஏழு நாள்களுக்கு வேதாந்த தத்துவத்தை விவரித்த பின்னர், ஐயா, நான் கூறியவை எல்லாவற்றையும் நீங்கள் செவியுற்றபோதிலும் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை” என்று ஸார்வபௌமர் வினவினார்.

நான் வேதாந்தத்தைப் புரிந்து கொண்டேன், ஆனால் தங்களின் விளக்கங்களை அல்ல, அவை அறிவுடையதாக இல்லை,” என்று கௌராங்கர் பதிலளிக்க, ஸார்வபௌமர் அதிர்ச்சியுற்றார். விளக்கவுரை என்பது சூத்திரத்தின் அர்த்தத்தை விவரிக்க வேண்டுமேயொழிய வேறொரு கொள்கையை முன்வைத்து உண்மையான அர்த்தத்தினை மறைக்கக் கூடாது. தங்களுடைய உரை அவ்வாறு உண்மையை மறைக்கின்றது. வேதாந்தம் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் தலைசிறந்த தன்மையை தெளிவாக நிலைநாட்டுகிறது. ஆனால் அதன் உண்மையான கருத்தை தங்களது பொய்யான விளக்கங்களைக் கொண்டு மறைக்கின்றீர்,” என்று பகவான் சைதன்யர் தொடர்ந்து மொழிந்தார்.

அக்காலக்கட்டத்தின் மிகச்சிறந்த அங்கீகரிக்கப்பட்ட வேதாந்தியாகப் புகழ்பெற்றிருந்த ஸார்வபௌமர், பரம்பொருள் நிராகாரமானது (ரூபம், குணங்கள், அல்லது பெயர்கள் இல்லாதது) என்று நிலைநாட்ட முயற்சித்து, எண்ணிலடங்காத வாதங்களை முன்வைத்தார். அவரது யூகக் கருத்துகளை சைதன்ய மஹாபிரபு ஒன்றன்பின் ஒன்றாக முறியடித்தார். இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்ட ஸார்வபௌமர், பகவானின் முன்பு விழுந்து வணங்கினார்.

ஸார்வபௌமரின் மீது கருணை கொண்ட பகவான் ஆறு கரங்களுடன்கூடிய தமது தோற்றத்தை அவருக்கு வெளிப்படுத்தினார். அத்தோற்றத்தின் இரு கரங்களில் இராமபிரானுடைய அம்பையும் வில்லையும் ஏந்தியபடியும், இரு கரங்களில் கிருஷ்ணருடைய புல்லாங்குழலை ஏந்தியபடியும், மேலும் இரு கரங்களில் தனது சொந்த சந்நியாச தண்டத்தையும் கமண்டலத்தையும் ஏந்தியபடியும் மஹாபிரபு காட்சியளித்தார். தமக்கு அருளப்பட்ட காட்டப்பட்ட கருணையினால் பேரானந்தமடைந்த பட்டாசாரியர், நியாய சாஸ்திரத்தின் மீதான தமது வறட்டுத் தொழிலை உதறிவிட்டு, பகவான் சைதன்யரின் முக்கிய சகாக்களில் ஒருவரானார்.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது.)

அடுத்த இதழில்: மஹாபிரபுவின் தென்னிந்திய யாத்திரை

ஸார்வபௌமர் கூறிய வேதாந்த உரையை மஹாபிரபு அமைதியாகக் கேட்டல்

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment